ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 9

oru

 

ஒரு கோப்பை காபி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,
மகா அப்பாவின் ஒரு பகுதியே. அப்பாவிடம் தனக்கென்று எதும் இல்லாமல் வாழ்ந்த அதே அடங்கிய வாழ்கையை அப்பாவிற்கு பிறகும் அவன் அம்மா குற்றவுணர்ச்சியில் வாழ வேண்டும் என்ற மகாவின் எதிர்பார்ப்பே, அவன் அம்மா தனக்கான வாழ்க்கையை அறிந்து வாழும் போது தாளாஏமாற்றம் கொள்கிறது.

 

இதே புள்ளியில் வேறுபட்டு மகாவும் மார்த்தாவும் தன்  வழியே சென்றிருக்கக் கூடும். மார்த்தாவைப் பிரிந்து ஜானகியுடனான அவனது வாழ்வும் இதே புள்ளியில் ஏமாற்றத்தை அடைகிறது; ஜானுவும் அம்மாவின் இந்தப் புது வாழ்க்கையையே சரியென்கிறாள்.

 

ஜெயகாந்தனின் யுக சந்தி நினைவுக்கு வருகிறது. அங்கே பேத்திக்காக பாட்டி வெளியேறுகிறாள்.  இங்கே அந்தப் பாட்டி தன் வாழ்க்கைக்காகவே வெளியேறுவதாகத் தோன்றுகிறது.

 

வள்ளியப்பன்.

 

ஒரு கோப்பைக் காப்பி

 

அன்புள்ள ஜெ,வணக்கம்.

 

ஒரு கோப்பைக் காப்பியை நேற்றுதான் குடித்தேன். அதன் சுவை இன்னும் ஒட்டிக் கொண்டு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.எளிமையான கதை போல் தோன்றினாலும் அதில் சொன்னதை விட சொல்லாது விட்ட கதாசிரியரின் உத்தியைத்தான் நான் சிலாகித்தேன்.ஆண்களின் மேலாதிக்க குணத்திற்கு இந்திய- மேற்கத்திய என்ற வேறு பாடெல்லாம் கிடையாது.கதை சொல்லியான மகாவிடம் தந்தையின் அஹங்காரத்தின் கூறுகள் இல்லாமல் போகுமா? இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒருவன் என்னதான் மேலைக் கலாச்சாரத்தை சுவீகரித்துக்கொண்டாலுமே சுவீகாரம் சுவீகாரம்தானே.மகா-மார்த்தாவின் பிரிவுக்கும் அந்த அஹங்காரத்தின் எச்சம்தானே காரணமாக இருந்திருக்க முடியும்.அதே அஹங்காரம் மார்த்தாவின் இத்தாலி புருஷனிடமும் அவ்வப்போது தோன்றத்தான் செய்கிறது.அதற்கு மடை மாற்ற உத்தியாகத்தான் அவனுக்கு தச்சு வேலை மார்த்தாவால் பரிந்துரைக்கப்படுகிறது.

 

 

மார்த்தாவைச் சந்திக்க அவளை மணவிலக்கு செய்த மாஜி கணவன் இன்னும் ஒரு சில மணித்துளிகளில் வருகிறான் என்ற நிலையிலும்  கைகளில் வாளோடு அவனை வரவேற்கும் காட்சியும் கூட அக்கணத்தில் தோன்றிய அஹங்காரத்தை அடக்கத்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.இந்த உத்தி கதை சொல்லியின் தாய்க்குப் பரிந்துரைக்கப் பட்டிருந்தால்,அவளது கையிலிருந்த பால் சொம்பு தெறித்திருந்திருக்காது.பால் சொம்பு பறந்தது கூட அவளது கோபத்தின் வெளிப்பாடாக மட்டுமாக இருந்திருந்தால் ஒர் இந்தியப் பெண்ணின் கலாச்சாரக் கூறு கேள்விக்குரியதாகப் போய் விட்டிருக்கும்.மாறாக நாற்காலியில் கால் விரல் பட்டு வலியும் வேதனையும் மிகுந்திருந்த   நேரத்தில் கணவனின் அர்ச்சனை எரி தீயில் எண்ணெய் விட்டதுபோல் ஆனதால்தான் பால் சொம்பு கை மீறிப் போய்விட்டது என்று வைத்த டுவிஸ்ட் தான் இங்கு வாசகனால் புரிந்து கொள்ளப்படுகிறது.பால் சொம்பை ஒரு குறியீடாகத்தான் உணரமுடிகிறது.ஒவ்வொரு பெண்ணின் கையிலும் பால் சொம்பு இருக்கத்தான் செய்கிறது.அது அவர்களது கையிலிருப்பதும்,கை நழுவிப்போவதும் அந்தந்தத் தருணங்களே தீர்மாணிக்கின்றன.(அப்பாடா! இப்போதுதான்   நாவின் கசப்புச் சுவை சற்றே குறைந்தாற்போல் இருக்கிறது.)

 

இரா.விஜயன்,

ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 6
ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 5
ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4
ஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3
ஒரு கோப்பை காபி- கடிதங்கள் 2
ஒரு கோப்பை காபி – கடிதம் 1

 

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -1
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-4