சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-4

நவீன்
நவீன்

 

 

சிறுகதை: போயாக்

“எல்லா பேரிலக்கியமும் சொல்வது இரண்டு கதைகளில் ஒன்று தான்; மனிதன் பயணம் மேர்கொள்ளும் கதை, அல்லது ஊருக்குள் அன்னியன் வரும் கதை.”  இது இலக்கியத்தை பற்றிச் சொல்லப்படும் பிரபலமான தேய்வழக்கு. ஒரு வகையில் ‘போயாக்’ சிறுகதை, இரண்டாம் வகை கதை – அதாவது, ஊருக்குள் அன்னியன் வரும் கதை என்ற கதைக்கருவை மறுபரிசீலனை செய்வதாக வாசிக்க முடிகிறது.

ஒரு ஊருக்கு அந்த மண்ணை, பாரம்பரியத்தைச் சாராத ஒரு அன்னியன் வரும் பொழுது இரண்டு சாத்தியங்கள் கதைக்குள் இயல்பாக எழுகின்றன. அவன் அந்த ஊரின் மீது என்ன பாதிப்பை செலுத்துகிறான்? ஊர் அவன் மீது என்ன விதமான பாதிப்பை செலுத்துகிறது? இந்த இரண்டு கேள்விகளுக்கான விடைகள் முயங்கும் இடத்தில் கதைக்கான வெவ்வேறு சாத்தியங்கள் திறந்துகொள்கின்றன. காலனியத்துவத்தின் கதை அடிப்படையில் இதுதான். ஆகவே ஐரோப்பிய, பிரிட்டிஷ், அமெரிக்க இலக்கியத்தில், இந்த கட்டமைப்பு கொண்ட கதைகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைக்கின்றன என்பதில் வியப்பு இல்லை. பெரும்பாலான கதைகள் இரு முடிவுகளில் ஒன்றை நோக்கி ஏதோ ஒரு வகையில் செல்கின்றன – (1) அன்னியன் வேற்று கலாசாரத்தின் இயல்புகளை புரிந்து கொள்ளத் தடுமாருவான். காதல்வயப்படுவான், மனம் கனிவான், அந்த அதன் நல்லியல்புகளை, குறிப்பாக தன் சொந்த கலாசாரத்துடன் முறன்படும் இடங்களை ஏற்றுக்கொள்வான். அவர்கள் தரப்பில் நின்று அவர்களுடைய வாழ்க்கை முறைக்காக போரிடுவான். அவர்களில் ஒருவன் ஆகிவிடுவான். இந்த முடிவில் ஊர் அவனை மாற்றிவிடுகிறது. (2) அன்னியன் வேற்று கலாசாரத்தை முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான ஒன்றாகவே புரிந்துகொள்வான். தன்னுடைய சாகசத்தால் அவர்களை வெல்வான். அல்லது நல்வழிப்படுத்துவான். அல்லது அவர்களுடைய வழிகாட்டி ஆவான். இந்த முடிவில், அவன் ஊரை ஏதோ விதத்தில் மாற்றுகிறான். இரண்டுமே திட்டவட்டமான ஒரு முன்முடிவோடு எழுதப்பட்டவை என்பதனால் இந்த இரண்டு முடிவுகளுமே குறைவுடையவை. அன்னியன் வருகையால் அவனும் ஊரும் எந்தெந்த விதங்களில் மாறுகிறார்கள்; எந்தெந்த விதங்களில் மாறாமல் இருக்கிறார்கள்; அந்த சந்திப்பின் அடித்தளம் என்ன என்று ஆறாயும் கதைகளே காத்திரமாக விளங்கும் சாத்தியமுள்ளவை. (இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், பொதுவாக இவ்வகை கதைகள் அனைத்திலுமே, அன்னியன் தான் செல்லும் ‘ஊர்’ மக்களை விட மேம்பட்டவனாகவே இருப்பான் என்பது).

இந்தக்கதையில் கதைசொல்லியான மலாய் தமிழன் மலேசியாவின் சரவாக் பகுதிக்குச் செல்கிறான். அவர்களுக்கு பொதுவான மொழி என்று ஒன்று கிடையாது. அவன் அவர்களுக்கு முற்றிலும் அன்னியன். அவர்கள் சமமான விதத்தில் அன்னியர்கள் என்று கூட சொல்ல முடிகிறது – தமிழனும் சரி, ஈபான் மக்களும் சரி, மலேசியாவில் சிறுபான்மையினர்கள். இந்த அன்னியன் ஊருக்குள் வரும்போது என்ன நிகழ்கிறது என்ற கோணத்தில் கதையை வாசித்தால் ஒன்று புரிகிறது. ஊர் அவனிடமிருந்து எதையும் எடுத்துக்கொள்வதும் இல்லை. அவனுக்கு எதையும் அளிப்பதும் இல்லை. அவனை எதையும் எடுக்கவும் அனுமதிப்பதில்லை. அவை முற்றிலும் வெவ்வேறு தளங்களை சேர்ந்தவர்கள், மனிதனும் முதலையும் போல. ஊருக்குள் வந்த காரணத்தால் முதலை வாழும் நீருக்குள் புகுந்த மனிதனைப் போல் தான் நீ; நீ எங்கள் சட்டங்களுக்குள் வந்துவிட்டாய்; உனக்கு வேறு வழி இல்லை என்று சொல்வது போல் உள்ளது. அன்னியர்கள் ஊருக்குள் வரலாம், உரையாடலாம், புழங்கலாம், மணமும் செய்துகொள்லலாம், ஏன், அன்னியன் ஊரையோ ஊர் அன்னியனையோ புறட்டிப்போடலாம், ஆனால் ஏதோ ஆழமான இடத்தில் அவர்களால் சந்திக்கவே முடியாது என்ற (சற்றே குரூரமான) சிந்தனையை புனைவுண்மையாக முன்வைக்கிறது. ஒரு விதத்தில் இது கலாசாரங்களின் தற்காப்பு யுக்தி என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

தவிர கதைசொல்லி உரையாடுவது பழங்குடி கலாச்சாரம் ஒன்றுடன். ஒரு வகையில் இது கடந்தகாலத்துடனான உரையாடல். அல்லது ஆழ்மனத்துடனான உரையாடல். வறலாறுக்குள்ளோ, ஆழ்மனத்துக்குள்ளோ, நாம் இன்றைய அன்னியனாக இருந்துகொண்டு ஊடுருவிச்செல்லலாம், ஆனால் நாம் நினைத்த வரவேர்ப்பு அங்கு கிடைக்காமல் போகலாம் – அதுவும் முதலைகளின் உலகம் என்ற வாசிப்புக்கும் இடம் இருக்கிறது. இப்படி யோசிக்கையில் இந்த கதை மேலும் விவரிவடைகிறது. மேலும் திறந்துகொள்கிறது. சிறப்பான கதையாக ஆகிறது.

வேற்று கலாச்சாரங்களோடோ, வறலாறோடோ, நம்முடைய ஆழ்மனத்தோடோ, நாம் உரையாடும் போது அதனிடமிருந்து நாம் ஒரு விலகல் கொண்டுள்ளோம் என்று தோன்றுகிறது. அவை சுட்டும் உண்மைகளை நுட்பமாக வெறுக்கிறோம். ஏனென்றால், அவை நாம் வாழும் இடத்தோடும் காலத்தோடும் புரிதல்களோடும் மனநிலைகளோடும் முறன்படுகின்றன. நாம் கட்டிவைத்த பிம்பங்களை பொய்யாக்குகின்றன. இந்த கதையில் இந்த மனோபாவங்கள் வெளிவரும் இடங்கள் சிறப்பானவை. கதைசொல்லிக்கு முதலையின் மாமிசத்தை உண்ணக்கொடுக்கிறார்கள். அவனுக்கு அதன் சுவை பிடித்திருக்கிறது, ஆனால் அது முதலையின் மாமிசம் என்பது பிடிக்கவில்லை. வாந்தியெடுத்துவிடுகிறான். அவனுடைய உடலளவில் அவனுக்கும் அந்த ஊருக்குமான விலகல் உள்ளது. அதே போல், அழகும் வடிவும் நிறைந்த சீமா புழுக்களைத் தின்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவை தான் அவளுடைய அழகுக்கு காரணமானவை என்ற நம்பிக்கையின் பெயரிலும் கூட. அவன் ஊரை நுட்பமான விதங்களில் நிராகரிக்கிறான். “மண்டை ஓடுகள் இல்லாமல், வீட்டைப்பாதுகாக்கும் ஆவிகள் இல்லாமல் தனித்த வீடு ஒன்று கிடைத்திருப்பது மனதுக்கு நிறைவாக இருந்தது.” என்று சொல்லும் போது கூர்மை கொள்கிறது.

கதை உருவாக்கும் பயங்கரத்தன்மை சிலிர்ப்பூட்டக்கூடியது. கதைசொல்லி எங்கு வழுக்கினான் (வழுக்கினானா?) என்று இறுதி வரை தெரியாமலே இருப்பான் என்று நினைக்கும் போது இந்த sense of disquiet கூடுகிறது. அவன் சீமாவை நெருங்குகிறான். அவளை அவன் நோக்கி வரச்செய்கிறான். அவள் வந்ததும் பயத்தில் விலகிக்கொள்கிறான். அவளை நிராகரிக்கிறான். அதே நேரத்தில் அவள் தங்கை சிம்பாவை ஒரு விதத்தில் பயன்படுத்திக்கொள்கிறான். எந்த தவறுக்காக தண்டிக்கப்படுவான்? அது சரி, நமக்கெப்படி தெரியும்? இது முதலையின் ராஜ்ஜியமல்லவா என்று கதை முடியும் போது பயம்கொள்ளவைக்கிறது.

வாசித்தவற்றில் காத்திரமான கதைகளில் ஒன்று இது. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். நல்ல கதையை கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி.

 

நன்றி,

சுசித்ரா

 

 

போயாக் மிகவும் அந்நிய மொழி என்பதாலும், ஒரே ஒரு முறை வாசித்ததாலும் அதை கோயாக் என்று நினைவில் பதிந்து இருந்தது. மலே மொழியில் கோயாக் என்ற பதத்தின் அர்த்தம் spoilt அல்லது broken என்று இருந்தது. இது நான் வாசிக்கும் லட்சணம் (கதையில் வரவே வராத வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க கூகுளிப்பது). அது போயாக் என்ற பழங்குடி வார்த்தை என்று விவரிக்கப்பட்டு இருந்தாலும் மலே மொழியில் அர்த்தம் தேடுவது போன்ற குணாம்சம் கொண்டு வேறு வாசிக்கிறேன்.. நவீன் எந்த அளவுக்கு அங்கீகாரம், விருதை எதிர்பார்க்கவில்லையோ அந்த அளவுக்கு என்னைப்போன்ற “தரமான” வாசகர்களையும் எதிர்பார்த்திருப்பார் என்ற சமாதானத்தில் இந்த விமரிசனம் எழுதுகிறேன். (கூகுளித்தால்boyak என்ற இந்தோனேஷிய வாக்கின் அர்த்தம் insipid மற்றும் ponderous என்று வருகிறது. கோயாக்கை Koyaak என்றும் போயாக்கை Boyak என்று ஏன் வாசிக்கிறேன் என்றும் புரியவில்லை)

 

கதை வாசிக்கும் லட்சணம் போல்தான் இருக்கும் எனது பயணம் செய்யும் விருப்பங்களும். பயணச்சீட்டோடு இலவசமாக விசாவை கையில் திணித்து கோலாலம்பூரை சுற்றிப்பார் என்று இலவச போக்குவரவு வசதிகளோடு அனுப்பப்பட்டதால் ஒரே ஒரு முறை கோலாலம்பூரை சுற்றி பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அதாவது ரெட்டை கோபுரமும் அதை சுற்றி அமைந்த பகுதிகளையும் மாத்திரம். சில மலேஷிய தமிழ் இளைஞர்கள் தந்த “பாலியல் தொல்லை” என்று வகைப்படுத்தும் தொல்லைகளுக்குப்பிறகு இனி அந்நகரில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று தீர்மானித்தேன். ஆனால் மலேஷிய இலக்கியம் குறித்து எனக்கு இருந்த இளக்காரத்துக்கு காரணம் தொல்லை கொடுத்த விளிம்பு நிலை இளைஞர்கள் அல்ல. படித்த வர்க்கம்தான் அதற்கு காரணம். சிங்கப்பூர் ஆகட்டும், மலேஷியா ஆகட்டும், நான் சந்தித்த தமிழ் வம்சாவளியினர் (சமீபத்தில் அல்லது ஒரு தலைமுறை முன்னர் குடியேறியவர் அல்ல) ரசனை விஷயத்தில் ஏமாற்றத்தையே அளித்து வந்தனர். அத்தோடு அவர்களுக்கு தமிழகம் மற்றும் சமீபத்தில் குடியேறியவர் மீது தாழ்வான எண்ணம் இருப்பதை வெளிப்படுத்துவர்.

 

இந்நிலையில் ஜெயமோகன் இணையத்தளம் வழியாக நவீன் அறிமுகம் ஆகிறார். அது ஒரு இனிய அதிர்ச்சி எனில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக சி. முத்துசாமி, மற்றும் நவீனின் உரையைக் கேட்க வாய்ப்பு கிடைக்கிறது. கால தேசங்களுக்கு அப்பால் அறிவாளி அறிவாளியை எப்படியோ தேடி கண்டடைந்து, “பார் இவர்களை” என்று சொந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.

 

முதலில் நவீன் ஏன் அதிர்ச்சி அளிக்கிறார்? மிகவும் அழகான, இளவயது உடலுக்குள் உள்ள மனமுதிர்ச்சி உடல் மொழியாகவும் வாய் மொழியாகவும் விஷ்ணுபுரம் விழா உரையில் காணக்கிடைத்தது ஒரு காரணம். முக்கியமான காரணம், அவர் நேர்மையை ஆராதித்தது. முத்துசாமி அவர்களைப்பற்றி குறிப்பிடும்பொழுதாகட்டும், சண்முக சிவா மற்றும் ஜெயமோகன் குறித்து குறிப்பிடுவதாகட்டும், அவர் முன்னிறுத்தியது அவர்களது அண்டிப்பிழைக்காத தன்மையை. ஒரு முதியவர் இவற்றை அங்கீகரிப்பதை விட நவீன் போன்ற இளைஞர்கள் அங்கீகரிப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அதைவிட அவர் குறிப்பிடுகிறார் ஜெயமோகனை சுற்றி இளைஞர் பட்டாளம் இருப்பதற்கு ஒரு காரணம் அவரது அண்டிப்பிழைக்காத தன்மை என்று.

 

கோயாக் சிறுகதையை அத்தகையவர் எழுதி இருக்கிறார். நவீன் தமிழர் எனினும் மிக மிக அந்நியமானவர். அதில் இன்னொரு அந்நிய பிரதேசம் குறித்து விவரிக்கிறார். உதவியாளராக ஓராங்குட்டானை விவரித்தது வாசித்ததும் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது. முதலை முதலை மாமிசம் என்று பல படிமங்களுக்கு பல அர்த்தங்கள் தர இயலும்தான். (கோயாக் போயாக் என்ற குழப்பத்துக்கு பிறகு இந்தக் கதைக்கு நான்“ஒப்பந்தமும், சமரசமும்” என்று பெயர் வைத்துள்ளேன்) இருந்தாலும் நான் இந்த சிறுகதையை அணுகிய விதம் நவீன் என்ற அன்னியக்கலாச்சாரத்தை சேர்ந்தவரின் (இங்கு கதைசொல்லி) பார்வை எப்படிப்பட்டது என்ற விதத்தில்தான்.

 

ஒரு ஜெர்மானியரையோ, பிரான்ஸ் தேசத்தவரையோ, ஆங்கிலேயரையோ சந்திக்கையில் எனக்கு எனது மெக்காலே படிப்பு முறை மீது ஒரு தாழ்ந்த மனப்பான்மை உண்டு. ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேளாமல் மனப்பாடம் செய்து, மற்றவர் கருதுகோளை புத்திசாலித்தனத்தை காட்ட மாத்திரம் வாந்தி எடுத்து கோமாளியாக நடந்து கொள்வதை உணர்ந்துகொள்ளாமலேயே கோமாளி ஆவது என்று என்னையும் பெரும்பாலான எமது தமிழக தமிழ் சமூகம் மீதும் எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. இதில் வேறு முறையில் கல்வி பயின்றவர்கள் பார்வை எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆவல் அதிகம். நவீன் மெக்காலே முறையில் பயின்றிருக்க மாட்டார் என்ற அனுமானத்தில் இதை எழுதுகிறேன்.

நவீன் எனக்குப் பரிச்சயமான தமிழ் மொழியில் எழுதுவது ஒரு விதத்தில் சௌகரியம். வார்த்தைகளுக்கு அர்த்தம் அனுமானிக்க வேண்டாம், கூகுளிக்க வேண்டாம். மாத்திரம் அல்லாமல் அவர் சுவாரசியமாக எழுதுவது இன்னும் கூடுதல் சௌகரியம். விஷ்ணுபுரம் விழாவுக்குப்பிறகு, இந்தக்கதையை அவர் குரலில் கேட்டதாக கற்பனை செய்து கொண்டு வாசிக்க இயன்றது. பவா இதை எங்காவது கதையாக சொல்லக்கூடும் என்று உடனே தோன்றியது.

 

ஆங்கிலேயம் ஒரு மொழி மாத்திரம் அல்ல. அத்தோடு சேர்த்து நாகரீகம், பண்பாடு, ஷேக்ஸ்பியர் என்றுதான்  என்னைப்போன்ற பெரும்பாலான தாய்மொழி வழி படித்த மெக்காலே கூட்டத்துக்கு தோன்றும். ஒரு பழங்குடி சமூகத்துக்கு கணக்கோ அறிவியலா சொல்லித்தர கதை சொல்லி செல்லவில்லை. ஆங்கிலேயம் கற்றுத்தர செல்கிறான். அது பழங்குடி சமூகத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் பழங்குடி வம்சத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், ஊர்ப்பக்கம் போலவே அச்சு அசலாக நம்புகின்றனர். மெக்காலே சமூகம் போலவே பழங்குடி சமூகத்துக்கும் ஆங்கிலேய “வேதம்” மீது ஒரு எதிர்பார்ப்பும் இருக்கிறது.

 

எளிய வார்த்தைகளில் அந்நிய பிரதேசம் குறித்த நேரடியான விவரணைகள் மிக மிக இயல்பாக அமைந்திருப்பது புரிகிறது. ஒப்பந்தம், ஒப்பந்த மீறலுக்கான தண்டனை என்று அறிந்தும், வாய்ப்பு கிட்டும்பொழுது ஒப்பந்தத்தை மீறிவிட்டு, அதற்கு சமாதானமும் செய்து கொள்ளும் ஆங்கிலேய ஆசிரியர்  குறித்த அவதானத்தை உணர்த்தி கதை முடிவடைகிறது. இதை நவீன் எழுதி இருப்பது, அத்தனை ஆச்சரியமாக இல்லை-  குறிப்பாக அவரது விஷ்ணுபுரம் உரை வாயிலாக அவரது ஆளுமையை ஓரளவு உணர்ந்துகொண்ட பின்னர். எலியின் வலியோடு  பூனையின் பசியையும் சொல்லும் கதை சொல்லியாக ஜெயகாந்தன் போலவே அவர் பரிணமிப்பார் என்று நம்புகிறேன். இதை ஒரு குறையாக அல்ல விமரிசனமாக நவீன் எடுத்துக்கொள்வார் என்று நம்புகிறேன். நன்றி

 

கௌரி

 

 

அன்புள்ள ஜெ,

ம.நவீன் எழுதிய போயாக் சிறுகதையில் சரவாக்கின் சூழலும்  அதற்கு கதைசொல்லியின் எதிர்வினையும் மிகச் சரளமான மொழியில் வெளிப்படுகிறது. முதலை மனிதனுக்கு உணவாகிறது. முதலையால் மனிதன் தாக்கப்படுகிறான். தடித்த புழுக்களை பெண்கள் மெல்லுகிறார்கள். ஓராங் ஊத்தான் பணியாளாக இருக்கிறது. மனிதனா விலங்கா என்னும் மயக்கு கொள்ள வைக்கும் உயிர் வாழ்க்கை.

தாய் வழிச்சமூகமும் மாந்திரீக அம்சமும் கொண்ட பழங்குடி வாழ்க்கையின் கூறுகள் கதைசொல்லிக்கு பெரும்பாலும் பயத்தையும் விலக்கத்தையும் உண்டாக்குகின்றன. அந்த வாழ்க்கையில் அவனை கவரும் ஒரே அம்சம் சீமா. அதையும் அவன் அறிவின் வழியே  கடந்துவிடுகிறான். இளம்பெண்களை ஏமாற்றினால் ஏற்படும் விசித்திர விளைவும் அறியாச்சமூகத்தை பற்றிய பயமும் அந்தச் சமூகத்தின் விதிகளும் காரணங்களாக அமைகின்றன. கதையின் மையம் போல தோன்றியது முடிவடைந்துவிடுகிறது.

பின்பு இரண்டாம் பெரும் மழை இரவைப் பற்றிய சில பூடகமான குறிப்புகளுடன் கதை முடிகிறது.

/காலையில் தூறல் இருந்தது. கூரை மட்டைகளில் இருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தன. சிம்பாவை தூக்கிச்சென்று அவள் வீட்டில் படுக்கவைத்தேன். உறக்கம் களையாமல் இருந்தாள். கண்ணீரின் உப்பு நத்தை விட்டுச்செல்லும் தடம்போல அவள் கன்னங்களில் பிசுபிசுத்தது. /

/கட்டப்பட்டுக்கிடந்த காட்டுப்பன்றிகள் என்னவோ ஏதோ என உறுமத்தொடங்கின. அவற்றின் பதறிய கண்கள்  நள்ளிரவில் பார்த்த சிம்பாவின் கண்கள் போல மிரண்டிருந்தன./

/சிம்பாவின் அப்பா இளம்குமரிகளுடன் உறவு வைத்துக்கொள்பவனுக்கு மட்டும்தானே  நெற்றியில் ஆண்குறி வளர வைப்பார் எனும் குழப்பம் அச்சமாக எழுந்தபோது ஒப்பந்தப்படி ஆற்றில் இருப்பதால் நாங்கள் முதலைகளின் இரையாகலாம் எனப்படகோட்டி சொல்வதாகப் புரிந்துகொண்டேன்./

இந்த பூடகமான குறிப்புகளைக்கொண்டு கதையை ஊகிப்பதும் அதை மனித மிருக-முதலை அம்சங்களுடன் பொருத்திப் பார்ப்பதும்தான் கதை என்றால் சிறுகதையாக இது எந்த முன்னகர்வையும் அளிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

***

ம. நவீனுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ராஜா

 

சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3

சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -2

சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1

 

===========================================================================================

 

சிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா

சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்

 

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்

 

முந்தைய கட்டுரைஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 9
அடுத்த கட்டுரைசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3