சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3

navin

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்

 

திருவாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

 

தங்கள் வலைத்தளத்தில் இணைக்கப்பட்ட ‘போயாக்’ எனும் சிறுகதையை வாசித்தேன். முதல்முறை வாசித்தபோது அக்கதையில் வரும் கதாநாயகன்  ஒரு பழங்குடிகள் கிராமத்திற்குள் நுழைந்து மீண்டும் ஊருக்கு திரும்புவதாகவே புரிந்துகொண்டேன். அந்த கிராமத்தில் அவனது அனுபவம் கதை என நினைத்தேன். ஆனால் நீங்கள் காரண காரியம் இல்லாமல் ஒன்றை சொல்ல மாட்டீர்கள். வாசக இடைவெளியை பற்றி நீங்கள் அதனுடன் குறிப்பிட்டு கூறியிருந்ததால் மீண்டும் சிலமுறை வாசித்தபோது கதை முழுக்கவே கைவசப்பட ஆரம்பித்தது.

 

கதாநாயகன் ஊருக்குள் நுழைந்தவுடன் அவனுடைய நினைவுக்கு வரும் ஆங்கிலப் படக்காட்சி, அவன் ஆங்கில ஆசிரியராக இருப்பது, ‌‌ஷேக்ஸ்பியரை வாசிப்பது என எல்லாமுமே அவனது நாகரீக அடையாளங்களாக காட்டப்பட்டுள்ளது. அந்த நாகரீகம் அவனை அவ்வூருடன் விலக வைக்கிறது. முதலை இறைச்சி சாப்பிடுபவர்கள் அவனுக்கு அருவருப்பை ஏற்படுத்துகிறார்கள். அவன் அவ்வூருக்குச் செல்ல முடியாது என சர்க்காரிடமும் பெற்றோரிடமும் முரண்டு பிடிக்கிறான். ஆனால் கதையின் இறுதியில் மிகக் குறைவான சொற்களில் அவன் தன் மாணவியைக் கற்பழித்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. சிறுமியின் கண்களில் இருந்த கண்ணீர் பிசுபிசுப்பு, காட்டுப்பன்றியின் மிரண்ட கண்கள் என இப்படியான பல இடங்களை  முதன்முதலில் வாசித்தபோது நான் தவற விட்டிருந்தேன்.

 

அவன் தன் மாணவியை பலாத்தாரம் செய்துள்ளான் எனத் தெரிந்தபோது அவனது நாகரீக, கல்வி, ஆங்கிலம் குறித்த வர்ணனைகள், சூழலை அவனால் ஒத்துக்கொள்ள முடியாத போக்கு என எல்லாவற்றுக்கும் கதாசிரியர் சொன்ன காரணம் தெரிய வருகிறது. கதையில் மனிதர்களைவிட அதிகமாக விலங்குகள் வருவதன் காரணமும் விளங்கியது. அறிவு எவ்வளவு ஆபத்தானது?! அது எல்லாவற்றுக்கும் நியாயம் கற்பிக்கிறது. அவன் ஒரு சிறுமியைக் கெடுத்ததைப் பற்றி கவலையேபடவில்லை. கல்வி அறிவு குறைந்த பழங்குடிகள் சக மனிதனால் ஒத்துப்போக முடியாத சம்பிரதாயங்களை அவர்களின் இயல்பான வாழ்க்கையாகக் கொண்டுள்ளனர். கல்வி அறிவு அதிகமாக உள்ளவன் தன்னாலேயே ஒத்துப்போக முடியாத ஒன்றுக்கு சக மனிதனிடம் வியாக்கியானம் சொல்லப் பழகியுள்ளான்.

 

இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் நான் நவீனுடைய ‘நாகம்’ சிறுகதையையும் அவரது தளத்தில் வாசித்தேன். ஏற்கனவே ‘போயாக்’ தந்த அனுபவத்தால் கவனமாகவே வாசித்தேன்.  ஊரில்  சாமி நாகம் இருப்பதாகப் பொய்கூறி அவ்வூரில் சாமியாராக இருக்கும் ஒருவன் இறக்கப்போகும் தருவாயில் தன் சிஷ்யனிடம் அப்படி ஒன்றும் இல்லை என உண்மையைச் சொல்லி அந்த உண்மையை ஊராரிடம் சொல்லச் சொல்கிறான். நாகம் இருப்பதாகச் சொன்ன பொய்யால் அவன் வசதிபடைத்த சாமியாராக இருக்கிறான். ஆனால் சிஷ்ய சாமியார் அந்த வசதியை இழந்துவிடாமல் இருக்க நாகம் இல்லாத ரகசியத்தைச் சொல்லவில்லை. கதை இதுதான். ஆனால் மீண்டும் வாசிக்கும்போது விரிவான சிந்தனைக்குள் இறங்கினேன்.

 

கதையில் வரும் முதிர்கன்னிக்கும் சாமியாருக்கும் இருந்த உறவு; இல்லாத ராட்சத நாகத்தை அந்த முதிர்கன்னி கற்பனையால் உருவாக்குவது; அதை ஒரு ஆளுமை மிக்க ஆணாக வர்ணித்து சாமியாரை மட்டம் தட்டுவது; இருவருக்கும் இருக்கும் ரகசியமான உறவு என இன்னொரு கதை இருப்பதை நுணுகி வாசிக்கும்போது அறிந்தேன். சரி,அதுதான் கதை என நினைத்தால் அதுவும் இல்லை என நண்பர் சொன்னார். கதையின் முடிவில் சிஷ்ய சாமியாரால் பெரிய சாமியார் சாகடிக்கப்படுவது இன்னும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டிய பின்பே அறிந்தேன். அதை அறிந்தபின் கதை இன்னும் வேறு மாதிரி புரிந்தது. பெரிய சாமியார் அவரது வாழ்வின் அந்தரங்கத்தில் ஒரு பகுதியை தன் மரண வாசலில் சொல்லியுள்ளார். ஆனாலும் தனக்காக மட்டுமே ஒரு ரகசியத்தை வைத்துக்கொண்டார். சின்ன சாமியாரும்  தனக்கான ரகசியத்தை உருவாக்கிக்கொண்டுள்ளார். ஒவ்வொருவரும் தங்களுக்கான ரகசியங்களை எப்படி உருவாக்கி அதில் வாழ்கிறார்கள் என நண்பர் விரிவாகக் காட்சிப்படுத்தினார்.

 

இந்த இரு கதைகளையும் வாசித்து முடித்ததும் எனக்கு இரு குழப்பங்கள் வந்தன. எல்லாக் கதைகளையும் இப்படி உள்நுழைந்து வாசித்து, ஏதாவது தட்டுப்படும்போது அது ‘நல்லகதை’ என்ற அடைமொழிக்குள் வந்துவிடுமா? நீங்களோ அல்லது உங்களைப் போன்ற அனுபவம் மிக்க எழுத்தாளரோ சுட்டிக்காட்டாத பல நூறு கதைகள் இப்படி புரிந்துகொள்ளப்படாமல் காணாமல் போயிருக்குமா? ஒருவேளை நானும் நண்பரும் இதையெல்லாம் உருவகித்துக்கொள்கிறோமா? அப்படியாயின் ஒரு கதையின் தரம் வாசகன் கையில்தான் உள்ளதா?

 

உங்கள் விளக்கம் என் வாசிப்புக்கு உதவும்

அன்புடன்

ராம்

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

 

தங்கள் தலத்தில் வந்த போயாக் கதையை படித்தேன். இந்த கதையின் வெற்றியாக நான் இரண்டை குறிப்பிடுவேன்.

 

 

1) எந்த ஒரு நிகழ்வயோ ஆளுமையையோ கருத்தையோ அதன் உண்மை தலத்தில் நாம் புரிந்துகொள்வதில்லை. நாம் எப்படி உள்ளோமோ நம் மனப்பிம்பங்கள் எவ்வாறு சேர்ந்துள்ளதோ அவ்வாறே நாம் அவைகளை புரிந்துகொள்கிறோம். உதாரணமாக, ஒரு சிவப்பு நிறத்தாலான ஆப்பிள் நம் கண்களுக்கு சிவப்பாகத்தான் தெரிகிறது. உண்மையில் அது சிவப்புதானா. நாய்க்கு ஆப்பிள் வேறு நிறத்தில் தெரியலாம். உண்மையில் சிவப்பை ஆப்பிள் உள்வாங்காமல் எதிரொளிக்கிறது. அப்படிப்பார்த்தால் ஆப்பிள் சிவப்பை தவிர மற்ற எல்லா நிறங்களினால் ஆனது.

 

 

கதையின் நாயகன் அவன் எவ்வாறு உள்ளானோ அவ்வாறே அவன் அனைத்தையும் எதிர்கொள்கிறான். அதனால்தான் முதலைக்கறி  குமட்டுகிறது, சீமாவின் உற்றுநோக்கும் பார்வை குழப்புகிறது, சீமாவின் மீது உள்ள எண்ணம் அவன் அப்பாவின் உடல் நலத்தோடு முடிச்சு போடுகிறது.

 

 

சீமாவின் அப்பா உண்மையில் தவம் செய்யக்கூட பொய் இருக்கலாம். ஆனால் அவன் இனமும் குடும்பமும் அவருக்கு மாந்த்ரீகம் தெரியும், நெற்றியில் ஆண்குறி வைத்துவிடுவார் அன்றெல்லாம் புரிந்துவைத்துள்ளார்கள்.

 

 

 

கடைசியாக குறியீட்டுரீதியாக படகோட்டியின் கையசைவையும் கதையின் நாயகன் ஒருவாறாக புரிந்துகொள்கிறான் .

 

 

2) கதை நடக்கும் களம்- இப்படியான இனக்குழுவை பதிவு செய்துள்ளார்.

 

 

நன்றியுடன்

விஜய்

சிகாகோ.

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

ம.நவீன் அவர்களின் கதையை படித்தேன். கதையில் வரும் ஆசிரியன் சீமாவை விரும்புகிறான். ஆனால் அவளே காதலோடு வரும்போதும் பயந்து விடுகிறான். ஆனால் சிம்பாவோடு அவனுக்கு உறவு நிகழ்ந்து விடுகிறது, அனேகமாக அவனே அதை துவக்கி இருக்கக் கூடும், காட்டுப்பன்றியின் கண்கள் அதை சொல்கின்றன. சிம்பாவின் துடுக்குத்தனம் அவனை சீண்டி இருக்கலாம். சீமா அவனுக்கு தன்னை பணிந்து வைக்கிறாள். ஆகவே அது அவனே எடுக்கும் ரிஸ்க் அல்லது ரெஸ்பான்ஸிபிலிட்டி. அதனால்தான் அவன் கைவைக்கும் போது அவளே அமைதியாக இருந்தும் கூட தவிர்த்து விடுகிறான். பயமெல்லாம் சும்மா சொல்வதுதான்.

 

சீமாவின் மீதான காதலை சிம்பாவால் சீண்டப்படும் காமம் வென்று விடுகிறது. லயாவ் அதை முதலையின் விதியாக சொல்வதாக வருகிறது. முதலை கரைக்கு வந்து சாப்பிட்டால் அது கொலை. நீருக்குள் வைத்து என்றால் அங்கே அதுதான் விதிமுறை என்று. நாம் தண்ணீருக்குப் போகிறோமா, அது தரைக்கு வருகிறதா என்பதே இரை யார் என முடிவு செய்கிறது, காமம் மாதிரியே.

 

ஆதிவாசிகள் சமுதாயத்தில் காமத்தோடான உறவு விலங்குகளோடானது (இந்தக் கதையில் முதலை) மாதிரியே இருக்கிறது. அதை மதிக்கவும், பரஸ்பரம் புரிந்து கொள்ளவும் இயல்பாக இருக்கவும் செய்கிறார்கள். நம் நாகரீகத்துக்குத்தான் அது அருவருப்பாகவும் பயமாகவும் இருக்கிறது. ஆனால் நாம்தான் தவறாக நடந்து கொள்ளவும், கையாளவும் செய்கிறோம்.

 

தமிழில் எழுதும் இளம் எழுத்தாளர்களின் கதைகளைப் படித்து ஏமாந்திருக்கிறேன். ஆனால் இனி நவீனின் கதைகளை படிப்பேன். ஆனால் நீங்கள் நிறைய எழுதி இருக்கிறீர்கள், மனிதனின் விலங்கு குணத்தை சொல்லவதற்கும் அப்பால் சொல்வதே இலக்கியம் என்று. எதிர்காலத்தில் இவர் அந்த மாதிரி எழுதலாம் என்று தோன்றுகிறது.

 

நான் இலக்கியத்துக்கு புதியவன். கடந்த ஒரு வருடமாகத்தான் படிக்கிறேன். அதுவும் உங்கள் சைட்டின் வழியாகத்தான். ஆகவே இது தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

 

 

மாத்யூ ஆர்னால்ட்

 

அன்புள்ள ஜெ

 

நவீனின் கதையின் சிக்கல் என்ன என்று சொல்கிறேன். அது ஒரு நாவலுக்குரிய தொடக்கத்தைக்கொண்டிருக்கிறது. முதலைகள், அங்குள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை ஆகியவற்றைச் சொல்லும் இடம் வரை. அற்புதமான நாவலின் தொடக்கம்

 

ஆனால் அடுத்து ஆரம்பிக்கும் காதல்கதை இரண்டாவது அத்தியாயம். அதை அடித்துச்சுருக்கிவிட்டார். அந்த இரண்டுபெண்களின் கதாபாத்திர இயல்புகள் இன்னும் சொல்லப்படவில்லை. அந்தக்கதையின் முக்கியமான அம்சமாகிய பிளாக்மேஜிக் சட்டென்று அங்கே வருகிறது. அதைச்செய்யும் அந்தப் பெண்ணின் அப்பா வெறுமே பேச்சிலேயே வந்துசெல்கிறார். முதலையின் தடமே இல்லை

 

அந்தப்பெண்ணின் அப்பா செய்யும் மேஜிக் முதலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். அப்போது ஒரு யூனிட்டி வந்திருக்கும். முதலை கதைக்குள் மேலும் வளர்ந்திருக்கலாம். அதைவிட ஒரு விஷயம் உண்டு. ஒரு கதையில் எது படிமமோ அது கூர்மையாக விஷுவலாகச் சொல்லப்பட்டிருக்கும். அந்தமாதிரி இதில் சொல்லப்படவில்லை. நானே முதலை நீரில் ஆற்றலுடன் இருப்பது, கரையில் அது தவழ்வது, அது பொறுமையாகக் காத்திருப்பது என பலவிஷயங்களைக் கற்பனைசெய்துகொண்டேன். முதலை மிகவேகமாக எழுந்து தரையிலேயே ஓடும். மனிதனைவிட வேகாமக. ஆனால் நேராகத்தான்போகமுடியும். கதையில் முதலையின் இருப்பு இருந்துகொண்டே இருந்திருந்தால் வேறு ஒரு மூட் வந்திருக்கும். யூனிட்டி வந்திருக்கும்.

 

நீருக்குள் வாழும் முதலைகளை கரையிலிருந்து ஒருவன் அணுகுவது கதை. டிவிஸ்ட் என்பது இவன்தான் முதலை என்பது. ஆனால் கதை எங்கெங்கோ சென்றுவிட்டது. ஒன்று முதலையை மட்டும்சொல்லி காதலை குறிப்புணர்த்தி விட்டிருக்கவேண்டும். அல்லது காதலைச் சொல்லி முதலையை பேக்கிரவுண்டுக்கு தள்ளியிருக்கவேண்டும்.

 

ஆனால் நவீன் இதே சூழலை வைத்து இன்னும் சிலகதைகளை முயன்றுபார்க்கலாம். முக்கியமான ஒரு கதைசொல்லியின் தொடக்கம். வாழ்த்துக்கள் நவீன்.

 

ஆள் பார்க்க ஜம்மென்று இருக்கிறார், அதையும் சொல்லியாகவேண்டுமே

 

எஸ்  

சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1

 

=============================================================================================================

suneel.jpg

சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2
அடுத்த கட்டுரைவிடுபட்டவர்கள் -கடிதங்கள்