இதழாளர்கள்!

cartoon_defeat_183025_tnb

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

இந்தியர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியும்படி இன்று ஊடகத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. சமீபத்தில் தனது மாநிலத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் பொருட்டு மேற்குவங்க முதல்வர் தனது மாநில முன்னணி பத்திரிகையாளர்களுடன் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டதாகவும் அப்போது லண்டனில் பல தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற இரவு விருந்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளிக்கரண்டிகளை மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் திருடி தங்கள் பைகளில் வைத்துக்கொண்டதை கண்காணிப்பு கேமிரா மூலம் அறிந்த விடுதியை சார்ந்தவர்கள். நாசுக்காக யாரவது தவறுதலாக விடுதிக்கு சொந்தமான பொருட்களை எடுத்திருந்தால் வைத்துவிட்டு போகும்படி அறிவுறுத்தியும், ஒருமூத்த பத்திரிகையாளர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் எதையுமே எடுக்கவில்லை வேணுமென்றால் தன்னை சோதனை செய்துகொள்ளும்படி கூறியதற்கு, நீங்கள் பொருட்களை எடுத்து சக பத்திரிகையாளரின் பையில் வைத்ததும் எங்களுக்குத் தெரியும், நீங்கள் மறுத்தால் காவல்துறையை அணுகவேண்டியிருக்கும் என்று கூற அவர் தனது தவறை ஒத்துக்கொண்டதாக செய்தி வந்துள்ளது. இடம் கிடைத்தால் நமது அரசியல்வாதிகளையும் இவர்கள் மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறதே. என்ன ஒரு வெட்கக்கேடு!.

1) http://indiatoday.intoday.in/story/on-foreign-jaunt-with-mamata-banerjee-journalist-steals-silver-cutlery-forks-out-fine/1/1127392.html

2) https://www.outlookindia.com/website/story/senior-journalists-accompanying-mamata-to-london-steal-silver-cutlery-during-off/306637

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

அன்புள்ள சேஷகிரி,

இதை எல்லா இடத்திலும் காணலாம். இது ஒரு சாமர்த்தியம் என நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சாதாரண வரிசையில்கூட ஏதேனும் தந்திரம்செய்து முன்னால்செல்ல முயல்வார்கள். சினிமா வரிசையில் மட்டுமல்ல விமானநிலைய வரிசையில் கூட கெஞ்சியோ பொய்சொல்லியோ முன்னால் செல்ல முயல்பவர்களைக் காணலாம்.

அமெரிக்கா சென்றிருந்தபோது சொன்னார்கள், அமெரிக்காவில் பல கடைகளில் பொருட்களை வாங்கி அவற்றால் பயனில்லை என கண்டால் திரும்பக்கொடுத்து முழுப்பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எதிர்வினைகளின் வழியாக தங்கள் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த அவர்கள் கண்டடைந்த உத்தி அது

ஆனால் நம்மவர்கள் இதையே ஒரு பெரிய மோசடியாகச் செய்ய ஆரம்பித்தார்கள். பொருட்களை வாங்கி ஆறுமாதம் கழித்து திரும்பக்கொடுத்து இன்னொரு கடையில் இன்னொன்று வாங்கிக்கொள்வது. எப்போதும் புதியபொருள் இலவசமாக நம்மிடம் இருக்கும். இதனால் பெரும்பாலான கடைகளில் இந்தச்சலுகை இந்தியர்களுக்கு இல்லை என அறிவித்து விட்டார்கள்

இந்த இதழாளர்கள்தான் ஊழலுக்கு எதிராக கிளர்வார்கள். அப்படியே பல்டி அடித்து ஊழல் ஓர் அரசியல்வழிமுறை, ஊழலைவிட முக்கியமான பிரச்சினைகள் உள்ளன என்பார்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரைசிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : ஞாநி