வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது.
ஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் குறித்த புராணம் அவ்வரிகளிலிருந்து உருவாகி வந்திருக்கலாம்.
இவற்றிலிருந்து ஆண்டாளின் சாதி குறித்து எதையும் நாம் ஊகிக்க முடியாது. ஆகவே அதுகுறித்த ஊகங்கள் எல்லாமே தனிநபரின் சமூகப்பார்வை சார்ந்தவை மட்டுமே. மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் அவர்களை ஒட்டி எழுதும் டி.செல்வராஜ், சோலை சுந்தரப்பெருமாள் போன்ற சிலரும் பக்தி இயக்கக் காலகட்டத்தை சமூக மோதல்களின் காலகட்டமாக காண விழைகிறார்கள். ஆகவே அனைத்து இடங்களிலும் மேல்கீழ்சாதி, வர்க்கப்பிரிவினை சார்ந்த மோதல்களைக் கண்டடைகிறார்கள். அதன் விளைவாகவே எளிதாக ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம் என்பதுபோன்ற ஊகங்களைச் சென்றடைகிறார்கள்
நான் பக்தி காலகட்டத்தை மாபெரும் ஒருங்கிணைப்பின் காலகட்டம் என நினைப்பவன். இந்துமதம் உருவாகத் தொடங்கிய காலம் முதலே நிகழ்ந்துவரும் தொகுப்பு – ஒருங்கிணைப்பு முறைமை அதன் உச்சத்தை அடைந்தது பக்தி இயக்கத்தின்போதுதான். ஆகவே முரண்பாட்டை கண்டுபிடிக்கும் நோக்கை நிராகரிக்கிறேன். ஆனால் அதைச் சொல்பவர்களின் தரப்பைப் புரிந்துகொண்டு, அதற்கும் கருத்துவிவாதத்தில் ஓர் இடமுண்டு என எடுத்துக்கொண்டு மறுக்கிறேன்.
இரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா?
இல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.
ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல
ஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா? தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.
கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.
அதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.
பக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே
கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்
ஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.
கடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது? அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை
ஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டாலும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி
ஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்.. காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட .
வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.
ஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.
ஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.
ஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழகியல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.
மதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.
இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.
இன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.
இருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற்கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே