ஒரு கோப்பை காபி [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
தாமதமானது என்றபோதும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா. ராமாயணம் பிரசங்கம் செய்கிறேன் என்று தஞ்சாவூர் அம்மாப்பேட்டை போய் (அது ஒரு தனி கதை) ஓரளவுக்கு சுமாராக ஒப்பேற்றினேன். ‘ஒரு கோப்பை காபி’ இப்போது வாசித்து விட்டு இந்த கடிதம் டைப் செய்கிறேன். அழகான சிறுகதை. இந்திய சூழலில் உண்டான ஒரு சிக்கலை மேற்கின் அணுகுமுறை கொண்டு தீர்ப்பது. உண்மையில் இங்கு எந்தவொரு சிக்கலுக்கும் அபத்தங்களையே கைக்கொண்டு, சரி செய்ய போராடுகிறோம் என்று கூறி முடிவிலாது தொடர்வது நம் வழக்கம் என்று தோன்றுகிறது. இங்கு ஒருவரை ஒருவர் அஞ்சிக் கொண்டே, ஒருவரை ஒருவர் உண்மையில் அறிந்து கொள்ளாமலே ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் பலகாலம் வாழ்ந்துவிடவும் முடிகிறது.
மார்த்தாவும் சாமும் தரப்புகள் அற்றவர்கள். அது அவர்கள் பண்பாட்டின் கொடை. நட்பு பற்றிய அவர்களுடைய புரிதல் உன்னதமானது. விடுமுறை நாள் என்று சாமை முன்னிட்டு மேற்கொள்ளும் ஏற்பாடுகளை மார்தா மாற்றி அமைக்க நேரிடுகிறது அதை இயல்பாக சாம் ஏற்றுக்கொள்கிறார். மார்த்தாவிற்கும் அவளது நட்பிற்கும் அவர் அளிக்கும் மதிப்பு ஒரு இந்திய கணவனுக்கு, தன்னை ஆண் என்றே எப்போதும் கருதி இருப்பவனுக்கு சாத்தியம் இல்லை. அவ்விதமாகவே மார்த்தாவும் நட்பில் தான் பெண் என்ற எண்ணத்தைக் கொண்டு வராதவள். மகாவிடம் எல்லாவற்றையும் கேட்டுக்கொள்ளும் அவள், அவனை ஒரு பெண்ணாக நின்று குறை காண்பதில்லை. முன்னாள் கணவன் என்று பழைய கசப்புகளும் அவளிடம் இல்லை. அவனது பண்பாட்டு சூழலில் உண்டான வியாதிகள் அவளிடம் தொற்றவில்லை. நட்பு என்பதன் தெளிவு அவளிடம் உள்ளது.
அங்காரம் என்பது பொதுவானது. தன்னை ஆண் என்றோ பெண் என்றோ தன் தரப்பு இது என்று வகுத்துக் கொள்ளாதவர்களிடமே தீர்வு கேட்டு ஆணோ பெண்ணோ செல்ல முடியும். உண்மையில் நீதியும் தீர்வும் அங்கு மட்டுமே சாத்தியம். இங்கு மகா ஒரு பெண்ணை வெல்ல இன்னொரு பெண்ணிடம் மண்டி இடுகிறான் என்று என்று தோன்றவில்லை. தன்னுடைய அங்காரத்தின் சிக்கலை மார்தா உணர்ந்து கொள்வாள் என்று அறிந்து, அங்காரத்தை விலக்கி நின்று காணும் அறிவார்ந்த பெண்ணான அவளிடம் தீர்வு பெற இயலும் என்றே அவன் அவளை நாடுகிறான் என்று எண்ணுகிறேன்.
மகாவின் தந்தை அனேகமாக BSNL-ல் பணியாற்றிய பிராமணர். எனக்குத் தெரிந்த அப்படி ஒருவர் உண்டு. Junior Telecom Officer பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதிகாரம், பணம் படைத்தவர்களை அஞ்சுதல், குழைதல், வீட்டில் மனைவியை கொடுமை செய்தல், குழந்தைகளிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வது. ஒரு குல இழிவிலிருந்து, அவமதிப்பிலிருந்து பெறுவதை மற்றொரு குல இழிவை, அவமதிப்பை தான் பிறர்க்கு செய்து சமன் செய்து கொள்ளும் சிறுமை துரோணரிடம் இருப்பதை அசலை காண்பிக்கிறாள். சிறுமையே என்றபோதும் வில்லேந்தும் துணிவேனும் துரோணரிடம் இருந்தது. ஆனால் கோழைகளுக்கோ வீட்டில் மனைவியிடம் குழந்தைகளிடம் என்று தம்மிடம் பணிவோரிடம் மட்டுமே தம் குரூரத்தைக் காட்ட முடிகிறது. மகாவின் அம்மா அவரைத் தாக்கியது அவள் வேண்டுமென்றே செய்தது இல்லை என்றபோதும் அவசியமானதே.
மகாவின் அம்மாவும் ஜானுவும் சூழலக்கு ஏற்ப எளிதாக மாற்றம் கொள்பவர்கள். தானே அம்மாவும் அப்பாவுமாக சிக்கல் உண்டாக்கிக் கொள்கிறான் மகா. தாயை ஆதரித்து தந்தைக்கு அநீதி இழைத்துவிட்டதாக குற்றவுணர்ச்சி கொள்ளும் அவனுக்கு மார்த்தா தரும் தீர்வு சரியானது. “உன் அப்பாவை நீதான் கைத்தவறுதலாகக் கொன்றுவிட்டதாக நினைத்துக்கொள், அதற்குரிய எல்லாவற்றையும் செய். மீண்டுவிடுவாய்.” உன்னிடம் தானே குற்றவுணர்ச்சி இருக்கிறது? உனக்குத் தான் சிகிச்சை தேவை.
“இந்தியர்கள் மூளையை உடம்பிலிருந்து பிரித்து தனியாக வைத்திருக்கிறார்கள் அது தானாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.” இங்குள்ள சமூக சூழலில் உருவான வியாதிகளுக்கு இதுவும் ஒரு காரணம்.
பெரியபுராணத்தின் நாயன்மார்களின் அற்புதம் கூறும் கதைகள் கிறிஸ்தவ தாக்கத்தால் ஏற்பட்டது என்பது போல, மேற்கின் மதங்கள் இங்கே தம் இருப்பை உணர்த்தவும் இந்தியா பெண்ணடிமை பூண்டது என்று எண்ணுகிறேன். மார்த்தாவும் சாமும் தோன்றிய, அதனினும் மிக்க நட்புணர்வும் அன்பும் கொண்ட சூழல் சிவன்-சக்தி என்றே நம்மிடம் இருந்தது என்று எண்ணுகிறேன். இன்று அவரவர்களுக்கு ஏற்ற மதங்களுக்கு மாறிக்கொள்கிறார்கள். வெள்ளைக்காரர்களுக்கு சிவன்-சக்தி பிடிக்கின்றது. இங்கு சிலருக்கு ஆணின் எலும்பில் இருந்து பெண்ணை உருவாக்கி கீழ்படிதல் சொல்லிய கடவுள் பிடிக்கின்றது.
அன்புடன்
விக்ரம்
கோவை
ஜெமோ,
இந்த காபியை விகடனில் பருகியிருந்தேன். மீண்டுமொரு முறை இன்று உங்கள் தளத்தில் பருகினேன், மகா மார்த்தாவிடம் இரண்டாவது முறை காபி வாங்கி பருகியது போல.
மகா ஒரு பெண் என்ற அசட்டுத்தனமான என் கற்பனையிலேயே கதையின் முக்கால்வாசி வரை பயணித்திருந்தேன். சாம் கையில் அறுவை இயந்திரமும் உடலெங்கும் மரப்பொடியுமாய் நிற்கும் காட்சி கண் முன் வந்தவுடன் கதை நிகழும் களம் அமெரிக்காவோ, ஐரோப்பாவோ என்று ஊகித்துவிட முடிந்தது. அந்நிலங்களில் LGBTக்கு என்றொரு சமூக அமைப்பும் உரிமைகளும் இருப்பதால், மகா பெண்ணென்ற கற்பனை சிறிது நேரம் நீண்டு எங்கெங்கோ சென்று விட்டது.
மகாவின் தாயார் எதிர்பாராதவிதமாக தன் ஆணாதிக்க கணவனை கொன்று விட்ட குற்ற உணர்ச்சியிலிருந்து, நரேனின் உளவியல் ஆலோசனை மற்றும் அமெரிக்கா தந்த சுதந்திர வாழ்க்கையின் வழியே மீண்டு வருகிறார். நரேனின் உளவியல் ஆலோசனை மறைமுகமாக மகாவுக்கும் கொடுக்கப்பட்டதென்றே எண்ணுகிறேன்.
தன் தாயாரின் பரிதாபமான நிலைக்கான வருத்தத்தில் புதைக்கப்பட்டிருந்த மகாவின் ஆணாதிக்க புத்தி மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பிக்கிறது அவர் குற்றவுணர்வின்றி சுதந்திரமாய் இருப்பதைக் கண்டு. இதே ஆணாதிக்கப் புத்தி தான் மார்த்தா மகாவை விட்டு பிரிந்ததற்கும் காரணமாக இருக்கலாம்.
மார்த்தா நரேனைவிட மிகச் சிறந்த உளவியலாளர் போல் உள்ளார். மூளையை சிறிது நேரமாவது உடலோடு ஒன்ற விடவேண்டும் என்ற அவருடைய சிந்தனைகள்; மகா தன் தாயாரை திரும்ப நேசிப்பதற்குள்ள ஒரு வழி, அவர் தன் தந்தையை கொல்லவில்லை என மகாவை எண்ண வைப்பது. அதற்கு மகாவே அக்கொலையை செய்தது போல் பாவித்துக் கொள்ளச் சொல்லி அதற்கான பிராயசித்த சடங்குகளை செய்யச் சொல்வது என மார்த்தா மகாவை மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.
ஒரு வகையில் மகாவின் தந்தை மிக இறுக்கமாக மாறிப்போனதற்கு மகாவின் திருமணங்களும் காரணமாக இருக்கலாம். அந்த இறுக்கத்தால் தான் அவர் மனைவி மேல் அதீதமான வெறுப்பை உமிழ்ந்து தன் இறுதியை தேடிக்கொண்டார். அதைத்தான் மார்த்தா மறைமுகமாக சுட்டிக்காட்டி மகாவும் அவருடைய தந்தையின் கொலைக்கு காரணம் என்கிறாரா?
மேலும், மார்த்தா போன்று தெளிவாக சிந்திக்கக்கூடிய சுதந்திரமான பெண்களிடம் நம்மூர் மகா போன்ற சவலைப் பையன்கள் ஒரு போதும் சேர்ந்து வாழ முடிவதில்லை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது இக்கதை.
அன்புடன்
முத்து
அண்ணன்,
புத்தாண்டு வாழ்த்துகளும் அன்பும் …
இந்த வருட ஆரம்பத்தில் படித்த முதல் நல்ல சிறுகதை தங்களின் ‘ஒரு கோப்பை காபி ‘ .
மிக எளிமையான பூடகமற்ற வரிகளாலும், நுண்ணிய உளவியல் பார்வையினை உள்வைத்த கதைக்கருவும், வெளிச்சமான காட்சி நகர்தலும், கதை மாந்தர்களின் குணாதிசயங்களும் , சிக்கலற்ற முழு வடிவமும் – ஒரு செவ்விலக்கிய நறுமணத்தையும், வாசிப்பிலுணர்ந்த வாசகப் பேரானந்தத்தையும் , வாசிப்பின் முடிதலில் தொடங்கும் பன்முக அறிதலின் தொடர் சங்கிலியுமாய்… ‘ஒரு கோப்பை காப்பி ‘ பருகியபின் அறிதலின் ஆவி பறக்கும் இதம்.
வாசிப்பனுபவத்தைத் தாண்டி இச்சிறுகதையில் , ஒரு படைப்பாளனாய் மறுவாசிப்பில் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல சிறுகதைக்கான சிலபஸ் உண்டென்றே தீர்க்கமாய் நம்புகின்றேன்.
கதைக்குள் நுழைந்து , கதை பற்றிச் சொல்வதைவிடக் குறிப்பாய் கதை நகரும் தருணங்களும் , வாசகனின் மனவெளியில் நகர்தலின் வரைபடமாய் சம்பவங்களின் பின் முன் விளைவுகளையொட்டிய காபி டேபிள் சம்பாஷணையும், தீர்விற்கான உளவியல் பதிலைத்தேடிச் சுழலும் கதையோட்டமும் …
- தாய் (சம்பவத்திற்கு முன் ) – மகன் (சம்பவத்திற்கு முன் )
- மகன் – மகனின் மனைவி ( முந்நாள் )
- கணவன் ( முந்நாள் மனைவியின் இந்நாள் கணவன் )
- மகன் – மகனின் மனைவி ( இந்நாள் )
- தாய் – தகப்பன் – சம்பவம் – பால் செம்பு – மரணம்
- இடப்பெயர்வு
- தாய் (சம்பவத்திற்குப் பின் ) – மகன் (சம்பவத்திற்குப் பின் )
- காபி டேபிள் சம்பாஷணை வழித் தீர்வின் தேடல்
- மறுரூபமும் – மன்னிப்பும்
- கதை முடிவின் வழி தொடங்க ஆரம்பித்தல்…
இதுபோன்ற ஒரு சில கதைகள் போதும் வாழ்வில் உன்னதமான எழுத்தாளனுக்கு என்றே மனம் மீண்டும் காபி மணமாகின்றது.
‘ காபி ‘ எனும் சொல், ஒரு பானம் எனும் சுவையினைத் தாண்டி பல்வேறு தடங்களையும் , நினைவூறல்களையும் நமக்குள் விரித்துவிடுகிறது. புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் புதுகையின் ஒரு அடையாளமாய் இருந்த கேரளா ராதா கபே – அதிகாலைகளில் இக்கடையினில் காபிக்கென கூடும் பெருந்திரளும் அந்தச் சாலையே வைகறையில் காபி மணக்கும் ஏகாந்தமும் , மழை நேரங்களில் என் அம்மா லிடியாசொர்ணம் போடும் சூடு மணக்க வெல்லம் கலந்த கிருஷ்ணா காபி , காபி – காபி பயிர் – உலகமயமாதலில் வெற்றான தமது ஆதி விவசாயம் அதன் வழித் தடம் புரண்ட தம் வாழ்வாதாரம் என சிங்கப்பூரில் யவனிகாஶ்ரீராம் ஆற்றிய திடமான உரை, சமீபத்தில் எஸ் ரா எழுதிய ‘ முதல் காப்பி ‘ சிறுகதை . சிங்கப்பூரில் இந்தியக் காபி மாதிரி இருக்கச் சீனக்கடையில் ‘ காபி ப்போ ‘ என வாங்கிக் குடிப்பது. இப்படியாய் காபி எனும் சொல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் , ஏதாவதொரு வகையில் சட்டென தொடர்புடையதொன்றாய் இருக்கின்றது.
ஜெயமோகனின் – ‘ ஒரு கோப்பை காபி ‘ எனும் இந்தச் சிறுகதையின் தலைப்பும் , தலைப்பையொட்டிய கதைக்களமும் , கோப்பையின் வழி பிரசன்னமாகும் நிதர்சனங்களும் , வேக வாசிப்பிற்கேற்ற நடையாக இருப்பினும் முக்கியமான வரிகளைக் கடக்கையில் தமிழிலக்கிய நவீனப் படைப்பின் உச்சம் இதன் வழியே மேலேறி இன்னும் தொடும் எனும் தெரிவின் முகாந்திரமாய் பேரழகு.
நன்றி அண்ணன்.
மனம் மணமணக்க…
நெப்போலியன்
சிங்கப்பூர்.