சிறுகதைகள் – கடிதங்கள்

31050

அன்புள்ள ஜெ,,

 

நலமா ?. உடல் நிலை மற்றும் மன நிலை சரியில்லாத காரணத்தால் விஷ்ணுபுர விருது விழாவுக்கு வரயியலவில்லை.உடல் நிலை பரவாயில்லை தேறிவிட்டது. ஒரு மாதத்திற்க்கு முன்பு உங்களுடைய ஆயிரம்கால் மண்டபம் சிறுகதை தொகுப்பு.அதிலுள்ள ஒவ்வொரு சிறுகதையையும்  ஒரு வித படபடப்பு மற்றும் பதற்றத்துடன் தான் படித்தேன். பகுதி தன்னிலை இழந்து பகுதி தன்னிலையை  மீட்க முயலுகிறேன்.

 

ஆழ்மனது நான்,விழிப்புணர்வுள்ள நான் மற்றும் படைப்பு இந்த மூவரும் ஆடும் சீட்டாட்டம் தான் வாசிப்பு.சீட்டுகளின் கழித்தலும் சேர்த்தலும் மட்டுமே கண் முன்னே நிகழுகிறது,இதில் வெற்றி என்பது அகாலத்தில் உள்ளது.இதில் ஆழ்மனது நானில் ஏற்பட்ட சிறு மாற்றத்தை விழிப்புணர்வுள்ள நான் பார்த்ததுதான் மன நிலை சரியில்லாததிற்க்கு காரணம்.

 

அந்த சிறுகதை தொகுப்பிலுள்ள வாள் மற்றும் கரிய பறைவையின் குரல் இரண்டு கதைகளையும் இன்று மீண்டும் வாசித்தேன் மீண்டும் அதே பதற்றம்,புத்தகத்தை தூக்கி எறிந்து விடலாம் என தோன்றியது.அந்த இரண்டு கதைகளும் முடிந்தபின் முற்றிலும் புதிதாக மனதில் ஆரம்பிக்கிறது.வாள் கதை மென்மையாக ஆரம்பித்து மென்மையாகவே முடிகிறது,அந்த மென்மையான கதை ஓட்டம்தான் மனதிற்க்கு  பதைப்பை தருகிறது.கரிய பறைவையின் குரல் இறப்பை பற்றி தான் பேசுகிறது ஆனால் இறப்பின் மர்மம்மானது ஒரு வகையில் இருப்பின் தேவையை நோக்கியே இட்டுச்செல்கிறது.எனக்கு இறப்பை விட இருப்பு தான் பிரச்சனையானது.இரண்டு கதைகளும் ஒரு வகையில் அந்த இருப்பின் ‘நான்’ பற்றிதான் பேசுகின்றன.

 

நான் நிறைய நேரங்களில் நினைப்பதுண்டு அந்த ‘ஆதி நான்’ என்ற உணர்வு இல்லையென்றால் எந்த வித பிரச்சனையிம் ஏற்பட்டுருக்காதென்று.அந்த ‘நான்’ மூளையா ? அல்லது அதன் மின் காந்த அமைப்பா ? அல்லது பிரக்ஞையா ?.அந்த ‘நான்’ இதுதான் எனும்போது அறியாமை அல்லது தர்க்கம் அந்த கருத்தியலின் மீது சந்தேகிக்றது.ஒவ்வொரு மறுப்பின் போதும் அந்த பக்கம் அந்த கருத்தியலும்,இந்த பக்கம் நானும் இரண்டுக்கும் இடையில் அந்த கூரிய வாள் மௌனமாக கிடக்கிறது.அந்த பக்கம் உள்ளதை வீழ்த்துவதால் எந்த பயனும் இல்லை,ஒவ்வொரு முறையும் இந்த பக்கம் உள்ள நானில் சிறிது இழந்து முழு வீழ்ச்சியையிம் தவிர்துக்கொள்கிறேன்.இறுதிவரை அதற்க்கு பதில் கண்டடையவில்லையென்றல் அந்த ‘நான்’ எனும் வாளால் வீழ்வதைத்தவிர வேறு வழியில்லை.அதை அடைவதே என்னுடைய சுதர்மம் அதையே என்னுடைய வாழ்க்கையாகவும்  கொண்டுள்ளேன்.

 

எனக்கு என்னுடைய வயதிற்க்கு இது போன்ற எனை நோக்கி வீசும் கூரிய வாள் போன்ற படைப்பையே  தேடுகிறேன்.வெண்ணிற ஒளியைவிட சில நேரங்களில் சிறிய இருளே நம்பிக்கை தருகிறது சீட்டாடத்தில் வெல்வேனென்று.

இப்படிக்கு

 

தி.ஜினுராஜ்.

 

அன்புள்ள ஜினுராஜ்

 

ஆயிரங்கால் மண்டபம் தொகுதியின் கதைகள் பலவகையான அகச்சிக்கல்களை நோக்கிச் செல்பவை. பெரும்பாலும் இருத்தல், முடிவெடுத்தல் உட்பட அடிப்படை வினாக்களை எழுப்புபவை. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒருவகை அந்தரங்கப்படிமங்களாகவே நீடிக்கும் இருகதைகள் வாள் மற்றும் கரியபறவையின் குரல்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

இன்றுதான் உங்கள் சிறுகதைகளின் தொகுதியான ஜெயமோகன் சிறுகதைகள் வாசித்தேன். அன்றைய நிலையை வைத்துப்பார்த்தால் சிக்கலானநீளமான கதைகளை எழுதியிருக்கிறீர்கள். படுகை, போதி எல்லாமே கதைகள் என்பதை விட குறுநாவல்கள் என்றே சொல்லலாம். ஒரு சிறுகதைக்குள் எழுப்ப முடியாத பெரிய கேள்விகளை எழுப்பிக்கொண்டு பலபடிகளாக எடுத்துச்செல்லப்படும் கதைகள் அவை. படுகை எல்லாம் மிகப்பெரிய ஒரு வரலாற்றையே கதையாகச் சொல்கிறது. ஒரு அசாதாரணமான நாவலாக அதை எழுதியிருக்கலாமோ என நினைக்கத்தோன்றியது.

 

அத்தொகுதியில் எனக்கு மிகப்பிடித்தமான கதைகள் என்றால் வாள் மற்றும் ஆயிரங்கால் மண்டபம் இரண்டும்தான். மிகச்சுருக்கமான கூர்மையான கதைகள். உருவகக்கதைகளின் அழகு கொண்டவை அவை. ஒரு பழைய தேவதைக்கதைபோல. இரண்டுகதைகளையுமே டைனிங் டேபிளில் சொன்னேன். என் குடும்பத்தினர் மலைத்துப்போய் கேட்டார்கள். உங்கள் கதைகளின் சிறப்பம்சமே இதுதான். அவற்றை கூர்மை இழக்காமலேயே நம்மால் சொல்லிவிடமுடியும்

 

வேல்முருகன்

 

அன்புள்ள வேல்முருகன்,

 

அன்றையபொதுப்போக்கு எதையும் உணர்ச்சிகளாக வெளிப்படுத்தாத கதைகள். நவீனத்துவத்தின் வழி அது. அது எனக்கானது அல்ல என உணர்ந்தேன். நான் கட்டற்ற மொழியை தெரிவுசெய்தேன். அது என் வழி என ஆகியது. இன்றும் அதுவே நான். சில கருக்கள் அன்றும் இன்றும்  சுருக்கமானவையென தோன்றுவதும் உண்டு

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36
அடுத்த கட்டுரைசாக்கியார் முதல் சக்கரியா வரை