அன்புள்ள ஜெயமோகன்,
தேவிபாரதி
அன்புள்ள தேவிபாரதி,
உண்மையில் நீங்கள்ளி இறுக்கமானவர் என்னும் எண்ணம் எனக்கு இல்லை, நாம் பலமுறை சந்தித்திருக்கிறோம். ஆனால் சற்று உணர்ச்சிவசப்படுபவர் என்னும் எண்ணம் இருந்தது. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
நண்பர்கள் உங்களைச் சந்தித்ததில் பரவசமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கே.கே.முகம்மது, நீங்கள் இர்ருவரும் அவர்களைப் பாதித்த ஆளுமைகளாக இருக்கிறார்கள்
அவர்கள் என் நண்பர்கள் என்பதனால் சில பொதுவான அம்சங்கள் உள்ளன. இலக்கியத்தை மிகத்தீவிரமாக எடுத்துக்கொள்ளும்போக்கு, ருஷ்யப்பேரிலக்கியங்கள் மீதான ஆர்வம், காந்தி என. அவை அனைத்தும் சரியாக பொருந்திவரும் ஆளுமையாக நீங்கள் தெரிகிறீர்கள் என ஊகித்தேன்
நாம் மீண்டும் சந்திப்போம். நண்பர்களைச் சந்தித்துக்கொண்டிருப்பதே சோர்விலிருந்து வெளிவரும் ஒரே வழி. கேட்க மறுமுனையில் நமக்கிணையான உள்ளங்கள் உள்ளன என்னும் உறுதி அது.
ஜெ
கடந்த டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் சிலர் வெள்ளகோவில் வந்திருந்தனர். வெள்ளகோவிலில் உள்ள எங்கள் வீட்டில் நடந்த அந்தச் சந்திப்பு பற்றியும் அபபோதைய உரையாடகள் பற்றியும் ஈரோடு கிருஷ்ணன் ஜெயமோகனின் தளத்தில் நீண்ட பதிவொன்றை எழுதியிருக்கிறார். அது அவரது முகநூல் பக்கத்தில் இடம்பெற்றிருந் ததையும் அதற்கு வந்த எதிர்வினைகள் பற்றியும் எனது நண்பர் தர்மராஜன் சொன்னார். அவரது முகநூல் பக்கத்தில் அவற்றைப் பார்க்கவும் வாய்த்தது. திரு. கிருஷ்ணன் அந்தப் பதிவை மறுநாளே எழுதிப் பதிவிட்டிருக்கக்கூடும். அந்த உரையாடல்களை நினைவுகூர்ந்து ஒருவித உணர்ச்சிகரமான மனநிலையில் எழுதப்பட்ட பதிவு அது என்பது தெரிகிறது. விடுபடல்கள் எதுவும் இல்லை, மிகைப் படுத்தல்களுக்குக் கொஞ்சம் இடம் இருக்கிறது என்றாலும் நினைவிலி ருந்து தொகுப்பதில் தென்படும் பிழைகள் தென்படுகின்றன. அதைச் சுட்டிக்காட்டுவதற்காகவம் தெளிவுபடுத்துவதறக்காகவே இதை எழுதுகிறேன்.
அரங்கன், ஈரோடு கிருஷ்ணன், ராஜமாணிக்கம், தாமரைக் கண்ணன், அழகிய மணவாளன், செந்தில்குமார், நரேன் முதலான ஆறேழு நண்பர்கள். அரங்கனைத் தவிர மற்றவர்கள் எனக்கு அறிமுகமற்றவர்கள். ஆனால் இந்தச் சந்திப்பு தற்செயலானதல்ல. அரங்கன் இரண்டாண்டு களுக்கு முன்பு எனது நிழலின் தனிமை நாவல் குறித்துப் பதிவிட்டிருந்தார். நாவல் குறித்த அவரது பதிவு எனக்குப் பிடித்திருந்தது. ஜெயமோகன் சொல்லியிருக்காவிட்டால் ஒரு நல்ல நாவலைத் தவறவிட்டிருப்பேன் என அதில் அவர் சொல்லியிருந்தார். அதற்குச் சில வாரங்களுக்கு முன் ( மாதங்களுக்கு முன்பா எனத் தெரியவில்லை ) நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை நடத்திய 2000க்குப் பிந்தைய தமிழ் நாவல்கள் பற்றிய கருத்தரங்கொன்றில் கட்டுரை வாசித்த ஜெயமோகன் தான் கடைசியாக வாசித்த நல்ல தமிழ் நாவல் என எனது நிழலின் தனிமை நாவல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதை நான் எனது முகநூலிலும் பகிர்ந்தேன். ஜெயமோகனுக்கு அதே பதிவில் நன்றி தெரிவித்தேன். அரங்கனைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் இயல்பாகவே அப்போது எனக்கு உருவானது. ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்போதைய சந்திப்பு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களைவிடவும் எனக்கே அதிக முக்கியமானதாக இருந்தது. கடந்த சில மாதங்களாக தீராத மனஉளைச்சல்களுக்குள்ளாகிக் கிட்டத்தட்டத் தனிமைப்பட்டுக் கிடந்தேன். தோல்வியுற்ற, குற்ற உணர்வுக்குள்ளான மனநிலை. மீட்டெடுத்துக்கொள்ளும் பிடிவாதத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஓயாது முயன்றுகொண்டிருந் தேன். அவமானங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் உள்ளானது போல் ஒரு கற்பனை. இத்தகைய சூழலில் இந்தச் சந்திப்பும் உரையாடல்களும் உண்மையாகவே எனக்குப் பெரும் ஆறுதல் அளித்தவை.
கடந்த டிசம்பர் மூன்றாவது வாரத்தில் அரங்கன் என்னைத் தொடர்பு கொண்டார். அடுத்த இரண்டு மூன்று நாள்களில் அவரும் அவரது நண்பர்களும் என்னைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்தனர். அவர்களுடைய வருகைக்காக நத்தக்கடையூரில் உள்ள பேக்கரியின் முன்னால் காத்திருந்தேன். கோவை, திருப்பூரிலிருந்து அரங்கனும் மற்ற இரண்டு மூன்று நண்பர்களும் கார் ஒன்றிலும் கிருஷ்ணனும் பெருந்துறை நண்பர்கள் இருவரும் தங்கள் இருசக்கர வாகனங்களிலும் வந்தனர். தேநீர் அருந்துவதற்காகப் பேக்கரியில் குழுமினோம். மிகச் சுருக்கமான அறிமுகத்திற்குப் பிறகு நான் உடனடியாகப் பேசத் தொடங்கினேன். கடந்த சில மாதங்களாக யாரையும் சந்திக்க வாய்த்திருக்காததால் அவர்களை உடும்புப் பிடியாகப் பற்றிக்கொண்டேன். எனது அப்போதைய மனநிலையில் நண்பர்களிடமிருந்து கிடைத்த எதிர்வினைகள் உற்சாக மூட்டின.
எந்தத் திட்டமும் இல்லாத உரையாடல். நானே அதிகம் பேசினேன். எதிலிருந்து தொடங்கியது எனத் தெரியவில்லை, அநேகமாக எழுத்தாளர்களைச் சந்திக்கச் செல்லும் அனுபவம் குறித்தே பேசத் தொடங்கியிருக்க வேண்டும். 1980களின் தொடக்கத்தில் எழுத்தாளர்களைச் சந்திக்க வேண்டும் என எனக்கேற்பட்ட ஆசைகளைப் பற்றியும் அவர்களைப் பற்றி நான் உருவாக்கிக் கொண்டிருந்த கற்பனைகளைப் பற்றியும் நேர் சந்திப்புக்களில் சந்தித்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டேன். எல்லோரும் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார்கள்.
பிறகு வெள்ளகோவில் நோக்கிப் பயணம். நான் எனது ஸ்கூட்டியை ஓரிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அரங்கனின் காரில் தொற்றிக்கொண்டேன். பயணத்தின் போதும் பிறகு வெள்ள கோவிலில் பேக்கரி ஒன்றிலும் கூடி எங்கள் உரையாடலைத் தொடர்ந்தோம். பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
வீட்டில் மொட்டை மாடியில் உட்கார்ந்துகொண்டு கிட்டத்தட்ட எட்டு எட்டரை மணிவரை நீண்ட அந்த உரையாடல்களில் என்ன பேசினோம் என்பதை வரிக்கு வரி நினைவுகூரும் அளவுக்குத் துல்லியமாக எனது நினைவில் இல்லை. இலக்கியம், வாசிப்பு, சமூகம், அரசியல், வாழ்க்கை எனத் துண்டு துண்டான உரையாடல்கள். பெரும்பாலும் அனுபவங்கள் சார்ந்த பகிர்வுகள். அவர்களிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. அரங்கனும் மற்றொரு நண்பரும் எனது நிழலின் தனிமை குறித்துப் பேசத் தொடங்கினர். ஒருவர் எனது நட்ராஜ் மகராஜ் பற்றிக் கேட்டார். நான் எழுதிக்கொண்டிருக்கும் நொய்யல் நாவலிலிருந்து முகநூலிலும் வலைப்பூவிலும் நான் பகிர்ந்துகொண்டிருந்த சில பத்திகளைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். ஒருவித பைத்திய நிலையில் நான் பேசத் தொடங்கினேன். இலக்கியத்தோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்ட பால்யத்தில் தொடங்கி ஏறக்குறைய எனது முழு வாழ்வையும் பற்றிப் பேசத் தொடங்கினேன். பதின்ம வயதுகளில் நான் நடத்திக்கொண்டிருந்த கையெழுத்து இதழ், மாலை முரசு தமாஷ் பகுதியில் இடம்பெற்ற என் முதல் எழுத்து, ஒன்பதாம் வகுப்பை முடிப்பதற்குள்ளாக எழுதி முடித்த சிறுகதைகள், கவிதைகள், குறுநாவல்கள், நாவல் பற்றியெல்லாம் சொன்னேன். எம்.ஜி.ஆருக்குக் கடிதம் எழுதியது, கதை, கவிதை எழுதுவோர் தேவை என்னும் தினத்தந்தியில் வந்த வரிவிளம்பரங்களைப் பார்த்துவிட்டு நான் எழுதிய கதைகளை அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு மாதக் கணக்காக போஸ்ட் மேனை எதிர்பார்த்துக் காத்திருந்தது, சினிமாக் கொட்டகைகளில் முறுக்கு விற்றுக்கொண்டே பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தது, பதினெட்டு பத்தொன்பது வயதில் முதல் சிறுகதை பிரசுரமானது, பிட் படங்கள் பார்த்தது, இந்து நேசன், சரோஜா தேவி புத்தகங்களுக்காக ஈரோட்டுத் தெருக்களில் அலைந்து திரிந்தது, இடதுசாரி இயக்கங்களோடு ஏற்பட்ட தொடர்புகள், அமைப்பு ரீதியான செயல்பாடுகள், புரட்சி பற்றி கனவுகள், ஏமாற்றங்கள், தோல்விகள், எதிர்பாராத சில பயணங்கள், நண்பர்கள், இலக்கியத் தொடர்புகள், காதல், காமம் ஆகியவை குறித்து எனது நினைவிலிருந்து அப்போது மேலெழும்பியவற்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். முன்பே குறிப்பிட்டது போல் அவை துண்டு துண்டான கோர்வையற்ற ஓர் உரையாடல். புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை ஏதாவதொரு நாவலின் பகுதிகள் போன்றோ திரைப்படக் காட்சிகள் போன்றோ தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதைவிடத் தவறாகப் புரிந்துகொள்வதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது.
விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்கள் தீவிர இலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள், தவிர அவர்களில் ஒருவர் சொல்லியதைப் போல என்னைப் பற்றிய ஏறக்குறைய எல்லாத் தகவல்களையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தவர்கள். எனவே நான் சொன்ன கதைகளில் தென்பட்ட இடைவெளிகளை ஓரளவு எளிதாகக் கடந்து செல்ல முயன்றார்கள். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, பூமணி எனத் தொடர்ந்த பேச்சுக் கடைசியில் எனது எழுத்துக்களின் பக்கம் திரும்பியது. அநேகமாக எல்லோருமே நிழலின் தனிமை வாசித்திருந்தார்கள். அது தவிர சில சிறுகதைகள். புகழ் பெற்ற பிறகொரு இரவு.
பிறகொரு இரவு சிறுகதை பற்றிய பேச்சு, காந்தி, டால்ஸ்டாய், தாஸ்த்தயேவ்ஸ்கி என விரிந்தது. காந்தி பற்றிய பேச்சு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. காந்தியை நான் அறிந்துகொண்ட விதம் குறித்தும் தீவிர இடதுசாரி அரசியல் கோட்பாடுகளிலிருந்து காந்தியின் மீது அக்கறை கொள்வதற்குக் காரணமான எனது அனுபவங்கள், வாசிப்புகள் குறித்தும் எங்களது உரையாடல்கள் விரிவடைந்தன. காந்தியை நான் அறிந்துகொண்ட விதம் குறித்த உரையாடல் அது. காந்தியின் தென்னாப்பிரிக்க அனுபவங்கள், இஸ்லாமியர்களுக்கும் அவருக்கும் ஏற்பட்ட உறவுகள், டால்ஸ்டாயின் கோட்பாடுகள் மீது அவருக்கு ஏற்பட்ட ஈடுபாடு, தென்னாப்பிரிக்காவில் அவர் தொடங்கிய டால்ஸ்டாய் பண்ணை, அவரது ஆன்மீகம், அவரது எளிமை, எதிரிகளின் மீது அவர் செலுத்திய அன்பு, மன்னித்தல், அவரது அரசியல், பிரிவினையின் போது அவர் ஆற்றிய எதிர்வினைகள் குறித்த பேச்சின் போது நான் காந்தியை இயேசுவுடன் ஒப்பிட்டேன். காந்தியின் எளிமையும் அன்பும் கருணையும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டது என்றேன். காந்தியின் எளிய அரையாடை இயேசுவின் உடையோடு ஒப்பிடத்தக்கது என்றேன். காந்தியின் ஆசிரம அறையில் மாட்டப்பட்டிருந்த ஒரே புகைப்படம் என லூயி ஃபிஷர் தனது காந்தி பற்றிய நூலில் குறிப்பிட்டிருந்ததையும் அதே நூலில் அவர் மேற்கோள் காட்டியிருந்த காந்தியின் வாக்கியம் (I am more Christian than most of the Christians ) ஒன்றையும் எனது வாதத்திற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டினேன். காந்தியத்தின் இன்றைய தேவை பற்றியும் குறிப்பிட்டேன். இவை பற்றிய விரிவான உரையாடல்களை நான் எனது நண்பர்கள் பலருடன் நடத்தியிருக்கிறேன். காந்தியை ஒரு வரலாற்றாசிரியரின் பார்வையிலிருந்து நான் அணுகவில்லை. அது முதன்மையாக ஒரு கலைஞனின் பார்வை. வரலாற்றுக்கு அப்பால், அது வரைந்துள்ள சித்திரங்களுக்கப்பால் உண்மையைக் கண்டடைய முற்படுவதே ஒரு கலைஞனின் பார்வை என நான் நம்புகிறேன்.. பலி, உயிர்தெழுதலின் சாபம் உள்ளிட்ட எனது சில சிறுகதைகளையும் நட்ராஜ் மகராஜ் நாவலையும் வாசித்திருப்பவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியும்.
டால்ஸ்டாய், காந்தி எனத் தொடங்கிய உரையாடல் தாஸ்த்தயேவ்ஸ்கியிடம் நிலைகொண்டது.
வழக்கறிஞரான ஈரோடு கிருஷ்ணன் தாஸ்த்தயேவ்ஸ்கியின் தீவிர வாசகர். 31ஆம் தேதி இரவு அவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது இருவரும் தாஸ்த்தயேவ்ஸ்கி பற்றிப் பேசினோம். அவரது குற்றமும் தண்டனையும், இடியட், சூதாடி பற்றியே அதிகம் பேசினோம். சில நிமிடங்களுக்குள் ரஷ்கோல்னிக்கவ், பிரின்ஸ் மிஸ்கின், ரோகோஜின், நஸ்டாசியா பிலிப்பாவ்னா, அக்லயா இவானவ்னா ஆகியோரைப் பற்றிப் பேசினோம். கூடவே அன்னா கரீனினா, விரான்ஸ்கி, லெவின், நெஹ்லூதவ், மாஸ்லவா பற்றியும். அவர்களது உலகினுள் மின்னல் வேகத்தில் சஞ்சரித்து மீண்ட அந்த அரை மணி நேரம் வெகு சுவாரஷ்யமானது என்பேன். விடைபெற்றாக வேண்டிய சூழலில் அந்த உரையாடலைப் பாதியில் கைவிட நேர்ந்ததன் ஏமாற்றத்தை மறுநாளைய சந்திப்பில் நிறைவு செய்ய விரும்பினோம்.
புத்தாண்டின் மாலையில் நடந்த சந்திப்பின் போது வந்திருந்த நண்பர்களில் மூன்று பேர் புனைவிலக்கியங்களில் ஈடுபாடுகொண்டவர்களாக இருந்தபோதிலும் பேச்சு சமகால அரசியல், வரலாறு, வரலாறு சார்ந்த புனைவுகள் குறித்ததாகவே அதிக நேரம் நீடித்தது. குர்அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதி, எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புக்கள், சுகுமாரனின் வெலிங்டன் தவிர இளம் எழுத்தாளர்கள் பற்றிய அந்த உரையாடல்களின்போது மீண்டும் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகள் குறித்த பேச்சு.
வண்ண நிலவனுடனான உரையாடல் ஒன்றின்போது அவர் தன்னுடைய எழுத்துக்களையோ எதிரோ உட்கார்ந்திருக்கிற என்னுடைய எழுத்துக்களைப் பற்றியோ பேசுவதைவிடவும் மற்றவர்களின் படைப்புக்களைப் பற்றிப் பேசுவதையே விரும்புவதாகச் சொன்னேன். முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சுயபுகழ்ச்சியின் மீது அக்கறையற்றவர்கள் என்ற நல்ல கோணத்திலேயே அவரது அந்தக் கருத்தை நினைவுகூர்ந்தேன். அதே போல் சுந்தர ராமசாமியோ பிரபஞ்சனோ வண்ணதாசனோ கூடத் தங்கள் எழுத்தைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருப்பதை விரும்பக்கூடியவர்கள் அல்ல என்று சொன்னேன். . எனக்கு மிக நெருக்கமானவராக இருந்த அசோகமித்திரனிடம் அவரைப் பற்றியும் பேச முடியாது, என்னைப் பற்றியும் பேச முடியாது.
அசாகமித்திரனைப் பற்றிப் பேசத் தொடங்கிய உடனேயே பேச்சு படுசுவாரஷ்யமானதாக மாறியது. எல்லோருமே வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார்கள். எழுத்தாளர்களுடனான எனது சந்திப்புக்களைப் பறற்யும் எனது புத்தக வெளியீட்டு முயற்சிகளைப் பற்றியும் நான் சொன்ன ஒவ்வொரு வாக்கியமும் நிச்சயமாக நகைச்சுவை அம்சம் நிரம்பியதாகவே இருந்திருக்கும்.
நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நொய்யல் நாவல் பற்றிய பேச்சின்போது நமது தொன் மங்கள் குறித்தும் நம்பிக்கைகள் குறித்தும் நான் சொன்ன கருத்துக்களை கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். அவை ஒரு உரையாடலில் அவரது கவனத்தை ஈர்த்த பகுதிகளாக இருக்கக்கூடும்.
கிருஷ்ணனும் அரங்கனும் மற்ற நண்பர்களும் தேர்ந்த வாசக அனுபவம் கொண்டவர்களாகவும் உரையாடலில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தார்கள். எவ்விதமான மனத்தடைக்கும் எச்சரிக்கை உணர்வுகளுக்கும் இடம்கொடாத வெளிப்படைத் தன்மையை நான் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கண்டேன். எல்லோருமே கொண்டாட்ட மனநிலையில் இருந்தார் கள். முதல் நாள் விடைபெறுவதற்கு முன்பாக எனக்குச் சந்தனமாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி திளைக்க வைத்தார்கள். என் மனைவிக்கு இவை போன்ற சந்திப்புக்களும் இவர்களைப் போன்ற நண்பர்களும் அவர்களுடனான உரையாடல்களும் முற்றிலும் புதிய அனுபவம். அது அவருக்கு நம்ப முடியாததாகவும் இருந்தது.
எனக்கே நம்ப முடியாத அனுபவம்தான்.
பேச்சினிடையேயும் பின்னரும் நண்பர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் பற்றிச் சொல்ல வேண்டும்.
நான் மிக இறுக்கமான ஆள் எனவும் அணுக முடியாத மூர்க்கம் கொண்டவன் எனவும் என்னைப் பற்றி அவர்களுக்கு ஒரு கருத்து இருந்திருக்கிறது. அது எனது நட்புவட்டத்திற்கு வெளியே நிலவி வரும் பொதுவான கருத்தாகவும் இருந்திருக்கிறது. அது அப்படி அல்ல என்பதையும் நான் மிக சுவாரஷ்யமான ஆள் எனவும் நகைச்சுவை உணர்வு நிரம்பப்பெற்றவன் எனவும் புரிந்துகொள்ள இந்தச் சந்திப்பு உதவியதாகவும் சொன்னார்கள். அதே போன்ற கற்பனை எனக்கு ஜெயமோக னின் மீதும் அவரது வாசகர்கள் மீதும் இருந்தது. இந்தச் சந்திப்புக்கள் அவற்றை மாற்றியிருக் கின்றன என்பதில் சந்தேகமில்லை.
ஜெயமோகன், விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் குறித்த எனது கற்பிதங்களை இந்தச் சந்திப்பும் உரையாடல்களும் அடியோடு மாற்றியிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் இது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு.
ஜெயமோகனுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்களுக்கும் நன்றி.
தேவிபாரதி
வெள்ளகோவில்