மூக்கனூர்ப்பட்டி

1

சூழ இருத்தல் 

1988 முதல் 1997 வரை தர்மபுரியில் இருந்த நினைவுகளில் மிக இனிமையானது மொரப்பூர் அருகே உள்ள மூக்கனூர்ப்பட்டி. நண்பர் தங்கமணியின் பண்ணை அங்கிருந்தது. இலக்கியவாசகர், நல்ல விவசாயி, இப்போது அர்ப்பணிப்புள்ள ஆசிரியர். அன்று அடிக்கடி அவருடைய பண்ணைவீட்டுக்குச் சென்று தங்குவோம். அங்கே நாஞ்சில்நாடன் உட்பட பல இலக்கியவாதிகள் சென்று தங்கியதுண்டு.

அவரும் அவருடைய அண்ணனும் தந்தையும் கூட நல்ல வாசகர்கள். கொங்குவட்டாரத்திலிருந்து நூறாண்டுகளுக்கு முன்பு அங்கே சென்று நிலம் வாங்கி வேளாண்மைசெய்தவர்கள் அவர்களுடைய முன்னோர். தருமபுரி மாவட்டம் பொதுவாக குறைவாகவே வேளாண்மை செய்யப்படுவது. மூக்கனூர்ப்பட்டியை ஒட்டிய அத்தனை சிற்றூர்களிலும் தங்கமணியின் முன்னோர் போல குடியேற்ற விவசாயிகள்தான். அக்கிராமங்கள் மட்டும் எப்போதும் விவசாயம் செய்யப்பட்ட நிலையில் பசுமைகுறையாமல்தான் இருக்கும். அதற்குப்பின்னால் ஈடிணையற்ற உழைப்பு உண்டு.

2

நான் செல்லும்காலத்தில் அங்குள்ள சிற்றூர் விவசாயிகள் ஏறத்தாழ எல்லாருமே திராவிடர்கழக ஆதரவாளர்கள். ஈவேரா அங்கே பலமுறை வந்திருக்கிறார், தங்கியிருக்கிறார். மூக்கனூர்ப்பட்டி அருகேதான் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரான கண்ணிமை அவர்களின் இல்லம். தங்கமணியுடன் அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். அச்சிற்றூர்களிலெல்லாம் இலக்கியவாசகர்கள் அன்றிருந்தனர். முறையான கல்வி இல்லாத விவசாயிகள்கூட நல்ல வாசகர்களாக இருப்பதை அங்கே காணமுடியும்.

திராவிட இயக்கத்திற்கு நிகராகவே கம்யூனிஸ்டு இயக்கமும் அப்பகுதிகளில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. ரவீந்திரபாரதி, தேவபேரின்பன், நவகவி போன்ற இடதுசாரி இலக்கியவாதிகளின் விளைநிலம் அது. அவ்வப்போது அவர்களையும் சந்திப்பதுண்டு.

 

3

விஷ்ணுபுரம் வெளியானபோது 1997ல் முதல் இலக்கியவிமர்சனக்கூட்டம் மொரப்பூரில்தான் நடந்தது. அந்த நிகழ்வுக்கு ஐம்பதுபேர் வந்திருந்தார்கள். பத்துபேருக்குமேல் விஷ்ணுபுரத்தை வாசித்துமிருந்தார்கள். அன்று அதைப்பற்றிய ஒரு வியப்பு உருவானது. இன்றும் அதே வியப்பு நீடிக்கிறது. ‘சூழ இருத்தலை’ வாசித்துவிட்டு தங்கமணி சில பழைய புகைப்படங்களை அனுப்பியிருந்தார். நினைவுகள் எழுந்து நெகிழச்செய்தன.

4

முந்தைய கட்டுரைஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைஎதிர்ப்பும் ஏற்பும் –கடிதங்கள்.