ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 5

oru

ஒரு கோப்பை காபி [சிறுகதை]

ஜெ

ஒரு கோப்பை காபி சிறுகதை தந்தை மகன் இருவரின் வாழ்வையும் இந்திய மரபு பண்பாடு நவீன பண்பாடு இரண்டுக்கும் இடையில் ஊசலாடும் ஒருவனின் மனசித்திரத்தையும் அளித்தது. இச்சிறுகதையில் இரு தலைமுறையில் தந்தையிடம் எந்த ஊசலாட்டமும் இல்லாமல் தன்நலனை பேணும் பொருட்டு வெளியில் மற்றவரிடம் தன் ஆளுமையை சுருக்கி வீட்டில் தன் மனைவி மற்றும் மகனிடம் தன் ஆளுமையை பெரிதாக காட்ட திமிரையும் வசைச்சொல்லையும் ஆயுதமாய் பயன்படுத்துவதில் எவ்வித குற்ற உணர்வும் அற்றவராகவே இருக்கிறார். இந்திய மரபில் தனிமனிதன் என்ற கருதுகோள் இல்லாததால் குடும்பம் மற்றும் சமுகம் சார்ந்தே சிந்திப்பதால் தனி மனித உரிமைகள் சில இடங்களில் பலியிடப்படுகிறது. மகனோ தன் தந்தையை தன்னுடைய மரபை விட்டு விலக எண்ணி மார்த்தாவை மணக்கிறான்.

ஆனாலும் அவளை விவாகரத்து ஏன் செய்தான் என்பதற்கு இக்கதையில் சில குறிப்புகளே உள்ளது.நவீன பண்பாட்டில் வாழ்ந்தாலும் மகாவின் அடிமனம் இந்திய மரபுபண்பாட்டின் வழியே செயல்படுவதை விடுமுறை நாளன்று எவ்வித முன்அனுமதியின்றி மார்த்தாவின் நேரத்தை வற்புறுத்தி பெறுவதும் தந்தைக்காக ஆற்றும் நீர்கடனும் தாயி்ன் தந்தை பற்றிய நினைவுகள் இன்மை படுததும் பாடும் உணர்துகின்றன. தந்தையை வெறுத்து அவருக்கு பிடிக்காததை செய்யும் எண்ணமும் நவீன பண்பாட்டின் மீதான ஈர்ப்பும்மார்த்தாவை மணக்க காரணம் என்றே தோன்றுகிறது. ஆனால் மரபு அவனிடம் புகுத்தி இருந்த அழகு பற்றிய எண்ணங்களும் இப்போதும் தொடரும் மகாவின் பிறரது சூழலை எண்ணாதிருத்தல் தன் மைய நோக்கிற்கு மார்த்தா போன்ற அனைத்தையும் முழுவதுமாக புரிந்து கொள்ளும் நபருடன் இணைந்து வாழ்வது சாத்தியமில்லை.

தன்தாய் தந்தையை நீண்டகாலமாக எதிர்த்து எதையும் செய்யாமல் இருந்து திடிரென கோபத்தில் தாக்கியதால் ஏற்பட்ட இறப்பை தற்செயலாக கொன்றதாக எண்ணி அக்கொலையை மறைக்க மகா செய்யும் முயற்சிகள் வெற்றி பெறுகின்றன. மகாவின் தாய் தன் கணவனை கொன்றது தான் என்பதை தன் மனம் ஆடும் மயக்கம் அழுகை போன்ற வடிவில் வெளிப்படுத்தினாலும்மகனும் உளவியலாளரும் தரும் நம்பிக்கையாலும் அனைத்து உயிருக்கும் இயல்பாக உள்ள உயிர் வாழும் எண்ணத்தாலும் மீண்டு வருகிறார். புதிய சுழலில் புதிய வாழ்வில் இயல்பாக பொருந்தி தன் திறனான சமையல் மூலமாகவே புதுவாழ்வும் பெறுகிறார். தாய் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணி பல முயற்சிகளை எடுத்த மகாவிற்கு தாயின் இம்மனநிலை உறுத்துவதற்கு காரணமாக தன் அப்பாவை தாய் நினைப்பதே இல்லை என்பதே காரணம்.

நீண்ட கால வாழ்வை தந்தையுடன் கழித்த தாய் தந்தையை எண்ணியே தன் வாழ்நாளை கழிப்பார் என எண்ணும் மரபு மனநிலை கொண்ட மகாவிற்கு இது பெரும் அதிர்சியை தருவதால் தான் தான் செய்தது தவறோ என்னும் குற்ற உணர்வே கனவுகளாக வெளிப்படுகின்றன. முதலில் தந்தை அடிப்பது போன்று வருகின்றன.இச்சுழலில் தந்தையை நினைவூட்ட செய்யும் முயற்சிகள் வீணாக தன் தந்தையின் வாழ்வை எண்ணி பார்க்கும்போது தன்னை தவிர அவரை நினைக்க யாரும் இல்லை என்பதை உணரும் போதே தான் வெறுத்தாலும் தன் தந்தையே தன் இயல்பை உருவாக்கியவர் என உணர்கிறான். அப்போது அழும் சடலமாக தந்தையை கனவு காண்கிறான். தாயின் மனமே துயர் நிறைந்ததும் ஒரு உயிரைக்கொன்றோம் எனும் நினைவினை மறக்கும் பொருட்டு தன் கணவனைபற்றி நினைக்ககூட மறுக்கும் மன நாடகத்தை நடிக்கிறது. இதுபுரியாத மகா இச்சூழலில் தான் செய்த தவறுகளுக்கு பிழையிடு செய்ய எண்ணுகிறான்.

ஆனால் நவீன பண்பாட்டில் வாழ்ந்து வருவதாலும் தன் பிரச்சனைக்கு காரணம் மரபு தனக்கு அளித்த விழுமியங்கள் தான் உள்ளுறை காரணம் என அறியாததாலும் என்ன செய்வது என தெரியாமல் தான் சந்தித்தவர்களில் தெளிவான சிந்தையுடையவள் என நம்பும் மார்த்தாவிடம் வந்து சேர்கிறான். மகாவின் குழப்பத்தை புரிந்து கொள்ளும் மார்த்தா இது இருபண்பாட்டின் பிரச்சனை என புரிந்து மரபுக்கு பிழையிடு செய்யவும் நவீன சிந்தனையில் இதை மாற்றும் பொருட்டு ஏதேனும் உடலுழைப்பால் படைப்பை செய்ய ஆலோசனை கூறுகிறாள்.இதுவெற்றி பெறும் என்பதை சாமை கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.காபித்தூளாக நான் ஐரோப்பா கொடுத்த தனிமனிதன் என்ற கருத்து அவனுடைய தனிப்பட்ட வாழ்வின் பயணத்திற்கு பிறர் மதிப்பு கொடுக்க வேண்டும் என சொல்வதுடன் மரபின் சிக்கரியான உன் உழைப்பு முழுவதும் குடும்பத்திற்கானது அதனால் உனக்கென்று தனியாக நேரம் ஒதுக்க கூடாதென்பதை சேர்த்து தனக்கு பின் வருபவர்களை தான் விரும்பிய வாழ இயல முடியாத வாழ்கையை அவர்கள் வாழக்கட்டாயப்படுத்தும் பொருட்டு அவனுடைய அடிப்படை விருப்பங்களை அழிக்கும் மரபின் முறையை சமையல் முறையாகவும் கொண்ட நவீன பண்பாடு எனக்கு தோற்றமளிக்கிறது.

புறச்சூழல் காட்சிகள் உணர்வை வெளிபப்படுத்துவது போன்ற கூறுமுறைகள்ஏதும் இல்லாமல் மன உணர்வுகள் மற்றும் சிறிய குறிப்புகள் மட்டுமே தந்ததாலும் வாசகன் புரிந்து கொள்வான் என்று எண்ணியே இச்சிறுகதை விரிக்க எண்ணிலாத சாத்தியங்கள் இருந்தாலும் சிறியதாக இருப்பதாகவே எண்ணுகிறேன். விடுமுறை நாள் என்பதில் தொடங்கி அரான் சினி வரை எனக்கு தோன்றுவதை சொல்ல ஆரம்பித்தால் கட்டுரை போல நீளும் என்பதால் இக்கடித்தை இத்துடன் முடிக்கிறேன். வாசகன் மேல் தாங்கள் வைத்த நம்பிக்கையே இச்சிறுகதையின் உச்சம்
அந்தியூர் மணி

***

அன்புள்ள ஜெயமோகன் சார்,

ஒரு நாவலுக்கான கதைக்களத்தை ஒரு சிறுகதையில் கொண்டு வந்து விட்டீர்கள்.

ஒவ்வொரு வரியிலும் வாசகனின் முன் ஒரு தனிக்கதை விரிகிறது. உங்களுக்கு பதிலாக வாசகர்களை கற்பனை செய்ய விட்டிருப்பது ஒரு தனி உத்தி. அவர்கள் எப்படி கற்பனை செய்தாலும் மீண்டும் உங்கள் வரிகளுக்கு வரும்போது எல்லாம் சரியாகவே இருக்கிறது.

சிறுகதையில் ஒரு புது பாணியையே கையாண்டிருக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அது நீங்கள் அறிந்து நிகழ்ந்ததா இல்லை அறியாமல் நிகழ்ந்ததா என்று அனுமானிக்க இயலவில்லை.

ஒரு துவக்கம், ஒரு பிரச்னை, ஒரு முடிவு என்ற வழக்கமான பாணியை ஜெகெ மாற்றினார்.

நீங்கள் மற்றுமொரு பரிமாணத்தை வாசகர்களுக்கு காட்டியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்

இளம்பரிதி

***

தற்கொலை செய்துக்கொண்டவர்கள் அனைவரும் இந்த பூமி புத்தகத்தின்மீது ஒரு வரியை எழுதிச்செல்கின்றார்கள். அந்த வரியின் வடிவங்கள் வேறுவேறாக இருந்தாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான். “யாரும் என்னைப்புரிந்துக்கொள்ளவில்லை“ என்பதுதான் அது. இயற்கையிலே மரணம் அடைந்த அனைவரையும் இந்த பூமி புரிந்துக்கொண்டுவிட்டாதா? புரிந்துக்கொண்டுவிட்டதாய் நம்புகிறார்கள் அல்லது மயங்குகின்றார்கள். அந்த நம்பிக்ம்கையும் மயக்கமும் அவர்களை வாழ்க்கையின்மீது கட்டிவைத்திருக்கும் நூலை அறுக்கவிடாமல் செய்கிறது. தற்கொலைச்செய்துக்கொள்பவர்கள் அந்த நம்பிக்கையை மயக்கத்தை அறுப்பதன்மூலமாகவே தன் உயிரையும் அறுத்துவிடுகின்றார்கள்.

மரணங்கள் சோகத்தையும், தற்கொலைகள் அதிர்ச்சியையும் ஏற்பத்தி ஆறிவிடுகின்றன, ஆனால் கொலைகள் குற்றவுணர்ச்சியாகி கொலைசெய்தவனை வதைக்கிறது.

ஆசிரியர் திரு.ஜெயமோகனின் “ஒரு கோப்பை காபி“ கொலைசெய்தவரின் குற்றவுணர்ச்சியால் விளையும் வாழ்க்கை நாடகத்தைக்காட்டுவதுபோல் வந்து புரியாமையால் ஒருவரின் மனதை வதைப்பதால் ஏற்படும் மனக்கொலையை உணரும் ஒருவனின் உள அழுத்தத்தை காட்டி, தன் அறியாமை அழியும் நிலைப்பாட்டில் வந்து நிறைவடைகிறது.

கொலைகள் ஏன் ஏற்படுகின்றன? கொலைகள் அறிந்தும் அறியாமலும் ஏற்பட்டுவிடுவதுபோல் இருந்தாலும் கொலை செய்தவனுக்கும் கொலையுண்டவனுக்கும் இடையில் ஒரு புரிதல் இல்லாமல்தான் ஏற்படுகின்றது. மற்றவரைப்புரிந்துக்கொள்ளமல் ஏற்படும் கொலையைவிட தன்னை புரிந்துக்கொள்ளாமையால் ஏற்படும் கொலை மூளையின் ஒவ்வொரு செல்லையும் கொல்லும் பெரும்கொலையாக வதைக்கும்.

“ஒரு கோப்பை காபி“ சிறுகதையில் கொலையாகிவிடும் அப்பாவிற்கும் கொலைசெய்யும் அம்மாவிற்கும் புரிதல் என்பது இல்லை என்பதை வலியோடு சொல்கிறது கதை. வலிகளை புரிந்துக்கொள்ளாத வாழ்க்கையின் பாதை கொலைகளத்தில் சென்று நிற்கின்றது. வலிப்பட்டவர்களே வலிகொண்டு வலிப்புக்கொண்டு துடித்து உணரும்படி வாழ்க்கை இருக்க, வலி செய்தவர்கள் வலிக்காமல் செத்துப்போகின்றார்கள் மண்ணில். ஆண் வலிசெய்பவனாகவும். பெண் வலிபெறுபலகவும் இருக்கும் ஒரு தொன்மையான வாழ்க்கையின் நிறைவு என்னவாக இருக்கும் என்று கதை சுட்டிக்காட்டும் இடத்தில் நெஞ்சில் அடிக்கிறது. தான் பட்ட லியை புரிந்துக்கொள்ளாமல் மனவலியையும் தரும் கணவனை ஐம்பதுவருட பால் செம்பால் அடிக்கிறாள் மனைவி. முலையே கொலைக்கொம்பாவதுபோல, பால்சொம்பே குருதிகலம் ஆகின்றது. ஐம்பது வருட தாம்பத்தியத்திய பால்செம்பில் கறக்கப்பட்ட வலியின் குருதி நிறம்பி விட்டதன் விசை அது.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை-என்கிறார் வள்ளுவப்பெருமான்.

பால்செம்பால் கணவனை அடித்துவிட்டு சமையல்கட்டுக்குத்தான் சென்று தனக்கு என்று ஒரு கருத்தும், ஒரு உணர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்த அம்மா அழுகிறாள். அதே அம்மா தற்கொலைவரை சென்று மீண்டு வந்து திருச்சியில் இருந்து அமெரிக்காசென்று இந்தியசமையல் இணையதள வழிவியபார நிறுவனத்தில் பணிசெய்து அதன் நிறுவனர்கள் ஒருவராகவும் உயர்கின்றாள். நாகரீகம், சுற்றுலா, நட்பு, உறவு சுதந்திரம் என்று தன் சிறகுகளை விரிக்கிறாள். எந்த சமைகயல் கூடம் அவளுக்கு சிறையாக இருந்ததோ அதே சமையல்கூடம்தான் இன்று அவளுக்கு வானத்தை திறந்துக்காட்டும் சுதந்திர ஜன்னலாகவும் இருக்கிறது.

அம்மாவின் பாத்திரத்தை வைத்து கதையாசிரியர் திரு.ஜெயமோகன் பெண்களின் கூண்டையும் கூட்டையும் தரம்பிரித்துக்காட்டுகின்றார். பெண்களை, பெண்களின் பாரம்பரிய வீட்டுத் தொட்டிகளை உடைத்து சிந்தனை கானகவெளியில் பதியம்போடுகின்றார். பெண்கள் மீது ஏற்றப்பட்ட சம்பரதாய கேணிகளை உடைத்து, தனித்தன்மை சமுத்திரத்தில் நீந்திவிளையாட செய்கிறார்.

அம்மாவை பிழைக்கவைக்க நினைக்கும் மகா அவள் கொலைசெய்யவில்லை என்று நம்பவைக்க முயல்கிறான். அவள் அதை எளிதில் தாண்டியபோது அதைத்தாங்கிக்கொள்ளமுடியாமல் அம்மாவை வெறுக்கிறான். அம்மாவைப்பொறுத்தவரை அவள் கொலைசெய்தது கணவனை அல்ல, தனது கருத்தை தனது உணர்ச்சியை தனது சுதந்திரத்தை கொன்ற பாரம்பரியத்தை கொன்றுவிடுகின்றாள். தனது கருத்தை, தனது உணர்ச்சியை, தனது சுதந்திரத்தை கொன்ற பாரம்பரியத்தின் ஆணாதிக்கத்தை அவள் கணவன் என்று நம்பி இருந்தாள், அவள் இருந்த அவள் இருந்த பழமையான வாழ்க்கை வட்டம் அதை நம்பசெய்தது, அவள் கொன்றது தனது சுதத்திரத்தை மூடிமறைத்த பழமையை என்பதை பெரும் புதுநிலத்தில் அறிகின்றாள். பெரும் புது நிலம் அவளுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது. கருத்து உரிமை உழைப்பையும் ஊதியமும் உயர்வும் நாகரீகமும் நட்பையும் சுதந்திரத்தையும் தருகின்றது. பெரியதுக்கு உயராமல் சிறியதை சிறியது என்றுப்பார்க்கும் பார்வை ஏற்படுவதில்லை என்பதை அம்மா கதைப்பாத்திரம் காட்டி தனது சிறகுகளை விரித்து தனது பெரும்நிலத்தில் பறக்கிறது.

அம்மாவின் மாற்றம் மகனைப்பாதித்து தூக்கமின்மைக்கு கொண்டுசெல்கின்றது. அமெரிக்காவின் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதற்காக வசைபாடிய அப்பா, தென்னமட்டையால் அடிக்கவந்த அப்பா நல்லவர்போலவும், அம்மா கெட்டவள்போலவும் ஏன் மகனுக்கு தெரிகின்றாள்?. மகனின் கனவில் இளையவயது அரசு பணியில் இருக்கும் அப்பாவின் வடிவம் ஏன் வருகின்றது? ஏன் அப்பா இறந்த உடல் சவபெட்டியில் இருந்து கண்ணீர்விடுகிறது?. ஏன் அம்மாவின் நாகரீக மாற்றம் மகனுக்கு பிடிக்கவில்லை? ஏன் அம்மாவின் சுதந்திரம் நட்பு செல்வம் மகனை தூக்கமின்மைக்கு கொண்டு செல்லகிறது?

பதிலை இரு சொல்லில் சொல்வ வைக்கிறது கதை. “தொன்மையான பாரம்பரியம்“. மகன் வளரும்போது புதுமைநோக்கி கிளைகள்போல வானத்தை தொடநினைக்கின்றான். அது தொடமுடியாதபோது அல்லது அதில் உள்ள வெட்டவெளி சூன்யம், அவனை வேர்களை நோக்கி தொன்மையை பாரம்பரியத்தை பற்றி நிற்க நினைக்கிறது. எதிரியாக இருந்த அப்பா இறந்தபோது தொன்மையின் வடிவாக தெரிகின்றார். இளமையாக வந்து ஆற்றலை காட்டுகின்றார். பிணமாகி கிடந்து எழமுடியாமையால் உயிரின்மையால் பயன்படாத வடிவத்தால் மட்டும்வாழ்ந்து கண்ணீர்விடுகின்றார். அவர் பிணவாதற்கு அம்மா ஒரு காரணம்போல் தெரிகின்றாள். அப்பா இறந்தற்கு அவரின் பழமைமை முதுமை குணமின்மை வெற்றுவசைகள் காரணம் என்பது புரிபடவில்லை. இளைய சமுகத்தின் அல்லாடல் இது. தொன்மமா? நவயுகமா? என்ற இருமுனையாடலில் அவனை நிறுத்தி வாழ்க்கை வதைக்கிறது. அதுவும் வாழ்க்கையின் ஒருசெயல்தான். இருமுனையிலும் யாராலும் நிற்கமுடியாது. ஒரே மரத்தின் அங்கமாக இருந்தாலும் கிளையின் பயண நிலைவேறு, வேரின் பயணநிலைவேறு. இந்த ஆடலை மையத்தில் நின்று நோக்க தெரியாமல் ஒருபக்கமாக சாயும் இளைய சமூகம் மூளை அமைதிக்கு மாத்திரைகளையே நாடமுடியும். புரிதல் மட்டுமே அவர்களை சாந்தியடையவ செய்யும் என்பதை கதை வாசகன் இடம் விடுகின்றது.

கதைச்சொல்லியாக வரும் மகா மார்த்தாவை முதலாவதாக திருமணம் செய்து, அது முறிந்து, இரண்டாவதாக ஜானகியை திருமணம் செய்கிறான். முதலில் நாகரீகத்தை உணர்த்த மார்த்தாவை மணக்கிறான். அவனால் நவயுகத்தில் இருக்கமுடியாமல் தொன்மையில் விழுந்து ஜானகியோடு வாழ்கிறான். மார்த்தா ஜானகி என்ற இருமனைவியாக வரும்பெயர்களே அவனை நாகரீகத்திற்கும் தொன்மத்திற்கும் அல்லாடிய மனிதன் என்று கதை சுட்டிச்செல்கிறது. அவனுக்கு ஒரு பிரச்சனை என்றபோது அவனால் தொன்மமாகிய ஜானகியிடம் விடைதேட முடியவில்லை. புதுமையாகிய மார்த்தாவிடம்தான் விடைதேடிவருகின்றான். தொன்மம் நம்மை நிலைநிறுத்தி வைக்கும் ஆனால் அதனிடம் நமக்கான விடை இல்லை, அதற்கும் நாம்விடை சொல்லவேண்டியதில்லை அந்த பதுங்குதல் அல்லது தப்பித்தல்தான் மனிதனை தொன்மத்தை நாடசெய்கின்றது. ஆனால் வாழ்க்கை தொன்மத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. புதுமையோடு இணைந்து உள்ளது. புதுமை கேள்விக்கேட்கிறது, அது விடை சொல்கிறது, உழைக்கசொல்கிறது, அதனிடம் விடையும் இருக்கிறது உற்று கவனிக்கிறது. தூண்டுகின்றது. புரிந்துக்கொள்கின்றது. தேவையானதை தருகின்றது. தெளிவடைய வைக்கிறது.

புதுமை நாகரீகம் நம்மை தன்னறிவால் செயல்பட தூண்டுகின்றது என்பதால் அதன்மீது அச்சம் ஏற்படுகிறது. நமது ஆற்றலுக்கு சவால் விட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் அச்சம் ஏற்படுகிறது. அது சிறியவனாக காட்டுகின்றது. அந்த அச்சம் புதுமையை நாகரீகத்தை கைவிட்டு தொன்மையிடம் சரணடைய செய்கிறது. மார்த்தாவை விட்டு ஜானிகியை மகா அடைந்தது அந்த விதத்தில்தான்.

அம்மாவின் குற்ற உணர்ச்சி விடுபடும் இடத்தில் இருந்துதான், அம்மாவின் நாகரீகத்தில் இருந்துதான் மகா தான் மார்த்தாவை விட்டுவந்ததன் குற்ற உணர்ச்சியை அறிகின்றான். மார்த்தாவை வலிக்க வைத்ததை அல்லது அவளை எந்த கருத்தும் உணர்ச்சியும் இல்லாத, சுதந்திரம் இல்லாத உழைப்புக்கு பொருள்பெறாத சமையல்காரியாக மட்டும் ஆக்கநினைத்த குற்ற உணர்ச்சியை அறிகின்றான். கதை இதை நமக்கு காட்டவில்லை, அம்மாவின் வாழ்க்கைியல் இருந்து அம்மாவின் எதிர் துருவத்ததைப்பார்க்கும்போது மார்த்தாவின் எதிர் துருவம் என்ன என்று கதை நம்மை அறிய செய்கிறது. அதனால்தான் மார்த்தாவை கண்டு தனது மன்னிப்பை கேட்க ஓடிவருகின்றான். அவள் மறுத்தால் செத்துவிடுவேன் என்கிறான். அவளால் விடையறிவதுபோல வந்து அவளுக்கு இழைத்த கொடுமைக்கு மன்னிப்பு கேட்டு தனது குற்றவுணச்சியை தீர்த்துக்கொள்கின்றான்.

மகாவிற்கு ஏற்பட்ட துக்கம் மூளையமைதியின்மை அம்மாவின் மாற்றத்தால் வந்தது அல்ல, அம்மா மார்த்தவனதால். மார்த்தாவை அவன் அம்மாபோல் ஆக்க நினைத்ததால். மார்த்தாவை அம்மாபோல் ஆக்கமுடியாமல் தோற்று தான் தொன்மையாகிய ஜானகியிடம் நுழைந்து அதளபாதளத்தில் அழுந்தியதால்.

இ்ந்தியர்களை நவின படிப்பு புதுமையை நோக்கி புது உலகத்திற்குள் தள்ளிவிடுகின்றது. அவர்கள் மூளையின் பயணத்தின் வழியாக புதுமையை பெற்றுவிடுகி்ன்றார்கள் ஆனால் அவர்களின் உடல் பழமையின் ருசியிலேயே இருக்கிறது. அவர்கள் மூளையின் வழியாக ஐரோப்பியர்கள் காப்பியை பெறுகின்றார்கள். தங்கள் உடலின்வழியாக சிகிரியை அதில் கலக்கிறார்கள். பாலும் ஜீனியும் கலந்து இந்திய காப்பியாக குடிக்கிறார்கள். அது அவர்களின் தொன்மைபாரம்பரியம் என்று பறைசாற்றுகின்றார்கள். இந்திய காப்பிபோல அவர்களுக்கு எல்லாம் கலந்த ஒன்று வேண்டும். அது வாழ்க்கையில் இருக்கிறதா? முன்றுக்கொண்டே இருக்கிறார்கள். மகாபோன்றவர்கள் முயற்சியில் தோற்றுகண்டுகொள்கிறார்கள்.

ஒரு கோப்பை காபி என்னும் தலைப்புதான் எத்தனை அர்த்தம் நிறைந்தது. அற்புதமான உளவியல் லீலையை காட்டும் கதைக்கு ஒரு கோப்பை காபி என்னும் உருவக தலைப்பு. ஜெ எளிமையாக புரியக்கூடிய கதைக்குள் பெரும் உளவியல் நாடகத்தை தொன்மைக்கும் நாகரீகத்திற்கும் இடையில் உள்ள லீலைகளை சித்திரம் வரைந்து நெஞ்சத்தில் மாட்டிவிடுகின்றார்.

மார்த்தாபோன்ற நாகரீக நவயுகமாதை பெற்றவன் மூளையின் சக்தியை உழைப்பில் ஈடுபடுத்தி இருந்தால் பெரும் செல்வத்தையும் பெரும் கலைவாழ்வையும் பெற்று இருப்பான். மார்த்தா காட்டுவது மூளையையும் உடலையும் இணைக்கும் உலகவாழ்க்கை. அவளை புரிந்துக்கொள்ளாமல்தான் மாக ஜானகியை பெற்றான். அவள் இருப்பு அவனுக்கு உடலைத்தாண்டி எதற்கும் பயன்படுவதாக இல்லை. மகா மார்த்தாவைவிடும்போது அவளை அறிந்த புரிந்த சாம் அவளை பெற்றுக்கொள்கிறான். சாம் மார்த்தாவால் மூளையும் உடலும் செயல்படும் வாழ்க்கை வாழ்கிறான். மார்த்தாவை சாம் புரிந்துக்கொண்டு உள்ளான். அவள் புரிந்துக்கொள்வாள் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறான்.

மார்த்தாவை புரிந்துக்கொள்ளாமல் சென்ற மகாவி்டம் மார்த்தா புரிந்துக்கொள்வாள், தீர்த்துவைப்பாள் என்று சாம் சொல்லும்போது அவன் புரிதலின் உச்சம் புரிகிறது.. மகா புரிந்துக்கொள்ளமையின் நீச்சம் தெரிகிறது.

மார்த்த சாமை தச்சுப்பணிச்செய்ய சொன்னாள், சாம் அதை ஏற்று புத்தக அடுக்கு செய்கிறான். அவன் உழைப்புக்கும் அறிவுக்கும் இடையில் உள்ள தூரத்தை செதுக்கி குறைத்துவிடுகின்றான். மகா போன்ற இளைய இந்திய மனம் தவறவிடுவது இதைத்தான். அது இந்திய காபியில் இருக்கிறது அதில்தான் அது புத்துணர்ச்சிப்பெறுகிறது. மார்த்தா இத்தாலியன் உணவு செய்து உலகத்தை சாம் வீட்டுக்கு கொண்டுவருகிறாள்.

மார்த்தாவிடம் மகா மன்னிப்பு கேட்டுக்கத்தான் வந்தான். சுதந்திரம் அடைந்த அம்மாவில் மார்த்தாவைதான் மகா பார்த்தான் அப்போதுதான் அவனுக்குள் இருந்த அப்பா சாகதொடங்கினார் அல்லது அப்பாபோலவே ஆகிவிட்ட அவனே சாகதொடங்கினான். அதை மார்த்தா கண்டுகொண்டாள் அதனால்தான் அவனை இந்தியாவிற்கு சென்று உன் அப்பாவை நீதான் கைத்தவறுதலாகக் கொன்றுவிட்டதாக நினைத்துக்கொள், அதற்குரிய எல்லாவற்றையும் செய். மீண்டுவிடுவாய்” என்று சொல்கிறாள்.

மற்றவர்களை திருத்துவதாக, மற்றவர்களை வாழ்விப்பதாக, மற்றவர்கள் குற்றங்களை நீக்குவதாக நினைக்கும் மனிதனுக்குள்தான் எத்தனை பெரிய குற்றங்கள் ஒளிந்துக்கிடக்கிறது. அதை கண்டும்கொள்ளும் தைரியம் மனிதனு்ககு அத்தனை எளிதில் வந்துவிடுவதில்லை. அது மூளையமைதி மாத்திரிகைகள் சாப்பிடும் அளவுக்கு மனிதனை தள்ளுகின்றது. அதற்கு பயந்தே மனிதன் விண்ணில் ஆடும் கிளைபோல அல்லாமல் வேர்போல மண்ணோடு மண்ணாக கிடப்பது வாழ்க்கை என்று நினைத்துவிடுகின்றான். மகா காலம் கடந்து தொன்மம் நாகரீகம் என்ற இருமுனையாடலை புரிந்துக்கொள்ளகிறான்.

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்.

***

ஒரு கோப்பை காபி – கடிதம்

முந்தைய கட்டுரைராஜ் கௌதமன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்