ஜெயக்குமாருக்கு

ara

ஜெ,

ஜெயக்குமாருக்கு நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். உங்களுடைய கலை நோக்கை ஒருவர் நிகழ்த்துக் கலைகளுக்கும் எடுத்து செல்வாரெனில் அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அப்படி ஒரு கலை விமர்சனத்திற்கு, கலையைப் பற்றிய அறிதலுக்கு நீங்கள் குறிப்பிட்ட நோக்குகளை விரிவாக்கிக் கொள்ளும் வாசிப்புக்கு, அரவிந்தரின் இந்திய மறுமலர்ச்சி நூலை வாசிக்கலாம். இணையத்தில் மின்னூலாகவும் கிடைக்கிறது. அவர் விரிவான வாசிப்புடையவர் என சீனு சொன்னார், ஏற்கனவே இதை வாசித்துமிருக்கலாம்.

எந்தத் துறையிலும் இந்திய சிந்தனை மரபை அடிப்படையாகக் கொண்டும், மேற்கின் அறிவுலகக் கருவிகளைக் கொண்டும் இணைத்தியங்கி இன்றைய வாழ்வின் சிக்கல்களுக்கும் தேவைகளுக்குமான விடைகளைக் காண்பதைக் குறித்த விரிவான பதில்களை முன்வைக்கிறது இன்னூல்.

நாம் வாசிக்கத் துவங்கும் போது கிடைக்கும் அனைத்து அறிவுலகக் கருவிகளும் மேற்கத்திய மரபை சார்ந்தவை. அவற்றை இந்திய மரபின் மீது போட்டுப் பார்ப்பதன் சிக்கலை அரவிந்தர் விளக்குகிறார். நம் மரபை புரிந்து கொள்வதற்கான நோக்குகளை உருவாக்கித் தருகிறார். மேற்கத்திய மரபின் பயன்களையும், அவற்றின் போதாமைகளையும் விளக்கி இந்திய மரபு “உலகுக்கு அளிக்க வேண்டியவற்றை” விளக்குகிறார். அதுவே இந்னூலின் முக்கியமான அம்சம். நூறு வருடம் கழித்து, அவர் கூறிய பங்களிப்பின் தேவை இன்று அதன் உச்சத்தில் இருக்கிறது. ஒவ்வொரு இந்தியக் கலைஞனுக்கும் முதன்மைக் கையேடு இன்னூல்.

இந்திய மரபு குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, பின்னும் நாம் பெருமிதம் கொள்ளக் கூடியவை இங்கிருக்கின்றன என்ற அவருடைய எழுத்து பெரும் நிமிர்வைத் தருகிறது. அது பொதுப் புத்தி சார்ந்த ஐரோப்பியப் பார்வை, இந்திய மரபு குறித்து உருவாக்கி வைத்திருக்கும் கூனுக்கு மருந்து. அதற்கு அவர் தரும் பதில்கள் பெரிய துவக்கப் புள்ளி. கூடவே சனாதனிகளுக்கும், ஐரோப்பியத் தாக்கம் கொண்ட நவீனத்துவர்களுக்கும் நடுவே பயணிப்பதன் அவசியத்தையும் விளக்குகிறார்.

முடித்த உடன் நூலைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என எண்ணியிருக்கிறேன். இது ஜெயக்குமாருக்கு நீங்கள் அளித்த பட்டியலோடு அவர் சேர்த்துக் கொள்ள வேண்டி.

ஏ.வி.மணிகண்டன்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21
அடுத்த கட்டுரைஒரு கோப்பை காபி – கடிதம்