மலையாளத்தின் தாலாட்டுப்பாடல்களில் எனக்கு மிகப்பிடித்த பாடல் இது.பிரியத்திற்குரிய சலீல்தாவின் இசை. நாட்டுப்புறத்தன்மை கொண்ட பி.லீலாவின் குரல். வயலார் ராமர்வர்மாவின் வரிகள்.
மிகச்சரியாக மலையாளத்திற்குப் பொருந்தும் இந்த மெட்டுக்கும் கேரளச் செவிப்பண்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு அஸாமிய மெட்டுபோலிருக்கிறது. மலையாளமாகவும் அல்லாமலும் மாயம் காட்டுகிறது
இன்று இப்பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது சில நட்பு நினைவுகள். முதன்மையாக ஷாஜி. அவர் சலீல்தாவின் பெரும் ரசிகர். சலீல்தாவின் ரசிகர்மன்றத்தின் தென்னக அமைப்பாளராக இருந்தவர். ஆனால் துபாய் ஆபிதீன், ரமீஸ் கசாலி ஆகியோரும் நினைவில் வந்து சென்றார்கள். எங்கோ நினைவுகள் நாமறியாதபடி வேர்பின்னிக்கொண்டிருக்கின்றன. எங்கேயோ எதன்பொருட்டோ நண்பர்களை நினைத்துக்கொள்கையில் இரவு முழுமையடைகிறது
பஞ்சமியோ பௌர்ணமியோ
குஞ்ஞுறங்ங்கும் கூட்டினுள்ளில்
குளிரும் மஞ்ஞும் கோரியிட்டு?
ஆரோ ராரோ ராரீரோ
மானம் மீதே தேனருவி
மேகம் நீந்தும் தேனருவி
தேனருவி கரையில் நிந்நு
தாழே வீணு நின் மிழிப்பூ
தாலி பீலி திருமிழிப்பூ
ஆரோ ராரோ ராரீரோ
கொஞ்சும்மொழி பைங்கிளியோ
கூஹூ கூஹூ பூங்குயிலோ
ஆதிரயோ ஆவணியோ
ஆரேக்காத்து ஈ புஞ்சிரிப்பூ
ஆரோ ராரோ ராரீரோ
[ஐந்தாம் நிலவோ முழுநிலவோ
குழந்தையுறங்கும் கூட்டுக்குள்
குளிரும் பனியும் அள்ளி சொரிந்தது?
வானம் மேலே தேனருவி
மேகம் நீந்தும் தேனருவி
தேனருவி கரையிலிருந்து
கீழே விழுந்தது உன் விழிப்பூ
தாலி பீலி திருவிழிப்பூ
கொஞ்சும் மொழி பைங்கிளியோ
கூஹூ கூஹூ பூங்குயிலோ
திருவாதிரை நாளோ ஆவணித்திருநாளோ
யாரைக் காத்து இந்த புன்னகைப்பூ? ]
வயலார் ராமவர்மாவின் இவ்வரிகளை எண்ணிக்கொண்டிருந்தேன். மிக எளிமையானவை, நுண்பொருளற்றவை, நெகிழ்வும் அழகும் மட்டுமே கொண்டவை. மேற்பரப்பின் எளிமையான அழகால் கவிதையானவை. மிக அலங்காரமான வரிகளை எழுதும் கவிஞர் அவர். அந்த எல்லையிலிருந்து இந்த எல்லைக்கு வந்து இப்படி எழுதமுடிவதென்பது ஓர் அரிய கலைத்திறன். மாவீரன் ஒருவன் மைந்தனிடம் மண்டியிட்டு சிரித்துவிளையாடித் தோற்பதன் அழகு இதிலுள்ளது
இது பெருங்கலைஞர்களில் இயல்பாக நிகழ்கிறது. ‘சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா’ என்றும் கொஞ்சும் பாரதியில். தாகூரின் நாடகப்பாடல்களில்ம் நாம் பெருங்கலைஞர்களின் அபாரமான எளிமையைக் காண்கிறோம். அறிவாழம் பெருந்தரிசனம் ஆகியவற்றைக் கடந்து அமையும் புன்னகையும் நெகிழ்வும் ஒருவகையில் கலைஞனை முழுமைப்படுத்துகிறது.
*