எதிர்ப்பும் ஏற்பும் –கடிதங்கள்.

சமயவேல்
சமயவேல்

 வைரமுத்துவுக்கு விருது – எதிர்ப்பு மனு

அன்புள்ள ஜெ

விளக்கு விருதுகள் அறிவிப்புக்கு நீங்கள் அளித்திருந்த வாழ்த்துச்செய்தியை வாசித்தேன். இணையத்தில் நீங்கள் எந்தெந்த இலக்கியவாதிகள் விருதும் அங்கீகாரமும் பெறும்போதெல்லாம் வாழ்த்தியிருக்கிறீர்கள் என்று சென்று வாசித்துப்பார்த்தேன். முக்கியமான படைப்பாளிகள் என நீங்கள் நினைக்கும் எவர் விருதும் அங்கீகாரமும் பெற்றாலும் மனம்திறந்து வாழ்த்தியிருக்கிறீர்கள்.

வெறும் வாழ்த்தாக அது அமைவதுமில்லை. பொதுவாசகருக்கு அந்த விருதுபெறுபவரின் தகுதி என்ன, அவருடைய பங்களிப்பு என்ன என்று சுருக்கமாக விளக்கியபின் அந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள்.ரு இந்தக்குறிப்பிலும் ராஜ் கௌதமன், சமயவேல் இருவரும் எவ்வகையில் சாதனையாளர்கள் என ரத்தினச்சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் வெறும் புகழ்மொழி அல்ல. அவர்கள் மீதான உங்கள் விமர்சனத்தையும் பதிவுசெய்திருக்கிறீர்கள். இந்த வாழ்த்துக்களும் குறிப்புகளும்தான் சிலருக்கு விருது அளிக்கப்படுகையில் ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்பதைப் புரியவைக்கிறது. ஏனென்றால் அவர்கள் கணக்கில் அப்படிப்பட்ட சாதனை என ஏதுமில்லை.

மிகத்தெளிவாகவே எது இலக்கியம் எது அல்ல என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். சமரசமும் மழுப்பலும் இல்லை. இது இந்தத்தலைமுறைக்கு நீங்கள் செய்யும் பணி. வாழ்ந்துக்கள்

ஆதி குமரன்

***

அன்புள்ள ஜெ,

இங்குலாப் விருதுக்கு நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தீர்கள் என்பது ராஜ்கௌதமனுக்கும் சமயவேலுக்கும் விருதை நீங்கள் வரவேற்றிருப்பதைக்கொண்டே புரிந்துகொள்ளலாம். எந்த படைப்பாளியையும் தொடர்ச்சியாக முழுமையாக வாசித்து சிந்தித்து மனசுக்குள் வகுத்துக்கொள்ளாமல் இப்படி சுருக்கமாக ஆனால் சரியாக வரையறைசெய்து சொல்லிவிடமுடியாது. இவர்கள் இருவரைப்பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் வரிகள் அவர்களைப்புரிந்துகொள்ள மிக உதவியானவை

இன்குலாப் விருது பற்றி நீங்கள் எழுதியபோது முகநூலில் எழுந்த எதிர்வினைகளை நான் வாசித்துக்கொண்டே இருந்தேன். ரொம்ப ஆச்சரியம். வெறும் ஒற்றைவரி வசைகள்.செருப்பாலடிக்கவேண்டும். யார் இந்த ஜந்து, மலக்கிடங்கு — இந்தமாதிரி. கொஞ்சமாவது பொறுப்பான மொழியில் எழுதப்பட்ட ஒரு எதிர்வினைகூட இல்லை. நான் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு இந்த எதிர்வினைகள் பெரிய ஒரு திறப்பு. நீங்கள் ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள். அதற்கு எழும் இந்த அற்பத்தனமான எதிர்வினைகளே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று காட்டிவிடுகிறது. இந்த சில்லறைகளுக்கு எதிராகத்தான் நீங்கள் ஒரு தொடர்ச்சியான இயக்கத்தில் இருக்கிறீர்கள்.

இந்த எதிர்வினைக்காரர்கள் உங்களைப்பாராட்டினால்கூட அதை ஏற்க நீங்கள் கூசுவீர்கள். போடா என்பீர்கள். அவ்வளவு சல்லித்தனமான எதிர்வினைகள். சரி இதுக்கு இப்படி என்றால் எல்லா விஷயத்துக்கும் இதே சல்லித்தனம்தான். இவர்களை எதிர்பக்கம் வேண்டுமென்றே தள்ளி ஒரு தரப்பாக ஆக்குகிறீர்கள். அவர்களைக் கண்டு அருவருப்பு கொள்ளும் என்னைப்போன்றவர்கள் எல்லாம் உங்கள்பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு இருக்கும் வாசகர்கள் எல்லாருமே உங்களை கீழ்த்தரமாக வசைபாடுபவர்களால் உங்களை நோக்கி பவுன்ஸ் செய்யப்பட்டவர்கள்தான் என நினைக்கிறேன்

கார்த்திக்ராஜ்

***

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

வைரமுத்து – எத்தனை பாவனைகள்!

முந்தைய கட்டுரைமூக்கனூர்ப்பட்டி
அடுத்த கட்டுரைசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’