அன்புள்ள ஜெ,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.. விஷ்ணுபுரம் விழாவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். இங்கே சென்னை இசை விழாக்கள் மற்றும் கச்சேரி பயணங்கள்.அடுத்த வருடம் சாக்குகள் சொல்லாமல் கண்டிப்பாக வருவேன். இந்திய அளவில் சீரிய இலக்கியத்தினை நோக்கி வாசகர்வகளைவழிநடத்தும் ஒரு முயற்சி தங்களுடையது மட்டுமே. இது அனைவருக்கும் தெரியும்.
*
சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருது குறித்து நீங்கள் எழுதியதன் முக்கியத்துவம் இப்பொழுது பலருக்கு புரியாது. பல வருடங்கள் கழித்து அந்த விழிப்புணர்வு வரும். இரண்டு நாட்கள் முன்பு சுசித்ரா ராமச்சந்திரனை மயிலாப்பூரில் சந்தித்தேன்.கர்நாடக இசை, இலக்கியம் என்று இரண்டு மணி நேரம் உற்சாகமான உரையாடல். ஒன்று தோன்றியது. கர்நாடக இசைக்கும், பரதநாட்டியத்திற்கும் விமர்சன போக்கு என்பதே இல்லாமல் போய் விட்டது. ஆழ்ந்து பார்க்கும்போது எப்போதுமே இருந்ததில்லையோ என்று தோன்றுகிறது. சில உரைகள், கலந்துரையாடல்கள் என்று ஒரு சம்பிரதாயமான போக்கு. அவ்வளவுதான்.. ஒரு சிலரே தீவிரத்துடன் இயங்குகிறார்கள். கலை வரலாறு என்று தம் உரைக்கு தலைப்பிட்டுவிட்டு கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சுவாரசியமாக பேச வேண்டும் என்பதற்காக அக்கலைஞர்களுக்கு பிடித்த உணவு, உடை அலங்காரம், எந்த கடையில் வெற்றிலை பாக்கு வாங்குவார் என்ற தகவல்கள். இவையெல்லாம் கலையின் வரலாறா என்பது தெரியவில்லை.
பரதநாட்டிய நிலைமை இன்னும் மோசம்.எல்லா பாட்டிற்கும் ஆட ஆரம்பித்து விட்டார்கள். இந்த முறை ‘மறு வார்த்தை பேசாதே.. மடி மீது நீ தூங்கு’ பாடலுக்கு அபிநயம் பிடிக்கப்பட்டதாக கேள்வி. பத்து நாட்கள் நடன மாமணிகள் ஒன்று கூடி பேசி, பத்தாவது நாள் முடிவில் தாங்கள் அனைவரும் பாவம் என்று ஒரு சேர முடிவெடுப்பார்கள். ஒரு தீவிர இசை மாணவன் என்ற வகையில் இந்த ஆண்டு முதல் எழுத வேண்டும் என்று உள்ளேன். இசையுடன், கோயில்கள், சிற்பங்கள் என்று எழுத விருப்பம்.
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
ஜெயக்குமார்
***
அன்புள்ள ஜெயக்குமார்,
நான் உங்களைச் சந்திக்க ஆரம்பித்து ஈராண்டுகளாகின்றன. என் கணிப்பில் தமிழில் எழுதப்போகும் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் நீங்கள். பாடகர், நிகழ்த்துகலைகளில் ஈடுபாடுள்ளவர் என்னும் வகையில் உங்கள் எழுத்தின் இடம் பிறருக்கில்லாத ஒன்று. உங்கள் எதிர்கால வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்
இப்போது அலைச்சலின் காலம். அதைப்புரிந்துகொள்ள முடிகிறது.இருப்பவற்றின் மேல் ஒவ்வாமை எழுவதும் விமர்சனங்கள் வைப்பதும் இயல்பு. ஆனால் இத்தகைய மனநிலைகளின் சிக்கல் ஒன்றுண்டு, ஏற்கனவே இருப்பவற்றின்மேல் ஒவ்வாமை உருவாகி அதைமட்டுமே வெளிப்படுத்திக்கொண்டிருப்போமென்றால் அவற்றின் எதிர்மறை நீட்சியாக நாம் அமைவோம். அது எந்தவகையிலும் உயர்வான நிலை அல்ல. வெறுமே விமர்சனத்தைச் சொல்வதும் காலப்போக்கில் அதைக் கசப்ப்பென ஆக்கிக்கொள்வதும் மட்டுமே நிகழும். அப்படி எல்லாத்தளத்திலும் பலர் உலவிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் எதை ஒவ்வாமல் உணர்கிறோமோ அதை மிகச்சிறிதென ஆக்குமளவுக்கு மேலெழுவதே உண்மையில் தேவையானது. மேலும் மேலும் உங்கள் எல்லைகளை விரித்துக்கொள்வதே இன்று உங்கள்தேவை என உணர்கிறேன். அதற்கான வயதில் இருக்கிறீர்கள்.
தமிழ்ச்சூழலில் இசை, கலை விமர்சனங்களின் எல்லைகள் சில உண்டு. ஐரோப்பியக் கலைவிமர்சனங்களைக் கூர்ந்து நோக்கினால் இது புரியும்.நான் இசை – கலை விமர்சனங்களை இலக்கியத்தின் முதற்பொருள் என்னும் நோக்கில் வாசிப்பவன்.இங்குள்ள இசை-கலை விமர்சனங்களின் போதாமைகள் என நான் உணர்வது இரண்டு.
ஒன்று, அக்கலையின் எல்லைக்குள் மட்டுமே நின்றுகொண்டிருப்பதன் குறுகல். இது அக்கலையின் தொழில்நுட்பத்தை மட்டுமே அலசுபவர்களாக அவர்களை ஆக்குகிறது. இரண்டு, கலையை வெறுமே உலகியல்சார்ந்து மட்டுமே அணுகுவது. ஒரு சுவையாக மட்டும். இந்த மனநிலையில் இருந்தே ‘சூடான பன்னீர்ரசம் போன்ற சங்கராபரணம்’ போன்ற விமர்சனங்கள் உருவாகின்றன
எந்தக்கலையும் ஒர் ஊடகமே. வாழ்க்கையையும், வாழ்க்கையை ஒரு துளியாகக் கொண்ட பிரபஞ்சப்பேரியக்கத்தை அறிவதற்கானது. ஒட்டுமொத்த நோக்கை, அதாவது தரிசனத்தை, நோக்கிச் செல்வதற்குரியது. பிற தரிசனங்களினூடாக என்றாவது நீங்கள் மட்டுமே முன்வைக்கும் ஒரு தரிசனத்தை கலையில், கலைவிமர்சனத்தில் அடைந்தீர்கள் என்றால் வென்றீர்கள்.
ஆகவே எக்கலையும் பிறகலைகளுடன், பிற அறிவுத்துறைகளுடன் கொண்டுள்ள உறவினூடாகவே முழுமைநோக்கிச் செல்லமுடியும். அதன் மையம் அடிப்படையான தத்துவ,ஆன்மிகத் தேடலாகவே இருக்கமுடியும். நீங்கள் ஆர்வம் கொண்டுள்ள கலையின் வரலாற்றை, அக்கலையின் பண்பாட்டுப் பின்னணியை, அதனுடன் தொடர்புகொண்டுள்ள பிற கலைகளை , பிற அறிவுத்தளங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள முயலுங்கள்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என என்னால் இன்று சொல்லமுடியவில்லை. ஒர் இசை –கலை விமர்சகராக இன்றே உங்களால் கூரிய கருத்துக்களைச் சொல்லமுடிகிறது. எதிர்காலத்தில் நீங்கள் குறிப்பிடத்தக்க புனைகதையாளராகவும் ஆகக்கூடுமெனத் தோன்றுகிறது. ஆகவே புனைகதைகளில் தீவிரமான ஆர்வம் உங்களுக்குத்தேவை என நினைக்கிறேன். புனைகதையின் மொழி கைவராத ஒருவரால் எந்தக்கலையையும் அதன் நுண்மையைத் தொட்டு விமர்சிக்க முடியாது.
இறுதியாக ஒன்று, என் நம்பிக்கை இலக்கியம்,கலை என்பவை தங்கள் உச்சங்களை அரசியலற்ற வெளியில் மட்டுமே அடையமுடியும் என்பது. அரசியல்சார்பும் அதுசார்ந்த உணர்வுநிலைகளும்போல உலகியலில் கலையை கட்டிப்போடுபவை பிற இல்லை. நம் சூழலில் பல்லாயிரம் அரசியலாளர்களின் கைகள் வசையென்றும் வாழ்த்தென்றும் கலைஞர்களைப் பிடித்து இழுத்துக்கீழே போட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் தனிமையே எஞ்சும். ஆனால் கலைக்கான, இலக்கியத்திற்கான தவம் என்பது ஆழ்ந்த தனிமையில் தன்னைத்தான் நோக்கி இயற்றப்படவேண்டியது. டி.எம்,கிருஷ்ணா போன்றவர்கள் சென்று அமர்ந்திருக்கும் இடமல்ல கலையைத் தேடுபவனுக்குரியது. அதற்கு எதிரான அரசியலும் அல்ல.
என்ன தேடுகிறோம், எங்கு செல்கிறோம் என்பதை எப்போதும் எழுத்துக்கே விட்டுவிடுங்கள். சரியானவற்றைச் சொல்லவேண்டுமென்பதில்லை. தயங்காமல் உண்மையெனத் தோன்றுவதைச் சொன்னால் போதும். என்றாவது ஒரு பெரும் இலக்கியப்படைப்புடன் எழுவீர்கள். அன்று இவ்வாழ்த்தின் அடுத்தவரியைச் சொல்கிறேன்
ஒரு தொடக்கமாக மூன்றுநாவல்களைச் சிபாரிசு செய்வேன்.
ழீன் கிறிஸ்டோஃப் – ரோமெய்ன் ரோலந்த்- இசைக்கலைக்கும் அடிப்படை இச்சைகளுக்குமான ஊட்டாட்டத்தை உணர்வதற்காக
டின் டிரம்– குந்தர் கிராஸ்- இசையை நுட்பமான குறியீடுகளாக்கி பண்பாட்டைப் பேசுவதை அறிய
டாக்டர் ஃபௌஸ்டஸ்– தாமஸ் மன். இசையை ஒரு பரந்துபட்ட தத்துவப்புலத்தில் வைத்துப்பேசுவதை அறிய
இந்தியச்சூழலில் இந்திய இசைமரபை வைத்து எழுதப்பட்ட செவ்வியல் நாவல் என ஏதும் என் வாசிப்புக்கு இதுவரை வரவில்லை. வாசித்தவரை ‘எந்தரோ மகானுபாவுலு’ [ மாடம்பு குஞ்ஞுகுட்டன்] கானல்நதி [யுவன் சந்திரசேகர்] ஆகியவை கருத்தில்கொள்ளப்படவேண்டியவை. இவை இரண்டுக்குமே இசையை இசைக்குள்ளேயே நிறுத்திவிடுதல் என்னும் பெரும் குறைபாடு உண்டு.
இந்த ஆண்டு வெற்றிகரமாக அமைக. இது தொடக்கமும் ஆகுக.
ஜெ