ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4

oru

ஒரு கோப்பை காபி [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்,

இவ்வளவு எளிமையாக ஒரு சிறுகதை அமையமுடிமா என்ற ஆச்சரியமே ‘ஒரு கோப்பை காபி’ படித்தவுடன் எழுந்தது. எந்த ஒரு சிறு மொழிச்சிடுக்குமின்றி அப்பட்டமான வாழ்க்கையை காட்டி மட்டுமே ஒரு சிறுகதை நிலைபெற முடியுமென்பதற்கு இக்கதை ஓர் சாட்சி.

தலைப்பிலிருந்து ஆரம்பிக்கிறது இதன் எளிமை. கதை ஆரம்பத்தில் காபிக்கு ஒரு குறிப்பு ஏற்றப்படுகிறது. இந்திய நவீனப் பண்பாட்டின் உருவகமாக. மூன்று வெவ்வேறு கூறுகளின் கலவையாக. அதன் வழியே கதைசொல்லியின் உளச்சிக்கல் விவரிக்கப்படுகிறது. அவன் அம்மா தன் கணவனின் மரணத்தின் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளியேறும் இலகுத்தன்மையைக் கண்டு வரும் எரிச்சல். இதுதான் கதையின் மையமுடிச்சு.

முற்றிலும் இந்தியப் பாரம்பரிய மனம் கொண்ட பெண். ஆனால் அவளுக்கு தீர்வாக அமைவது மேலை நாட்டு பின்புலத்தில் உருவான உளவியல் சிகிச்சையும் அந்நாட்டு வாழ்க்கை முறையும்.இதற்கு நேர் எதிராக கதைசொல்லி. ஒரு அமெரிக்க பெண்ணை மணந்த, அங்கேயே தன் வாழ்வை அமைத்துக்கொண்டவனுக்கு இந்திய மரபின் சடங்கு முறை நோக்கி நகர்கிறான். அம்மா காபித்தூள் அதிகமான மனம் கொண்டவள். மகனுக்கோ பாலும் சீனியும் ஜாஸ்தி. ஒருவேளை அதனால்தான் அவனுடைய முதல் திருமணம் நிலைக்கவில்லை போலும்.

இதனூடே ஒரு மென்வெளிச்சமாக சாம். சாமைப் பற்றி அதிகம் விவரணையில்லை. ஆனால் அவனும் ஒரு சிக்கல் கொண்டிருக்கிறான் என்றும் அவன் செய்யும் தச்சுவேலை அதற்கான நிவாரணம் என்றும் குறிப்புணர்த்தப்படுகிறது.

உண்மையில் மார்த்தா கதைசொல்லிக்கு சொல்லும் யோசனையுடன் கதையை முடித்திருக்கலாம். ஆனால் அதற்குப்பிறகு வரும் சிறு பகுதி தான் இக்கதைக்கு ஒரு முழுமையை அளிக்கிறது. மார்த்தா அவனிடம் கொள்ளும் கனிவும், இவ்வளவு பெரிய மனப்போராட்டத்திற்கு பிறகு வரும் உணவைப் பற்றிய குறிப்பும் தான் இக்கதைக்கு ஒரு உணர்வெழுச்சியை அளிக்கிறது. இல்லையெனில் இக்கதை ஒரு சிக்கலும் அதற்கான தீர்வு என்று மட்டுமே ஆகியிருக்கும். அந்த இறுதிப் பகுதிதான் இதை மனிதர்களின் வாழ்க்கையாக மன‌தில் நிறுத்துகிறது.

நான் தற்போது பணி நிமித்தமாக ஜெர்மனியில் இருக்கிறேன். இவர்கள் அலுவலகத்தில் காபி குடித்துக் கொண்டே இருப்பார்கள். கிட்டத்தட்ட நாளைக்கு ஐந்தாறு முறை. என்னுடைய பணியிருக்கை Pantry-யைத் தாண்டித்தான் செல்லவேண்டும். அடுத்த‌ முறைய சிறு புன்னகையுடன் தான் தாண்டிச் செல்வேனென நினைக்கிறேன்.

அதேபோல் இனி என் பில்டர் காபியை இன்னும் கொஞ்ச‌ம் ரசித்து அருந்துவேன்.

மீண்டும் ஒரு சிறந்த கதைக்கு நன்றி ஜெ!

அன்புடன்,

பாலாஜி பிருத்விராஜ்

***

அன்புள்ள ஜெ,

டி.தருமராஜ் ’ஒரு கோப்பை காப்பி’ குறித்து எழுதியிருக்கும் இக்குறிப்பை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். இந்தில் அவர் சொல்லியிருப்பதுபோல என்னிடம் கேட்டால், ஜெயமோகன் முடித்த இடத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது என்பேன். செய்யாத கொலையை செய்ததாய் நம்பி, சடங்குகள் செய்பவனிடம் சொல்வதற்கு காத்திரமான கதையொன்று இருக்கக் கூடும். அல்லது, கொலை செய்த சுவடே இல்லாமல் வாழும் அம்மாவிடம் இருக்கக்கூடும் மகனின் கண்களுக்குப் புலப்படாத ஆயிரம் சலனங்கள். என்ற வரியை ஏற்கிறீர்களா? மார்த்தா வழியாக நீங்கள் சொல்லி முடிக்கிறீர்களா?

ரகுநாதன்

***

அன்புள்ள ரகுநாதன்

நேற்று என்னை அறிந்த ஒரு கவிஞர் சென்னையிலிருந்து அழைத்தார். அது உங்கள் சொந்த அம்மாவின் ஒருவடிவம்தானே என்றார். அவருடைய அம்மாவும்கூடத்தான் என நான் அறிவேன். என்னை அறிந்தவர்கள் இது ஆதுரத்துடன் ஆற்றாமையுடன் இப்படி இருந்திருக்கலாமோ என எண்ணும் ஒரு வினா மட்டுமே என்று எடுத்துக்கொள்வார்கள். மார்த்தா சொல்வது ஒரு மேலைநாட்டுப் பதில். கொஞ்சம் மூர்க்கமானது. அதுவும் ஒருபதிலே. கதையில் பதிலேதுமில்லை. இருந்திருந்தால் மெய்யாகவே அது எனக்கும் நிறைவு அளித்திருக்கும்

ஜெ

***

ஜெயமோகனின் ஒரு கோப்பை காபி: புண்ணிய பூமிகளின் ஓரடையாளம் – .அ.ராமசாமி

மேற்கத்திய வாழ்முறைக்குள் நுழைய மறுக்கும் இந்திய மனம் என்பது அவர் தனது பல கதைகளில் கமுக்கமாக – உள்ளொடுங்கிய பொருண்மையாக விவாதித்த ஒன்று. ஜெயமோகனுக்கு முன்னாள் இதைத் தீவரமாகச் சில சிறுகதைகளிலும் நாவல்களிலும் ஜெயகாந்தன் எழுதியுள்ளார். அவரிடம் ஆரம்பித்தில் தயக்கமில்லாமல் மேற்கத்திய ஆதரவு இருந்தது. ஆனால் பின்னர் எழுதியவற்றில் இந்தியக் குடும்ப அமைப்பின்மீதான ஆதரவு மனநிலைக்கு நகர்ந்தார். ஆனால் ஜெயமோகன் எப்போதும் இந்திய ஆதரவு நிலைப்பாடுகொண்டவர். அதை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டாதவர்.

அமெரிக்க நகரமொன்றை நிகழ்வெளியாகக் கொண்ட “ ஒரு கோப்பை காபி” கதையை ஆனந்தவிகடனின் வாசகர்களுக்காக வெளிப்படையான கதையாக எழுதியுள்ளார். பெண்கள் – அதுவும் முந்திய தலைமுறைப் பெண்கள் கூடத் தங்களுக்கான புதிய வெளியில் குடும்பப் பரப்பிலிருந்து விலகிவிடத் தயாராகிவிடுகின்றனர். ஆனால் ஆண்கள்?

குற்றவுணர்வு துரத்தும் ஆண்கள்- மனம் குமைந்துகொண்டே இருக்கின்றனர். அந்த மனம்தான் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி இந்தியாவிற்குத் திரும்பிவிடத்துடிக்கின்றது போலும். திரும்பத் திரும்பத் தனது முன்னாள் மனைவியைப் பார்க்க விரும்பும் அவன், அவளின் அறிவைப் பாராட்டுவதற்காக அல்ல; உணர்ச்சியின் வழி செயல்படும் தனது குற்றமனத்திற்கான பாவமன்னிப்பைத் திரும்பத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகவே. அவனது உணர்வுவழிப் பட்ட முடிவுகள் ஒருதடவையில் நின்றுபோவதல்ல. ஒரு காபியில் கிடைக்காத நிதானமும் தெளிவும் இரண்டாவதாகப் பருகிய இன்னொரு கோப்பைக்காபியிலும் கிடைக்கப்போவதில்லைதான். ஆனால் தயக்கமின்றிக் கிடைக்கும் கோப்பைகளைப் பருகிக்கொண்டே காபிஇந்தியப் பானமல்ல என்று பேசிக்கொண்டிருப்பவன் அவன் எனவும் சொல்லிவிடுகிறார்.

“ இது இந்திய நவீனப் பண்பாட்டின் சரியான அடையாளம். காபிப்பொடி ஐரோப்பியர் கொண்டுவந்தது. சிகிரித்தூள் நாங்கள் கண்டுபிடித்தது. பாலும் சீனியும் போட்டுக் கீர்போல அதைச் செய்வது எங்கள் தொன்மையான பாரம்பர்யம்” என்றேன். “ நாங்கள் அந்த மூன்று அம்சங்களின் வெற்றிகரமான கலவை. தெரியுமா?”

இந்த உரையாடலின் உள்ளுறையாக இருக்கும் கதையை நிகழ்வுகளாக ஆக்க உருவாக்கப்பெற்ற பாத்திரங்களும் அவர்களின் செயல்பாடுகளும் கிழக்கு – மேற்கின் முரண்பாடுகளை விவாதிக்கின்றன. மார்த்தாவிடம் மன்னிப்பையும் ஆலோசனைகளையும் தேடிச்செல்லும் மகாவாகிய முதல் கணவனின் குற்றவுணர்வுதான் கதை. இவன் இந்தியாவை விட்டுப்போய் அமெரிக்க நகரங்களில் இந்திய வாழ்க்கையைத் தேடும் நபர். இப்படியான நபர்களே இந்தியாவைப் புண்ணியபூமி என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தெளிவின்மையே புண்ணியபூமிகளின் அடையாளம்போலும். ஜெயமோகன் அவர்களைச் சரியாக அடையாளம் காட்டியிருப்பதாகவே இந்தக் கதை விரிந்துள்ளது.*

***

அன்புள்ள ஜெயமோகன்

ஒரு கோப்பை காபி சிறுகதை படித்தேன்

உளவியலின் சிக்கலை உணர்த்தும் கதை.

அம்மாவின் நிலையெண்ணி உணர்ச்சி வேகத்தில் தவறுதலாக அப்பாவைக் கொன்ற மகனுக்கு ஏற்படும் மிகத் தீவிரமான உளச்சிக்கல் கதையின் உச்ச முடிவில்.

அதிலிருந்து விடுபடத் தெரியாமல் தன்னை கண்டிப்பாக புரிந்து கொள்ளக்கூடிய காதலியை தேடி வரும் மனநிலைமை.

உள்ளத்தையும் உண்மையையும் உணர்ந்த மார்த்தா “உனக்கு இன்னொரு காபி தேவைப்படும் என நினைக்கிறேன்” என்றவுடன் “எப்போதுமே அது உனக்குச் சரியாகத் தெரிகிறது” என்பதில் நிலைகொள்கிறது கரு.

மனிதர்கள் எப்போதும் தங்கள் தவறுகளின் கனவுகளிலே குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு மார்த்தா தேவைப்படுகிறது என்பதே உண்மை.

நன்றி.

சோமசுந்தரம்

துபாய்

***

முந்தைய கட்டுரைதேவிபாரதி கடிதம்
அடுத்த கட்டுரைசீ முத்துசாமி பற்றி பாலமுருகன்