இவ்வாண்டுக்கான விளக்கு விருது கவிஞர் சமயவேலுக்கும் நாவலாசிரியரும் இலக்கியக் கோட்பாட்டாளருமான ராஜ் கௌதமனுக்கும் கிடைத்திருக்கிறது.
ராஜ் கௌதமன் தமிழிலக்கியச் சூழலில் முக்கியமான இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியவர். என் மதிப்பீட்டில் தமிழ்ப் பண்பாட்டில் சில அடிப்படைக் கருத்துநிலைகளின் உருவாக்கத்தை வகுக்க முற்படும் அவருடைய பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் ஆகிய இருநூல்களும் முக்கியமானவை. தமிழாய்வின் செவ்வியல்படைப்புக்கள் என்றே அவற்றைச் சொல்வேன்.
ராஜ் கௌதமனின் அ.மாதவையா குறித்த வாழ்க்கைவரலாற்று –ஆய்வுநூல் தமிழிலக்கிய ஆய்வில் ஒரு முன்னுதாரண முயற்சி. க.அயோத்திதாசர் ஆய்வுகள் அயோத்திதாசர் குறித்த ஒரு முழுமையான நோக்கை முன்வைக்கிறது. ராமலிங்க வள்ளலார் குறித்த அவருடைய கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக. குறிப்பிடத்தக்க நூல். ராஜ் கௌதமனின் ஆய்வுகள் புறவயமான உலகியல்நோக்கு கொண்டவை. பண்பாட்டரசியல் சார்ந்தவை.இந்த எல்லைக்குள் வராத கவித்துவம், ஆன்மிகம் ஆகியவற்றை அணுகும்போதே அவருடைய ஆய்வுகள் தயங்கி நின்றுவிடுகின்றன. அவருடைய கறாரான அணுகுமுறை வள்ளலாரை புரிந்துகொள்ளமுடியாமல் தயங்குவதையே கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்னும் நூலில் காண்கிறோம்.
ராஜ் கௌதமன் அவர்கள் இந்த காத்திரமான ஆய்வுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் எழுதிய தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,அறம் அதிகாரம் ஆகிய நூல்கள் என் நோக்கில் முதிராத அரசியல் நோக்கு கொண்டவை. அந்தக் காலகட்டத்தில் இங்கே நிலவிய அனைத்தையும் கொட்டிக்கவிழ்க்கும் அரசியலை நம்பி எழுதப்பட்டவை. என் அணுகுமுறை அவற்றை முழுமையாகவே நிராகரிக்கிறது.
ஆனால் தமிழ்ச்சூழலில் பண்பாட்டரசியல் என்ற பேரில் முன்வைக்கப்படும் திராவிட இனவாதம் போலவோ மொழிசார் அடிப்படைவாதம் போலவோ வெறுப்பில் ஊன்றியவை அல்ல ராஜ்கௌதமனின் ஆய்வுகள். நிதானமான ஆய்வுநோக்கும், ஆய்வுப்பொருள்மேல் உண்மையான மதிப்பும் கொண்டவை. அவற்றுடன் முரண்படுபவர்கள்கூட அவற்றை பெருமதிப்புடனேயே அணுகமுடியும். ஆகவே என் கணிப்பில் நவீனத்தமிழ் உருவாக்கிய முதன்மையான இலக்கிய ஆய்வாளர் ராஜ் கௌதமன் அவர்களே. அவருடைய தலைமுறையில் அவருடன் எளியமுறையில் ஒப்பிடக்கூட எவருமில்லை என்பதே உண்மை. அவருக்கு அடுத்த தலைமுறையில்அ.ராமசாமி.ஆ.இரா.வெங்கடாச்சலபதி, ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களைச் சொல்லலாம்.
ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ தமிழிலெழுதப்பட்ட முக்கியமான நாவல்களில் ஒன்று. தன்வரலாற்றுத்தன்மை கொண்ட புனைவு. எள்ளலும் விமர்சனமும் கொண்ட கூரிய நடையில் அமைந்தது. அந்த அளவுக்கு ஒருமைகூடவில்லை என்றாலும் பல நுண்ணிய தருணங்களால் குறிப்பிடத்தக்க படைப்பாக ஆனது அவருடைய இரண்டாவது தன்வரலாற்றுநாவலான ‘காலச்சுமை’
ராஜ் கௌதமனைப்பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருக்கு என் நூல் ஒன்றையும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். விரிவாக எழுதவேண்டுமென எடுத்து வைத்த நூல்கள் அப்படியே காத்திருக்கின்றன
எண்பதுகளில் கவிதைக்குள் வந்தவர்களில் கவனிக்கப்பட்டவர்கள். சுகுமாரன்,சமயவேல் இருவரும். சுகுமாரன் தீவிரமான கூரியவரிகளினூடாக வெளிப்பட்டார். எளிய நேரடியான கவிதைகளினூடாக சமயவேல் அதே கவனத்தை பெற்றார். இருவருமே சீக்கிரத்தில் கவிதையிலிருந்து விலகினார்கள். இடைவெளிக்குப்பின்னர் சுகுமாரன் கட்டுரையாளராகவும் புனைகதையாளராகவும் திரும்பிவந்தார். சமயவேலும் கட்டுரையாளராகவும் கவிஞராகவும் வந்திருக்கிறார். இருவருமே கவிதையில் அவர்களின் தொடக்கம் அளித்த வீச்சை தவறவிட்டுவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். சமயவேலின் கவிதைகள் அக்காலகட்டத்தைக் கடந்து இன்றும் அதே வசீகரத்துடன் இருக்கின்றன. தமிழில் படிமமற்ற கவிதையை, நுண்சித்தரிப்புக் கவிதையை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் என்னும் இடம் சமயவேலுக்கு உண்டு
ராஜ் கௌதமனுக்கும் சமயவேலுக்கும் வாழ்த்துக்கள்
ராஜ்கௌதமனின் இரு நூல்கள்
தன் வரலாற்று நாவல்கள்