சிகரெட் புகையும் ,தபால் கார்டும்   -கிருஷ்ணன்

de1

”இப்போதைய இளம் எழுத்தாளர்களிடம் ஒரு  போலியான தெளிவு இருக்கிறது இது இலக்கியத்திற்கு உகந்ததல்ல, ஒரு எழுத்தாளனிடம் கதையை முடிக்க இயலா தத்தளிப்பு இருக்கும் தெளிவிருக்காது, எழுதியபிறகுதான் தெளியத்  துவங்கும் ”  அணைந்து கொண்டிருக்கும் சிகரெட்டில் இருந்து இன்னொன்றை பற்றவைத்துக் கொண்டு தேவி பாரதி இதை கூறினார்.

கடந்த 2017 டிசம்பர் 30,31 சனி, ஞாயிறு  ஆகிய இரண்டு நாட்கள் தேவி பாரதியை அவரது வெள்ள கோயில் இல்லத்தில் நமது விஷ்ணுபுரம்  நண்பர்ளுடன் சந்தித்து  உரையாடினோம். அவரது நிழலின் தனிமை, பிறகொரு இரவு போன்ற படைப்புகளை நான் படித்திருந்தேன், ஓரளவு நமது நணபர்களும் படித்திருந்தனர் .   சமூகம் , இலக்கியம் , அரசியல், வரலாறு என பல்வேறு தளங்களில் மிக ஸ்வாரஸ்வயமாக பேசக்  கூடியவர் தேவி பாரதி. சனி அன்று மாலை 4 மணிக்கு சந்தித்தது முதல் மாலை 8.30 கு பிரிவது வரை சிரித்துக் கொண்டே இருந்தோம்.

“அவனவன் லோன் போட்டு வீடு கட்டுவான்  நான் புத்தகம் போட்டேன்”,  என்றார் தனது முதல் சிறுகதை தொகுப்பான ‘பலி’ பற்றி. அப்போதெல்லாம் குறைந்தது 1200 எண்ணிக்கைகள் அடிக்கவேண்டும் குறைந்தது  ரூ 6000 ஆகும் எனக் கூறி இருக்கிறார் பதிப்பகத்தார்.  அரசு பள்ளியில் ஒரு கணக்கராக இருக்கும் தேவி பாரதிக்கு மாத சம்பளம் 70 களில் ரூ 600. அதுவே போதாமல் இருந்திருக்கிறது.  அச்சிடப்பட்ட   புத்தகங்கள் வந்த பிறகு தான் தெரிகிறது இது பெரிய அளவில் இடத்தை அடைக்கக் கூடியது , அவ்வளவு விரைவில் சரக்கும் தீராது. தனது நண்பர்கள், உறவினர்கள் , பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள் என அனைவருக்கும் கொடுத்ததும் 50 க்குள் தான் தீர்ந்தது. இதில் வெளியூருக்கு அனுப்புவது தபால் செலவேறியது. சுந்தர  ராமசாமி போன்றோருக்கு அனுப்பி புகழ்ந்து வரும் மறுபடிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார், பிறகு நேரில் சென்று சந்தித்திருக்கிறார். நேரில் சந்திக்கும் போது  ஒன்று தெரிகிறது சு ரா விடம் அவரது படைப்பு குறித்தோ தனது படைப்பு குறித்தோ பேச முடியாது.de2

மற்றொரு சிகரெட்டை பற்றவைத்தது “பட்ட காலிலே படும், முதல் தொகுப்பு தீராமலேயே அடுத்து ஒரு கவிதை தொகுப்பு, ஒரு நாடகம் என  தலா  1000 பிரதிகளை  செலவழித்து அச்சிட்டு வீட்டில் தேக்கி வைக்க இடமில்லாமல் எனது தங்கை வீட்டில் அட்டைப் பெட்டியில் அடைத்து சிலவற்றை வைத்துவிட்டேன்,  அவர் கணவர் வீடு கட்டும்  போது கட்டிட பொருட்களுக்கான  கிடங்கில் அதை வைத்துவிட்டார் செல்லரித்து விட்டது” . பிறகு என்ன செய்யலாம் என யோசித்து தினத் தந்தி , மலர் முதலிய பத்திரிக்கைகளுக்கு ஒரு போஸ்ட் கார்டில் கதை, கட்டுரை,கவிதை,நாவல் போன்ற படைப்புகளுக்கு அணுகவும் என தனது முகவரியிட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஒரு பத்திரிக்கை நீங்கள் ஒரு வருட சந்தா செலுத்தினால் தான் பிரசுரிப்போம் என பதிலளித்தது, அப்போதைய ஐந்து ரூபாய் சற்று பெரிய தொகை தான் என்றாலும் அதை செலுத்தி இருக்கிறார், ஒரு வருடமாமகியும் எவ்வித அறிகுறியும் இல்லை. “கார்டு முயற்சியின் உச்சமாக நான் ஒரு முக்கிய புள்ளி ஒருவருக்கு இதே கார்டைப் போட்டு பதிலுக்காக காத்திருந்தேன் , அந்த கார்டு எழுதும் போது பாதியில்  மை  தீர்ந்து விட்டது, பென்சிலில் எழுதி முடித்து பிரபலமானவர்களின் முகவரியில் எம்ஜியாரின் முகவரியை பார்த்து அதே பென்சிலில் முகவரி எழுதி அனுப்பியிருந்தேன்” ஓராண்டு பதிலுக்காக காத்திருந்தேன் . விஜயா அண்ணாச்சியிடம் சில பிரதிகளை கொடுத்துவிட்டு, மதம் ஒருமுறை கோவை செல்வேன் , ஒன்றும் விற்றிருக்காது. ஒருமுறை நண்பருடன்  கோவை சென்ற போது அண்ணாச்சி ரூ 50 கொடுத்தார், அது இருவருக்கும் ஈரோட்டிலிருந்து கோவை சென்று வர போதுமானது. ஆனால் கதா அம்சத்துடன் கூடிய ஒரு பலான படத்திற்கு அதன் கதா அம்சத்திற்காக சென்று செலவழித்துவிட்டோம், பின் திருட்டு ரயில் ஏறினோம் என்னிடம் ஒரு டயரி எப்பொழுதும் இருக்கும், கூடவே பலி தொகுப்பு,  நண்பர் வெள்ளை பாண்ட் அணிந்திருந்தார், அவரை டக் இன்  செய்யச் சொல்லி டயரியை கையில் கொடுத்துவிட்டேன்,  ‘பலி’  ஒரு ஒரு டிக்கெட் பரிசோதகருக்கு பொருத்தப் படாது, நண்பர் சிறிது நேரத்தில் ஒரு தன்னம்பிக்கையில் பயணிகளிடம் டிக்கெட் கேட்டார்.

சந்தர்ப்பவசமாக சுரேஷ் குமார் இந்திரஜித்தின் கார்டு 2012 தேதியிட்டு அவர் அறையில் இருந்தது, நிழலின் தனிமை நன்றாக இருந்தது என ஒரு வரி , கீழே பின் குறிப்பாக தபால் வில்லை வாங்கிய பின் சில்லறைக்கு பதில் இந்த கார்டை கொடுத்துவிட்டனர் என எழுதப்பட்டிருந்தது.

முதலில் எம் எல் இயக்கத்தில் அனுதாபியாக இருந்து இப்போது ஒரு காந்திய அனுதாபியாகிவிட்டார். மேலும் ஒரு சிகரெட்டை துவங்கி  “காந்தி தனது உடை ,எளிமை ஆகியவற்றை யேசுவிடம் இருந்து தான் பெற்றுக் கொண்டார் , அவர் சொல்லும் ராம ராஜ்ஜியம் என்பது இயேசுவின் கொள்கைகளுடன் நெருங்கிய தொடர்புடையது , அவர் தென்னாபிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணை அமைக்கும் போதே டால்ஸ்டாய் வழியாக யேசுநாதர் அறிமுகமாகிவிட்டார்”  “அவரின் சுய சுத்தீகரிப்பில் எனக்கு நம்பிக்கையுண்டு மார்க்ஸை விட எனக்கு அவரே ஆதர்சம் “

எம் எல் இயக்கம் 70 களில்  சென்னையில் ஒரு மாநாடு நடத்தியிருக்கிறது அதில் சுமார் 50 பேர்வரை கலந்து கொண்டனர், ஈரோட்டில் இருந்து சென்றுவர பயணப்படி, உணவுப்படி எல்லாவற்றிற்கும் சேர்த்து “சொளையாக ரூ 25 கொடுத்து விட்டனர் பாலன் இல்லத்தில் தாங்கிக் கொள்ளலாம். பூமணி , பா ஜெயப்ரகாசம், வண்ண நிலவன் , வண்ண தாசன், பிரபஞ்சன் ,சுந்தர ராமசாமி போன்றோரை சந்திக்கலாம் என ஒரு குருட்டு நம்பிக்கையில் நன் வண்டி ஏறினேன். மாநாட்டில் ஒரு தோழரிடம் விசாரித்தபோது ஆம் கடலூரில் ஒரு ஜெயப்பிரகாசம் இருக்கிறார் அவர்தான் நமக்கு துண்டறிக்கையை எழுதித்தருவார், நீங்கள் சொல்லுபவர்  அவராக  இருக்க வாய்ப்புண்டு. இதனால் எவ்வித பயனும் இல்லை என்று ஒவ்வொருவராக உங்களுக்கு பூமணியை  தெரியுமா ஜெயப்பிரகாசத்தை தெரியுமா எனக் கேட்டுக் கொண்டே சென்று இறுதியில் பூமணியிடமே சென்றிருக்கிறார்.  அவர் நேரில் ஒரு வாசகனை பார்த்த மகிழ்ச்சியில் வீட்டுக்கு அழைத்து சென்று சு.ரா , வண்ணதாசன் ஆகியோர் சென்னையில் இல்லை நாகர்கோயில், திருநெல்வேலி எனக் கூறி வண்ண நிலவன், ஜெயப்ரகாசம் மற்றும் பிரபஞ்சன் ஆகியாரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக சொல்லி இருக்கிறார். பூமணியின்  கதைகள் ,நாவல்கள் குறித்து இரவுமுழுவதும் உரையாடல் உணவும் உறக்கமும் அங்கேயே.

மறுநாள் ஜெயபிரகாசம்  வீட்டுக்கு சென்றபோது அவர் வர இன்னும் 3 நாட்கள் ஆகும் எனத்  தெரிந்தது, துக்ளக் சென்று வண்ணநிலவனை சந்தித்து, பிறகு ஒரு மேன்ஷனில் பிரபஞ்சனை பார்த்துவிட்டு   பூமணி வீட்டுக்கே திரும்பிவிட்டேன். அப்போது சிற்றிதழ் எழுத்தாளர்கள் தமது புகைப்படமோ முகவரியோ வெளிவர ஒப்பமாட்டார்கள்.

de3

மூன்று நாட்கள் கழித்து மாலையில் அவர் வீட்டு தெருவில் மேற்கும் கிழக்குமாக நடந்தேன், எல்லோர் வீட்டிலும் தூர்தர்ஷன் மாலை செய்திகள், முதல் வரி ஒரு வீட்டில் , அடைத்த வரி அடுத்த வீட்டில் எனக் தெரு முழுவம் நடந்து செய்தி கேட்டுக் கொண்டே பெஷீட்டில்  தைத்த ஜோல்னா பையுடன் தாடி வைத்துக்கொண்டு கண்கள் சிவக்க யாரும் வருகிறார்களா என பார்த்துக் கொண்டு இருந்தேன், அப்படியான சில அடையாளங்களுடன் சிலர் வந்தனர் ஆனால் யாரும் ஜெயப்பிரகாசம் வீட்டுக்குள் செல்லவில்லை, ஆனால் ஒரு சாதாரண குமாஸ்தா தோற்றத்தில் ஒருவர் வந்தார் அவர் ஜெயப்பிரகாசம் வீட்டுக்குள் சென்றுவிட்டார். அவரையும் சந்தித்து பிறகு மீண்டும் பிரபஞ்சன், பூமணி, வண்ணநிலவன் என நாட்கள் சென்று விட்டது. காசும் கரைந்துவிட்டது, ஈரோடு திரும்ப 15 ரூபாய் ஆகும், தினமும் சென்றதால் இனி அவரவர் சிகரெட்டுக்கும்  தேநீருக்கும் அவரவரே காசுகொடுத்துவிடவேண்டும் என பிரபஞ்சன் சொல்லிவிட்ட்டார். “ஜெயப்பிரகாசம் முகவரி கொடுத்து நிலைமையை சொல்லி எனது தந்தைக்கு ஒரு கார்டு அனுப்பினேன் , பதினைந்து நாள் எப்படி இருந்தாயோ அப்படியே இன்னும் ஒரு நாலைந்து நாள் இரு சம்பளம் வாங்கியவுடன் அனுப்புகிறேன் என பதில் வந்தது”

இனி அடுத்த சிகரெட்டுடன் “இந்த சிகரெட் பிராண்டில் ஒரு சிறப்பம்சம் உள்ளது அது எழுத்தாளர்களுக்கானது  , வேண்டுமா” என  அரங்கசாமியையும்,செந்திலையும் கேட்டார் . பத்திருவதுமுறை  சிகரெட்டை விட்ட அனுபவம் கொண்ட அரங்கசாமி தாம் சிகரெட்டை நிறுத்திவிட்டதாக சொன்னார், செந்திலிடம்  இதில் (ISBN) எண்  இருக்கும் என்றார். வாங்கி  ஒன்றை பற்றவைத்துக் கொண்டார், இன்னொன்று கேட்டார் .

மறுநாள் ராஜமாணிக்கம் இணைந்துகொண்டார், 1850 இல் பதிப்பிக்கப்பட்ட மகாபாரத புத்தகத்தை கண்டு ஜென்மசாபல்யம் அடைந்துவிட்டார். முதல் சிகரெட்டை இழுத்துக் கொண்டே  “நமது வரலாறு என்பது தொன்மங்களுடன் பின்னிப்பிணைந்து, நமது சமூகத்தில் எங்கும் வட்டாரக் கதைகள் உண்டு  மக்களிடையே குறிப்பிடத்தகுந்த கலா பங்களிப்பு இருக்கிறது, இதைத் தான் ஒரு நவீன படைப்பாளி தனது புனைவில் ஏற்றுக்கொள்ளவேண்டும் அவைகளை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும், இதுவே சிறந்த இலக்கியமாக இருக்க முடியும். ‘நொய்யல்’ என்கிற நாவலை எழுதிவருகிறேன், அதில் அண்ணன்மார் கதையை கருவாக்கியுள்ளேன். இப்பகுதியில் நடக்கும் அண்ணன்மார் கதை என்பது நாவிதர் குலத்தால் 18 நாட்கள் பாடப்படுவது, இதில்சில அசல் கலைஞர்களும் இருக்கிறார்கள். இது கவுண்டர் சமூகத்தின்  குலக்க கதை”.

அவர் வீடு கைபிடிச் சுவரில் உள்ள  விரிசலை  பார்த்த ராஜமாணிக்கம், வீடு கட்டி எவ்வளவு நாட்கள் ஆனது எனக் கேட்டார், 3 ஆண்டுகள் என தேவிபாரதி சொன்னார்.  இப்போதைய அணைத்து வீடுகளும் காட்டியவுடன் விரிசலிடத் துவங்கும், அதற்கு டி என் சேஷனே காரணமென்றார். “அவர் ஒரு பொலிட்டிகல் கிராக் எனது தெரியும், கட்டிடக் கிராக்கிற்கும் அவர்தான் காரணமா ?” என்றார் தேவிபாரதி.  ராஜமாணிக்கம் “நமது மின்நிலையங்களில் எரிக்கப் படும் நிலக்கரித் துகள் காற்றில் கலந்துவிடக் கூடியது மிக மெல்லியது ஆகவே கண்ணுக்கும் தெரியாது, இப்படியே சென்றால் இன்னும் இருபது ஆண்டில் காற்றே சாம்பல் நிறத்தில் அடிக்கும் என 80களில்  அப்போது அத்துறை  பொறுப்பில் இருந்த சேஷனிடம் சொல்ல, அவர் ஆலோசித்து இறுதி தீர்வாக அதை ஒரு மூட்டைக்கு 5% என சிமெண்ட்டுடன் கலப்பது கட்டாயம் என உத்தரவிட்டார். இப்போதும் சந்தையில் 100% சிமெண்ட் கிடைக்கிறது ரூ 100 தான் கூடுதல் ஆனால் கட்டியபின் உறுதிப்பட கூடுதல் காலம் பிடிக்கும், வாடிக்கையாளர்களுக்கு இது தெரியாது, அவர்களுக்கு கட்டிடம் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே குறி ஆகவே நாம்  கட்டும் கட்டிடம் அனைத்தும் சாம்பல் கலந்தது  விரைவில் விரிசல் விடும், பலமிழக்கும்”

பொன்னர் ஷங்கர் கதை பாடப்படும் வீரப்பூரில் பொதுமக்களும் கலைஞர்களுடன் பங்கேற்பார்கள் , திருமண  சடங்கு, பந்தியிட்டு பொரி பரிமாறும் புனைவம்சம், மாப்பிள்ளைவீட்டார் பந்தி சுவைக்கவில்லை என பாதியில் எழுவது , பெண் வீட்டார் சமாதானம் செய்வது, பின் அருகில் உள்ள கடைக்கு சென்று  திருமண ஆடைகள் ஆபரணங்கள் எடுப்பது என ஊரே பங்கேற்கும், அவர்களில் சிலர்தான் கலைஞர்கள். அக்கதையில் வரும் படுகள  பகுதியில் வேட்டுவ சமூகத்தினர்  உயிர்விடுவர், இன்றும் நிகழ்த்திக்காட்டப் படும் அண்ணன்மார் கதையில் அந்த குறிப்பிட்ட நாளில் வேட்டுவ சமூகத்தினர் ஊரைவிட்டு வெளியே சென்றுவிட்டு ஓரிரு நாட்கள் கழித்துத்  தான் திரும்புவார்கள், இந்த பங்கேற்பு புனைவல்ல, இந்த அச்சம் புனைவல்ல ஆனால் அனைத்திற்கும் அடியில் ஒரு வலுவான புனைவு வரலாறாக தொன்மமாக நம்பிக்கையாக ஆண்டுகளாக நின்றுகொண்டிருக்கிறது இதில் உண்மையும் கலந்திருக்கும்.

தனது தந்தை வழி தாத்தா கற்றவர் எனவும் அதேசமயம் குலத்தொழிலில் ஆர்வமற்றவர் எனவும் கூறினார். குள்ளன் என்கிற  அவரின் கதையும் சுவாரஸ்யமானது, தேவி பாரதியுடையதை போன்றே வலி மிகுந்தது. கவுண்டர் சமூகத்திற்கு திருமணச்  சீர்களை இவர் சமூகம் தான் ஊர்தியாக இருந்து சுமந்து  செல்லவேண்டும் , அரண்மணைச்  சீர் என்றால் சமூகத்தில் தலை எடுத்த அனைவரும் சென்று சவுக்கடிக்கு இடையே பணியாற்றவேண்டும். எனது தாத்தா இளைஞனாக இருக்கும் போது  தலை சுமையாக ஒரு விறகு கட்டை கொடுத்து  அதை சுமார் 50 கி மீ குழுவுடன் சென்று அரண்மணையில் சேர்க்க வேண்டிய பொறுப்பு அளிக்கப் பட்டிருக்கிறது, வெயிலில் சுமை தாளாமல் வெயிலில் பின்தங்கி விட்டார்,  சுமையை இறக்கிவிட்டு தண்ணீருக்கு அலைந்துதிரிந்து தோல்வியுற்று திரும்ப சுமையை ஏற்றும் போது கட்டவிழ்த்து விட்டது, விறகு கட்டும் கட்டுக்குப் பெயர் அவணி , அது பனைநாரை உரித்து நீரில் நனைத்து தான் கட்டுவார்கள், காய்ந்த அவணியை கட்ட இயலாது. “இறுதியில் அழுதழுது கண்ணீரில் தான் நனைத்து கட்டி சுமந்து இரண்டு நாட்கள் தாமதமாக சென்று சேர்ந்தேன்” என புனைவு தொனியில் எனது தாத்தா என்னிடம் சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. அதற்குள்  கடமை தவறியதால் தாத்தாவின் தந்தை கடுமையாக சவுக்கடி பட்டு  இரண்டு மூன்று நாளில் இறந்துவிட்டார். தாத்தா கொல்லிமலைக்கு சென்று 10 ஆண்டுகள்  மருத்துவம் ஆரூடம் என பயின்று ஒரு அடையாளமிலியாக ஊர் திரும்பி 2,3 ஆண்டுகள் ஜாதகம் கணித்திருக்கிறார், மருத்துவமும் பார்த்திருக்கிறார். பிறகு அடையாளம் தெரிந்து திருமணமானது.

“அப்போது அன்னக்காவடி என்றொரு முறை இருந்தது, வலிப்பம்மன் என்றொரு கோயிலும் இருந்தது, மன நிலை பிறழ்ந்தவர்கள், முடக்குவாதம் வந்தவர்களை அக்கோவிலில் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள், இந்த அன்னக்காவடிகள் ஒரு உலக்கையின் இரு புறமும் உறிகளை தொங்கவிட்டுக்கொண்டு ஊருக்குள்  வீடுவீடாக சென்று யாசித்து அவர்களுக்கு சமைத்துப் போடுவார்கள். பின் நலம் பெற்று வீடுதிரும்புதலும் உண்டு. அந்த வழலிப்பம்மன் கோயிலில் தான் எனது தாத்தா சில ஆண்டுகள் அடையாளமிலியாக மருத்துவராக இருந்தார்”.

devibharathi

இன்னொரு சிகரெட்டு, “குற்றமும் தண்டனையில் ராஸ்க்கல்நிகோவ் இறுதியில் தஞ்சமடைவது பைபிள் மலைப் பிரசங்கத்தில், புத்துயிர்ப்பில் நெக்லயுதோவும் அதே பைபிள் மலை பிரசாங்கத்திடம் தான் தஞ்சமடைவர், இருவர் கேட்டதும் மன்னிப்பு, ரசிக்கல்நிகோவ் மானுடத்திடம்,  நெக்லயுதோவ் தனது மனசாட்சியிடம். இரு பெரும் படைப்பாளிகளிடம் உள்ள தரிசன வித்தியாசம் இது”

“இன்றைய இலக்கிய சூழலில் பெண்ணியம்,தலித்தியம் கொடுத்திருக்கிற எதிர்மறையான  அழுத்தத்தால் சுதந்திரமாக எழுத முடிவதில்லை, இது அரசியல் சரிகள்  அழுத்தும் காலம்” என்றார். இறுதியாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை பார்த்துவரலாம் என வெள்ளகோவில் நகரத்திற்கு சென்றேன், ஒரு கல்லூரி மாணவி மைக்கை பிடித்து “ஜல்லிக்கட்டு காளையின் பால் மிக ஸ்ட்ராங்கானது, இதை டெஸ்டராய் செய்ய உலக அளவில் ஒரு கேம்பைன் நடக்குது, நமது தமிழ் கல்ச்சரையும் லாங்குவேஜையும் நாம் தான் ப்ரொடெக்ட் பண்ண வேண்டும் ”  எனக் கூறினார், அடக்க இயலா சிரிப்புடன் வீடுவந்து சேர்ந்தேன், இதை சுதந்திரமாக எழுத முடியாது. அது எங்கள் சந்திப்பின்  இறுதி சிகரெட்,  வீசிவிட்டு விடைகொடுத்தார்.

ஒரு புனைவாளனின் கூரிய அவதானங்களும், பகடியும், வெளிச்சவீச்சும் பெற்று  இவரை ஊட்டிக்கோ அல்லது கோவை விஷ்ணுபுரத்திற்கோ அழைக்கவேண்டும் என நண்பர்களுடன்  பேசிக்கொண்டு  நிறைவுடன் திரும்பினேன்.

கிருஷ்ணன்.

***

முந்தைய கட்டுரைஎன்றென்றும் யானைகள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவிளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்