ஒரு கோப்பை காபி- கடிதங்கள் 2

download

ஒரு கோப்பை காபி [சிறுகதை]

அன்புடன் ஆசிரியருக்கு,

அனோஜன் சில தினங்களுக்கு முன் இக்கதையை படிக்கத் தந்தபோது இரவு பதினோரு கடந்திருந்தது. உறங்கலாம் எனச் சென்றவன் விரைவாக வாசிக்கக்கூடியதாக இருந்ததால் முழுமையாக வாசித்துவிட்டே உறங்கினேன். ஒரு எளிமையான தோற்றத்தை கொண்டிருக்கும் இக்கதையின் உள்விரிவுகள் மறுவாசிப்பின் போதே சிக்குகின்றன. கெய்ஷா சூரியனுடன் தொற்றிக் கொள்ளுதல் வெற்றி போன்ற கதைகளின் நீட்சியாக இக்கதையை வாசிக்கலாம். கூறல் முறையில் சமீபத்தில் வாசித்தி போகனின் க்ளிஷே என்ற கதையை இது ஒத்திருக்கிறது. நீண்ட விவரணைகள் மன விவரிப்புகள் எல்லாம் இல்லாமல் முதல் வரியிலேயே கதையைத் தொடங்கி மிக விரைவாக சொல்லிச் செல்வது. ஆனால் இக்கதை வேறுபடுவது அதன் மொழியில். மொத்த கதையும் ஒரு உரையாடல் மட்டுமே. அந்த உரையாடலும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. அம்மொழி வெளிப்படுத்தக்கூடிய உணர்வுச் சாத்தியங்களுடன் மட்டுமே கதைகூறல் நடைபெறுகிறது.

இது இந்திய நவீனப்பண்பாட்டின் சரியான அடையாளம். காபிப்பொடி ஐரோப்பியர் கொண்டுவந்தது. சிகிரித்தூள் நாங்கள் கண்டுபிடித்தது. பாலும் சீனியும்போட்டு கீர் போல அதைச்செய்வது எங்கள் தொன்மையான பாரம்பரியம்” என்றேன். “நாங்கள் அந்த மூன்று அம்சங்களின் வெற்றிகரமான கலவை, தெரியுமா?”

மார்த்தாவால் அவன் விரும்பும் இந்தியக் காப்பியை மிகச்சரியாக தயாரிக்க முடிகிறது. கதை சொல்லியின் அம்மாவும் அப்படியான ஒரு காப்பியை (பண்பாடு பாரம்பரியம் போன்றவை) காலம் முழுவதும் அவனது அப்பாவுக்காக தயாரித்துக் கொண்டு இருந்திருக்கிறாள். நவீனக் கல்வி கொடுத்த சிந்தனைகள் (காப்பி பொடி) அதேநேரம் தொன்மையான இந்திய மனம்(கீர்) இவற்றின் கலவையாக உருவாகிவந்த இந்திய நோக்கு(சிகிரித்துள்) ஆகியவற்றின் கலவையான இந்திய ஆண்மனதினை மிக நேர்த்தியாக பிரதிபலிக்கிறது இக்கதை. ஜானகி மார்த்தா கதை சொல்லியின் அம்மா என யாருக்கும் சிக்கல்களை கையாள்வதில் அதிலிருந்து வெளிவருவதில் குழப்பங்கள் இல்லை. மார்த்தா முற்றிலும் நவீன உலகில் பிறந்து வளர்ந்தவள். கதை சொல்லியின் அம்மா நவீனத்தையே அறிந்திருக்கவில்லை. ஜானகி இருவருக்கும் இடைப்பட்ட நிலைப்பாடு உடையவள்.

கதை சொல்லியின் அப்பாவின் இவர்கள் மூவராலும் ஏற்றுக் கொள்ள முடிகிறது. இந்தியனான கதை சொல்லிக்கும் இத்தாலியனான மார்த்தாவின் கணவனுக்கும் தான் இறப்புச் சடங்குகளும் மரவேலைகளும் தேவைப்படுகின்றன எனில் இக்கதை சட்டென ஒரு குறிப்பிட்ட காலத்தை ஆண் மனமும் பெண் மனமும் எப்படி எதிர்கொள்ள (பண்பாடு மொழி இவற்றைத் தாண்டி) விழைகிறது என்ற எல்லைக்குச் சென்று விடுகிறது.

கதை சொல்லியின் அப்பாவும் இந்திய காபி தான். வீட்டில் மரபு கொடுத்த பெருமிதத்தால் உருவான கடுகடுப்பும் பொதுவெளியில் அதிகாரத்துக்கு அஞ்சும் இளிப்பும் உடைய மனிதர். ஆணின் இந்த போலித்தனத்தை ஐம்பது வருடங்களாக வீட்டில் பயன்படுத்திய பால் சொம்பு எதிர்கொள்வதை வாசித்தபோது சிரித்துவிட்டேன். ஆனால் வேறு வழியில்லை. நவீன உளவியலாளர் வழியாக அச்சிக்கலில் இருந்து வெளியேற அவன் அம்மா தயாராக இருக்கிறாள். இது பொதுவான உணர்வு. குற்றமோ குற்றம் போன்ற ஒன்றோ அதிலிருந்து தப்பிக்க சமாதானம் அடையவே மனம் விழைகிறது. கதை சொல்லியின் அம்மா ஒரு “நவீன உபாயத்தை” பயன்படுத்தி வெளியே வருகிறாள். ஆனால் அவன் அங்கு செல்ல விழையவில்லை.

மார்த்தாவால் அவனுக்கு ஏற்றதைச் செய்ய முடியும் என்ற இறுதிவரி நவீன காலம் சமூகத்தில் நிகழ்த்தியிருப்பது எதுவென உணர வைத்து நிறைவடையச் செய்கிறது.

நன்றி

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள ஜெ

ஒரு கோப்பை காபி பலவகையிலும் வெண்முரசுக்கு நேர் எதிரானது. வெண்முரசில் உள்ள கிளாசிக்கலான வர்ணனைகள், சூழல்சித்தரிப்பு, கூர்மையான தர்க்கங்கள் ஏதுமில்லை. மிகச்சுருக்கமாக, என்ன நடக்கிறது என்று மட்டும் சொல்லிச் செல்கிறது. சிறுகதையில் முக்கியமான கதாபாத்திரம் மார்த்தா. அவளுக்கு மட்டுமே வர்ணனை. அதுவும் இரண்டேவரி. மற்றவர்களுக்குத் தோற்றமே சொல்லப்படவில்லை. எவருடைய மனமும் சொல்லப்படவில்லை. வெண்முரசிலிருந்து ‘வெளிவந்து’ நீங்கள் எழுதும் கதைகளில்தான் இந்த கதைவடிவத்தை வேண்டுமென்றே எடுத்துக்கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்.

கதை குறைத்துச்சொல்லுதல் வழியாக ஒரு பெரியவிஷயத்தைச் சென்று மெல்ல தொட்டு விவாதிக்காமல் கடந்துசெல்கிறது. இங்கே அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பிரச்சினையே இங்குவந்தபிறகு பெண்கள் கொள்ளும் சுதந்திரத்தை ஆண்கள் எதிர்கொள்ளும் விதம்தான். வேலைக்குச்செல்லும் பெண்கள் மேலும் தன்னம்பிக்கையும் தெளிவும் கொண்டவர்களாக ஆகிறார்கள். அதைப்புரிந்துகொள்ளும் ஆண்கள் தாங்களும் மேன்மை அடைகிறார்கள். புரிந்துகொள்ளாதவர்கள் மகாபோல பிளவு அடைகிறார்கள். மகா அவனுடைய அப்பாவேதான். அமெரிக்காவில் வாழவேண்டுமென்றால் உன் பழைய அப்பாவை சடங்குசெய்து கங்கையில் ஒழுக்கிவிட்டு வாடா என்று சொல்கிறாள் மார்த்தா.

மார்த்தா அற்புதமான கதாபாத்திரம். மேற்கு உருவாக்கிய ஒரு உதாரணமான பெண். அவளை அப்படிக் காட்டுவதன் வழியாக ஒரு முக்கியமான பெண்ணியக்கதையாக இது இருக்கிறது. பெண்ணியம் என்றால் இதுதான். எதிர்ப்பது அல்ல, விடுதலைபெறுவதும் முழுமைபெறுவதும்தான்.என் வாசிப்பில் நான் தமிழில் வாசித்த மிகச்சிறந்த பெண்சார்புக் கதை நீங்கள் எழுதிய ’என் பெயர்’. அந்தத்தலைப்பே ஒரு பெண்ணின் சவால். இதை அடுத்தபடியாகச் சொல்வேன்.

சந்திரா ராஜேந்திரன்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22
அடுத்த கட்டுரைகுறள் அறிதல்- கடிதம்