பிறிதொரு வாழ்த்து

நவீன்
நவீன்

2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

கடகடவென எழுதி முடித்தப்பின் இவ்வருட தொடக்கம் மத்தி இறுதி என உங்களைச் சந்தித்துக்கொண்டே இருந்திருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்

நவீன்

***

அன்புள்ள நவீன்,

சற்றுமுன் சுரேஷ் பிரதீபுக்கு ஒரு புத்தாண்டு மறுமொழியில் இவ்வாறு சொன்னேன். தயங்காமை, பெரிய கனவுகளை நோக்கியே சென்றுகொண்டிருத்தல், ஒவ்வொருநாளும் இலக்கியத்திற்குள் இருத்தல் ஆகிய மூன்று குணங்கள் அமைக என்று. அம்மூன்று குணங்களும் உங்களிடம் நிறையவே உள்ளன.

ஆனால் குறைவது ஒன்றுண்டு, புனைவிலக்கியம் சார்ந்த கவனம். மொழி என்பது எழுதியெழுதி அடையப்படுவது. ஒருமுனையில் எளிமையும் கூர்மையும். மறுமுனையில் செறிவும் அழகும். இரண்டும் அமைகையிலேயே அது புனைவுமொழியாகிறது. நிரந்தரமாக அச்சவாலில் இருந்துகொண்டிருப்பவனே புனைவிலக்கியவாதி.

எழுதத் தொடங்கும் எவரும் பிறர் மொழியையே எழுதுகிறார்கள். எழுதியெழுதி  கை தானாகவே உள்ளத்தை எழுதும் ஒரு நிலை உண்டு. அந்நிலையிலேயே நவீனின் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் அகமொழி உங்கள் நடையென ஆகும். உங்கள் கைரேகை போலவே அது உங்களுக்கு மட்டுமுரியதாக ஆகும்.

பொதுவாக எளிதாகச் சரளமாக எழுதுபவர்கள் ஏற்கனவே சூழலில் உள்ள பொதுமொழியை கற்றுக்கொண்டவர்கள். அது இரண்டு போக்குகள் கொண்டது. ஒன்று நம் வாரஇதழின் மொழி. இன்னொன்று சமீபகாலமாக உருவாகிவரும் முகநூல் குறிப்பு மொழி. தனிமொழிநடையை அடைய இவை இரண்டையும் விலக்கி தமிழின் சிறந்த மொழிநடைகளில் இருந்து மேலெழுந்தாகவேண்டும். அதற்கான தொடக்கத்தில் இருக்கிறீர்கள்

உணர்வுகளை வெளிப்படுத்துதல், சூழல்களை காட்சியாகச் சித்தரித்தல், மானுடநடவடிக்கைகளின் நுண்மைகளை கூறுதல், உரையாடல்களை இயல்பான ஒழுக்குடனும் நுட்பத்துடனும் அமைத்தல் ஆகியவையே நடையின் சவால்கள். அவை தன்னைத்தானே நோக்கி மீளமீள முயல்வதனூடாகவே அமையும். இவ்வாண்டுமுதல் இலக்கியச்செயல்பாட்டின் மையப்பகுதியாக புனைவெழுத்தும் அமைக

ஜெ

முந்தைய கட்டுரைஒரு வாழ்த்து
அடுத்த கட்டுரைஈழ இலக்கியச் சூழலில் இருந்து ஒரு கேள்வி