ஒரு வாழ்த்து

sures

அன்புடன் ஆசிரியருக்கு

இவ்வாண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கியது. 2016- ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்திருந்த பரவசத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியிருந்தேன்.

மிகச்சிறப்பாக உத்வேகம் அளிக்கக்கூடிய ஆண்டாக 2017 தொடங்கியது. ஒளிர்நிழல் அப்போது எழுதிக் கொண்டிருந்தேன். சு.வேணுகோபால் பற்றிய போட்டி அறிவிப்பு மனதில் ஒரு பதற்றத்தை உருவாக்கியது. விஷ்ணுபுர விழாவில் கலந்து கொண்டபோது பல சிறந்த வாசகர்களை சந்தித்திருந்ததும் என் பதற்றத்தையும் தயக்கத்தையும் அதிகப்படுத்தியது. தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து சு.வேயின் நூல்கள் ஏதும் கிடைக்காமல் அக்கட்டுரையின் முதல் பகுதியை மட்டும் எழுதி அனுப்பினேன். அதன்பிறகு வெண்ணிலை வாசித்து இரண்டாம் பகுதியை சேர்த்தேன். பல நண்பர்கள் அதை நல்ல கட்டுரை என்றனர். ஆனால் ஜரை போல அதன் இரண்டு பகுதிகளை ஒன்றிணைத்து வெளியிட்டது நீங்கள் என அனைவரிடமும் சொல்லிக் கொள்கிறேன்!

ஏறக்குறைய அக்கட்டுரை எழுதி முடித்த போதுதான் ஒளிர்நிழலும் எழுதி முடித்தேன். அதன்பிறகு ஹரன்பிரசன்னா ஒளிர்நிழலை வெளியிடப்போவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நூல் கைக்கு வரும்வரை என்னால் நம்பவே முடியவில்லை.

மாமலர் நீர்க்கோலம்  மௌனி ந.பிச்சமூர்த்தி டி.தருமராஜ் ராமச்சந்திர குஹா மிஷல் தனினோஎன வருடத்தின் முற்பகுதி கடந்தது. தனிமையின் நூறு ஆண்டுகள் மனுஷ்யப்புத்திரனின் அதீதத்தின் ருசி உள்ளிட்ட பல நூல்களை புத்தக கண்காட்சி பெண் கிறிஸ்டி வருடத் தொடக்கத்தில் எனக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார். நீங்கள் தஞ்சை வரை வந்தும் சந்திக்காமல் இருந்துவிட்டேன்.

ஒளிர்நிழலுக்கு நீங்கள் எழுதிய கட்டுரைக்குப் பின் நிறைய இலக்கிய வாசகர்கள் நண்பர்கள் ஆனார்கள். உண்மையில் நான் எதிர்பார்த்திருந்த வழிகாட்டல்களுக்கும் குட்டுகளுக்கும் பதிலாக விரிவான மதிப்புரையை நீங்கள் வழங்கி இருந்தது பெருமிதம் கொள்ளச் செய்தது. அந்தகரணவிருத்தி போல அதற்குமுன் அனுபத்திராத ஒரு மகிழ்வினை பொறுப்புணர்வை அக்கட்டுரையை கண்டவன்று உணர்ந்தேன்.

இவ்வாண்டில் வாசித்த மிகச்சிறந்த நூல்கள் என சூல் மற்றும் குற்றமும் தண்டனையும் இரண்டையும் குறிப்பிடுவேன். பல்வேறு கோணங்களில் சுழற்றியடித்துக் கொண்டு சென்றது அந்நூல். தி.ஜாவின் மோகமுள் பெரிதாக ஈர்க்கவில்லை. கிண்டில் ரீடரால் நிறைய வாசிக்க முடிந்தது. அதிலும் மாதம் இருநூறு ரூபாய் கட்டி பத்து புத்தகங்களை இரவல் பெற்றுக் கொள்ளும் திட்டம் கிண்டிலில் உள்ளது. நீங்கள் எழுதிய குறுநாவல்கள் தொகுப்பு வாழ்விலே ஒருமுறை சாட்சிமொழி என பல நூல்களை அத்திட்டத்தில் வாசிக்க முடிந்தது.

உண்மையில் வருடத்தின் பிற்பகுதியில் விஷ்ணுபுரம் விழாவை நோக்கி வந்து கொண்டிருந்தேன் என்பதே உண்மை. சீ.முத்துசாமி அவர்களின் இரண்டு நூல்களை வாசித்தேன். சிங்கை மலேசியா மற்றும் இலங்கை நண்பர்கள் பலர் அறிமுகமாகி இருக்கின்றனர். இவ்வருடம் வாசித்த ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் வாயிலாக அவரை வேறொரு வகையில் சென்றடைந்து இருக்கிறேன் என நினைக்கிறேன். சுரேஷ்குமார இந்திரஜித் எம்.கோபாலகிருஷ்ணன் என முன்னோடிப் படைப்பாளிகளையும் இவ்வருடமே வாசித்தேன். குற்றமும் தண்டனையும் பற்றிய கட்டுரைக்காக எம்.ஏ.சுசீலா அவர்களிடமிருந்தும் மணல்கடிகை குறித்த கட்டுரைக்காக எம்.கோபால கிருஷ்ணன் அவர்களிடமிருந்தும் முறையே தஸ்தாவெய்ஸ்கி கதைகள் மற்றும் பிறிதொரு நதிக்கரை நூலினை பரிசாகப் பெற்றேன்.

கே.என்.செந்தில் போகன் சங்கர் வா.மு.கோமு என சற்று மூத்த படைப்பாளிகள் விஷால் ராஜா தூயன் கே.ஜே.அசோக்குமார் என சமகாலத்தில் எழுதிகிறவர்கள் என பல எழுத்தாளர்களை இவ்வருடம் அறிமுகம் செய்து கொண்டேன். மலேசியாவைப் பொறுத்தவரை ம.நவீன் பாலமுருகன் யுவராஜன் ஆகியோரை வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். நவீன் வல்லினம் 100 நூலினை வழங்கினார். அது மலேசிய இலக்கியம் குறித்து சூழல் குறித்து முழுதறிய உதவும் என வாசிக்கத் தொடங்கியதில் அறிய முடிகிறது. இவர்கள் குறித்து தனியே எழுத வேண்டும்.

மதுரை திருச்சி புதுக்கோட்டை புத்தக கண்காட்சிகள் கே.ஜே.அசோக்குமாரால் ஒருங்கிணைக்கப்படும் தஞ்சைக்கூடல் என இலக்கிய உலகிற்கு என்னை இன்னும் நெருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்ட வருடமாக இது அமைந்தது. டிசம்பர் மாதம் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. 2016 விஷ்ணுபுரம் விழா மற்றும் கொல்லிமலையில் அறிமுகமான நண்பர்கள் மேலும் நெருங்கினர் புதிய நண்பர்கள் பலர் அறிமுகமாயினர். அத்தனை பேரையும் குறிப்பிடுவது “கல்யாண பத்திரிக்கை மனத்தாங்கல்” எதையேனும் உருவாக்கிவிடும் என அவர்களின் பெயர் சொல்லாமல் கடக்கிறேன்.

ஏ.வி. மணிகண்டனின் வாசிக்காத சில கட்டுரைகளை தளத்தில் இப்போது வாசித்தேன். அவர் மீதான பிரமிப்பு கூடுகிறது. விஷ்ணுபுரம் விழாவில் அவருடன் கலந்துரையாட முடியாதது வருத்தமளிக்கிறது. விஷ்ணுபுரம் நிகழ்வின் உற்சாகம் அடங்கும் முன் வாசகசாலை நண்பர்கள் பலர் அறிமுகமாயினர். சென்னை சென்றாலும் இலக்கியம் பேச ஒரு குழு கிடைத்தது திருப்தியளிக்கிறது. பன்னிரு படைக்கள மறுவாசிப்புடன் இவ்வருடம் இனிதே நிறைவுறுகிறது.

மனம் நிறைய கனவுகளுடனும் நம்பிக்கைகளுடனும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்]

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள சுரேஷ்,

வாழ்த்துக்கள். நான் சம்பிரதாயமாக எதையும் கொண்டாடுவதில்லை. புத்தாண்டுகளை மட்டுமல்ல பிறந்தநாளைக்கூட. அதிலும் இவ்வாண்டு அலெக்ஸ், எம்.எஸ் இருவர் நினைவுகளும் வருத்துகின்றன.

தயங்காமை, பெரிய கனவுகளை நோக்கியே சென்றுகொண்டிருத்தல், ஒவ்வொருநாளும் இலக்கியத்திற்குள் இருத்தல் – மூன்றும் உங்களுக்கு அமைக என்று வாழ்த்துகிறேன்

ஜெ

***

முந்தைய கட்டுரைதூய்மை!
அடுத்த கட்டுரைபிறிதொரு வாழ்த்து