கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

sta

கீழ்வெண்மணி – விக்கிப்பீடியா

ஜெ

கீழ்க்கண்ட கட்டுரையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

அரை உண்மைகள் முழு உண்மைகளாகும் தருணம்.

நேற்று தமிழ் இந்து நாளேட்டில் (25.12.2017) பண்ணை இட்ட தீ என்ற தலைப்பில் வெண்மணி பற்றி செல்வ புவியரசன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. வரலாற்று சான்றுகளை புறந்தள்ளி சுயவிருப்பத்தையே வரலாறாக காட்ட முடியும் என்ற போக்கிற்கு அக்கட்டுரையையே சிறந்த உதாரணமாக கூறலாம். அந்த அளவிற்கு அரை உண்மைகள் , நிறுவப்படாத தகவல்களை வரலாறாக்குவது , ஒன்றை இன்னொன்றாக மாற்றி சாதிப்பது போன்ற அம்சங்களால் நிறைந்திருந்தது அக்கட்டுரை . 

வெண்மணி போராட்டம், தஞ்சை வட்டார நிலவுடைமை எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றோடு திராவிட இயக்கத்திற்கு இருந்த தொடர்பை – பார்வையை எழுத வேண்டுமானால் அவற்றை பற்றி மட்டுமே தனித்தலைப்பில் எழுதலாம். ஆனால் திராவிட இயக்கத்தின் தொடர்பு விவாதத்திற்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், அது தொடர்பான முழு தகவல்கள் நிறுவப்படாத நிலையில் இக்கட்டுரை வெண்மணி பற்றிய முழுவரலாற்றையே திராவிட இயக்கத்தின் வரலாற்றினூடாகவே பார்த்திருக்கிறது அதாவது வெண்மணி வரலாற்றையே திராவிட இயக்க வரலாறாக எழுதியிருக்கிறது என்பது தான் பிரச்சினை. 

தஞ்சை வட்டாரத்தில் நடந்த நிலவுரிமை எதிர்ப்பை கூற வரும்போது முதல் போராட்டமாக திராவிடர் கழகம் சமபந்தி பாகுபாட்டிற்கு எதிராக மேற்கொண்ட நீடாமங்கலம் போராட்டத்தை கூறுகிறது கட்டுரை . (இந்த ‘முதல்’ என்றால் என்ன?இந்த உரிமைகோரல் ஏன் எழுகிறது? என்பது பற்றி தனியே எழுத வேண்டும் ) நீடாமங்கலம் பற்றி அண்மையில் வரலாறு தொகுக்கப்பட்டிருக்கும் பின்னணியில் உடனே அதுதான் முதல் போராட்டம் என்று எடுத்துக்கொண்டு அதற்கு முன்பு எதிர்ப்பு குரல்களே எழுந்திருக்க முடியாது என்ற பொருளில் அவரச வரலாறு இங்கே அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நாங்கள் வந்த பின்னால் தான் தலித்துகள் (இந்த வகை போராட்டங்களில் பிற வகுப்பினர் எண்ணிக்கையில் குறைவு) கண் விழித்தார்கள் , அதற்கு முன்பு தங்கள் இழிவுக்கு எதிராக போராடாமல் தங்கள் மீதான இழிவை ஏற்று கிடந்தார்கள் என்ற பொருளில் திராவிட கட்சிகள் பரப்பி வந்திருக்கும் நம்பிக்கையை ஏற்றுக் கொண்ட பார்வை தான் புவியரசனுடையதாக இருக்கிறது.

 இந்த உரிமை கோரலின் தொடர்ச்சியாக கட்டுரையில் வரும் வரிகள் கவனிக்கத்தக்கவை. அதாவது “அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட தொழிலாளர்கள் அடுத்தக் கட்டமாக, கூலி உயர்வு போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள்” என்கிறது கட்டுரை . அடிமைத்தளையிலிருந்து விடுபட்டிருந்தார்கள் என்று கூறுவதே பிரச்சினைக்குரிய கருத்து என்பது ஒரு புறமிருக்க ஒரு பிரச்சினையை முடித்து வைத்து விட்டு அடுத்த பிரச்சினைக்கு சென்றார்கள் என்ற பொருளில் கூறுவது சமூக பிரச்சினைகளை கட்டுரையாளர் எவ்வாறு மேலோட்டமாக புரிந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இதில் வேறொரு வரலாற்று அர்த்தமும் கட்டமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நிலவுரிமை போராட்டங்களை இடதுசாரிகளே நடத்தினார்கள் என்ற வரலாறு உள்ள நிலையில் அதற்கிணையாக திராவிடர் கழக பணிகள் இல்லாததால் அதை சரி செய்யும் விதத்தில் கூலி உயர்வு போராட்டத்தை நடத்துவதற்கு ஏதுவாக சமூக அடிமைத்தனத்திலிருந்து விடுபடும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தி வைத்திருந்தது என்கிறது கட்டுரை . அதாவது இப்போராட்டத்திலும் திராவிடமே முதல் . மொத்தத்தில் இக்கட்டுரை தலித் குரல்களுடையதை மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டத்திற்கான முகவாண்மையையும் சேர்த்தே மறுக்கிறது. 

அதே போல இக்கட்டுரையில் அண்ணா வெண்மணிக்காக அக்கறை காட்டினார் என்பதை ” செய்தியறிந்து நிலைகுலைந்தார்” போன்ற சொற்களால் காட்டியிருக்கிறார். இது போன்று புதிதாக கூற வரும் போது ஆதாரத்தோடு எழுதாமல் பொத்தாம் பொதுவாக எழுதுவது என்ன வகை வரலாறு?

 வெண்மணி சம்பவத்தை விசாரிக்கவே கணபதியா பிள்ளை கமிஷன் அமைக்கப்பட்டது என்றே படித்திருக்கிறோம். ஆனால் இக் கட்டுரை அதைப் பற்றியே மூச்சு விடாமல் “நிலவுடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி கணபதியா பிள்ளையைக் கொண்டு தனி நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார் அண்ணா ” என்றும் அண்ணாவுக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி அவற்றை நடைமுறைப்படுத்தினார் என்றும் கூறுகிறது. முன்பிருந்தே நடந்து வந்த நெடிய போராட்டங்கள் இழப்புகள் அழுத்தங்கள் என்று எவற்றையும் கணக்கில் காட்டாமல் அண்ணாவும் கருணாநிதியும் நல்லெண்ணத்தால் இயல்பாகவே இதையெல்லாம் செய்தார்கள் என்று மொத்த உரிமையையும் திராவிடக் கட்சிக்கே சமர்பிக்கிறது கட்டுரை .

 வரலாற்றில் திராவிட இயக்கத்திற்கு உரிய இடத்தை பெற்றுத்தர வேண்டும் என்று புதிய தலைமுறை அறிவுஜீவிகளும் ஊடகவியலாளர்களும் கொண்டிருக்கும் விழிப்புணர்வில் தவறில்லை. ஆனால் அது பிறரின் குரல்களை ,போராட்டங்களை, இழப்புகளை மறைத்துவிடுவதாகவோ தன்னுடையதாக்குவதாகவோ இருக்குமானால் அது அறமற்ற வரலாற்று எழுதியல்.

நியாயப்படி இதற்கு கம்யூனிஸ்ட் தரப்பிலிருந்து எதிர்வினை வந்திருக்க வேண்டும். ஏனோ வரவில்லை.

 ஸ்டாலின் ராஜாங்கம்

***

எனக்கு கீழ்வெண்மணி நிகழ்வு குறித்து விக்கிப்பீடியாவிலிருந்துதான் தெரியும். தி ஹிந்து கட்டுரையில் அந்நிகழ்ச்சியை வாசித்தபோது திராவிட இயக்கத்தினரால் நடத்தப்பட்ட போராட்டம் அது என்றுதான் புரிந்துகொண்டேன். அதன்பிறகுதான் இக்கட்டுரையை வாசித்தேன். மிகப்பெரிய ஒரு மோசடிக்காளானதுபோல் உணர்ந்தேன். [புவியரசன் எழுதிய ] கட்டுரையில் எங்குமே கொல்லப்பட்டவர்கள் தலித்துக்கள் என்ற செய்தியே இல்லை. இதற்கிணையான ஒரு மாபெரும் மோசடி சென்ற பல ஆண்டுகளில் தமிழில் நிகழ்ந்ததில்லை.

நீங்கள் இதைக்குறித்து எழுதவேண்டும் என நினைத்து இக்கடிதத்தை அனுப்புகிறேன். உண்மையிலேயே இப்படி உண்மையான மறுபக்கம் ஒன்று உண்டு என்பதை பொதுவில் வைக்க உங்கள் இணையதளம் அன்றி தமிழில் இன்றைக்கு ஊடகமே இல்லை என நினைக்கிறேன்.

எஸ்.மகாதேவன்

kiz

அன்புள்ள மகாதேவன்

கீழ்வெண்மணி நிகழ்வின் 50 ஆவது நினைவுகூரலை ஒட்டி தி ஹிந்து தமிழ் நாளிதழ் வெளியிட்ட கட்டுரைகளை கண்டபோது நினைத்தேன், இதோ இன்னொரு வைக்கம்போராட்ட புராணம் என. பிறர் நிகழ்த்திய போராட்டங்களை தன்னுடையதென வரலாற்றுத்திரிபு செய்வது திராவிட இயக்கத்தின் மரபு. கீழ்வெண்மணி நிகழ்வு தமிழகத்தில் அனைவரும் அறிந்ததாக இருந்தது என்பதனால் அதில் கொஞ்சம் அடக்கிவாசித்தனர்.

ஈவேரா கீழ்வெண்மணியின் ஆதிக்கசாதியினராகிய கோபாலகிருஷ்ணநாயிடு போன்றவர்களை வெளிப்படையாகவே ஆதரித்தார் என்பதும் தொழிலாளர்கள் கூலி உயர்வுகோரி நடத்திய போராட்டங்களை கொச்சைப்படுத்திப் பேசினார் என்பதும் ஆதாரபூர்வமாக பதிவானவை. மீளமீள குறிப்பிடப்பட்டவை. கீழ்வெண்மணி நிகழ்வு சி.என்.அண்ணாத்துரை ஆட்சியில் நிகழ்ந்தது. குற்றவாளிகள் மீது முறையான குற்றப்பதிவுசெய்யாமல் அவர்கள் தப்பிக்கவிட்ட பொறுப்பும் திராவிட இயக்க ஆட்சிக்கே. ஐம்பதாண்டுகாலத்தில் இவையனைத்துமே கடந்தகாலமாக ஆகி, சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்டபின் மெல்ல திராவிட இயக்கத்தின் அறிவுஜீவிகள் தங்கள் திரிபுப்பணியை தொடங்கியிருப்பதன் ஆதாரமே இக்கட்டுரை,. பலவகையிலும் மழுப்பிமழுப்பிப்பேசும் தியாகுவின் பேட்டியும் அதையே காட்டுகிறது.

கம்யூனிஸ்டுகள் நடத்தியது அப்போராட்டம், ஆனால் இன்று அதைப்பற்றிப் பேச இங்கே ஆட்களில்லை. இன்னும் சில ஆண்டுகளில் கீழ்வெண்மணி போராட்டமே பெரியாரால் நிகழ்த்தப்பட்டது என வரலாறுகள் எழுதப்படும். மறுக்கும் தலித் அறிவுஜீவிகள் வசைபாடப்படுவார்கள். ஒரு கட்டத்தில் ஈவேரா கீழ்வெண்மணிப்போராட்டத்தை நடத்தினார் என்பது ஒரு தரப்பு இல்லை என்பது இன்னொரு தரப்பு என ஆகும். அந்த மறுக்கும் தரப்பை பார்ப்பனத்தரப்பு என வசைபாடுவார்கள், அவர்கள் தலித்துக்களாக இருந்தாலும்!

இன்று உருவாகி வரும் தலித் தலைமுறை ஈவேரா தலித்துக்களுக்கென என்ன போராட்டத்தை நடத்தினார் என்ற வலுவான கேள்வியை முன்வைக்கிறார்கள். முன்னர் அதற்கான பொய்விடையாக வைக்கம் கூறப்பட்டது. இப்போது நைச்சியமாக கீழ்வெண்மணியையே கடத்திக்கொண்டு செல்கிறார்கள்.

இப்போதுகூட உதிரி தலித் அறிவுஜீவிகளே இதன் உண்மையைப்பேசுகிறார்கள், அவர்களுக்கு முகநூலன்றி ஊடகமில்லை. திரிபாளர்களுக்கு தி ஹிந்து போல மையப்போக்கு ஊடகமே அமைகிறது என்பதை கவனிக்கலாம். கீழ்வெண்மணியின் ஐம்பதாண்டுக்கால வரலாறு குறித்து உண்மையான பதிவுகளும் எதிர்வினைகளும் வெளியிடவிரும்பும் நடுநிலையான ஒரு நாளிதழ் கம்யூனிஸ்டுக் கட்சியினரிடமிருந்து அல்லது தலித் அறிவுஜீவிகளிடமிருந்து கட்டுரை கோரியிருக்கவேண்டும். கீழ்வெண்மணி நிகழ்வில் குற்றவாளித்தரப்பில் நின்ற திராவிட இயக்க அறிவுஜீவியிடமிருந்து [செல்வ புவியரசன் திராவிடர் கழகத்தின் மாவட்டப் பொறுப்பில் இருந்தவர், அவ்வியக்கத்தின் பேச்சாளர்] ஒரு வெள்ளையடிக்கும் கட்டுரையை வாங்கி அதை வரலாறு எனபிரசுரிப்பதிலுள்ளது இடைநிலைச் சாதிநோக்குடன் செய்யப்படும்  ஊடகமோசடி மட்டுமே

ஜெ

முந்தைய கட்டுரைபஞ்சமியோ பௌர்ணமியோ!
அடுத்த கட்டுரைஒர் அழைப்பு