அ.மார்க்ஸின் அரசியல்

amaa

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

சமீபத்தில் அ.மார்க்ஸ் அவர்களுடைய இந்துத்துவத்தின் பன்முகங்கள் நூலினை வாசித்தேன். அதனைப் பற்றிய என்னுடைய மதிப்பீட்டினை பதிவிட்டுள்ளேன், நேரமிருப்பின் வாசிக்கவும்.

http://www.mahiznan.com/2017/12/25/inthuththuvaththin-panmuhangal/

இத்தனை வெளிப்படையான வெறுப்புக் கட்டுரைகள எப்படி நடுநிலைமை என்ற பெயரில் எழுத முடிகிறது? பெரும்பாலான கட்டுரைகளில் பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட என்று வருகிறது? இந்த வரி பெரும்பாலும் எல்லாருடைய புத்தகங்களிலும் வருகின்றது. ஒரு வாசகன் எதனை நம்புவது? எதனை நம்பாமல் இருப்பது? இன்னும் பல்வேறு புத்தகங்களைப் படித்தே முடிவுக்கு வரவேண்டியதுதானா?

மற்றொன்று வார்த்தைகளை தன் நிலை சார்ந்து உபயோகப்படுத்தியுள்ளமை. ஒரு நிகழ்வின் இரு தரப்பு செயல்பாடுகளை வேறு வேறு வார்த்தைகளைக் கொண்டி குறிப்பிடுவது. இந்துத்துவ மதவெறிக்கும்பல் என்று ஒருபுறம், மறுபுற‌ம் விரக்தியடைந்த இளைஞர்கள் என. இந்துத்துவ சக்திகள் என ஒருபுறம், இஸ்லாமிய இளைஞர்கள் என மறுபுறம்

ராஜேஷ்குமார் முத்தையா

***

அன்புள்ள ராஜேஷ்குமார்,

முதல் விஷயம் அ.மார்க்ஸ் ஓர் ஆய்வாளர் அல்ல. ஆகவே அவர் நடுநிலைமை, ஆய்வுமுறைமை ஆகியவற்றைப்ப்பற்றிக் கவலைப்படுவதுமில்லை. அவர் அவ்வாறு சொல்லிக்கொள்வதுமில்லை என நினைக்கிறேன். அவர் ஒர் அரசியல்செயல்பாட்டாளர்.ஆகவே அவர் ஓர் அரசியல்நிலைபாடு எடுத்திருக்கிறார். அதையொட்டி எழுதுகிறார். அவை அவருடைய அரசியல்பிரகடனங்கள்.

அவருடைய எழுத்து இருபாற்பட்டே இருக்கமுடியும். அவருடைய அரசியலை முன்வைப்பது, அவருடைய நிலைபாட்டை நியாயப்படுத்துவது. அதன்பொருட்டு அவர் கட்டமைக்கும் வாதங்களே அவருடைய எழுத்து. அதை ‘உண்மை’ என்றல்ல, சமகாலக் கருத்தியல்சூழலில் ஒரு தரப்பு என்று மட்டுமே கொள்ளவேண்டும். அதை உங்கள் சொந்தப்புத்தியால் ஆராய்ந்து ஏற்போ மறுப்போ கொள்ளமுடியும். நான் அவருடைய அரசியல், இலக்கியம்,சமூகம் சார்ந்த கருத்துக்களில் எந்த ஏற்பையும் இதுவரை அடைந்ததில்லை.

அடிப்படையில் வெறுப்பிலிருந்தும் எதிர்மனநிலையிலிருந்தும் உருவானது அவ்வரசியல் என நினைக்கிறேன். வெறுப்பு மட்டுமே இத்தகைய உக்கிரத்தை, சலிக்காத வேகத்தை அளிக்கமுடியும். இது உலகமெங்கும் அரசியல்சூழலில் உள்ளதுதான். மகாபாரதகாலம் முதல் இங்கு இருந்துவருவதும்தான். மானுட உளவியலின் ஒரு மாதிரி என்றவகையில் சுவாரசியமானது, அவ்வளவே.

அதேசமயம் அவருடைய களப்பணிகள் மேல் எனக்கு மதிப்புண்டு, அவருடைய அரசியலின் ஒருபகுதியே அது என்றாலும் அதிகாரம் தன்னிச்சையான மூர்க்கத்தைக் கொள்ளவிடாமல் தடுக்கும் மக்கள்தரப்பாக அது பலசமயம் நிலைகொள்கிறது. ஜனநாயகத்திற்கு அவசியமான விசை அது.

உதாரணமாக சமீபத்தில் கடலோர மக்களின் சிக்கல்களை நேரில்கண்டு ஓகி புயல் பற்றி அவரும் அவருடைய குழுவினரும் அளித்திருக்கும் அறிக்கை. அவர்களுடைய அறிக்கை எப்போதுமே அரசுக்கும் அமைப்புக்கும் எதிரானது. ஆனால் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பணி அது. அதற்கு முக்கியமான இடம் உண்டு. இன்று தமிழில் அறிவுத்தரப்பிலிருந்து அம்மக்களை நோக்கிச் சென்ற ஒரே அமைப்பின் குரல் அது. அதுவே அ.மார்க்ஸ் அவர்களின் முதன்மையான பங்களிப்பு

ஜெ

***

முந்தைய கட்டுரைசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’
அடுத்த கட்டுரைவண்ணதாசனுக்கு இயல்