வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17

பகுதி இரண்டு : பெருநோன்பு – 11

blஅசலை தணிந்த குரலில் “தந்தையே” என்றாள். அச்சொல் திருதராஷ்டிரரில் மெல்லிய அதிர்வை உருவாக்கியது. “நான் என் சொற்களை சொல்லலாமா?” திருதராஷ்டிரர் “சொல்” என்பதுபோல கையசைத்தார். “தந்தையே, உங்கள் மைந்தர் ஒருவர் மிச்சமின்றி களம்படுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா?” என்றாள் அசலை. திருதராஷ்டிரர் உடல் விதிர்த்தது. “அக்காட்சிகளை கனவில் காண்கிறீர்கள் அல்லவா?” அவர் கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர நெஞ்சு மூச்சில் அசைய அமர்ந்திருந்தார். “உங்களால் முடிந்திருந்தும் போரைத் தடுக்கவில்லை என்றால் அவர்களின் குருதி உங்கள் கைகளால் என பொருள்கொள்ளப்படும் அல்லவா?” என்றாள் அசலை.

“ஆம், அவர்கள் அனைவரையும் கொல்பவன் நான். என்மேல் முன்னரே அப்பழி சூழ்ந்துவிட்டது. இனி அதிலிருந்து நான் தப்பமுடியாது” என்றார் திருதராஷ்டிரர். “நான் செய்திருக்கவேண்டியது ஒன்றே. எப்போது என் மைந்தன் சூழ்வோர் சொல்கேட்டு பாண்டவரை வாரணவதத்தில் மாளிகையுடன் எரிக்க முயன்றானோ அன்றே அவனை காட்டுக்கு அனுப்பியிருக்கவேண்டும். மண்ணை யுதிஷ்டிரனுக்கு அளித்திருக்கவேண்டும். அறம்மீறி மண்ணை அடைந்தவன் அம்மண்ணில் எந்த அறத்தையும் பேண முடியாது. அதை அறிந்தும் அவனை நான் பொறுத்துக்கொண்டேன். அவன் மீதான பற்றினால் அனைத்தையும் அறிய மறுத்தேன். அங்கிருந்து தொடங்குகிறது இப்போர்.”

“அது உண்மை” என்றாள் அசலை. “உங்கள் உளமாறும்பொருட்டுகூட நான் அதை மறுக்கப்போவதில்லை. ஆனால் தன்னிரக்கத்தால் ஆவதென்ன? இப்போது ஆற்றவேண்டியதென்ன என்று சூழ்வோம்.” திருதராஷ்டிரர் “ஆற்றக்கூடியது ஒன்றே, பாதி நிலத்தையும் இந்திரப்பிரஸ்தத்தையும் பாண்டவருக்கு அளிக்கும்படி நான் என் மைந்தனுக்கு ஆணையிடவேண்டும். அது வீண்சொல். அவனை கொல்ல ஆணையிடலாம், என்னாலோ இங்குள்ள பிறராலோ அது இயல்வதுமல்ல” என்றார். “தந்தையே, நான் முன்னர் உங்களிடம் சொன்னேன், நீங்கள் உங்கள் அந்த மைந்தருக்கு ஆணையிட முடியும்.”

“ஆம், யுதிஷ்டிரன் என் மென்சொல்லை தட்டமாட்டான். பீமனிடம் நான் ஆணையிடமுடியும்” என்றார் திருதராஷ்டிரர். “ஆனால் என்ன சொல்வது? நிலத்தை முற்றிலும் கைவிடுக என்றா? மனைவியரையும் மைந்தரையும் தவிர்த்துவிட்டு மீண்டும் கானேகுக என்றா?” அசலை “அதை சொல்லவேண்டியதில்லை. எந்நிலையிலும் போரை அவர்கள் தவிர்க்கவேண்டுமென்று நீங்கள் சொல்லலாம்” என்றாள். திருதராஷ்டிரர் உரக்க “அதன் பொருள் அதுவே, வேறொன்றுமில்லை” என்றார். அசலை “அவ்வாறென்றால் அவ்வாறே… உங்கள் ஆணை அவர்களுக்கு இன்னமும் அளிக்கப்படவில்லை” என்றாள்.

“அதை நான் செய்யப்போவதில்லை. தந்தை எனும் நிலையில் நான் இன்று இல்லை. என் பிழைகளுடனும் பழிகளுடனும் இங்கே இருந்துகொண்டிருக்கிறேன். தனியனாக, தோற்கடிக்கப்பட்டவனாக” என்றார் திருதராஷ்டிரர். “என்னை விட்டுவிடு… இத்தனிமையில் நான் மட்கிச்சாகவேண்டும். இதுவே தெய்வங்கள் எனக்கு அளித்த இறுதி.” அசலை மேலும் அருகில் வந்தாள். “நீங்கள் அஞ்சுவது அறத்தை அல்ல” என்றாள். “கீழிறங்குவதை. எதையும் கொடுக்காமல் எந்த நெறியையும் பேணாமல் மைந்தர் உயிருக்காக மன்றாடும் முதிய தந்தை மட்டுமென அவர்கள் முன் சென்று நின்றிருக்க நாணுகிறீர்கள்.”

“ஆம், அவ்வாறுதான்! ஆம்!” என்று திருதராஷ்டிரர் விழி சரித்து தலைதூக்கி கூவினார். விழிக்குமிழிகள் உருள பெரிய வெண்பற்கள் தெரிய அவர் முகம் சீற்றம்கொண்ட கானுறைத்தெய்வம் போலிருந்தது. “மெய்தான், நான் நாணுகிறேன். இழிமகனாக அவர்கள் முன் நின்றிருக்க என்னால் இயலாது. நீ சொல்வதுபோல் என்னிடமிருந்து ஒரு சொல் எழுந்தால் என்னை அவர்கள் வெறுப்பார்கள். என் சொல்லுக்கு கட்டுப்பட்டு விலகினால் மேலும் வெறுப்பார்கள். அவர்களின் தலைமுறை நினைவுகள்தோறும் இழிமகனாகவே நின்றிருப்பேன். ஐயமென்ன அதில்?”

“இப்போது நீங்கள் தெரிவுசெய்யவேண்டியது இரண்டில் ஒன்றே” என்றாள் அசலை. “நூறு மைந்தரும் ஆயிரம் பெயர்மைந்தரும் களம்பட்டு மறைய பாழுற்று எஞ்சும் வாழ்க்கையையா? அன்றி, மைந்தருள்ளத்தில் இழிவுசூடி நின்றிருக்கச்செய்யும் அத்தருணத்தையா? பிறிதொரு வழியில்லை. இதில் எதை தெரிவுசெய்யினும் அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் நீங்கள்.” திருதராஷ்டிரர் “இல்லை, என் குடியே அழிந்தாலும் நான் அவ்விழிவை சூடமாட்டேன். அது என் இளையோன் பாண்டுவின் முன் இழிமகனாக நின்றிருப்பதற்கு நிகர். என் இளையோனை மைந்தனுக்கிணையாகப் பேணியவன் நான். தந்தையெனச் செருக்கி மட்டுமே அவன் முன் நின்றிருக்கிறேன். அவன் முன் சிறுமைகொள்ள என்னால் இயலாது” என்றார்.

அசலை மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுக்க “இயலாது!” என்று திருதராஷ்டிரர் கைதூக்கி சொன்னார். “போதும், இனி சொல் வேண்டியதில்லை. என்னால் இயலாது.” அசலை “தந்தையே, உங்கள் ஒரு சொல்லில் உள்ளது என் மைந்தனின் வாழ்க்கை. நான் வந்தது அவனுக்காக. அவன் தனியனல்ல, ஆயிரம் உடல்கொண்டவன். என் மைந்தனை காத்தருள்க! தெய்வங்களிடமென உங்களிடம் இறைஞ்சுகிறேன்” என்றாள். “இல்லை இல்லை” என்றார் திருதராஷ்டிரர். தாழ்ந்த குரலில் தன்னிடமென அதை சொன்னபடி தலையை அசைத்துக்கொண்டே இருந்தார். “தந்தையே, அளிகூர்க! தங்கள் காலடியில் விழுந்து கேட்கிறேன்” என்றாள் அசலை. அச்சொல்லில் இருந்த தற்சிறுமையால் அவள் உளம் கரைந்தது. விழிநீர் வழிய கைகூப்பினாள். விம்மலோசை எழ அதை அடக்கியபோது பிறிதொரு மூச்சொலி எழுந்தது. அடக்கவியலாதென்று தோன்ற அவள் விசும்பி அழத்தொடங்கினாள்.

“நான் செய்வதற்கொன்றே உள்ளது. இறக்கலாம். விழியிருந்திருந்தால் இறந்திருப்பேன். இப்பாழுயிரை இரும்புடலுக்குள் பொறித்து அனுப்பின தெய்வங்கள். இதை உடைத்து வெளியேறுவதும் எளிதல்ல… அந்த மூடனிடம் ஆயிரம் முறை சொன்னேன், என்னை அழுத்திக் கொன்றுவிடு என்று. அவன் நான் சொல்வதை கேட்பதில்லை. என்னுள் இருந்து ஆணையிடும் தெய்வங்களால் வழிநடத்தப்படுபவன் அவன். கீழ்மகன்… அறிவிலி…” திருதராஷ்டிரர் கண்களிலிருந்து நீர் வழிந்து மார்பில் சொட்ட தலையை உருட்டினார். “இல்லை, என்னால் இயலாது. என்னை வதைப்பதென்றால் இங்கு நில். என்னிடமிருந்து ஒப்புதலை நீ பெறமுடியாது…”

அசலை மேலாடையால் முகத்தைப் பொத்தி அழுத்தித் துடைத்தாள். திரும்புவதற்காக அவள் எண்ணினாலும் உடல் திரும்பவில்லை. ஆனால் அதை திருதராஷ்டிரர் உணர்ந்தார். இரு கைகளையும் விரித்து “இனி என்னிடம் எவருக்கும் சொல்ல எதுவுமில்லை. இதற்கு அப்பால் கீழிறங்க என்னால் இயலாது. செல்க!” என்றார். அத்தருணத்தில் பிரகதியின் கையிலிருந்து யாழ் ஒலிக்கத் தொடங்கியது. அசலை திடுக்கிட்டு திரும்பி நோக்கினாள். அதுவரை அவள் அங்கிருந்ததையே மறந்துவிட்டிருந்தாள். யாழ்த்தந்திகளின் இசைச்சொட்டுகள் கூரிய வெள்ளி ஊசிகளென அவள்மேல் பாய்ந்தன. அவள் நரம்புகள் கூச பற்கள் கிட்டித்தன.

“என்ன அது? யார்?” என்றார் திருதராஷ்டிரர். மேலும் உரக்க “யார்?” என்றார். “நிறுத்து அதை… அறிவிலி, நிறுத்துக!” என்றார். அந்த இசை அசலை முற்றிலும் அறியாத ஒன்றாக இருந்தது. அனல்பட்ட புழு என யாழ்நரம்புகள் துடித்து எழுப்பும் இசை. மிகப் பிந்தியே அவளால் அந்தப் பண்ணை அடையாளம் காணமுடிந்தது. அது ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது. பசித்து வீறிடும் கைக்குழந்தைபோல. அனைத்துப் புலன்களையும் பதறச் செய்தது.

ஆறு அருவியென்றாவதுபோல அறியாமல் அது நடைமாறியது. இரு கைகளையும் கோத்து நெஞ்சில் வைத்து குனிந்து சென்னிநரம்புகள் அதிர அதை கேட்டுக்கொண்டிருந்த திருதராஷ்டிரர் மெல்ல தளர்ந்தார். அவர் தோள்தசைகள் குழைவதை, முகம் மெல்லுணர்வுகொள்வதை அவள் கண்டாள். மெழுகுச்சிலை வெப்பம் கொள்வதுபோல. பின்னர் அவர் பெருமூச்சுவிட்டார். அவர் கால்கள் நீண்டன. கைகள் தளர்ந்து இரு பக்கங்களிலுமாக சரிந்து விழுந்தன. முகவாய் மார்பில் படிந்தது. மூச்சு சீரடைய அவர் துயில்வதுபோலத் தோன்றியது.

இசையின் நடை மேலும் மேலும் மாறிக்கொண்டே சென்றது. அது அகன்று ஒளிகொண்டு செல்வதறியாது ஒழுகும் பெருநதியென்றாகியது. பிரகதி யாழுடன் இணைந்தவள் போலிருந்தாள். அவள் விரல்களில் மட்டுமே அசைவிருந்தது. சிறுசெங்குருவிகள் என அவை நரம்புகளில் எழுந்து, அமர்ந்து, பறந்து விளையாடின. யாழிசை சுவர்களிலிருந்தும் கூரையிலிருந்தும் மென்மையாக பொழிந்துகொண்டிருந்தது. அவள் முகத்தில் அமைதி இருந்தது. ஒருபோதும் அப்படி அவளை பார்த்ததில்லை என அசலை எண்ணிக்கொண்டாள். அவளை விழியின்மையால் திருதராஷ்டிரர் அவ்வுருவில்தான் பார்க்கிறார் போலும்.

இசை முடியப்போகிறதென்று அதுவே உணர்த்தியது. அது விரிந்துகொண்டுதான் இருந்தது, ஆனால் நான் நிலைக்கிறேன் என்றும் சொன்னது. விரிந்து சென்று நிலைத்து நிறையும் பிறிதொன்றின் வடிவென்று உள்ளம் அறிந்தமையால் அதை உணர்ந்தது போலும். ஓர் இசைக்குமிழி ஆம் என்றது. பிறிதொன்று ஆம் என பெருமூச்சுவிட்டது. பிறிதொன்று ஆம் என புன்னகைத்தது. ஆம் ஆம் ஆம் என கூவியபடி ஒரு குழந்தை துள்ளி ஓடி மறைந்தது. புல்வெளிமேல் இளவெயில் மட்டும் எஞ்சியிருந்தது.

கால்களில் உடலின் எடையை உணர்ந்து அசலை இடை ஒசிந்தாள். திருதராஷ்டிரரும் பிரகதியும் ஒரே ஊழ்கத்தின் இரு முனைகளில் பிணைக்கப்பட்டிருந்தனர். அவள் திரும்பி நோக்கியபோது அப்பால் சங்குலனும் அதற்குள் இருப்பதை கண்டாள். யுயுத்ஸு அறைக்கு வெளியே சென்றுவிட்டிருந்தான். பிறிதொருவரும் அறைக்குள் இல்லை என்னும் தன்னுணர்வை அடைந்தபோதே சஞ்சயனை உணர்ந்து அகம் திடுக்கிட்டது. திரும்பி அவனை பார்த்தாள். அவன் கைகளைக் கட்டியபடி அசையாமல் அமர்ந்திருந்தான். அவள் அவன் விழிகளை பார்த்தாள். அவன் அங்கு நடந்த எதையுமே அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது. முற்றிலும் அயலான நோக்கு.

அவள் விழிகளை விலக்கிக்கொண்டாள். விழிமணி விலகுவதே கூட உடலில் ஓர் அசைவென வெளிப்படமுடியுமென்று திருதராஷ்டிரர் விழித்துக்கொண்டபின் உணர்ந்தாள். கைகளைத் தூக்கி வானை நோக்கி ஏதோ சொல்ல விழைபவர்போல சில கணங்கள் இருந்தபின் பெருமூச்சுடன் “நான் ஒப்புகிறேன்… நான் சொல்லவேண்டியதென்ன என்று சொல்லுங்கள்” என்றார். அசலை “சஞ்சயன் செல்லட்டும்” என்றாள். “ஆம், அவன் என் விழியும் நாவும்” என்றார் திருதராஷ்டிரர். “நான் சொல்லவேண்டியதென்ன என்பதையும் அவனிடம் நீயே சொல்க! எதுவானாலும் அவன் சொல்வான்.”

அசலை “அதை நீங்களே சொல்லலாம், அரசே” என்றாள். “இல்லை, என்னிடம் ஒரு சொல்லும் எஞ்சவில்லை” என்றார் திருதராஷ்டிரர். “உங்களுக்குள் இருந்து சொல் எழும். அதை அவர் சென்று சொல்கையிலேயே மெய்யான ஆற்றல் இருக்கும் அதற்கு. அவருடன் தனித்திருங்கள்…” என்றபின் அசலை திருதராஷ்டிரரின் கால்தொட்டு சென்னிவைத்து “வாழ்த்துக, தந்தையே!” என்றாள். “நலம் சூழ்க!” என்றார் திருதராஷ்டிரர். அவள் திரும்பி பிரகதியை நோக்கினாள். அவள் துயில்கொண்ட முகத்துடன் அமர்ந்திருந்தாள். முதல் சுதியின் பெருநரம்பில் விரல் தயங்கித் தயங்கி ஊர்ந்துகொண்டிருந்தது. இன்னுமொரு கூற்று அவளுக்குள் எஞ்சியிருப்பதைப்போல.

அசலை “அன்னையே” என்றாள். திடுக்கிட்டு விழித்து எழுந்துகொண்ட பிரகதி “ஆம்” என்றாள். “செல்வோம்” என்றாள் அசலை. பிரகதி எழுந்து ஆடை சீரமைத்து அவளுடன் நடந்தாள், அக்கணம் வேறெங்கிருந்தோ வந்து சேர்ந்துகொண்டவள்போல. அறைக்கு வெளியே சென்றதும் யுயுத்ஸு வந்து இணைந்துகொண்டான். “அவர் ஒப்புக்கொண்டார். சஞ்சயனை அனுப்பும்படி சொன்னேன். அவனிடம் சொல்லவேண்டிய சொற்களை அவருள் இருந்து கண்டடையும்படி கோரினேன். அவர்கள் தனிமையிலிருக்கட்டும்” என்றாள் அசலை.

“ஆம், அவர் உடைவதற்கு சற்று பொழுது தேவை” என்றான் யுயுத்ஸு. அசலை “ஆனால் இக்காவலன் அங்கிருப்பது…” என்றாள். “சங்குலன் அவர் தனிமையின் ஒரு பகுதி” என்றான் யுயுத்ஸு. பிரகதியிடம் “வருக, அன்னையே!” என்றான். பிரகதி அவனுடன் நடந்தாள். அசலை அவள் காலடிகளை நோக்கியபடியே நடந்தாள். தன் மாளிகைக்குச் செல்ல விடைபெறும்போது அவள் பிரகதியின் கால்களைத் தொட்டு வணங்கி “விடைகொள்கிறேன், அன்னையே” என்றாள். அவள் தலையைத் தொட்டு “நல்லவை நிறைக!” என்றாள் பிரகதி.

தன் அறை நோக்கிச் செல்கையில் “ஆம், அவர்களுக்குள் சொற்கள் எஞ்சியிருக்கின்றன” என்று அசலை சொல்லிக்கொண்டாள். முழுதொழிவது எளிதா என்ன என்னும் எண்ணத்தை பின்னர் அடைந்தாள்.

blபானுமதியின் அறையில் அசலை சொல்லாடிக்கொண்டிருக்கையில் சஞ்சயன் அவர்களை சந்திக்க வருவதாக செய்தி வந்தது. சேடியிடம் “அவரை சோலைமண்டபத்திற்கு வரச்சொல்க!” என்றாள் பானுமதி. சேடி சென்றபின் அசலையிடம் “அவர் சொன்ன தூதுச்செய்தியை நாம் அறியவேண்டுமா என்ன? அது தந்தைக்கும் மைந்தருக்கும் இடையேயான சொல் அல்லவா?” என்றாள். அசலை “நாம் அறியவேண்டாம் என்றால் சஞ்சயன் நம்மிடம் அதை சொல்லப்போவதில்லை” என்றாள்.

ஆடைமாற்றிவிட்டு சோலைக்குச் சென்று கொடிமண்டபத்தில் அமர்வது வரை அவர்கள் அதைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. சிறிய சொற்களில் ஆடைகள் குறித்தும் சேடியர்பற்றியும் உரையாடினர். அமர்ந்தபின் அசலை “நாம் இதை பேரரசிக்கு தெரிவிக்க வேண்டியதில்லையா?” என்றாள். “பேரரசிக்கு சொல்வோம். சொல்ல பேரரசர் விழைகிறாரா என்று அறிந்த பின்” என்றாள் பானுமதி. “அதெப்படி பேரரசி அறியாமல்?” என்றாள் அசலை. “சில தருணங்களில் அப்படித்தான்” என்றாள் பானுமதி.

சஞ்சயன் வருவதை சேடி அறிவித்தாள். “அவன் சொலல்வலன். ஆனால் சொல்லெடுக்காமல் அமர்ந்திருக்கவும் கற்றவன். ஏதோ ஓர் உளத்தொடர்பால் இவனை எண்ணுகையிலேயே எனக்கு இளைய யாதவர் நினைவுக்கு வருகிறார்” என்றாள் பானுமதி. “ஆம், எனக்கும் அவ்வுள்ளுணர்வு உண்டு. நான் அதை எண்ணி வியந்ததும் உண்டு” என்றாள் அசலை. இருவரும் அவ்வெண்ணத்தின் விந்தையை உணர்ந்தவர்களாக சொல்லின்றி அமர்ந்திருந்தனர். காற்றில் இறகு என மெல்லிய நடையுடன் சஞ்சயன் அவர்களை நோக்கி வந்தான். அருகணைந்து “அரசியரை வணங்குகிறேன்” என்றான். அவன் முகமனுரைகளையும் முறைச்சொற்களையும் சொல்வதில்லை என்பதை அசலை நினைவுகூர்ந்தாள். சொல்வானென்றால் அது உட்கரந்த இளிவரலுடன்தான். அவர்கள் மறுவாழ்த்து உரைத்து அமரும்படி செய்தனர்.

சஞ்சயன் அவர்கள் பேசுவதற்காகக் காத்து அமர்ந்திருந்தான். மிகச் சில கணங்களிலேயே அங்கே அவன் இல்லையென்றே அவர்கள் உணரும்படி செய்ய அவனால் இயன்றது. அசலை “என்ன சொன்னார் தந்தை?” என்றாள். “அவருடைய செய்தியுடன் நான் இன்றே கிளம்பவேண்டும் என்றார். நீங்களிருவரும் அதை அறியலாம் என்றும் செல்லும்போது விதுரரிடம் மட்டும் ஆணை பெற்றுக்கொள்ளும்படியும் கூறினார். நீங்கள் கூறியதுபோலவே அவர் தன் குலமைந்தருக்கு எந்நிலையிலும் போரை தவிர்க்கவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்” என்றான்.

“ஆணையிட்டாரா?” என்றாள் பானுமதி. “ஆம், அதை ஆணை என்று கொள்ளமுடியாது” என்றான் சஞ்சயன். “என்ன நிகழ்ந்தது?” என்றாள் அசலை. “நீங்கள் சென்றபின் எழுந்து தனியறைக்கு சென்றுவிட்டார். அவருடன் அணுக்கனும் சென்றான். அவர் துயின்றபின் அவன் மட்டும் வெளியே வந்தான். என்ன செய்கிறார் என்று கேட்டபோது உடல் பிடித்துவிட்டேன், துயில்கிறார் என்றான். நான் வெளியே காத்திருந்தேன். விழித்துக்கொள்ளும் பொழுதை அணுக்கன் சங்குலன் அறிவான். அவன் உள்ளே சென்று சற்று கழித்து என்னை அழைக்கிறார் என்றான்.”

நான் உள்ளே செல்லும்போது அவர் மஞ்சத்தில் அமர்ந்திருந்தார். அருகமர்ந்ததும் என்னை நோக்கி முனகிவிட்டு மீண்டும் சொல்லின்மையிலாழ்ந்தார். நான் அவரையே நோக்கிக்கொண்டிருந்தேன். அவருடைய உணர்வுகளை என்னால் கணிக்க முடியவில்லை. ஒப்புக்கொள்ள இயலாது என்று கூறி எழுந்துசெல்ல ஆணையிட்டிருந்தாலும் வியந்திருக்கமாட்டேன். பின்னர் மெல்லிய குரலில் என்னிடம் “நான் அனுப்பும் செய்தியால் என்ன நிகழும்?” என்றார். “நன்று நிகழலாம்” என்று பொதுவாக சொன்னேன். “எனக்கு இழிவு சூழுமா?” என்றார். “இல்லை, மெய்யான உணர்வுகளை எப்போதுமே மானுடம் மதிக்கிறது” என்றேன்.

முனகிவிட்டு மீண்டும் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “நான் கோரவேண்டியதென்ன?” என்றார். “போர் நிகழலாகாதென்று. எந்நிலையிலும் பாண்டவர்கள் படைக்கலம் எடுக்கலாகாது. அனைத்தையும் இழக்க நேரிட்டாலும்கூட” என்றேன். “ஆம், என்ன சொன்னாலும் மெய்யான பொருள் அதுவே” என்றார். “அதை நான் கோரினேன் என்று அவர்களிடம் சொல்” என்றார். “ஆணை” என்றேன். அவர் மேலும் சொல்வார் என அறிந்திருந்தேன். அதற்காக காத்திருந்தேன். அவர் தலைதூக்கி “போர் நிகழுமென்றால் நாம் வெல்வோமா?” என்றார். பிறிதொருவர் அவரில் இருந்து எழுவதை கண்டேன். புல்லிதழும் அசையாமல் புதருக்குள் இருந்து எழும் வேங்கை என.

“மாட்டோம்” என்றேன். “ஆம்” என்ற அவர் “அவன் அங்கிருப்பது வரை எவரும் வெல்லமுடியாது. வேதமுடிவே வெல்லும். ஏனென்றால் அது வேதத்தாலேயே திரட்டி எடுக்கப்பட்டது. வேதம் அதன் முன் வணங்கும், கனல்விழித் தந்தைக்கு கந்தன் மெய்யுரைத்ததுபோல” என்றார். அவர் கைகள் நடுங்கத்தொடங்கின. “எனக்கு அமைதியில்லை. ஒரு கணமும் நிறைநிலை இல்லை” என்றார். “நான் நன்கறிவேன் அவனை. நான் அவனை நேர்நின்று அறியவில்லை. ஏனென்றால் நான் ஆண். அவனை அறிந்த பெண்டிரை கண்டுகொண்டிருக்கிறேன்” என்றார்.

அவர் கைகள் குளிரில் என நடுங்கி அதிர்ந்தன. “அவனை அறியாத பெண் என எவரையும் இன்றுவரை கண்டதில்லை. அத்தனை பெண்டிரும் அவனை அறிகிறார்கள் என்றால் அவனே முழுமுதல் ஆண். பெண்ணென்றாகி அவனை அறிவோர் சிலர் இருக்கலாம். அடியான் என்றாகி அறிவதும் இயல்வதாகலாம். அஞ்சியும் வியந்தும் என்னைப்போன்றோர் அறிவதற்கு ஓர் எல்லை உண்டு” என்றார். “அவன் அழகன், இன்னகையும் மென்சொல்லும் கொண்டவன். ஆனால் அவன் கையிலமர்ந்த படையாழி கொடிது. அளியற்றது. தொடுவதனைத்தையும் துண்டென்றாக்கி மீளும் ஒளி அது. அது என் குடியை அழிக்கும்” என்றார்.

“அவன் படைக்கலமேந்துவதில்லை என்றான் என இவன் வந்து கொண்டாடினான். மூடன். இங்குள்ள அனைத்தும் அவன் படைக்கலங்களே” என்றார். “என் குடி அழியும். அழிவதாக முடிவெடுத்து நிரைவகுத்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை அவன் இரு பெரும்படைக்கலங்களில் ஒன்று முற்றழிக்கும். குலாந்தகன் என அவன் பிறந்தபோதே நிமித்திகர் சொன்னார்கள்” என்றார். எதிர்பாராத கணத்தில் உடைந்து அழலானார். நெஞ்சிலறைந்தபடி உடல்குலுங்க விலங்கென ஒலியெழ அழுதார்.

நான் அவருடைய அழுகையை வெறுமனே நோக்கியிருந்தேன். அவர் அழுகை எதன்பொருட்டென்றாலும் அது அவர் விழிகொண்டுள்ள இருளின்பொருட்டே என எண்ணச் செய்கின்றது அவர் முகம். “சஞ்சயா பீமனிடம் சொல், என் மைந்தரை கொல்லலாகாதென்று. என் மைந்தர் களம்பட்டுக் கிடப்பதைக் காணும் தீப்பேறை எனக்கு அளிக்கலாகாதென்று” என்றபடி என் கைகளைப் பற்றி உலுக்கினார். அவர் நெஞ்சில் விழிநீர் சொட்டி வழிந்தது. “நான் அவர்களிடம் மன்றாடினேன் என்று சொல். குலமூத்தான் என்றோ பெருந்தந்தை என்றோ அல்ல, எளிய முதியவன் என்று நின்று இரந்தேன் என்று சொல். இப்புவியில் நான் விழைவது என் மைந்தரின் உயிர் மட்டுமே” என்றார்.

“அவர்கள் பலிபீடம் நோக்கி முண்டியடிக்கும் வெள்ளாடுகள். அவர்களை காத்திருக்கிறது பலிகொண்டு ஒளிபெறும் கத்தி. அவர்கள் பேதைகள். பழிசூழ்ந்த வீணர்கள். ஆயினும் என் மைந்தர். அர்ஜுனனிடம் சொல், அவர்களைக் கொன்றால் அவன் காண்டீபம் நாணும் என்று.” மெல்ல அவர் குரலில் வஞ்சம் ஏறியது. “எவராயினும் என் மைந்தரைக் கொன்றவர்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர்கள்மேல் என் தீச்சொல் என்றுமிருக்கும். விண்ணிலிருந்து அவர்கள் அளிக்கும் நீர்க்கொடையை மறுப்பேன். இருளுலகில் நான் படும் துயர் அனைத்தும் அவர்களின் கொடிவழிகள்மேல் பெய்ய வைப்பேன்… என் பழி ஒருபோதும் அழியாது. வஞ்சப் பெருந்தெய்வமென அவர்களின் வீட்டுமுற்றங்களில் நின்றிருப்பேன். சென்று சொல் அவர்களிடம்” என்றார்.

பின்னர் அவரே மீண்டும் தணிந்தார். “அங்கே யாதவன் இருந்தால் அவனிடம் கேள், இப்புவிமேல் இதுவரை விழுந்த குருதியும் கண்ணீரும் போதவில்லையா என்று. தெய்வங்களெனில் குருதிபலி கொண்டுதான் விண்ணில் நிறையவேண்டுமா என்று. அவனிடம் சொல், மானுடரை அவர்களின் எளிய விழைவுகளுடனும் கசப்புகளுடனும் வஞ்சங்களுடனும் வாழவிடுக என்று. தெய்வங்கள் இனி இப்புவிக்கு தேவையில்லை. மண்ணிறங்கிய தெய்வங்களின் எடை தாளாமல் வெற்புகள் விரிசலிடுகின்றன. அவனிடம் திரும்பிச்செல்லும்படி சொல். ஆம், அவன் திரும்பிச்சென்றாகவேண்டும். அவன் மானுடரை அள்ளி அளைந்து விளையாடுவதை நிறுத்தியாகவேண்டும்” என்றார்.

சொல்லிச் சொல்லி குரலோங்கினார். “அவன் காலடியில் சிற்றெறும்பு நான். ஆயினும் அவனையும் நான் தீச்சொல்லிடுவேன். அவனை என்ன, படைத்த பிரம்மனை ஆளும் அரியை, அனைத்துமான அரனை பழிச்சொல்லிட்டு கருகச் செய்வேன். அவன் என் கண்ணீரிலிருந்து தப்பமுடியாது. சொல் அவனிடம், என் மைந்தரை விட்டுவிடும்படி. இப்போரிலிருந்து ஒழியும்படி சொல். இப்போரை அவன் எண்ணினால் தவிர்க்க முடியும். எளியோர்மேல் அளிகொள்கையிலேயே தெய்வம் பொருள்கொள்கிறது என்று அப்பழிகாரனிடம் சொல்” என்றார்.

“மேலும் சொல்லப்போகிறார் என எண்ணியிருக்கையில் அவர் என்னிடம் செல்லும்படி கையசைத்தார். அதுவரை அறையில் அப்பால் நின்றிருந்த சங்குலன் வந்து அவரை தூக்கி எழுப்பினான். “பேரரசர் நீராட்டறைக்குச் செல்கிறார்” என்றபின் அவரை கொண்டுசென்றான். நான் அங்கேயே சில கணங்கள் நின்றிருந்தேன். பின்னர் திரும்பி நடந்தேன்” என்றான் சஞ்சயன். “விதுரரிடம் பயணத்திட்டத்தை சொல்லிவிட்டு உங்களிடம் வந்தேன். இப்போதே கிளம்பவிருக்கிறேன்.”

“அவர் சொன்னதை அவையில் சொல்க! அவர் சொன்ன உணர்வுகளை யுதிஷ்டிரரிடம் தனியறையில் கூறுக!” என்றாள் பானுமதி. “ஆணை” என்றான் சஞ்சயன். அசலை “சஞ்சயரே, பேரரசர் இச்செய்தியை பேரரசியிடம் சொல்லலாகாதென்று சொன்னாரா?” என்றாள். “ஆம் அரசி, அவ்வாறு கூறினார்.” அசலை அவன் விழிகளை நோக்கி “பிரகதியன்னையை அவரிடம் அனுப்பியதே பேரரசிதான், அதை அவர் அறிவாரா?” என்றாள். “ஆம், அறிவார். மஞ்சத்தறைக்குச் சென்றதுமே அவரிடம் அனைத்தையும் சங்குலன் கூறியிருப்பான். அவருடைய தனியொற்றர்கள் அவனிடம் அனைத்தையும் சொல்வார்கள்” என்றான் சஞ்சயன்.

சில கணங்கள் அமைதி நிலவியது. சஞ்சயன் வணங்கி எழுந்தான். “சஞ்சயரே, பேரரசியிடம் சொல்லவேண்டியதில்லை என ஏன் சொன்னார் பேரரசர்?” என்றாள். “அதை நாம் எவ்வாறு சொல்லமுடியும்? கணவன் அறிந்த மனைவியை பிறர் அறிவதில்லை” என்றபின் புன்னகைத்த சஞ்சயன் “விடைகொள்கிறேன், அரசியரே” என்றான்.

முந்தைய கட்டுரைபி.எம்.மூர்த்தி – விதிசமைப்பவர்
அடுத்த கட்டுரைதூய்மை!