வைரமுத்து – எத்தனை பாவனைகள்!

vairamuthu1xx

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

வைரமுத்துவின் ஞானபீடமுயற்சிகளைப் பற்றி மலையாளம் தமிழ் இரு மூலங்களிலிருந்து அறிந்தேன். அதை பொதுவில் வைக்கவேண்டும் என்றும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார். வைரமுத்து அதற்காக முயல்கிறார் என்பதும் அதன்பொருட்டே பாரதிய ஜனதாவின் பிரமுகர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரியாத எவரும் தமிழில் இல்லை. அவர் எப்போதுமே எல்லா வழியிலுமே சுயமுன்னேற்றத்திற்காக முயல்பவர், ஆகவே அதில் அதிர்ச்சி கொள்ளவும் ஏதுமில்லை

ஞானபீடம் ‘நல்ல’ எழுத்துக்காக அளிக்கப்படுவது அல்ல. ஒரு காலகட்டத்தின் குரலாக, ஒர் இலக்கியச்சூழலின் அடையாளமாக, ஒரு உச்சசாதனையாளாக கருதப்படும் ஒருவருக்கு அளிக்கப்படுவது. வைரமுத்து அவ்வாறு இந்தியச்சூழலில் அடையாளப்படுத்தப்படுவார் என்றால் அது தமிழுக்கு மிகப்பெரிய சிறுமை. எளிதில் களையப்படக்கூடியது அல்ல அது. அதையே நான் குறிப்பிட்டேன்.

ஞானபீட விருதுகள் ஆகஸ்ட் வாக்கில் உறுதிசெய்யப்படுகின்றன. செப்டெம்பர் அல்லது அக்டோபரில் அறிவிக்கப்படும். இப்போது அதற்கான திட்டமிட்ட பூர்வாங்க வேலைகள் நிகழ்கின்றன. இத்தருணத்தில் கறாரான விமர்சனங்கள் வழியாக அவருடைய இடத்தை தமிழில் வகுக்கவேண்டிய பொறுப்பு, வெளியே இருந்து நோக்குபவர்களுக்கு அவர் எங்கிருக்கிறார் என்பதை தெளிவாக்கவேண்டிய பொறுப்பு தமிழ் இலக்கியச் சூழலுக்கு உண்டு. முன்னரே அவருடைய முயற்சிகளைப்பற்றிஎழுதியது இதனாலேயே

ஏனென்றால் வைரமுத்து தமிழின் ஓர் அதிகார மையம் என்பதனாலேயே இங்கே அவரைப்பற்றி எதிர்மறையாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. அது பொதுவான தமிழ்க்குணம், அதிகாரமற்றவர்களைச் சீண்டுவதும் அதிகாரத்தை போற்றுவதும். இது அவருக்கு துணையாக ஆகிறது. விருதுக்கு அவர் சென்றுகொண்டிருக்கையிலேயே ஓரிரு விமர்சனக்கருத்துக்களேனும் வந்தால் மட்டுமே பயன். அன்றி ஆகஸ்டில் முடிவெடுக்கப்பட்டபின் பேசிப் பயனில்லை

இணையம் அளிக்கும் வாய்ப்புகளில் ஒன்று எந்த மனமயக்கமும் தேவையில்லை, நாம் பெரும்பாலும் மொண்ணைகளிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று ஐயமில்லாமல் நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறது அது என்பது. இவ்விஷயத்திலும் அதையே எதிர்பார்த்தேன். நடக்கிறது

வழக்கமான மொண்ணைத்தனங்கள், நூறாயிரம் முறை மறுமொழி சொல்லப்பட்டுவிட்டவை. ஒன்று, ’எல்லாமே இலக்கியம்தான், இதுதான் இலக்கியமென எவர் முடிவுசெய்வது?’ – என்னும் குரல். இந்த விஷயத்தை சோறு துணி எதிலாவது இந்த மொண்ணைகள் கருத்தில்கொள்கின்றனவா? இலக்கியத்தில், சிந்தனையில், கலையில் எப்போதுமே தரம் என்று ஒன்று உண்டு. அது ஆதாரங்களால் எல்லா மொண்ணைகளுக்கும் தெரிய நிரூபிக்க முடியாதது. ஆனால்  மானுட முயற்சிகள் எதிலும் ஒன்று இன்னொன்றைவிட மேல் என்பதனால்தான் ரசனை என ஒன்று இருக்கிறது. அந்த தரம்நோக்கிச் செய்யப்படும் முயற்சியே கலையின் அடிப்படை விசை. அதில் கருத்தியல்வேறுபாடு இருக்கும், ஆனால் கலைச்செயல்பாட்டின் நெறிகள் பொதுவானவையே

நல்ல இலக்கியம் என ஒன்று இல்லை என்பது இலக்கியம் என்பதே இல்லை என்பதற்கு நிகரானது. இதே மொண்ணைகளிடம் வைரமுத்துவை விட ராஜேஷ்குமார் மேல் என்று சொல்லுங்கள், எகிறுவார்கள். மக்கள் வாசித்தால்தான் இலக்கியம் என்றால் பி.டி.சாமிதான் அய்யா இலக்கியமேதை.

இன்னொரு மொண்ணைக்குரல்.எவர் முடிவுசெய்வது என்பது. இலக்கியத்தின் தரத்தை அவ்விலக்கியச்சூழலில் இருப்பவர்களே முடிவுசெய்யவேண்டும். நல்ல டாக்டரை டாக்டர்களே முடிவுசெய்கிறார்கள். நல்ல பொறியாளரை பொறியாளர்களே முடிவுசெய்கிறார்கள். ஐராவதம் மகாதேவன் சிறந்த தொல்லியல் ஆய்வாளர் என்பதை மக்கள் வாக்களித்தா தேர்ந்தெடுத்தார்கள்? Peer review என அதற்குப்பெயர். வைரமுத்து இலக்கியச்சூழலில் இலக்கியவாதியாக இன்றுவரை ஏற்கப்படாதவர்.

மொண்ணைத்தனங்கள் மேலும். ’வைரமுத்து லாபி செய்கிறார் என்றால் எங்கேதான் லாபி இல்லை’ என இன்னொருகுரல். வைரமுத்து லாபிசெய்வதை குறைசொல்லவில்லை, செய்யட்டும். அதன்மூலம் தமிழுக்கு அவர் சிறுமையை ஈட்டித்தருவதை மட்டுமே கண்டிக்கிறோம். இது இலக்கியமதிப்பீடு சார்ந்த ஒரு கண்டனம். நூறாண்டுகளுக்கும் மேலாக இங்கே இருந்துவரும் நவீன இலக்கியம் என்னும் இயக்கத்திலிருந்து எழும் குரல் இது.

எந்த எழுத்தாளரையும் விருதுகள் வரை கொண்டுசென்று சேர்க்கவேண்டும். அவ்வாறு கி.ராவை கொண்டுசென்று சேர்க்கவேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அது இலக்கியச் செயல்பாடு. ஆனால் ஆளும்கட்சிக்குப்பின்னால் சென்று அதைச்செய்வது அப்படி அல்ல, அது கீழ்மை. அதை வணிகத்தில் ஒருவர் செய்தாலே கீழ்மை. இலக்கியம் வணிகம் அல்ல, என்ன இருந்தாலும் இதுஒரு கொள்கைச்செயல்பாடு..

’இவன் விருதுக்காக எழுதுகிறான், பொறாமையால் பேசுகிறான்’ – என ஒரு குரல்.  ‘எல்லா விருதுகளையும் இப்படித்தான் இவன் எதிர்க்கிறான்’ என இன்னொரு குரல். இதெல்லாம் எழுதப்படிக்கத்தெரியாத கும்பல். எந்த விருதுகளை ஏற்றிருக்கிறேன், எந்த விருதுகளுக்கெல்லாம் பாராட்டுவிழாக்களையே ஒருங்கிணைத்திருக்கிறேன் என வாசிப்பவர்களுக்குத் தெரியும்..

என்னென்ன அறிவுஜீவி பாவனைகள்!

“நான் விருதுகளுக்கு அப்பால்சென்று யோசிப்பவன், ஆனால் இக்கட்டுரையில் இலக்கணப்பிழை உள்ளது”

“சரி, இதைச்சொல்ல இவர் யார்?”

“நான் இதை பின்நவீனத்துவப் பகடிதான்சார் பண்ணுவேன்”

ஆனால் எந்த அந்தர்பல்டியிலும் தெரியாமல்கூட, வாய்தவறிக்கூட வைரமுத்துவை இலக்கியவாதி என ஏற்கவில்லை என்று ஒரு சொல் வந்துவிடக்கூடாது. பின்நவீனத்துவமே ஆனாலும் அதிகாரத்துடன் உரசிவிடக்கூடாது.வேடிக்கை என்னவானாலும் அது வைரமுத்துவுக்கு எதிரானதாக தொனிக்கவும் கூடாது.சாதுரியத்தில் சமத்காரத்தில் பல்டியடித்தே அதிகாரம் நோக்கிச் செல்வதில் இவர்கள் ஒவ்வொருவரும் வைரமுத்துக்களே.

ஆனால் வைரமுத்து நல்ல படைப்பாளி என்று சொல்லிவிடவும்கூடாது, அறிவுஜீவி முகம் கலையக்கூடாதல்லவா? இவர்களுடன் ஒப்பிடுகையில் கள்ளிக்காட்டு இதிகாசமே தமிழிலக்கிய உச்சம் என நம்பும் அப்பாவிகள் எவ்வளவோ மேல். இந்த மொண்ணைகளுக்கு இவர்களின் தகுதிக்குரிய முகம்தான் கிடைக்கும். அது வைரமுத்துதான்போல

எண்ணிப்பாருங்கள், இவ்வாறு இன்னொரு எழுத்தாளர் பாரதியஜனதாவிடம் உறவாடி விருதுக்கு அலைந்தால் தமிழ் இணைய உலகம் என்னென்ன வசைகளை எழுப்பும். சாகித்ய அக்காதமி விருதை திருப்பியளிக்காத இலக்கியவாதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னென்ன வசைகள் கொண்டு அவமதித்தனர். ஒருசொல்லேனும் வைரமுத்துவுக்கு எதிராக அப்போது எழுந்ததா?அன்றைக்குப் பொங்கியவர்களெல்லாம் இன்று எங்கே?இப்போதும் அந்த அற்பத்தனத்தை மறைக்கவே இலக்கியவாதிகள் கோமாளிவேடம் பூணுகிறார்கள்.

இத்தருணத்தில் திட்டவட்டமாக என் மதிப்பீட்டை முன்வைப்பது கடமை என்று தோன்றியது. இது நூறாண்டுகளாக இங்கே மிகச்சிறிய தீவிர இலக்கிய வட்டத்திற்குள் திரட்டி வளர்க்கப்படும் இலக்கிய மதிப்பீடு. இதை ஏற்பவர்களுக்காகவே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்இந்த இலக்கிய மதிப்பீட்டை நான் என் முன்னோடிகளிடமிருந்து பெற்றேன். முப்பதாண்டுகளாக அத்தனை சந்தர்ப்பங்களிலும் எந்தச் சமரசமும் இல்லாமல் இதை முன்வைத்து வருகிறேன். அடுத்த தலைமுறையில் சிலரிடம் இது சென்றடையவேண்டும் என்பது மட்டுமே எதிர்பார்ப்பு. இங்கே இந்த மொண்ணைகளுக்கு அப்பால் சற்றேனும் நுண்ணுணர்வும் தீவிரமும் கொண்ட சிலர் உண்டு என நான் அறிவேன் என்பதனால்இக்குரலை முன்வைக்கிறேன். நான் எதற்கும் எங்கும் சென்று நிற்பவனல்ல என்பதனால் தயக்கமில்லை.

***

முந்தைய கட்டுரைஇருள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–16