வைரமுத்து,ஞானபீடம் – கடிதங்கள்

vairamuthu1xx

ஜெமோ,

பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஞானபீடமும் கிடைக்கலாம். ஏனென்றால் எந்த ஒரு அமைப்புமே, அதிலும் குறிப்பாக அரசாங்கம் சார்ந்தவைகள், ஊழலோ சார்புத்தன்மையற்றோ செயல்பட வாய்ப்பேயில்லை. இந்த ஜனநாயகம் கண்ட பரிணாம வளர்ச்சியிது.

ஆனால் இதை ஏன் வைரமுத்து இவ்வளவு வலிந்து செய்யவேண்டும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இ.பா மற்றும் கி.ரா போன்றவர்களின் படைப்புகளை தன் படைப்புகளோடு ஒப்பிடுகையில் நாம் எங்கிருக்கிறோம் என்பதை உணரமுடியாத எளிய மனம் படைத்தவரல்ல அவர். தமிழ் இலக்கியத்திற்கும் மட்டும் இது சிறுமை அல்ல. தன்னையும் சிறுமைப் படுத்திகொள்கிறார் இது போன்ற பொருந்தாத விருதுகளைப் பெற்றுக் கொண்டு. நானும் இலக்கியவாதி தான் என்று தன்னை ஒதுக்கித் தள்ளிய அசல் இலக்கிய படைப்பாளிகளை நோக்கிய அறைகூவலுக்காகத் தான் இதை செய்கிறாரோ என்னவோ?

இது நடந்தால் விளையக்கூடியதாக நீங்கள் குறிப்பிட்டிருந்த தமிழிலக்கிய படைப்புகளைப் பற்றிய பிறரின் அவதானிப்புகளும், மதிப்பீடுகளும் மிக முக்கியமானவை. இதை என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தே நிறுவமுடியும். கள்ளிக்காட்டு இதிகாசத்தை படிக்க வைத்ததே அதற்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது தான். சுஜாதாவின் வணிக எழுத்துக்களைத்  தாண்டி வாசித்திராத இலக்கிய பரிட்சயமில்லாத அப்போதைய எனக்கு அது மிகப்பெரிய திறப்பாகத் தான் இருந்தது. இதுதான் இலக்கியம் போலும் என்றெண்ணியதுண்டு.

அதிர்ஷ்டவசமாக உங்களை வாசித்தபின் ஏற்பட்ட இலக்கியம் பற்றிய புரிதல்கள் கள்ளிக்காட்டு இதிகாசத்தை ஒரு ஆரம்பகட்ட எழுத்தாளரின் அசிரத்தையற்ற படைப்பென்றே எண்ணத்தோன்றுகிறது. அந்த நாவலுக்கு கொடுக்கமுடியாத உழைப்பை, அதற்கான விருதை பெறுவதற்காகக் கொடுத்து ஈடுகட்டிக் கொண்டார்.

இதுபோன்ற விருது வழங்கும் அமைப்புகளின் நோக்கங்கள் யாரை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதை ஒரு தேர்ந்த இலக்கிய வாசகர்களுக்கு சுட்டிக் காட்டிக் கொண்டே உள்ளன. ஆனால், இதில் சிக்கிக் கொள்வது ஆரம்பகட்ட வாசகர்களே. என்னைப் போன்ற அவர்களுக்கு உங்களைப் போன்றவர்களே கலங்கரை விளக்கம்.

அன்புடன்

முத்து

***

அன்புள்ள ஜெ.மோ.,

நான் தங்களுடைய வாசகன்.  உங்களுடைய இணையப்பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன்.  சிறுகதைகள் பலவற்றையும் ரப்பர், பின்தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் நாவல்களையும் வாசித்தவன். வங்கியில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்று கரூரில் வசிக்கிறேன்.

2015ல் உங்களை அமெரிக்காவில் (Cary, NC) சந்தித்து பேசியிருக்கிறேன.  மறுபடியும் சந்தித்து உரையாடும் தருணங்களுக்காக காத்திருப்பவன்.

வைரமுத்துவுக்கு ஞானபீடம் கிடைப்பதற்கான முயற்சிகள் பற்றி தங்களது பதிவுகள் மிகவும் சரியே.  இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கு கவலையளிக்கும் செய்தி இது.   ஆனால் நமது நாட்டில் இது மாதிரி விபத்துக்கள் நடந்து தமிழின் அசல் இலக்கிய முகத்தை கீழ்மைப்படுத்தும் முயற்சிகளை தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை.

தொடர்ந்து தொடர்புடன் இருக்க விழையும் ,

பாபுஜி

***

அன்புள்ள ஜெ,

உங்களின் கடிதமும் படித்தேன். இன்று முழுக்க முழுக்க முகநூல் போராளிகள் சிலர் உங்களைப் பற்றி இது சார்ந்து எழுதிய போலிக் குமுறல்களையும் படித்தேன்.

திரும்பத் திரும்ப இந்தத் தமிழ் சமூகத்தில் மல்லு கட்டுவதே உங்களின்  அன்றாட பொழுதுகளை ஆக்கிரமித்து விடுகிறது போல.

ஜெமோ சொன்னால் அதை எதிர்த்து கருத்திட்டு விட்டால் கிடைக்கும் போராளி பட்டத்திற்கு தான் எத்துணை கூட்டம் காத்திருக்கிறது. அவர் என்ன தான் சொல்ல வருகிறார் என்று ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்?

வைரமுத்துவின் மீது பொறாமை கொண்டா ஜெமோ சினம் கொள்கிறார்? ஜெமோவின் இடம் என்ன என்பது அவரின் வாசகர்களுக்குத் தெரியாதா?

கி ராஜ நாராயணன் அவர்களுக்கு விருது கிடைக்க வேண்டும் என்ற உங்களின் குரலின் போது  ஏன் யாருமே இப்படி ஒற்றுமையாகக் குரல் எழுப்பவில்லை?

ஜெமோவின் தொடர் குற்றச்சாட்டுகளை தமிழின் மிக முக்கிய வணிக ஊடகங்களும் சக எழுத்தாளர்களும் ஏன் மௌனமாய் இருந்து இருட்டடிப்பு செய்கிறார்கள்?

தமிழின் இலக்கிய முகமாய் தேசிய அளவில் இடம்பெறும் நபரின் படைப்புகள் அதற்க்கான தரத்தோடு தான் இருக்க வேண்டும் என்ற உங்களின் கறார் தன்மையை குற்றம் சொல்வதற்கு முன் அதை புரிந்து கொள்ளும் பொறுமை இன்மையும் ஆழமான வாசிப்பின்மையுமே இந்த சமூகத்தை நோயாய் சுற்றிக் கொண்டிருப்பதால் இவர்களால் இதைத்தாண்டி யோசிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்.

தமிழின் ஆகச்சிறந்த இலக்கிய படைப்புகளும் இலக்கியவாதிகளும்  தமிழ்ச் சூழல் என்னும் தூர்ந்து போன கிணற்றிலேயே பூத்துக் கொண்டிருப்பதற்கு வைரமுத்துக்களை தமிழின் இலக்கிய முகமாய் கொண்டாடும் நபர்களும் தான் காரணம் என்பதை என்றேனும் ஒருநாள் புரிந்து கொள்ளும் போது காலம் கடந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

வைரமுத்து அவர்கள் ஒருமுறை சாரு அவர்களை பத்தி எழுத்தாளர் என்பது போல ஒன்றை அரைகுறையாக குமுதத்தில் சொல்லி சாரு அவர்கள் குமுறிக் கொண்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். சிறந்த கவிஞரோ எழுத்தாளரோ இல்லை என்ற தங்களின் கருத்துக்களே என்னுடையதும்.

அது குருவாய் நீங்கள் கற்றுத்தந்த அறச்சீற்றம்.

நன்றி

அன்புடன்

ரா.பிரசன்னா

***

அன்புள்ள ஜெ,

மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. அவருக்கே உறுத்தாதா தேசிய அளவில் தமிழை தன்பங்குக்கு மேலும் இழிவுபடுத்த இந்த துடி துடிக்கிறோமே என்று? தமக்கு சோறுபோட்டு வாழ்வும் உயர்வும் பேரும் புகழும் அளித்த தமிழுக்கு ஏதேனும் நன்றிக்கடன் செய்யவேண்டும் என்று அவர் மனதினடியில் இருந்து நினைப்பாரேயாயின் உடனடியாக இந்த இழிசெயலை நிறுத்தவேண்டும்.

// எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. //

என்னை மிகவும் உறுத்தியது இதுதான். துணைவேந்தர்களை விடுங்கள், செல்வி ஜெயலலிதா மறைவை அடுத்து சடுதியில் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து வணங்கியவர்கள் அவர்கள். ஆனால் முக்கியமான எழுத்தாளர்களுக்கு – அவர்கள் இலக்கியவாதிகளாக இருக்கும்பட்சத்தில் வைரமுத்துவையோ அவரது ஆக்கங்களையோ பற்றி தெரியாதா? அண்டையில் இருக்கும் வாசுதேவன் நாயருக்குக்கூடவா?

கசப்புடன்
பொன்.முத்துக்குமார்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15
அடுத்த கட்டுரைஇருள் -கடிதங்கள்