பகுதி இரண்டு : பெருநோன்பு – 10
தேரில் அமர்ந்திருந்த காந்தாரி ஓசைகளுக்காக செவி திருப்பியிருந்தாள். ஒவ்வொரு தெருவையும் செவிகளாலேயே கண்டாள். “இது தெற்குக்கோட்டைக்கான திருப்பம்” என்றாள். “சூதர் தெருக்கள்…” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். “நாம் வருவதை யுயுத்ஸுவுக்கு அறிவித்துவிட்டேன், அன்னையே” என்றாள் அசலை. “அவனுக்கு நாம் வருவது ஏன் என்று தெரியுமா?” என்று காந்தாரி கேட்டாள். “சொல்லவில்லை, ஆனால் மிக எளிதில் உய்த்துணரக்கூடியவர்” என்றாள் அசலை. “ஆம்” என்று காந்தாரி சொன்னாள். “அவன் பொன்றாப் புகழ் பெறுவான், ஐயமில்லை.”
“அவர் அரசராவார் என்று உங்கள் சொல்லும் உள்ளது” என்று அசலை சொன்னாள். “நானா? நான் சொன்னேனா?” என்றாள் காந்தாரி திகைத்தவளாக. “ஆம், உங்கள் வாயில் அச்சொல் எழுந்தது. அது மூதன்னையரின் சொல்.” சிலகணங்களுக்குப் பின் காந்தாரி “மூதன்னையரின் விருப்பம் அதுவென்றால் ஆகுக! நாம் அப்பெருக்கின் வெறும்துகள்கள்” என்றாள். “அனைத்துத் தகுதிகளும் கொண்டவர். தெய்வங்கள் எதையோ கருதியிருக்கின்றன” என்றாள் அசலை. காந்தாரி மேலும் சொல்லெடுக்காமல் வலச்செவியை தெருக்களை நோக்கி திருப்பிக்கொண்டாள்.
காந்தாரி அசலையின் தோள்பற்றி தேரிலிருந்து இறங்கியதும் அரண்மனை முற்றத்தில் நின்றிருந்த யுயுத்ஸு கைகூப்பியபடி அருகணைந்தான். “வணங்குகிறேன், பேரரசி. இவ்வில்லத்திற்கு தாங்கள் வந்தது என் குடி என்றும் பெருமையுடன் எண்ணும் தருணமாக அமையும்” என்றான். “நான் உன் அன்னையென வந்திருக்கிறேன். குலமுறைப்படி கால்தொட்டு வணங்குக!” என்று காந்தாரி சொன்னாள். யுயுத்ஸு ஒருகணம் திகைத்தபின் உடலில் விரைவு குடியேற குனிந்து அவள் கால்களைத் தொட்டு சென்னிசூடி “வணங்குகிறேன், அன்னையே” என்றான்.
அவன் தலையில் கைவைத்து “பெரும்புகழ் பெறுக! என்றேனும் உன் தலையில் மணிமுடி அமையும். அதை இத்தருணத்தில் அணுக்கமாகவே உணர்கிறேன்” என்று காந்தாரி சொன்னாள். தேம்பிய குரலில் “அன்னையே…” என்றான் யுயுத்ஸு. அசலை புன்னகையுடன் “அன்னை சொல் அது. விண்ணிலிருந்து வருவது” என்றாள். யுயுத்ஸு கண்களில் நீர் பரவிய ஒளியுடன் இடறித் தாழ்ந்த குரலில் “வருக, அன்னையே” என்றான்.
காந்தாரி அவன் தோளில் கைவைத்து புறாபோல சிறிய காலடிகளை எடுத்துவைத்து மெல்ல நடந்தபடி “இது அரசமுறை சந்திப்பல்ல. உன் அன்னையை அவளுக்கு மூத்தவள் என்ற நிலையில் பார்க்க வந்திருக்கிறேன். ஆகவேதான் இங்கு நானே வரவேண்டும் என்று எண்ணினேன்” என்றாள். “ஆம், தாங்கள் வரப்போகும் செய்தியை சற்று முன்னர்தான் கனகர் வந்து சொன்னார். அன்னை பதறிவிட்டிருக்கிறார். சேடியர் வாழ்வில் உழன்ற எங்களுக்கு அரசச் சொல்முறைகள் எதுவும் தெரியாது. எப்பிழையெனினும் தாங்கள் உளம் கொள்ளலாகாது” என்றான்.
“முறைமையின்றி பேசும்பொருட்டே வந்துள்ளேன்” என்று காந்தாரி சொன்னாள். மெல்லிய குரலில் “படிகள்” என்றாள் அசலை. “ஆம், என் முன் ஓர் இல்லத்தை உணர்கிறேன்” என்ற காந்தாரி படிகளில் கால் வைத்து எடைமிக்க உடலை உந்தி மேலெடுத்து வைத்தாள். “இச்சிறுகூடத்திற்குள் வருக, அன்னையே! இது எளியவர் இல்லமாயினும் பேரரசர் பலமுறை வந்த பெருமை கொண்டது” என்றான் யுயுத்ஸு. காந்தாரி உரக்க நகைத்து “நுண்ணிய சொற்கள். இவன் விதுரரைப் போலவே இருக்கிறான், இல்லையாடி?” என்றாள். அசலை “ஆம், விதுரரின் மறுவடிவம் என்றே இவரை இங்குள்ள சூதர்கள் கூறுகிறார்கள்” என்றாள்.
யுயுத்ஸு புதிய மான்தோல் விரிக்கப்பட்ட மஞ்சத்தை நோக்கி காந்தாரியை கைபிடித்து கொண்டுசென்று அமரவைத்தான். அவள் அதில் அமர்ந்து மூச்சுவிட்டு இளைப்பாறி இரு கைகளையும் பரப்பிக்கொண்டாள். அவள் அருகே சிறுமஞ்சத்தில் அசலை அமர்ந்தாள். “நான் அன்னையை அழைத்து வருகிறேன்” என்று யுயுத்ஸு உள்ளே சென்றான். காந்தாரி “இங்கு வருவது என் உள்ளத்திற்கு இடர் அளிப்பதாக இருக்குமென்று எண்ணி இத்தனை காலம் தவிர்த்தேன். தேர் கிளம்பிய பின்னரே உணர்ந்தேன், மெல்ல மெல்ல நான் விடுபட்டுக்கொண்டிருப்பதை. இவ்வறைக்குள் வந்து இப்படி அமர்ந்திருக்கையில் முற்றிலும் விடுதலை கொண்டவளாக உணர்கிறேன். நான் முன்பு இங்கு வந்திருக்க வேண்டும். இறுகிச் சுழற்றிய இச்சுருள் வில்லை உள்ளத்தில் கொண்டபடி இத்தனை காலம் வாழ்ந்திருக்கலாகாது” என்றாள்.
அசலை “தங்கள் உள்ளத்தில் எஞ்சியிருந்த ஒரே வஞ்சம் இதுதான். இப்போது முற்றிலும் எழுந்துவிட்டீர்கள், அன்னையே” என்றாள். “மெய்தான். இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள். “மிக எளிது. தாங்கள் கேட்க மறந்த பேரரசரின் உள்ளத்தின் இசையை கேட்பவர் வைசியகுலத்து அன்னை” என்றாள். “ஆம்” என்றாள் காந்தாரி. “அவ்விசையை ஒருமுறைதான் நான் கேட்டேன். அதன்பொருட்டு என் விழிகளையே அளித்தேன். ஆனால் அந்த இசை என்னிடம் இருந்து மறைந்துவிட்டது. இப்போது எண்ணுகையில் உணர்கிறேன், என் மைந்தரை கருவுற்றபோதே இசையை இழந்தேன். அவர் தன்னுள்ளத்திலிருக்கும் அவ்வடுவின் ஆயிரம் வடிவங்களைத்தான் எமக்களித்தார். தன் இசையை இவளுக்கு அளித்தார். எம் வயிற்றில் துரியோதனனும் கௌரவத் தம்பியரும் பிறந்தனர். இவள் வயிற்றில் பேரரசரின் அறத்தின் வடிவாக இவன் பிறந்திருக்கிறான்” என்றாள். “எவருக்கு எதையளிப்பது என்பது அவர் கையிலா உள்ளது? அவரை மீட்டுபவை தெய்வங்களல்லவா?” என்றாள் அசலை.
யுயுத்ஸு அறைக்கதவைத் திறந்து உள்ளேவந்து தலைவணங்கி “அன்னையே, என் அன்னை வருகிறார்” என்றான். பிரகதியின் சேடியர் இருவர் மங்கலத்தாலங்களுடன் உள்ளே வந்தனர். முதல் சேடி பேரரசியின் காலடியில் பழங்கள், மலர்கள், பொன், நீர், விளக்கு கொண்ட ஐம்மங்கலத் தாலத்தை வைத்தாள். இரண்டாவது சேடி குங்குமம், சந்தனம், அகில் என நறுமணங்கள் கொண்ட தாலத்தை வைத்தாள். இருவரும் “பேரரசியின் வருகை அனைத்து மங்கலங்களையும் இக்குடியில் நிரப்பட்டும்” என்று சொல்லி விலக பிரகதி கைகூப்பியபடி தளர்ந்த காலடிகளுடன் வந்து “தாள் வணங்குகிறேன், பேரரசி. இத்தருணத்திற்காக இத்தனை ஆண்டுகள் விழிநீருடன் இங்கு காத்திருந்தேன்” என்று சொல்லி முழந்தாளிட்டு தலை நிலம்வைத்து காந்தாரியை வணங்கினாள்.
காந்தாரி தன் வலக்கையை நீட்டி “அருகே வருக!” என்றாள். பிரகதி அசலையை சிறிய திடுக்கிடலுடன் பார்த்தபின் தயங்கினாள். அத்தயக்கம் அவள் உடலில் நின்று ததும்பியது. அருகே செல்லும்படி அசலை கைகாட்ட பிரகதி உடலை மெல்ல அசைத்து காந்தாரியின் அருகே சென்றாள். காந்தாரியின் கை அவள் காதுகளை தொட்டது. எழுந்து அவள் தலையைத் தொட்டு வகிட்டை வருடி கழுத்திலிறங்கியது. அவளைச் சுற்றி இழுத்து தன் தோளுடன் அணைத்துக்கொண்டு “இத்தனை நாள் நான் இங்கு வந்ததில்லை. உன் மைந்தன் பிறந்த அன்றே வந்திருக்கவேண்டும். என் உளத்தில் அமர்ந்த எளிய பெண் அதை ஏற்கவில்லை. இன்று அதைக் கடந்து வந்திருக்கிறேன், இவளால்” என்று அசலையை கைகாட்டினாள்.
பிரகதி கண்ணீர் பெருகி கன்னத்தில் வழிய தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். காந்தாரி “என் இளையவள்களில் ஒருத்தியாக இரு. என்னை மூத்தவளே என்று மட்டும் அழை” என்றாள். பிரகதியிடமிருந்து மெல்லிய விசும்பல் ஓசை மட்டுமே எழுந்தது. “அவருக்கு அணுக்கமாக இருந்திருக்கிறாய். நாங்கள் பதின்மரும் அறிய முடியாத இசை மிகுந்த ஆழமொன்றை நீ அறிந்திருக்கிறாய். எங்கள் பொருட்டு பெரும்பணியொன்றை இயற்றியவள் என்றே உன்னை எண்ணுகிறேன். எங்களுக்கு அவர் அளித்த அரசும் பட்டமும் குடிநடுவே இடமும் உனக்களிக்கப்படவில்லை. அதற்கு நிகராக என்றேனும் உன் மைந்தன் முடிசூடி அமர்வான். அவரிடம் ஒருநாள் சொல்வேன்” என்றாள்.
“மைந்தனுக்கோ எனக்கோ அரசுபட்டம் எதையும் நான் விரும்பியதில்லை, பேரரசி. மெய்யாகவே யாழுடன் அவர் முன் அமர்கையில் தவத்தோர் அடையும் வாழ்வுப் பொருள் ஒன்றையே ஈட்டியிருக்கிறேன் என உணர்கிறேன்” என்றாள் பிரகதி. “ஆம், அது நீ கொண்ட நற்பேறு. நாங்கள் அறிந்த இருண்ட திருதராஷ்டிரரை நீ உணர்ந்ததுகூட இல்லை. ஆகவே நீ இந்நல்மைந்தனை பெற்றாய். இரு வகையிலும் அருளப்பட்டவள் நீ” என்ற காந்தாரி கைநீட்டி யுயுத்ஸுவை அருகழைத்தாள். யுயுத்ஸு கண்களில் நீருடன் கைகூப்பி நின்றிருந்தான். அவள் கை அவனை அழைத்து அசைய அவன் அருகணைந்து முழந்தாளிட்டு அவள் பீடத்தின் அருகே அமர்ந்தான். காந்தாரியின் பெரிய வெண்ணிறக் கை அவன் தலைமேல் அமைந்தது. குழலை வருடி பின்கழுத்தில் சரிந்து தோளைப்பற்றி அவனை தன்னுடன் இழுத்துக்கொண்டாள்.
“எத்தனை சிறிய உடல். மெலிந்த தோள்கள். திருதராஷ்டிரரின் உடலிலிருந்து இப்படி ஒரு மைந்தன் எழமுடிகிறதென்றால் இப்படி ஒருவன் அவருக்குள் வாழ்ந்திருக்கிறான் என்றே பொருள். நன்று” என்றாள். பின்னர் நகைத்து “எங்கோ அவர் நாணி உள்கரந்த ஒரு மைந்தனாக இவன் இருந்திருப்பான். ஏனெனில் தன்னுள் உறையும் நல்லியல்பையே மானுடர் பெரிதும் நாணுகிறார்கள். இனிதை இயற்றுகையில் மக்கள் முகம்சிவந்து கூச்சம்கொள்வதை கண்டிருக்கிறேன்” என்றாள். பிரகதி புன்னகைக்க அவளிடம் “உன் மைந்தன் இயல்பாகவே கூச்சமும் ஒழுக்கமும் கொண்டவனாக இருப்பான் என்று எண்ணுகின்றேன்” என்றாள்.
பிரகதி கண்களைத் துடைத்து “ஆம், கூச்சம் நிறைந்தவன். அவையிலெழுந்து சொல்லெடுக்கத் தயங்குபவன். அரிதாகவே என்னிடமும் பேசுபவன்” என்றாள். “இவன் குரல் தாழ்ந்திருக்கிறது. தாழ்ந்த குரல்கொண்ட மைந்தன் ஒருவன் எனக்கிருக்கிறான் என்பதை எண்ணுகையில் என்னை அறியாமலேயே புன்னகை எழுகிறது” என்றாள் காந்தாரி. மீண்டும் யுயுத்ஸுவின் தலையில் கைவைத்து “நீணாள் வாழ்க! நிறை வாழ்வு அடைக!” என்றாள். “இதற்கப்பால் இப்புவியிலிருந்து நானோ என் மைந்தனோ எண்ணுவதற்கும் ஈட்டுவதற்கும் ஏதுமில்லை, அரசி” என்று பிரகதி சொன்னாள்.
பிரகதியும் உடல்தளர்ந்திருந்தாள். முகத்தில் முதுமை கவிந்திருந்தது. ஆனால் பிறிதொன்று இருந்தது அவளிடம். அது என்ன என்று அசலையின் உள்ளம் துழாவியது. அவள் விழிகள். அவை காதல்கொண்ட கன்னியருக்குரியவை. அத்தனை காலம் அவ்விழிகளை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. அதிலிருந்து ஆடவர் தப்பவே இயலாது. “நான் வந்தது இவள் என்னை ஆற்றுப்படுத்தியதனால்தான்” என்று காந்தாரி அசலையை சுட்டிக்காட்டி சொன்னாள். “நீ அறிவாய், அவை நடுவே பாஞ்சாலத்து அரசி சிறுமைசெய்யப்பட்ட பின் திருதராஷ்டிரரிடமோ தார்த்தராஷ்டிரர்களிடமோ நான் எவ்வுறவும் வைத்துக்கொள்ளவில்லை. முற்றிலும் தவிர்த்து என் தனிஉலகில் வாழ்ந்தேன். அவர் தன்னை விலக்கி பிற உலகிலிருக்கிறார். அங்கு அவருடன் சொல்லாடும் நிலையில் இருக்கும் பெண் நீ மட்டுமே.”
பிரகதி தலையசைத்தாள். “இன்று நான் அவருடன் சென்று பேசமுடியாது. அச்சொற்களை அவர் பெற்றுக்கொள்வாரா என்றும் தெரியவில்லை. நீ அவரிடம் சொல். என்ன சொல்லவேண்டுமென்பதை இவள் சொல்வாள். இப்போர் தவிர்க்கப்படவேண்டும். என் மைந்தர்கள் காக்கப்படவேண்டும். அதற்கு அவர் இன்று செய்வதொன்று உண்டு. அரசர் என்றும் குடிமூத்தார் என்றும் அவர் கொண்டுள்ள அனைத்து அடையாளங்களையும் முற்றுதிர்த்து வெறும் மானுடராகவும் எளிய தந்தையாகவும் சென்று பாண்டவர் முன் நிற்கவேண்டும். அவர்கள் அவர் ஆணையை மீற மாட்டார்கள். பாண்டவர்களும் வெறும் மைந்தர்களாக நின்றிருந்தாலொழிய இப்போர் இனி தவிர்க்கப்படமுடியாது. அவ்வாணையை அவர் பிறப்பிக்க வேண்டும்” என்றாள்.
பிரகதி “தங்கள் சொல்லெதுவும் எனக்கு ஆணையே. என் இறுதி உயிராலும் அதை இயற்றுவேன், பேரரசி” என்றாள். “உன் நாவில் இன்னும் மூத்தவளே எனும் சொல் எழவில்லை” என்றாள் காந்தாரி. இருமுறை உதடுகளை நாவால் நனைத்து மூச்சைத் திரட்டி “ஆம், மூத்தவளே” என்றாள் பிரகதி. காந்தாரி “நன்று! மைந்தர் வாழ்க!” என்றாள். பிரகதி “ஆம், அவர்கள் வாழ்வார்கள். ஆயிரம் பல்லாயிரம் பிழைகளை அவர்கள் இயற்றலாம். ஆனால் பெருந்தந்தைக்கும் பேரன்னைக்கும் பிறந்தவர்கள் என்ற பெற்றியை அவர்கள் ஒருபோதும் இழக்கமாட்டார்கள்” என்றாள்.
அசலை பிரகதியுடன் நடந்தபோது முதல்முறையாக அனைத்தும் முடிந்துவிட்டதென்றும், இனி ஏதும் செய்யவேண்டியதில்லை என்றும் ஆழ்ந்த எண்ணத்தை அடைந்தாள். பிரகதி அவளை தன்னுடன் வரவேண்டுமென்று அழைத்தபோது காந்தாரி “அவள் எதற்கு?” என்றாள். “இல்லை மூத்தவளே, அவர் இப்போது சஞ்சயன் இல்லாமல் என்னிடமும் பேசுவதில்லை. நான் இசைப்பதை கேட்பதுமில்லை. ஆகவே தனியாகச் செல்வதில் பொருளில்லை” என்றாள். பின்னர் “இது அரசச்சொல்லாடல். எனக்கு பழக்கமில்லாதது. அரசி உடனிருக்கட்டும்” என்றாள். காந்தாரி “நன்று” என்றாள்.
அன்று காலை அசலை பிரகதியின் இல்லத்திற்கே சென்றாள். பிரகதி அன்று தாழம்பூ சூடிக்கொண்டிருந்தாள். “தாழம்பூவா? அதை தலையில் சூடுவார்களா என்ன?” என்றாள். “காந்தாரத்தில் எவரும் மலர்சூடுவதே இல்லை” என்று அவள் விழிகளை பார்க்காமல் பிரகதி சொன்னாள். “தாழம்பூவைச் சூடுபவர்கள் வங்கத்தினர் மட்டுமே” என்றாள் அசலை. “ஆம்” என்றாள் பிரகதி. வங்கத்தில் எவர்?” என்ற அசலை புன்னகைத்து “அந்த ஆழம்வரை நம்மால் செல்லவே முடிவதில்லை” என்றாள். பிரகதி புன்னகைத்தாள்.
புஷ்பகோஷ்டத்தின் முன்னால் யுயுத்ஸு நின்றிருந்தான். “பேரரசர் சூதாடிக்கொண்டிருக்கிறார்” என அருகே வந்து தாழ்ந்த குரலில் சொன்னான். “எவருடன்?” என்றாள் அசலை. “தன்னுடனேயேதான். எதிரில் இருப்பவன் சஞ்சயன். ஆனால் அவன் ஆடுவதில்லை. காய்களின் இருப்பை சொல்லிக்கொண்டிருப்பது மட்டுமே அவன் பணி.” அசலை “மொழியில் காய்கள் எப்படி உருக்கொள்ளும் எப்படி வளருமென்று எண்ணிக்கொள்கிறேன்” என்றாள். யுயுத்ஸு “அன்னை சந்திக்க வருகிறார் என்று அவரிடம் சொன்னேன். அச்சொற்களை செவிகொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை” என்றான்.
இசைக்கூடத்தின் வாயிலில் இருந்த பேருருவம்கொண்ட காவலன் ஒருகணம் அவளை திடுக்கிடச் செய்தான். துரியோதனனும் பீமனும்கூட அவன் முன் சிற்றுருவினர் என்று தோன்றியது. அவன் முகத்தை முன்னரே பார்த்திருக்கும் உணர்வை அசலை அடைந்தாள். அவள் மணமாகி பேரரசரிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்ததற்குப் பின் அதற்குள் நுழைந்ததே இல்லை. அவள் தன் நினைவுகளை துழாவினாள். பேரரசர் பங்குகொள்ளும் விழவுகளிலும் அவைநிகழ்வுகளிலும் அவன் உடன்வந்ததில்லை. வேறெங்காவது அவனை கண்டிருந்தால் அது நினைவிலிருந்து மறைந்திருக்காது. அவனைப் பார்த்த எவரும் மறக்க முடியாது.
காவலன் வணங்கி அவர்களின் வரவை அறிவிக்க உள்ளே சென்றான். அவள் விழிகளை உணர்ந்த யுயுத்ஸு “இங்கு முன்பிருந்த விப்ரரின் மைந்தன்” என்றான். “அவருக்கு முதிய அகவையில் ஓர் அடுமனை பணிப்பெண்ணில் பிறந்தவன். அவர் இறக்கும்வரை இப்படி ஒரு தொடர்பிருந்தது எவருக்கும் தெரியாது. அவர் இறந்த பின்னர் அவள் விப்ரர் அவளுக்கு முன்பு அளித்திருந்த ஓர் ஓலையுடன் அரசரிடம் வந்தாள். அரசர் அம்மைந்தனை தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார். அவன் விரும்பியபடி இங்கே தனிக்காவலனாகவும் நிறுத்தினார். அவருடன் தனியறைகளில் மட்டும் இருக்கும் அகத்துணைவன்.”
“மிக இளையவன்” என்றாள் அசலை. “ஆம், அவருக்கிணையான பெருமல்லன். அவரை தாங்கிச்செல்லவும் அமர்த்தவும் என்னாலோ சஞ்சயனாலோ இயலாது. சஞ்சயன் அவர் விழிகள், இவன் அவர் கால்கள்” என்றான் யுயுத்ஸு. “இவன் பெயர் சங்குலன். இவன் தந்தை விப்ரர் பேரரசரின் இளமைக்கால மற்போர்தோழர், அறிந்திருப்பீர்கள்.” பிரகதி “மைந்தர் இருக்கும் வரை மானுடர் மடிவதேயில்லை என்பார்கள்” என்றாள். சங்குலன் வந்து தலைவணங்கி “அவை நுழைய ஒப்புதல்” என்றான். அவர்கள் உள்ளே நுழைந்தனர். அந்தக் கூடத்திலிருந்த முற்றமைதி அங்கிருப்பது கனவிலோ என எண்ணச் செய்தது. தரையில் மென்மணலென கால்புதையும் மரவுரி மெத்தை. சுவர்களிலும் மெத்தைப்பரப்பு. ஓசையின்றி நடப்பது கனவிலன்றி வேறெங்கும் இயல்வதேயல்ல என்று அசலை எண்ணிக்கொண்டாள்.
உள்ளே அகன்ற பெரிய பீடத்தில் கால்களைப் பரப்பி நீட்டி இடக்கையில் தலையைத் தாங்கி திருதராஷ்டிரர் அமர்ந்திருந்தார். அவர் முன் விரிக்கப்பட்டிருந்த நாற்களத்தில் காய்கள் காத்திருந்தன. எதிரே சஞ்சயன் கைகளை மார்பில் கட்டியபடி குனிந்து அமர்ந்து அவர் கைகள் சென்று தொடும் காய்களை சொல்லிக்கொண்டிருந்தான். அவர் கை நிலையழிந்த பாம்புபோல ஒவ்வொரு காயாக தொட்டு சுற்றிவந்த பின் நிலைத்தது. “பிரகதியா?” என்றார். “உடன் யார்?” பிரகதி “தங்கள் மருகி, அசலை” என்றாள். “இளையவனின் துணைவி. நன்று” என்றபின் அவர் கைகளை மார்பில் கட்டி நிமிர்ந்தமர்ந்து “ஏதேனும் சொல்லவேண்டியிருந்தால் சொல்லிவிட்டு அகல்க!” என்றார்.
அசலை அருகே சென்று அவர் காலடிகளைத் தொட்டு வணங்க அவர் சொல்லின்றி அவள் தலையைத் தொட்டு வாழ்த்தினார். அசலை “அன்னையுடன் நானும் தங்களை பார்க்கலாமென்று வந்தேன்” என்றாள். “பார்வைக்குரிய பொருள்தான்” என்றார் திருதராஷ்டிரர். “பெருந்தோளன், ஆனால் ஒளியற்றவன். ஆகவே முற்றிலும் பயனற்றவன்.” இகழ்ச்சியுடன் உதடுகள் வளைய “முன்பொருமுறை ஒரு கானகப் பயணி கரும்பாறையை விளக்குகள் அணைந்த மூடிய இல்லமென்று எண்ணினான் என்று ஒரு கதை உண்டு. விளக்குகள் இல்லாத வீட்டுக்கும் கரும்பாறைக்கும் என்ன வேறுபாடு? நன்று, என்ன சொல்ல வந்தாய்?” என்றார். அசலை பிரகதியை நோக்க அவள் கைகளைக் கூப்பியபடி அப்பால் அமர்ந்திருந்தாள்.
அசலை “நான்…” என தயங்கினாள். “நீ வந்ததை சொல்லிவிட்டுச் செல். வெறுமனே நீ வரமாட்டாய். நீ எவரென நான் அறிவேன்…” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நான் தங்களிடம் ஒரு மன்றாட்டை முன்வைத்துச் செல்லலாம் என்றே வந்தேன்” என்றாள் அசலை. “அரசுசூழ்தல் சார்ந்தது என்றால் என்னிடம் சொல்லவேண்டியதில்லை” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நான் விலகிவிட்டேன். இந்தச் சிற்றறையில் என் சூதுக்காய்களுடன் ஒதுங்கிவிட்டேன். என்னை துன்புறுத்த வேண்டியதில்லை. இது என் ஆணை அல்ல, மன்றாட்டு.”
அசலை “அரசுசூழ்தல் அல்ல” என்றாள். “நான் என் மைந்தரின்பொருட்டு பேசவே வந்தேன். என் மைந்தர்கள் செய்த பிழை என்ன? அவர்கள் ஏன் களப்பலியாக வேண்டும்?” திருதராஷ்டிரர் “இதையெல்லாம் நான் எண்ணப்போவதில்லை… விலகு” என்றார். “என்னால் எண்ணாமலிருக்க முடியாது. அவர்கள் ஏன் மடியவேண்டும்?” என்றாள் அசலை. “பிழையும் பழியும் தனிமனிதர்களால் இயற்றப்படுவதில்லை. தனிமனிதர்களுடன் முடிவதுமில்லை. மனிதர்களை தெய்வங்கள் காலத்தில் ஓடும் பெருக்கென்றே நோக்குகின்றன, துளிகளாக அல்ல.” அசலை “எதன்பொருட்டென்றாலும் அவர்கள் மடிவதை நான் ஒப்ப முடியாது. அவர்களைக் காக்க என்னால் இயல்வதை நான் செய்தாகவேண்டும்” என்றாள்.
“அவரவருக்கு இயன்றதைச் செய்யவேண்டியதுதான்… செய்க!” என்று திருதராஷ்டிரர் காய் ஒன்றை கையில் எடுத்தார். “எட்டாம் குதிரை” என்றான் சஞ்சயன். அசலை “அதை நீங்கள் செய்யவில்லை… நீங்கள் செய்யவேண்டிய ஒன்று எஞ்சியிருக்கிறது, அதை கோரும்பொருட்டே வந்தேன்” என்றாள். “நான் எவர் சொல்லையும் கேட்கவேண்டியதில்லை…” என்றார் திருதராஷ்டிரர். “சங்குலா மூடா, அங்கே என்ன செய்கிறாய்? இவர்களை வெளியே அனுப்பு.” சங்குலன் வாயிலருகே கைகளை மார்பில் கட்டியபடி தலைகுனிந்து நின்றிருந்தான். “சங்குலா, அறிவிலி… உன் காதென்ன பழுதா? இவர்களை வெளியே அனுப்பு.” அவன் உடலில் அசைவே எழவில்லை என்பதை அசலை கண்டாள்.
“அவன் வரமாட்டான். ஏனென்றால் இச்சொற்களை நீங்கள் கேட்கவேண்டுமென அவன் எண்ணுகிறான்” என்றாள் அசலை. “தந்தையே, நீங்கள் உங்கள் குருதிமைந்தருக்கு ஆணையிட்டீர்கள். குலமைந்தருக்கு ஆணையிட்டீர்களா? இப்போரை நிறுத்தும்படி அவர்களிடம் சொன்னீர்களா?” ஊன்விழிக்குமிழிகள் அசைய தலையை அரைப்பதுபோலச் சுழற்றியபடி திருதராஷ்டிரர் “சங்குலா… வாடா இங்கே” என்றார். “வாடா இங்கே… மூடா, என் கையில் சிக்கினால் உன் சங்கை முறிப்பேன். வா இங்கே. இவளை வெளியே தூக்கி வீசு… இது என் ஆணை.” அசலை “தந்தையே, உங்கள் சொல்லை இளையோரின் மைந்தர் தட்டமாட்டார்கள். குலத்தலைவரென நின்று அவ்வாணையை நீங்கள் இன்னும் பிறப்பிக்கவில்லை. அவர்கள் போருக்கெழுவார்களென்றால் அது உங்கள் சொல்லை மீறியே நிகழவேண்டும்” என்றாள்.
திருதராஷ்டிரர் காலால் நாற்களப் பலகையை தட்டி வீழ்த்திய பின் கைகளை விரித்து எழுந்து பிளிறலோசை எழுப்பி சுற்றினார். காலில் தட்டிய பெரிய மரப்பீடத்தைத் தூக்கி தரையிலறைந்தார். ஓசையின்மை நிறைந்திருந்த அந்தக் கூடம் பிறிதொன்றென ஆகியது. நெஞ்சில் ஓங்கி அறைந்தபடி “அனைவரையும் கொல்வேன்… யுயுத்ஸு… சங்குலா, யாரங்கே?” என்று கூவினார்.
யுயுத்ஸு அஞ்சி மிக விலகி அறையின் மூலைக்குச் சென்று ஒடுங்கினான். சஞ்சயன் கட்டிய கைகளை பிரிக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான். அவன் அங்கு நிகழ்ந்த எதையுமே அறியவில்லை எனத் தோன்றியது. திருதராஷ்டிரர் தரையை ஓங்கி மிதித்தார். நெஞ்சில் வெடியோசை எழ அறைந்தார். சிம்மக்குரலெழுப்பியபடி சுழன்றார்.
அசலை அச்சம் கொள்ளவில்லை. தன் உள்ளம் ஏன் அச்சம் கொள்ளவில்லை என எண்ணி அவள் உள்ளத்தின் பிறிதொரு மூலை வியப்பும் கொண்டது. அவர் கைகளுக்குச் சிக்காமல் மெல்ல பின்னடைந்து தூணருகே நின்றாள். தூணருகே நிற்பது மிகச் சிறந்த வழி என உணர்ந்து அது எப்படி தனக்கு அப்போது தோன்றியது என அவ்வுளமூலை மேலும் வியந்தது. விழியின்மையின் நுண்புலனால் பொருட்களின் பிறிதொரு இருப்பை திருதராஷ்டிரர் உணர்வதை அவள் அதற்குள் அறிந்திருந்தாள். பொருளில் எழும் எதிரொலியா, வெம்மையா, அதிர்வா? அவள் சாய்ந்து நின்றிருந்த தூணை திருதராஷ்டிரர் ஓங்கி அறைந்தார். அந்த கூடமே அதிர்வுற்றது. “சங்குலா… டேய்… இவர்களை உடனே வெளியே அனுப்பு… என் ஆணை இது. இங்கு எவரும் நிற்கலாகாது…”
சங்குலன் அருகணைவதை அசலை கண்டாள். அவனுடைய காலடியோசை கேட்டு திருதராஷ்டிரர் அவனை நோக்கி சென்று அவன் முகத்தில் ஓங்கியறைந்தார். அவ்வோசை கூடம் அதிரும்படி ஒலித்தது. சற்று பின்னடைந்த அவன் சிறு உறுமலுடன் முன்னால் பாய்ந்து அவருடைய இரு கைகளையும் பிடித்துச் சுழற்றினான். அவர் முனகியபடி மெல்ல சரிய அவர் தொடையை ஓங்கி மிதித்து அவர் கால்மடிய அமரச்செய்தான். அவர் முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் உதைத்து இரு கைகளையும் பற்றி பின்னால் முறுக்கிப் பின்னி அப்படியே அள்ளி தூக்கிக்கொண்டான். அவர் தொண்டை முழை பிதுங்கி அசைய, நரம்புகள் புடைத்து நெளிய விலங்கென குரலெழுப்பி திமிறினார். அவன் அவரைக் கொண்டுவந்து பீடத்தில் போட்டு “அமர்க!” என்றான்.
“கொல்வேன்! விப்ரா, மூடா! உன்னைக் கொல்வேன்” என்றார் திருதராஷ்டிரர். “வாயை அடக்குக! அரசி சொல்வதை செவிகொள்க!” என்றான் சங்குலன். “மூடா, அறிவிலி… உன் சங்கை உடைப்பேன்” என்று திருதராஷ்டிரர் கூவ அவன் ஆழ்ந்த தனிக்குரலில் “நிறுத்துங்கள்… நிறுத்துங்கள் என்றேன்” என்றான்.
அவர் கைகளைப் பற்றியிருந்த அவன் கைகளின் தசைகள் உச்சவிசையில் இறுக அவர் கைகளிலும் கழுத்திலும் தசைகள் இறுகி அதிர்ந்து பின் மெல்ல தளர்ந்தன. “உம்” என்று அவர் சொன்னார். அவன் தன் பிடியை விடுவித்தான். அவர் கைகளை எடுத்துக்கொண்டு “உம்” என்றார். “செவிகொள்க… புரிகிறதா? அமைதியாக அமர்ந்து செவிகொள்க!” என்றான் சங்குலன் தாழ்ந்த உறுமலோசையாக.
திருதராஷ்டிரர் விம்மியபடி “என்னை துன்புறுத்துகிறார்கள்… என்னை வதைக்கிறார்கள்” என்றார். “அவர்களை அகலச் செய்… அவர்களை உடனடியாக விலகச் சொல்!” அவர் கழுத்தில் கைவைத்து தலையைத் தூக்கி செவியில் “செவிகொள்க…” என்றான் சங்குலன். திருதராஷ்டிரர் தலையசைத்தார். “ஓசையின்றி அமர்ந்து செவிகொள்க!” என்று சொன்ன பின் சங்குலன் அசலையிடம் “சொல்க!” என்று கைகாட்டிவிட்டு மீண்டும் சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்.
திருதராஷ்டிரர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அசலை தன் கைகள் பதறிக்கொண்டிருப்பதை அறிந்து விரல்களைச் சுருட்டி இறுக்கிக்கொண்டாள். மெல்ல மெல்ல குருதி முழுக்க தலையிலிருந்து இறங்கியபோது கால்கள் தளர்ந்து நிற்கமுடியாமலாகியது. மூச்சுக்கு வாய்திறந்து உடலில் வெம்மை குளிர்ந்து வியர்வையாகி வழிய நின்றாள். யுயுத்ஸு அவளருகே வந்து “சொல்லுங்கள், அரசி” என்று மெல்லிய குரலில் சொன்னான். அவள் உதடுகளில் சொல் எழவில்லை. “சொல்க!” என்றான் யுயுத்ஸு. “என்ன இது? பேரரசரை அவன்…” என்றாள் அசலை. “அவர்களுக்குள் இன்னொருவர் நுழையமுடியாது, அரசி…” என்றான் யுயுத்ஸு. “அது அவர்களின் ஆடல். நீங்கள் எண்ணிவந்ததை சொல்க!”
அசலை சஞ்சயனை பார்த்தாள். அவன் விழுந்துகிடந்த பீடத்தை நிமிர்த்தி வைத்து அதன்மேல் நாற்களத்தை பரப்பிக்கொண்டிருந்தான். அவள் மீண்டும் பெருமூச்சுவிட்டாள். சஞ்சயன் ஒவ்வொரு காயாக எடுத்து பரப்புவதை நோக்கிநின்றாள். அவர் ஆடி நிறுத்திய அதே வடிவில் களம் அமைந்ததும் அவன் கைகளைக் கட்டியபடி பின்னகர்ந்துகொண்டான். பின்னர் நடந்தவை எல்லாம் கனவென்பதுபோல காலம் சென்று அவர் கருக்களிலிருந்து கையெடுத்த கணத்துடன் பொருந்திக்கொண்டது.