தொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்

kk

நான் கே.கே.முகம்மது அவர்களைக் கண்டடைந்தது மத்தியப்பிரதேசத்தில் படேஸ்வர் ஆலயவளாகத்தைப் பற்றி வாசிக்கும்போதுதான், அங்கே செல்வதற்கு நான்குநாட்களுக்கு முன்பு. அவரைப்பற்றி மையநிலப்பயணம் குறிப்புகளில் எழுதியிருந்தேன்.

படேஸ்வர் ஆலயத்தொகை

மையநிலப்பயணம் 9

மையநிலப்பயணம் 8

படேஸ்வர் ஆலயத்தொகை இடிபாடுகளின் குவியலாக கிடந்தது. சம்பல்சமவெளிக்குள் வரும் பகுதி அது. கூர்ஜ்ஜரப்பிரதிகார குலத்து அரசர்களால் கட்டப்பட்டது. பொன்னிறச் சேற்றுப்பாறைக் கற்களால் ஆன ஒர் ஆலயச்செண்டு. அப்பகுதி கே.கே.முகம்மது ளில் புகழ்பெற்ற சம்பல் கொள்ளையனான நிர்பய்சிங் குஜ்ஜாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கே.கே.முகம்மது அங்கே தொல்லியல்துறை ஆணையராகச் பணியாற்றிய போது அவ்வாலயத்தொகையைப் பார்வையிடச்சென்றிருந்தார். ஒருவன் ஆலயவளாகத்திற்குள் சுருட்டு பிடிப்பதைக் கண்டு அவனிடம் சினந்துகொண்டார். “புனிதமான ஆலயவளாகம் என்று தெரியாதா உனக்கு? இடிந்துகிடந்தாலும் ஆலயம் ஆலயம்தான். எப்படி நீ சுருட்டு பிடிக்கலாம்?” அவன் சிகரெட்டை கீழே போட்டுவிட்டான்.அவன் சென்றபின் உடனிருந்தவர்கள் சொன்னார்கள், அவன்தான் நிர்ப்ஃபய்சிங் குஜ்ஜார் என்று. சுட்டுத்தள்ளியிருக்க வாய்ப்பிருந்தது, ஆனால் செய்யவில்லை.

அது கே.கே.முகம்மதுவுக்கு அவனுக்குள் இருந்த அரசனை அடையாளம் காட்டியது. அந்த ஆலயவளாகத்தைக் கட்டிய குஜ்ஜார் இனக்குழுவைச் சேர்ந்தவன் அவன். வெள்ளையர்காலகட்டத்தில் அரசிழந்து கொள்ளையர்களாக ஆனவர்கள் அவன் முன்னோர். அவனை நேரில் சந்தித்துப்பேசினார் கே.கே.முகம்மது. “உன் முன்னோர் கட்டிய ஆலயம். இதைப்புதுப்பிக்கவேண்டியது உன் கடமை” என்று அவனிடம் சொன்னார். அவன் ஆதரவுடன் ஆலயத்தொகை மீண்டும் கட்டி எழுப்பப் பட்டது. கற்குவியலாகக் கிடந்த ஆலயங்களை ஒவ்வொருபகுதியாக அடையாளம் கண்டு மீட்டுக் கட்டுவதென்பது ஒரு பெரும் படைப்புச்செயல்பாடு. படேஸ்வர் கே.கே.முகம்மது அவர்களின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது.

கே.கே.முகம்மது தொல்லியல்துறையின் ஒரு கதாநாயகன்.  1952ல் கோழிக்கோட்டில் பிறந்தவர் கரிங்கம்மண்ணு குழியில் முகம்மது. இந்தியத் தொல்லியல்துறையின் வடக்குவட்டாரத்தலைவராகப் பணியாற்றினார். அலிகர் பல்கலையில் வரலாற்றில் பட்டமேற்படிப்பு முடித்து தொல்லியல்துறையில் மேற்படிப்பை முடித்தார். 2012ல் ஓய்வுபெற்றார்.    தொல்லியல்துறையில் அவருடைய பங்களிப்புகள் பலதரப்பட்டவை. அசோகரின் கேசாரியா பௌத்த தூபியை அகழ்ந்தெடுத்தார். ராஜ்கிரிலும் வைஷாலியும் பௌத்த தூபிகளை கண்டுபிடித்தார்.

சிதறால் கல்வெட்டின் முன்

அவருடைய துறையில் அவர் மிகப்பெரிய விவாதங்களுக்கும் மையமாக இருந்தார். பாபர்மசூதிக்கு அடியில் ஆலயக்கட்டுமானத்தின் அடித்தளம் இருக்கிறது என அகழ்வாய்வுசெய்து நீதிமன்றத்தில் அறிவித்த தொல்லியல்குழுவின் தலைவர் அவர்.  அதற்காக அவரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மட்டுமல்லாது இடதுசாரி அறிவுஜீவிகளும் கடுமையாகக் கண்டித்தார்கள். ஆனால் அக்பர் நிறுவிய தீன் இலாகி என்னும் அனைத்துமத இணைப்புக்கொள்கையின் ஆலயமான இபாதத் கானா என்னும் கட்டிடத்தை அவர் கண்டடைந்தபோது இந்துத்துவ எதிர்ப்பையும் சந்திக்கவேண்டியிருந்தது, அப்படியொன்று இல்லை, அது அக்பரைப்பற்றிய பொய்யான புகழ்மொழியே என அவர்களில் சிலர் வாதிட்டு வந்த காலம் அது. அக்பர் கட்டிய கிறிஸ்தவ தேவாலயத்தை ஃபதேபூர் சிக்ரியில் அவர் கண்டடைந்ததும் அதேபோல சர்ச்சைகளை உண்டுபண்ணியது. அக்பரை தூக்கிப்பிடிக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஓர் உரையில் கே.கே.முகம்மது சொன்னார் ‘வரலாற்றில் உண்டு ஆனால் இல்லை என்பதற்கு ஓர் இடம் இருக்கலாம். தொல்லியலில்ல் உண்டு அல்லது இல்லை தான். நான் தொல்லியலாளர்” சட்டிஸ்கரில் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பர்சூர் சல்மூர் ஆலயங்களை பேணி மீட்டவர் கே.கே.முகம்மது. மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலுள்ள அப்பகுதியில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி அவர்களின் ஆதரவுடன் அதைச் செய்தார்.

2016 ல் கே.கே.முகம்மது “ஞான் எந்ந பாரதியன்’ [நான், ஒர் பாரதியன்] என்னும் சுயசரிதையை வெளியிட்டார். அதில் பாபர் மசூதிக் கட்டிடத்திற்கு அடியில் ஆலயம் ஒன்றின் அடித்தளம் இருப்பதை தொல்லியலாய்வுகள் உறுதிசெய்தபின்னரும் அதை மறைக்கவும் திரிக்கவும் இடதுசாரி வரலாற்றாய்வாளர்கள் அரசியல்நோக்குடன் முயன்றதையும் அழுத்தம் அளித்ததையும் எழுதியிருந்தார். அது அவருக்கு கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது.

நான் சென்ற டிசம்பர் 6 அன்று சுகதகுமாரியைச் சந்திக்க திருவனந்தபுரம் சென்றபோது என்னை ரயில்நிலையத்திற்கு வந்து அழைத்துச்சென்ற மதுபாலிடம் தற்செயலாக கே.கே.முகம்மது அவர்களைப்பற்றிச் சொன்னேன். ஒரு சினிமாக்கதாநாயகனுக்குரிய ஆளுமை என்று. சுகதகுமாரியிடம் பேசிவிட்டு கிளம்பும்போது அவர் தங்கை கவிஞர் சுஜாதாதேவி என்னிடம் “ஜெயமோகனனுக்கு கே.கே.முகம்மதுவை தெரியுமா?” என்று கேட்டார். நான் “தெரியுமே” என்றேன். “அவர் டிசம்பர் 28 அன்று திருவனந்தபுரம் வருகிறார். என் தந்தை போதேஸ்வரனின் நினைவாக நாங்கள் நடத்தும் வரலாற்றுப்பேருரை வரிசையில் உரையாற்ற. அவருக்கு கன்யாகுமரி மாவட்டத்தை சுற்றிப்பார்க்க விருப்பம். ஒருநாள் அவரை அங்கே உபசரித்துச் சுற்றிக்காட்ட முடியுமா?” என்றார். ஆச்சரியங்கள் இப்படி அடிக்கடி நிகழ்வதில்லை. நான் கே.கே.முகம்மது பற்றி நான் எழுதியதைச் சொன்னேன். உடனே அவரிடம் ஃபோனில் பேசினேன். ”என் நற்பேறுகளில் ஒன்று தங்களை வரவேற்பது” என்றேன்.

கே.கே.முகம்மது அவர்கள் டிசம்பர் 26 அன்று நாகர்கோயில் வரவேண்டும் என்று நான் சொன்னேன். அன்றுகாலைதான் அவர் திருவனந்தபுரம் வருவார். நாகர்கோயிலில் முந்தையநாளே தங்கினால் மறுநாள் விடியற்காலையிலேயே சுற்றிப்பார்க்கத் தொடங்கலாம் என்றேன். ஆனால் நாகர்கோயிலில் விடுதியறைகள் கிடைக்கவில்லை. உயர்தர அறைதான் வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இணையத்தில் நாகர்கோயில் கன்யாகுமரி எங்கும் அறைகள் இல்லை எனச் செய்தி. நேரிலும் அதே. நண்பர் ஷாகுல் ஹமீதிடம் சொன்னேன். அவர் இருசக்கர வண்டியில் பகலெல்லாம் அலைந்து எஸ்.எல்.ஆர் என்னும் விடுதியில் ஒரு சூட் அறை முன்பதிவுசெய்தார். அது வாடகைக்கு விட எண்ணமில்லாமல் உரிமையாளருக்காக வைக்கப்பட்டிருந்தது.

நல்ல அறை.  விடுதியைத் திறந்தே ஒருமாதம்தான் ஆகிறது. கே.கே.முகம்மது வருவதை நண்பர்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் விஷ்ணுபுரம் விழா முடிந்த களைப்பில் பெரும்பாலானவர்கள் அடுத்த பயணத்திற்கு துணியவில்லை. கிருஷ்ணன் ஈரோட்டிலிருந்து வருவதாகச் சொன்னார், தயங்கிவிட்டார். திருப்பூரிலிருந்து ராஜமாணிக்கம் மட்டும் வந்தார்.

அன்று மதுரையிலிருந்து சுசித்ரா [சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்] நாகர்கோயிலுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அவர் சுவிட்சர்லாந்திலிருந்து அப்போதுதான் வந்திருந்தார். முந்தினநாளே அவர் பெற்றோருடன் வந்து சுசீந்திரத்தில் தங்கியிருந்தார், அங்கேதான் அறை கிடைத்தது. காலையில் 8 மணிக்கு ராஜமாணிக்கம் வந்தார். சுசித்ராவும் வந்தபின் எங்காவது கிளம்பிச்செல்லலாம் என முடிவெடுத்தோம். அருண்மொழி, அஜிதன்,சைதன்யாவுடன் ஆறுபேராக கிளம்பி அருகே உள்ள தேவேந்திரன்மலை என்னும் குன்றுக்குச் சென்றோம்.

அடூர் கோபாலகிருஷ்ணனின் நிழல்குத்து என்னும் படம் அங்கே படமாக்கப்பட்டது. தொன்மையான ஒரு சமணர்குகை என்று சொல்லப்படுகிறது. இப்போது ஆகியோருக்கான சிறிய ஆலயங்கள் அக்குகைக்குள்ளும் வெளியிலும் கட்டப்பட்டுள்ளன. கன்னங்கரிய பாறையில் வெட்டப்பட்ட படிகள் மிகச்செங்குத்தானவை. ஆனால் பக்கவாட்டில் இரும்புக்கைப்பிடி இப்போது அமைக்கப்பட்டுள்ளமையால் எளிதாக ஏறலாம்.திருவிதாங்கோடு பிள்ளையார் கோயில். இருக்கைகளாக சிற்பங்கள்

அங்கிருந்து மருத்துவாழ்மலைக்குச் சென்றோம். நாராயணகுரு,சட்டம்பி சுவாமி ஆகிய இருவருக்கும் ஆசிரியரான தைக்காடு அய்யாவு அங்கே ஒரு குகையில் தவம்செய்தார். அவருடன் நாராயணகுரு தங்கியிருந்ததுண்டு. பின்னர் சிறிதுகாலம் நடராஜகுருவும் நாராயணகுருவுடன் அங்கே தங்கியிருந்தார். அப்படி ஏழெட்டு சிறிய குகைகளும் இரண்டு ஆலயங்களும் அங்குள்ளன.  மலைமேல் ஏறி அமர்ந்து காற்றில் கண்மயங்க பேசிக்கொண்டிருந்தோம்.

மாலையே சுசித்ரா கிளம்பிச்சென்றார். கே.கே.முகம்மது திருவனந்தபுரத்திலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரசில் கிளம்பி ஆறு மணிக்கு நாகர்கோயில் வந்தார். அவருடன் அவர் மனைவியும் வருவது எனக்குச் சொல்லப்பட்டிருக்கவில்லை. உடன் இன்னொரு நண்பர். நான் இருவருக்காக ஒரு சூட் தான் பதிவுசெய்திருந்தேன். ஷாகுல் ஓட்டலில் மன்றாடி இன்னொரு அறை வாங்கித்தந்தார், ஒருநாளைக்கு. ஆனால் அதுவும் சூட்தான். வேறுவழியில்லை. நான் ராஜமாணிக்கம் ஷாகுல் கே.கே.முகம்மது அவர் நண்பர் ஆகியொர் இரவு 9 மணிமரை பேசிக்கொண்டிருந்தோம். அ.கா.பெருமாள் அவர்களை அழைத்திருந்தேன். அவர் வந்து பேசிக்கொண்டிருந்தார்.லட்சுமி மணிவண்ணன் சபரிமலை போயிருந்தார். போகன் நெல்லையில். ஆகவே நாகர்கோயிலில் பிற எவரையும் அவரைச் சந்திக்கச்செய்ய முடியவில்லை.

மறுநாள் ஒரு முழுநாளுக்குமான திட்டத்தை வகுத்திருந்தேன். அதிகாலையில் திருவிதாங்கோடு ஆலயம். திருவிதாங்கோடு அல்லது ஸ்ரீவாழும்கோடு தொன்மையான சிறுநகரம். அருகே உள்ள தலக்குளம், கேரளபுரம் ஆகியவை இணைந்து ஒரு சிறு ஸ்வரூபம். பெண் ஆட்சி செய்யும் அரசு. ஆய் அண்டிரன் காலம் முதலே இருந்துவருவது. அங்கிருந்துதான் சோழர் ஆட்சிக்குப்பின் அடுத்த அரசவம்சம் உருவானது. அது பத்மநாபபுரத்திற்கும் அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கும் சென்றது. ஆகவேதான் இந்த சம்ஸ்தானமே திருவிதாங்கோடு என அழைக்கப்படுகிறது, ஆங்கிலத்தில் திருவிதாங்கூர்.

நயினார் நீலகண்டசாமி ஆலயம் தொன்மையானது. கிபி ஒன்றாம்நூற்றாண்டு முதலே அந்த ஆலயம் சிறுவடிவில் அங்கிருக்கிறது. சேரர்,சோழர், நாயக்கர் என மூன்று அரசகுடிகளால் தொடர்ச்சியாகக் கட்டப்பட்டது. அருகே அழகிய குளத்தில் கரிய நீர். கன்னங்கரேலென அர்ஜுனனும் கர்ணனும் இருபுறமும் நின்றிருக்கும் முகமண்டபம். ஆலயத்தில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அருகே உள்ள பிள்ளையார் ஆலயமும் தொன்மையானது. சமீபத்தில் ஊர்க்காரர்கள் அதைப் புதுப்பித்திருந்தார்கள். தரையில் நாலாந்தர தரையோடுகள் ஒட்டப்பட்டிருந்தன. சிற்பங்கள் புதைந்திருந்தன. அப்பர் சுந்தரர் முகங்களை குடைந்து கம்பிகிராதி அமைக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் ஒரு சூறையாடல்.

தொன்மையான இவ்வூரில் வேறு இரண்டு முக்கியமான இடங்கள் உள்ளன. அரைப்பள்ளி என அழைக்கப்படும் புனித மரியன்னை தேவாலயம் இந்தியாவில் மிகத்தொன்மையான கிறித்தவதேவாலயங்களில் ஒன்று. இந்தியாவின் தொன்மையான கிறித்தவ தேவாலயங்களின் ஒரு வரிசை கேரளத்தின் கடலோரமாக உண்டு. கிபி நான்காம் நூற்றாண்டுமுதல் சிரியா வழியாக வணிகத்தின் பொருட்டு வந்து இங்கு குடியேறிய ஆரம்பகாலக் கிறித்தவ வணிகக்குழுக்களால் அமைக்கப்பட்டவை அவை. அவை ஏழரைப்பள்ளிகள் என அழைக்கப்படுகின்றன.

கொடுங்கல்லூர், பாலையூர்,கொட்டக்காவு, கோக்கமங்கலம், நிலக்கல், நிரணம், கொல்லம் ஆகியவை ஏழு தேவாலயங்கள். அவற்றில் தொன்மையானது திருவிதாங்கோடு ஆலயம். அது சிறியதாகையால் அரைப்பள்ளி எனப்படுகிறது . இதன் அமைப்பும் காரணம். இது கல்லில் கட்டப்பட்ட ஒரு கருவறைபோன்ற அமைப்பு [ஆல்டர்] அதன்முன் சிறிய மண்டபம் ஆகியவை மட்டுமே கொண்டது. அதை பின்னர் சற்று விரிவாக்கி ஒரு கூடமாக்கியிருக்கிறார்கள். அதாவது இன்றிருக்கும் தேவாலயத்தின் பாதியே முன்பு இருந்தது. அரைப்பள்ளி என்பது அரசன் பள்ளி என்பதன் மரூ என்றும் கூற்று உண்டு.

இந்த ஏழரை தேவாலயங்களுமே அதிகம்போனால் கிபி எட்டாம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டவை என்றே இன்று சொல்லமுடியும். ஏனென்றால் ஏழாம்நூற்றாண்டில் பல்லவர் காலகட்டத்தில்தான் கற்கோயில்களை அமைக்கும் கலை தமிழகத்தில் பரவியது. கிபி நாலாம் நூற்றாண்டுமுதலே இங்கே கிறித்தவ வணிகக்குழுக்கள் வரத்தொடங்கின. அவர்கள் அமைத்த சிறிய தேவாலயங்களின் விரிவாக்கங்களாக இவை இருக்கலாம். ஆனால் இப்போது இவை கிபி ஒன்றாம் நூற்றாண்டில் புனித தோமையரின் வருகையை ஒட்டி கட்டப்பட்டவை என சில தரப்பினரால் கூறப்படுகிறது. தோமையர் அமைத்த தேவாலயங்களில் தொன்மையானது என இன்று இதை அடையாளப்படுத்துகிறார்கள் நம்பிக்கையாளர்கள். சர்வதேச தோமஸ் புனிதபயண மையமாக இது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதறாலில்

திருவிதாங்கூர் அரைப்பள்ளி    சேரஅரசர் உதயன் சேரலாதனால் கட்டப்பட்டது என சில ஆதாரங்கள் கூறப்படுகின்றன. அவர் கிபி 130 ல் இப்பகுதியை ஆண்டார் என்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டில் இங்கே சோழர் ஆட்சி உருவாவதற்கு முன்னர் ஆண்ட மன்னர் என்று மட்டுமே இன்று சொல்லமுடியும். இந்த தேவாலயம் பலமுறை பழுதுநோக்கி மீட்டுக் கட்டப்பட்டுள்ளது.   அன்றிருந்த ஆலயச்சிற்பிகளால் ஆலயங்களின் கணக்குகளைக்கொண்டு கல்லில் கட்டப்பட்டது இன்றுள்ள அரைப்பள்ளி. சிறிய அழகிய ஆலயம். பெரிய சிலுவைக்குத்துவிளக்குகள். கற்சிலுவை. மிகத்தூய்மையாகவும் முறையாகவும் பேணப்படுகிறதுது

1

இன்னொரு இடம் மாலிக் முகமது அப்பா தர்கா. கிபி 629ல் நபியின் குருதிமரபைச் சேர்ந்த மன்னர் மாலிக் ஹபீப்  அவர்களின் மகன் மாலிக் பின் தீனார்  கொடுங்கல்லூரில் முதல் இஸ்லாமிய பள்ளிவாசலை நிறுவினார் என்பது இஸ்லாமிய வரலாறு. அவருடைய மகனாகிய மாலிக் முகம்மது குமரிமாவட்டம் வந்தார் என்றும் திருவிதாங்கூரை ஆண்ட சேர அரசரின் உதவியுடன் இந்த பள்ளிவாசலை அமைத்தார் என்றும் கூறப்படுகிறது. அவருடைய தர்கா அக்கால வழக்கப்படி கல்லால் மிகசிறிய வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் அவருடைய மாணவர்களின் தர்காக்களும் இங்கே அமைந்தன. கட்டிடங்கள் இணைத்துக் கட்டப்பட்டன.

2

இதன் நுழைவாயிலே தொன்மையானது. உளுத்து தரையோடு ஒட்டி நின்றிருக்கிறது. உள்ளே தொன்மையான கற்கட்டிடத்தை மேலே மேலே பச்சை வண்ணம் அடித்து முழுமையாக மூடியிருக்கிறார்கள். வரைமுறை இல்லாமல் கான்கிரீட் கட்டிடங்களைச் சேர்த்தே கட்டியிருக்கிறார்கள். இதன் தொன்மையை தெரிந்தவர்கள் தேடிப்பார்த்தால்தான் கண்டுபிடிக்கமுடியும்

அங்கிருந்து சிதறால். திருச்சாரணத்துமலை குமரியின் தொன்மையான சமண மையம். குடைவுச் சிற்பங்கள் கொண்ட ஒரு பாறைச்சுவர். மூன்று குடைவுக்கருவறைகள் கொண்ட ஆலயம். இருகருவறைகளில் வர்த்தமானரும் பார்ஸ்வநாதரும். ஒரு கருவறையில் பகவதி. சமணர்களின் யட்சியை பிற்காலத்தில் சிதறாலம்மை என பகவதியாக்கி வழிபடுகின்றனர். இன்று மூன்று கருவறைகளையுமே இந்துமுறைப்படி வழிபடுகிறார்கள்.

இவ்வாலயம் தொல்லியல்துறையால் நன்றாகவே பேணப்படுகிறது. ஆனாலும் வருகையாளர்கள் போடும் குப்பைகளைச் சமாளிப்பது கடினம். அங்கிருந்த ஊழியர் மிகுந்த அர்ப்பணிப்பு கொண்டவர் என்பதை முன்னரும் கவனித்திருக்கிறேன். அவரைப்பொறுத்தவரை அது  ’அம்மைக்க எடம்’. வேலையையே ஒரு வழிபாடெனச் செய்கிறார். அத்தகையவர்கள் தங்கள் முதுமையை முழுமையாக ஆக்கிக்கொள்ளும் நல்லூழ் கொண்டவர்கள்.

அங்கிருந்து திருவட்டாறு. வளநீர் வாட்டாற்றான் என புறநாநூறு கூறும் தொன்மையான ஆலயம். ஆய்குலத்து அரசர்களுக்கும் சேரர்களுக்கும் பின்னர் திருவிதாங்கூர் அரசர்களுக்கும் குலதெய்வம். இவ்வாலயத்தின் வடிவில்தான் பின்னாளில் அனந்தன்காட்டு பெருமாள் ஆலயம் திருவனந்தபுரம் என அமைக்கப்பட்டது. அழகிய கற்சிற்பங்களும், மரச்செதுக்குச்சிற்பங்களும் கொண்டது.

இப்போது டிவிஎஸ் நிறுவன உதவியுடன் சீரமைப்புப்பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே மணல்வீச்சுமுறைப்படி சிற்பங்களை மழுங்கடித்துவிட்டனர். இப்போது தரமற்ற கடப்பைக் கற்களை பிரகாரத்தின் உள்ளே பாவியிருக்கிறார்கள். இப்போதே பல கற்கள் வெடித்துவிட்டன. நாம் குடியிருக்கும் வீட்டுக்குள் கடப்பைக்கல்லால் தரைபோடமாட்டோம். ஆனால் ஆண்டவன் ஆலயத்திற்கு அதைப்போடத் தயங்கமாட்டோம். தெளிவாகவே மிகப்பெரிய ஊழல் அதில் உள்ளது. எவர் கேட்பது?

அதன்பின் திற்பரப்பு சென்றோம். நீராடியபின் பத்மநாபபுரம். அங்கே கே.கே.முகம்மது அவர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள். அங்கிருந்து கன்யாகுமரி. இரவு ஒன்பது மணிவரை தொடர்ச்சியான பயணம். மறுநாள் காலையில் ஏழுமணிக்கே அவர்கள் கிளம்பிச்சென்றார்கள். நான் செல்வதற்குப் பிந்திவிட்டது. ஷாகுல் ஹமீது அவர்களை வழியனுப்பிவைத்தார்.

கே.கே.முகம்மது அதிகம் பேசுபவர் அல்ல. ஆனாலும் தொடர்ச்சியாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். குமரியின் வரலாற்றுத் தொடர்ச்சியை அவரிடம் நான் சொன்னேன். அவருடைய அகழ்வாய்வு அனுபவங்களை, அதிலிருந்த சவால்களை அவர் சொன்னார். வரலாறு அரசியலாகிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் வரலாற்றாய்வாளன் கொள்ளவேண்டிய சமரசமற்ற கூர்மையைப்பற்றி அவர் சொன்னது உள எழுச்சியை உருவாக்கியது. அவர் எதையுமே மிகைப்படுத்துவதில்லை. முடிவுகளை நோக்கிப் பாய்வதில்லை. தர்க்க அணுகுமுறையை கைவிடுவதேயில்லை.

அவர் படேஸ்வர் ஆலயத்தை மீட்டபின்னர் அங்கே நிகழ்ந்ததைப்பற்றி நான் சொன்னேன். நிர்பய்சிங் குஜ்ஜார் கொல்லப்பட்டார். அதற்கு உதவியவர்கள் கிரானைட் கொள்ளையர். இன்று அப்பகுதியே அவர்களால் சூறையாடப்படுகிறது. “ஆம், அது அரசியல்” என்று பெருமூச்சுடன் சொன்னார்.

மாலிக் முகம்மது பள்ளி படங்கள், இணையத்திலிருந்து, நன்றி அனந்த சுப்ரமணியன்

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Jan 1, 2018

கே கே முகம்மது இணையக் காணொளிகள்

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

அ.கா.பெருமாள்

சிதறால்- பயணத்தின் விதிமுறைகள்

முந்தைய கட்டுரைநினைவுகளின் இனிய நஞ்சு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60