விடுபட்ட ஆளுமைகள்

Tamilnatu neethimangal Wrapper

கேரளத்தில் உருவான பெரும்பாலான புனைவிலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் சர்.சி.பி.ராமசாமி ஐயர் எதிர்மறைக்கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார். வளைந்த மூக்குடன் நாசர் கூட சி.பி.ராமசாமி ஐயரின் ’வில்லன்’ வேடத்தை நடித்திருக்கிறார். ஆனால் குமரி மாவட்டத்தில் 80 வயது தாண்டிய எவரிடம் பேசினாலும் சி.பி.யின் ஆட்சியை பொற்கால ஆட்சியென்றே தான் சொல்வார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பணியாற்றிய பி.எஸ்.என்.எல் துறையில் சாலையைத் தோண்டி தொலைபேசி இணைப்பு அளிப்பதற்காக முயன்றபோது ஒப்பந்ததாரர் வந்து  “அச்சாலையை உடைக்க முடியாது” என்றார் ஏறத்தாழ நான்கடி தடிமனாக தரமான கான்கிரீட்டால் அந்தச் சாலை போடப்பட்டிருந்தது. பொறியாளர்கள் சென்று பார்த்துவிட்டு இரு புறமும் தோண்டி அந்த சாலைக்கு அடியில் சுரங்கம் அமைத்து தொலைபேசி இணைப்பை அளித்தார்கள். மேலே உயர்எடைகொண்ட லாரிகள் சென்று கொண்டிருக்க அடியில் ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றுவதை நான் பார்த்தேன். திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவில் வரைக்கும் சர்.சி.பி.ராமசாமி அய்யர் காலத்தில் போடப்பட்ட சாலை அது.

குமரி மாவட்டத்தின் பொருளியல் வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கும் பெரும்பாலான அமைப்புகள் சி.பி.ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்டவை. பேச்சிப்பாறை நீர்மின் திட்டம் அதில் மிக முக்கியமானது. குளச்சல் உட்பட துறைமுகங்களின் விரிவாக்கத்திற்கு அவர் பெரும்பங்கு வகித்திருக்கிறார். அனைத்திற்கும் மேலாக ஊழலற்ற கறாரான ஆட்சி ஒன்றை அளிக்கவும் அவரால் முடிந்தது.

கோமல் அன்பரசனின் தமிழகத்து நீதிமான்கள் என்ற நூலை படிக்கத் தொடங்கும்போது முதல் கட்டுரையே சி.பி.ராமசாமி அய்யரைப் பற்றியதாக இருந்தது இனிய தொடக்கத்தை அளித்தது. சி.பி.ராமசாமியின் வாழ்க்கைச் சித்திரத்தை ஒரு விரைவு கோட்டுச்சித்திரமாக அளிக்கிறது அக்கட்டுரை. வழக்கறிஞராக அவர் பெற்ற பெரும்புகழ் அவருடைய பொதுவாழ்க்கையின் அடித்தளமாக அமைந்தது.அன்றைய சென்னை மாகாணத்தின் அரசு வழக்கறிஞராகவும், கவர்னரின் எக்ஸிக்யூடிவ் கவுன்சிலில் உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.

 

சி.பி.ராமசாமி அய்யர்
சி.பி.ராமசாமி அய்யர்

கிட்டத்தட்ட அமைச்சருக்கு நிகரான அப்பொறுப்பில் அவர் இருக்கையில்தான் மேட்டூர் அணை கட்டப்பட்டுவதற்கான முன் முயற்சிகளை எடுத்தார். அவருடைய தனிப்பட்ட சாதனை என்று மேட்டூர் அணையை கோமல் அன்பரசன் சொல்கிறார். பைக்காரா நீர்மின்சக்தி திட்டம் அவருடைய இன்னொரு சாதனை .தமிழகத்தில் தூத்துக்குடி சென்னை துறைமுகங்களின் மேம்பாட்டுக்கும் அரும்பணியாற்றியிருக்கிறார். இச்செய்திகள் இன்றைய தலைமுறையில் எவருக்கேனும் தெரியுமா என்பது வியப்புக்குரியது. எனக்கே மேட்டூர் அணை உருவாக்கத்தில் சி.பி.ராமசாமி ஐயரின் பங்கு உண்டு என்று இந்த நூலில் வாசித்தது வியப்பூட்டும் புதிய செய்தியாக இருந்தது.

ஏற்கனவே நாம் அறிந்த பல்வேறு செய்திகள் ஒன்றுடன் ஒன்று விரைவு மின்சார தொடர்புகள் போல பொருந்தி ஒரு பெருஞ்சித்திரத்தை உருவாக்குவதுதான் இந்நூலின் அழகு அன்னிபெசண்ட் அம்மையார் ஆந்திராவில் நாராயணய்யா என்பவரின் இருமகன்களை தத்து எடுத்துக்கொண்டு வந்து அவர்களில் எதிர்கால உலககுரு என்று அறிவித்து தியாசபிகல் சொசைட்டியில் வைத்து வளர்த்தார். இளையவர்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி. தனது மைந்தர்களைத்  திரும்பத்தரவேண்டுமென்று கோரி தந்தை நாராயணய்யா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது அவ்வழக்கில் நாராயணய்யாவுக்காக ஆஜரானவர் சிபி.ராமசாமி ஐயர் என்பது எனக்குப் புதிய செய்தி. எங்கோ நூலில் அதைப் பார்த்திருக்கலாம் ஆனால் இவ்வாறு இணைத்துக்கொண்டதில்லை.

சர். சி.பி.ராமசாமி ஐயர் சாதிய நோக்கு கொண்டவரென்றும் ,தமிழகத்தில் பிராமண ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார் என்றும் ஒரு தரப்பால் சொல்லப்பட்டதுண்டு. அவர் உறுதியான பாரம்பரியவாதி என்பதில் ஐயமில்லை. ஆனால் சாதியவாதி என்று சொல்வதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. மாறாக நேர்எதிராக சொல்வதற்கான ஆதாரஙகள்தான் அவர் வாழ்க்கையில் இருக்கின்றன. வைக்கம் போராட்டத்தை காந்தியும், நாராயணகுருவும் முன்னெடுத்தபோது ஆலயங்களை அனைத்து சாதியினரும் வழிபடுவதற்காக திறந்துவிடவேண்டுமென்ற சட்ட முன்வரைவை உருவாக்கி மகாராஜாவை அதில் கையெழுத்திட வைத்தவர் அன்று திவானாக இருந்த சர்.சி.பி ராமசாமி ஐயர் அதன் பொருட்டு அவர் காந்தியால் அவர் பாராட்டப்பட்டார்.

அதேபோல முத்துலெட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவந்தபோது அதற்கான சட்ட முன்வரைவை எழுதி அளித்து அனைத்து வகையிலும் ஆதரவளித்து நிறைவேற்ற வைத்தவர் சி.பி.ராமசாமி ஐயர். இச்செய்திகளின் முக்கியத்துவம் என்னவென்றால் இன்று சென்றகால வரலாற்றின் ஒளிமிக்க பக்கங்களை எல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் தங்கள் அரசியல்சார்ந்த ஆளுமைகளின் மேல் ஏற்றிவைத்து வரலாறு எழுதும் வழக்கம் உருவாகியிருக்கிறது. அத துதிவரலாற்றால் மறைக்கபப்டும் உண்மைகள் இவை

கோமல் அன்பரசன் சி.பி.ராமசாமி அய்யர் அவகளின் வாழ்க்கையின் சிறிய தகவலைச் சொல்கிறார். ஒரு தலித் இளைஞன் வழக்கறிஞர் படிப்புக்கு படித்துவிட்டு எவரும் தன்னை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளாமலிருந்த செய்தியை தற்செயலாக அறிந்தபோது சி.பி.ராமசாமி அய்யர் அவரை அழைத்து தன் உதவியாளராக வைத்துக்கொண்டார். தன் இல்லத்திலேயே தங்க வைக்கவும் செய்தார். பின்னாளில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் நீதிபதியுமான என்.சிவராஜ் அவர்.

சி.பி ராம்சாமி ஐயர் போன்றவர்களை புரிந்துகொள்வது இன்றைய சூழலில் கடினம். தங்களுக்கென்று ஒர் உறுதியான கொள்கையை ஒழுக்கத்தையும் வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் அவர். திருவிதாங்கூரின் திவானாக இருந்த சிபி.ராமசாமி ஐயர் அன்று கம்யூனிஸ்ட்கட்சி வயலார் போன்ற ஊர்களை ‘விடுவித்து’ அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியை கடுமையான போலீஸ் நடவடிக்கை மூலம் ஒடுக்கினார். பல்வேறு இடங்களில் நிகழ்ந்த அடக்குமுறைகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வரலாறு சொல்கிறது. அதன்பொருட்டே சி.பி.ராமசாமி ஐயர் குரூரமான ஆட்சியாளர் என்று இடதுசாரிகளால் சித்தரிக்கப்பட்டார்.

இந்திய சுதந்திரம் கிடைத்தபோது திருவிதாங்கூர் தனி நாடாக நீடிக்கவேண்டுமென்று வாதாடினார். அதற்குக் காரணம் திருவிதாங்கூரில் அனந்தபத்மநாபசாமி ஆலயத்தில் இருந்த மாபெரும் செல்வம் பற்றி அவருக்குத்தெரியும் என்பதுதான் என்று இன்று பேசப்படுகிறது. சுங்கம், விற்பனைவரி போன்றவற்றினூடாக மத்திய அரசுக்கு பெரும் நிதியை அளிக்கும் கேரளம் மக்கள்தொகைக் குறைவு என்பதனால் அதில் பாதியையே மத்திய அரசிடமிருந்து திரும்பப்பெற முடியும் என்றும், ஆகவே இந்திய அரசுடன் திருவிதாங்கூர் இணைவது அந்நிலப்பகுதியின் வளர்ச்சிக்கு எதிரானது என்றும் அவர் வாதிட்டார்.

ஆகவே திருவிதாங்கூர் தனிநாடாக ஆகவேண்டும் என முயற்சிகள் எடுத்துக்கொண்டார். குறைந்தது ஒரு பேரமாவது பேசி சில ஒப்பந்தங்கள் செய்தபின்னரே இணையவேண்டும், நிபந்தனையற்று இணையக்கூடாது என்று வாதிட்டார்.  இந்திய அரசின் கறாரான ராணுவ நடவடிக்கை வரக்கூடும் என்றபோது அரசர் அஞ்சி பணிந்தார். அய்யரின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. மணி என்பவரால் தாக்கப்பட்ட சி.பி.ராமசாமி ஐயர் திவான் பதவியிலிருந்து விலகி தமிழகத்திற்கு திரும்பி வந்தார்.

திருவிதாங்கூர் திவான் பொறுப்பிலிருந்து விலகியதுமே இந்திய தேசியத்திற்கு உறுதியான ஆதரவளிப்பவராகவும் முதன்மையான கல்வியாளராகவும் ஆனார். பனாரசஸ் இந்து பலகலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவற்றில் துணைவேந்தராக பணியாற்றினார். 1956-ல் இந்திராகாந்தியின் ஆலோசனையின்படி நேரு சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இ.எம்எஸ்ஸின் கம்யூனிஸ்டு அரசைக் கவிழ்த்தபோது கடுமையாக எதிர்த்து அது ஜனநாயகத்திற்கு  எதிரானது என்று கருத்துப்பதிவு செய்தார்

தான் எந்தப் பணியை ஆற்றுகிறோமோ அந்தப்பணிக்கு முழுமூச்சான சேவையை அளிப்பது என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது. ஒருவகையில் அது வழக்கறிஞரின் இயல்பும் கூட .அவரின் அறமென்பது யாருக்காக வாதாடுகிறார் அவருடைய தரப்பை முழுமையாக முன்வைப்பது.

கோமல் அன்பரசுவின் நூல் வெறுமே தகவல்களை மட்டும் சொல்லிச் செல்வதில்ல. நிகழ்வுகளினூடாக ஆளுமைகளின் குணச்சித்திரத்தை வரைந்து காட்ட அவரால் முடிந்திருக்கிறது. சென்ற காலத்தின் வெவ்வேறு வரலாற்று நிகழ்ழ்வுகளை ஒன்றுடன் ஒன்று கோர்க்கும் பல சிறுசெய்திகளால் செறிந்திருக்கிறது இந்நூல். ஆகவே நம் மனதில் அக்காலகட்டம் பெரும் பின்னலாக உருவாக்கப்படுகிறது ஆகவே இப்போது வாசிக்கையில் ஒரு புனைவை வாசிக்கும் உள எழுச்சியை இந்த புத்தகம் அளிக்கிறது.

 

வி.எல்.எதிராஜ்
வி.எல்.எதிராஜ்

வி.எல்.எதிராஜ் பலரும் அறிந்த ஆளுமை. லட்சுமிகாந்தன் கொலைவழக்குக்காக தண்டிக்கப்பட்ட தியாகராஜப் பாகவதரையும் கலைவாணரையும் லண்டன் பிரிவிகவுன்சிலில் வாதிட்டு மீட்டு வந்தவர். சென்னை எதிராஜ் கல்லூரியின் நிறுவனர். அதற்கப்பால் இந்த நூலில் மிக வசீகரமான ஆளுமையாக அவர் எழுந்து வருகிறார். அவருடைய புகைப்படங்களை முன்னரே பார்த்திருந்ததனால் உரத்த குரலில் சொற்பெருக்காக நீதிமன்றத்தில் வாதாடும் ஒருவராக அவரைக் கற்பனை செய்துகொண்டேன். தாழ்ந்த குரலில் மிகக்குறைவான வார்த்தைகளில் வாதாடுபவர் என்று இந்த நூலில் படித்தபோது வியப்பாக இருந்தது. உடனே என் உள்ளத்தின் சித்திரம் மாறியும் விட்டது.

எதிராஜ் நீதிபதிகளுக்கும் தனக்குமான ஒரு அந்தரங்கமான ஆழமான உரையாடலாக நீதிமன்ற வழக்காடுதலை மாற்றிக்கொள்வார் என்று கோமல் அன்பரசன் சொல்கிறார். அவருடைய கார்ப்பித்து, தனது இல்லத்தில் பலகை வைத்துக்கொள்ளாத தன்னம்பிக்கை அல்லது தற்பெருமை ,அவரது தோற்றம், அவர் ஆஜரான வழக்குகளில் அவர் கடைபிடித்த உத்திகள் என தமிழக வரலாற்றில் ஒரு தொன்மமாக மாறிப்போன ஒருவர் முற்றிலும் எதார்த்தமான வடிவம் கொண்டு இந்த நூலில் நம்முன் வருகிறார். ஒரே நாளில் நாற்பத்து நாலு வழக்குகளில் ஆஜராகியிருக்கிரார் எதிராஜ் என்று இந்நூலில் வாசிக்கையில் எப்போதுமே வரலாற்று மனிதர்கள் சாதாரணமாக பிறர் எண்ணும் எல்லைகளை கடந்து சென்றிருப்பார்கள் என்பதை எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது

சி.பி.ராமசாமி ஐயர் வி.எல்.எதிராஜ் போல வரலாற்றில் ஏற்கனவே இடம் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாசகர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத நீதியரசர்களின் வரலாறுகளும் இந்நூலில் வந்துகொண்டே இருக்கின்றன. எம்.ஜி.ஆரின் உயிலை வாசித்த என்.சி.ராகவாச்சாரியின் வரலாறு ஒரு உதாரணம். எம்.ஜி.ஆர் தனது அனைத்து சொத்துக்களையும் ,கட்சியின் உடைமைகளையும் கையாளும் முழு பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் என்பதை சுட்டும் கோமல் அன்பரசன் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரார்களிடம் பெறும் ஆழ்ந்த நம்பிக்கையின் உதாரணமாக அதை குறிப்பிடுகிறார்.

எஸ்.சீனிவாச ஐயங்கார் பிறிதொரு உதாரணம். அரசு வழக்கறிஞராக இருந்தவர் அரசு அன்னிபெசண்ட் மேல் ஒரு தேசத்துரோக வழக்கு தொடுக்க முன்வரும்போது எவ்வகையிலும் அது சட்டபூர்வமானதல்ல என்று அன்றைய கவர்னருக்கு அறிவுறுத்தி அந்த வழக்கை ரத்து செய்ய வைத்தார். தான் வகிக்கும் பொறுப்புக்கான நெறிகளே தன்னை ஆளவேண்டுமேயொழிய அரசாங்கத்தின் ஒருபகுதியாக தன்னை அரசு வழக்கறிஞர் மாற்றிக்கொள்ளக்க்கூடாது என்ற உறுதியும் தனது நம்பிக்கைகளின் படி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நிமிர்வும் அவரிடம் இருந்தது. எதிராஜுக்கு மாற்றாக நீதிமன்றத்தில் அருவி போல சொற்பெருக்காற்றுபவர் சீனிவாச ஐயங்கார். அவருடைய வாதங்களை எவரும் முழுமையாகக் குறித்துக்கொள்ள முடியாதென்பதனால் பல்வேறு இடங்களில் பலர் ஒரே சமயம் குறித்துக்கொண்டிருப்பார்கள் என்கிறார் கோமல் அன்பரசன்.

வழக்கறிஞர் தொழிலில் உச்சகட்ட வெற்றியை அடைந்து அரசு வழக்கறிஞராகவும் திகழ்ந்த சீனிவாச ஐயங்கார் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த செய்தியைக்கேட்டதும் மனம் கொந்தளித்து அரசுப்பொறுப்பிலிருந்து விலகினார். மிக ஆடம்பரமான வாழ்க்கைக்கு பழகிவிட்டிருந்த அவர் மிக எளிய வாழ்க்கையை தன்க்கு விதித்துக்கொண்டு அதைப்பழகினார். சிறை செல்லவேண்டியிருக்குமென்று உணர்ந்து வெறுந்தரையில் படுக்கவும் எளிய உணவை உண்ணவும் குறைந்த வசதிகளுடன் வாழவும் தன்னைப்பழக்கிக்கொண்டார். காங்கிரசுடன் இணைந்து முக்கியமான பொறுப்புக்ளை வகித்தார் ஆனால் காந்தியிடம் கருத்து வேறுபாடு கொண்டு காங்கிரசிலிருந்து பின்னர் பிரிந்தார்.

Srinivasa_Iyengar
எஸ்.ஸ்ரீனிவாச அய்யங்கார்

 

1925-ல் வகுப்புவாரி இட ஒதுக்கீடுக்காக குரல் எழுந்தபோது காங்கிரசில் அவருக்கும் ஈவெராவுக்கும் தான் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. ஈ.வே.ரா வெளியே போவதற்கும் சீனிவாச ஐயர் முக்கியமான காரணமாக இருந்தார். வகுப்புவாரி இட ஒதுக்கீடென்பது சமூக மோதல்களுக்கே வழிவகுக்கும் என்பது ஐயருடைய உறுதியான கருத்தாக இருந்தது.

இந்த நூலின் தனிச்சிறப்பே இவ்வாறு இது அன்றைய அரசியல் மதம் என வெவ்வேறு துறைகளை தொட்டுச் செல்வதுதான். அதற்கு ஒரு காரணம் உண்டு அன்றைய இந்தியச்சூழலில் வழக்கறிஞர் பணி என்பது ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது .அதற்கான வரலாற்று பின்புலத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நீதிநிர்வாகம் என்பது மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. குலக்குழுக்கள், ஊர் குழுக்கள், சிற்றர்சர்கள் என நீதி அந்தந்த பகுதிகளில் மரபான நம்பிக்கைகள் மற்றும் குடிவழக்கங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது. பிரிட்டிஷார் இந்தியாவுக்களித்த கொடை என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு பொதுச்சட்டத்தை அனைவருக்கும் உரியதாக முன்வைத்ததுதான்

பொதுநீதி என்ற கருதுகோள் இந்தியாவுக்குப் புதிது. 1862ல் பிரிட்டிஷார் கல்கத்தா உயர்நீதிமன்றத்தை தொடங்கி தொடர்ந்து இந்தியாமுழுக்க நீதிமன்றங்களைத் திறந்தபோது அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் அவற்றுக்கு படையெடுத்தனர். நீதிமன்றங்கள் திறந்து பத்தாண்டுகளுக்குள்ளேயே கையாள முடியாத அளவுக்கு வழக்குகள் வந்து குவிந்தன என்று சொல்கிறார்கள் .ஏனெனில் இந்தியாவின் மைய படுத்தப்படாத நீதி என்பது பலசமயம் அந்தந்த பகுதிகளில் வழங்கும் ஆதிக்கத்துக்கு உகந்ததாகவே இருந்தது. சாதிக்கொரு நீதி, வல்லவனுக்கும் எளியவனுக்கும் வெவ்வேறு நீதி என்று நிலவியது. அதுவும் குறிப்பாக மொகலாய ஆட்சி, தென்னகத்தில் நாயக்கர் ஆட்சி போன்ற வலுவான பேரரசுகள் அழிந்து நூறாண்டுகளுக்கும் மேலாக உதிரி ஆட்சியாளர்களின் பூசலும், கொள்ளையும் நிகழ்ந்தது இங்கே.தடியெடுத்தவன் தண்டல்காரன், வல்லான் வகுத்ததே வாய்க்கால் போன்ற பழமொழிகள் உருவான பின்புலம் இதுவே. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வழப்பறிக்கொள்ளையும் தீவெட்டிக்கொள்ளையும் அன்றாட நிகழ்வுகளாக இருந்திருக்கிறது. வரிவசூலே ஒருவகையான கொள்ளையாக  இருந்திருக்கிறது. அந்நிலையில் பிரிட்டிஷ் நீதி என்பது மிகப்பெரிய ஒரு மீட்பாக அன்றிருந்த மக்களுக்குத் தோன்றியது.

அவர்கள் நீதிமன்றத்துக்குப் படையெடுத்தபோது அங்கு அவர்களின் பொருட்டு வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டனர். புகழ்பெற்ற ஆங்கிலேய பாரிஸ்டர்கள் அன்று உயர்நீதிமன்றங்களில் பணியாற்றினர். ஆனால் இந்தியப் பண்பாட்டையும் இந்தியாவின் சமூகச்சூழலையும் நுணுகி அறிந்த இந்திய வழக்கறிஞர்களே பலவழக்குகளை புரிந்துகொண்டு பாதிக்கப்ட்டவர்களுக்கு நீதிவாங்கித்தரமுடியும் என்றநிலைமை இருந்தது. அந்த இடத்தை நிரப்பும்பொருட்டு கல்விமான்கள் எழுந்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஓர் இந்தியரால் வகிக்கப்படக்கூடிய மிக மதிப்புவாய்ந்த பதவி என்பது நீதித்துறை சார்ந்ததாகவே இருந்தது.

இத்துறையில் செல்வமும் புகழும் ஈட்டியவர்கள் அங்கிருந்து  அரசியலுக்கும் பொதுவாழ்க்கைக்கும் வந்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் வழக்கறிஞர்களால்தான் நடத்தப்பட்டன. காந்தி ,நேரு, பட்டேல் என பெரும்பாலான தலைவர்கள் வழக்கறிஞர்களே. தென்னகத்தில் ராஜாஜி சத்யமூர்த்தி போன்ற பெரும்பாலோனவர்கள் வழக்கறிஞர்கள். ஆகவே வழக்கறிஞர்களின் கதை என்பது தமிழக அரசியலின், சமூகமாற்றத்தின் கதையாகவும் உருப்பெறுகிறது  கோமலின் இந்த நூலை ஆங்காங்கே வந்து செல்லும் குறிப்புகளிலிருந்து அந்த அரசியல் நிகழ்வுகளையும் சென்று வாசித்து இணைத்துக்கொண்டு செல்பவர் மிகப்பிரம்மாண்டமான ஒரு காலச்சித்திரத்தை அடையமுடியும்.

கோமல் அன்பரசனின் இந்நூலை படிக்கையில் இரு எண்ணங்கள் எழுகின்றன ஒன்று தங்கள் துறையில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி தலைமுறைகளால் நினைக்கப்படவேண்டிய ஆளுமைகளாக மாறியவர்கள் இன்று என்னவாக கருதப்படுகிறார்கள் என்பது. உதாரணமாக, எஸ்.துரைசாமி ஐயர். செட்டிநாட்டை சேர்ந்த கோயில் பூசகர் ஒருவர் மலேசியா பர்மா முதலிய நாடுகளிலிருந்து ஆலயத்திருப்பணிக்காக தான் திரட்டிய பணத்தை உள்ளூரிலிருக்கும் ஒரு பெரிய குடும்பத்திடம் கொடுத்து  வைக்கிறார். பிறகு அதை திரும்பக்கேட்கும்போது அதை மறுத்துவிடுகிறார்கள். அந்தப் பெரிய குடும்பத்திற்கெதிராக வழக்கு நடத்த எந்த வழக்கறிஞரும் அன்று தயாராக இல்லை. சிறிய வழக்கறிஞர்கள் நடத்தினால் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்கவும் நிற்காது. அந்த வழக்கை கேள்விப்பட்டதுமே ஒரு ரூபாய் கூட ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் அதை நடத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்றுத்தருகிறார் துரைசாமி அய்யர். அது ஒரு திரைப்பட காட்சியின் நாடகத்தன்மையுடன் இந்த நூலில் உள்ளது.

இத்தகையவர்கள் அவர்கள் சார்ந்த வட்டத்துக்குள் தொடர்ச்சியாக நினைவுகூரப்ப்படவேண்டும். அது இங்கே நிகழ்கிறதா என்றால், இல்லை. கோவை ஈரோடு மதுரை போன்று வழ்க்கறிஞர் தொழில் இருநூறாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஊர்களில் கூட இன்றைய வழக்கறிஞர்களுக்கு சென்ற தலைமுறையின் பெரிய ஆளுமைகளைப்பற்றி அடிப்படை அறிவாவது உண்டா என்று கேட்டால் இல்லையென்றே சொல்லவேண்டியிருக்கிறது. இது இரண்டு காரணங்களால் நடைபெறுகிறது. ஒன்று எதையும் அறிந்துகொள்வதற்கான சோம்பல். வரலாற்றையோ பண்பாட்டின் ஒழுக்கையோ புரிந்துகொள்ளாமல் அன்றாடத்திலேயே புழங்கும் சிறுமை அது. இந்தியா போன்று தேங்கிப் போன சமூகங்களின் இயல்பு.

அதற்கு அப்பால் ஒன்றும் உண்டு, தொடர்ச்சியாக விழுமியங்ளில் சமரசம் செய்து கொண்டே இருக்கும் இந்தத் தலைமுறைக்கு தான் கொண்ட கொள்கையில் அர்ப்பணிப்புடன் சமரசமின்றி நின்ற சென்ற தலைமுறையை நினைவுகூர்வது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஏதேனும் ஒருவகையில் அவர்களை கேலி செய்து, இழிவுபடுத்தி புறக்கணித்தாலொழிய தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது என்ற நிலை அது. இன்றைய இணையச் சூழலில் பார்த்தால் இளையதலைமுறையினர் உறுதியான உயர்விழுமியங்களை முன்வைத்து வாழ்ந்த அனைவரையும் இழிவு படுத்துவதை ஒருவகையான புரட்சித்தனம் என்ற பாவனையில் செய்துவருவதைக்காணலாம். இது சென்ற காலத்திலிருந்து விடுபட்டுக்கொள்வது மட்டும் அல்ல, விழுமியங்களிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் கூட. தன்னலத்திற்காக எதையும் செய்யலாம் என்று தனக்குத்தானே ஒரு அனுமதியைக்கொடுத்துக்கொள்ளும்பொருட்டு செய்யப்படும் ஒரு கழைக்கூத்தாட்டம் இது. இன்றைய சூழலில் சென்ற தலைமுறையின் நெறிசார்ந்த வாழ்க்கை கொண்டவர்களை முன்வைக்கும் இந்த நூல் மிக முக்கியத்துவம் அடைகிறது.

இன்னொரு அம்சத்தை சுட்டிக்காட்டியாகவேண்டும். சென்றகாலத்து ஆளுமைகளை அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பைக் கருதாமல் ஏதேனும் சாதி, மத அரசியல் அடையாளங்களைக்கொண்டு சிறுமைசெய்துகொள்ளுதல், புறக்கணித்தல்.  வி.கிருஷ்ணசாமி ஐயர் குறித்து இந்நூலில் விரிவான ஒரு கட்டுரை உள்ளது. தமிழக வரலாற்றில் ஒரு நிலையிலும் தவிர்க்கப்பட முடியாதவர் வி.கிருஷ்ணசாமி ஐயர். சுதந்திர இந்தியாவின் அரசியல்சட்ட வரைவென்பது அதற்கு முன்னரே இருநூறு ஆண்டுகளாக இங்கு நிகழ்ந்துவந்த சட்ட உருவாக்கத்தின் ஒரு முதிர்வுநிலை என்று சொல்லாலாம்.

இந்தியாவிற்கு அதற்கு முன்னால் இருந்தது மரபான நெறிகள்தான். அவை குலநீதியாகவும் வட்டாரநீதியாகவும் மதக்கட்டுப்பாடுகளாகவும் ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும்தான் இருந்தன. அவற்றில் எது நீதி எது வெறும் வழக்கம் என்று பிரிப்பது கடினம். அந்த அதிகாரம் அரசர்கள், குலத்தலைவர்கள், மதத்தலைவர்கள் கையில்தான் இருந்தது.இந்தியாவில் பொதுநீதிமுறையை பிரிட்டிஷ் ஆட்சி கொண்டுவந்தபோது பொதுச்சட்ட வரைவை உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகியது. மரபான நீதிநூல்களையும், மதநெறிகளையும் ஒருபக்கம் கொண்டு மறுபக்கம் பிரிட்டிஷ் பொதுச்சட்டத்தை இன்னொரு பகுதியாக எடுத்துக்கொண்டு இந்தியப் பொதுச்சட்டம் உருவாக்கப்பட்டது பல்லாயிரம் வழக்குகளினூடாக சிறிது சிறிதாக அது மேம்படுத்தப்பட்டு, திருத்தப்பட்டு ,விரிவாக்கப்பட்டுத்தான் இந்தியாவுக்குரிய சட்டம் வந்தடையப்பட்டது.

இந்த சட்ட உருவாக்கத்தில் ஆரம்ப கால சட்ட மேதைகள் அளித்த பங்களிப்பென்பது நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டியது.  இந்தியச் சொத்துச்சட்டம், தனிச்சட்டத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்களித்தவர் வி. கிருஷ்ணசாமி ஐயர். திருவாரூரில் பிறந்து தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த முத்துசாமி ஐயர் இன்னொரு பெரும்பங்களிப்பாளர். இவர்களைப்பற்றிய வரலாறுகள் அரசியல் காரணங்களுக்காக பிற்காலத்தில் மறைக்கப்பட்டன, மறக்கவும்பட்டன. அவர்கள் பிறந்த சாதி மீது அரசியல் காரணங்களால் உருவாக்கப்பட்ட காழ்ப்பு இன்றும் தொடர்கிறது.

 

ஜஸ்டிஸ் வி கிருஷ்ணசாமி அய்யர்
ஜஸ்டிஸ் வி கிருஷ்ணசாமி அய்யர்

வி.கிருஷ்ணசாமி ஐயர் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் ஒருபகுதியாக விளங்கியவர். சென்னையில் காங்கிரஸ் மாநாடுகளை நடத்தியவர் .பாரதியின் நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரியும் சென்னை மியூசிக் அகாடமியும் உருவாவதற்கு காரணமாக அமைந்தவர் .அவருடைய மகன் கி. சந்திரசேகரன் தமிழின் ஆரம்பகாலச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். தன்னை தொடக்ககாலத்தில் பாதித்த ஆசிரியர் அவர் என சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். தந்தையின் வரலாறை அவர் ஜஸ்டிஸ் வி. கிருஷ்ணசாமி ஐயர் என்ற பெயரில் எழுதி கலைமகள் வெளியீடாக வந்துள்ளது. இளமையில் அந்நூலை நான் படித்திருக்கிறேன். அதேபோல முத்துசாமி ஐயர் அளித்த கொடை முக்கியமானது.

அவர்களுடைய அரசியல் தரப்போ அல்லது அவர்களின் மத நம்பிக்கையோ அவர்களின் சட்டத்துறைப் பங்களிப்பை மறைக்காமலிருய்க்கையில்தான் அறிவியக்கம் முறையானதாக இருக்கமுடியும். இந்நூல் சென்ற ஐம்பதாண்டுகாலத்தில் மறைக்கப்பட்ட அந்த ஆளுமைகளை நினைவுறுத்துகிறது. பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது, ஆனால் அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை. உதாரணம் எல்.சுப்ரமணிய அய்யர். ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின் மாணவர். பிரம்மஞான சங்கத்தின் முதன்மையான நிர்வாகிகளில் ஒருவர். தலித் கல்விக்காக முதன்மையான பணிகளை பிரம்மஞான சங்கம் முன்னெடுத்தபோது உடனிருந்தவர்.

மீண்டும் மீண்டும் இந்நூல் அளிக்கும் சிறு சிறு மின்னல்களையே நினைவில் நிறுத்திக்கொள்கிறேன். கே பாஷ்யம் அவர்களின் வரலாற்றில் சென்னையில் இன்றும் பாஷ்யம் பஷீர் அகமது தெரு என்றிருக்கும் ஒரு தெருவுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதை ஆசிரியர் சொல்கிறார் இருவரும் ஒரே தெருவில் இருந்திருக்கிறார்கள். இயல்பாக நிகழ்ந்த இது ஒரு மத ஒற்றுமைக்கான அடையாளமாக மாறியிருக்கிறது. திருவிகவுடன் சேர்ந்து விதவை மறுமணத்துக்காக உழைத்த டி.சதாசிவ ஐயரின் பெயரைப்படித்ததும் திரு.வி.கவின் எனது வாழ்க்கை செலவில் என் சரித்திரத்தில் அவரைப்பற்றிய குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன.

சென்ற நூற்றாண்டின் சட்டதுறையின் வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்கு செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பும் ஆக உள்ளது இந்த நூல். வழக்கமாக தமிழ் சூழலில் எழுதப்படும் நூல்களில் பெரும்பாலானவை பொதுவெளியில் ஏற்கனவே புழங்கும் தகவல்களை திரும்ப எடுத்து வேறொரு பாங்கில் அடுக்கி வழக்கமான அரசியல்பார்வை ஒன்றை முன்வைப்பவையாகவே இருக்கின்றன. மூலத்தகவல்களைத் தேடித் திரட்டி நூல் எழுதுவதென்பது மிக மிக அரிய ஒன்று .அத்தகைய நூல்கள் வாசகனுக்கு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கின்றன. எழுத்தாளனுக்கு அவன் புனைவிலக்கியத்தின் வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை அளிக்கின்றன.

வரலாறு என்பது நம்மால் தொகுத்து தொகுத்து கூர்மைப்படுத்தப்பட்டுக்கொண்டே செல்லப்படும் நிகழ்வுகளின் கட்டமைப்புதான். முதன்மையான நிகழ்வுகள் மட்டும் நினைவில் நிறுத்தப்பட்டு பிற காலப்போக்கில் மறக்கப்படுகின்றன. முதன்மையான நிகழ்வுகள் என்பவை யாவை, அவை முதன்மையான நிகழ்வுகள் என்று எவர் எந்த அடிப்படையில் முடிவு செய்கிறார்கள்? 2000-ம் ஆண்டு முடிவின்போது ஆங்கிலஇதழ் ஒன்று இரண்டாயிரம் ஆண்டுகளின் நிகழ்வுகள் என்று பட்டியலிட்டிருந்தது. அதை மலையாள மனோரமா ஆண்டிதழுக்காக நான் மொழியாக்கம் செய்தேன். காண்டர்பரி தேவாலயத்தில் புதிய கார்டினல் பதவியேற்பு ஒரு முக்கிய நிகழ்வாகவும் அதற்கு இணையான முக்கியமான நிகழ்வு சீனாவில் ஒரு அரசவம்சம் தொடங்குவதாகவும் இருந்தது. அந்த பட்டியலில் எழுபது சதவிகித நிகழ்வுகள் ஐரோப்பாவுக்குள் நிகழ்ந்தவை

எப்போதும் ஆதிக்கத்தின் அடிப்படையில், ஓங்கிநின்றிருக்கும் கருத்தியலின் அடிப்படையில் தான் வரலாற்றுக் கட்டுமானம் நிகழ்த்தப்படுகிறது. அந்த பெரு வரலாற்றை அல்லது பொது வரலாற்றை மறுப்பவை நுண்வரலாறுகள். விடுபட்ட நிகழ்வுகளைத் தொகுத்து உருவாக்குபவை. புனைவிலக்கியம் எப்போதும் அதைத்தான் செய்கிறது. அதற்கிணையான ஒரு பணியை இன்று இதழியல் செய்கிறது. தமிழக சமூக,அரசியல் வரலாற்றில் விடுபட்ட நூற்றுக்கணக்கான இடைவெளிகளை நிரப்பும் ஒரு சிறிய நூல் இது. கோமல் அன்பரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கோமல் அன்பரசன் எழுதி சூரியன்பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் ‘தமிழக நீதிமான்கள்’ என்னும் நூலுக்கான முன்னுரை

***

 

 

 

முந்தைய கட்டுரைசீ முத்துசாமி பற்றி பாலமுருகன்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25