வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14

பகுதி இரண்டு : பெருநோன்பு – 8

blவிகர்ணனின் துணைவி தாரை பானுமதியின் அறைவாயிலில் நின்றிருந்தாள். அகலத்திலேயே அசலையைக் கண்டதும் அணிகள் குலுங்க ஓடி அணுகி “அக்கையே, தங்களை அரசி இருமுறை உசாவினார்” என்றாள்.

அசலை களைத்திருந்தாள். அன்று காலைமுதலே அவளை பெருவிசையுடன் இயக்கிய உள்ளாற்றல் சற்றுமுன் தன் அறையிலிருந்து கிளம்பிய கணம் ஏனென்றறியாமல் முற்றிலுமாக வடிந்துமறைய நின்றிருக்கக்கூட முடியாமல் உடல் எடைகொண்டு இருபுறமும் நிலையழிந்து தள்ளாடியது. மீண்டும் சென்று மஞ்சத்தில் படுத்து விழிகளை மூடிவிட வேண்டுமென்று தோன்றியது. புற உலகென சூழ்ந்திருக்கும் காட்சிகளிலிருந்தும் ஓசைகளிலிருந்தும் முழுமையாக அவள் அகம் தன்னை விடுவித்துக்கொண்டது. அந்த விடுபடல் நிகழ்ந்த கணமே அனைத்தும் பொருளற்றவையாயின. பொருளற்றவற்றை உள்ளம் விலக்கத்தொடங்கி மேலும் சற்று நேரத்தில் அவள் எதையும் அறியாதவளானாள். அவள் கால்களே நடந்துகொண்டிருந்தன.

பின்னர் அவளது அணுக்கச் சேடி “அரசி” என்று பலமுறை அழைத்தபோதுதான் தான் நின்றுவிட்டிருப்பதை உணர்ந்தாள். அடுத்த அடியை எடுத்து வைப்பது நெடுந்தொலைவை தாவிக்கடப்பதுபோல் தோன்றியது. மலைவிளிம்பில் நின்றிருப்பதுபோல் ஆயம்கூட்டி, கால்பதறி, மூச்சிழுத்து, முழு உளவிசையாலும் காலை உந்தி தூக்கி வைத்து அதை கடந்தாள். அதன் பின் ஒவ்வொரு காலடியையும் உளம் செலுத்தி தூக்கிவைக்க வேண்டியிருந்தது. எங்கு செல்கிறோம் என்றும் எதை விழைகிறோம் என்றும் அவளால் எண்ணிக்கொள்ள இயலவில்லை. பானுமதியின் அறை வரைக்கும் செல்வதற்கு அப்பால் தனக்கென்று இலக்கேதுமில்லை என்று தோன்றியது.

தாரையைப் பார்த்த பின்புகூட முதல் சில கணங்கள் அவள் எவளென்றே புரிந்துகொள்ள முடியவில்லை. அணிகள் குலுங்க, ஆடை நலுங்க, அவள் ஓடி அருகணைந்து மூச்சிரைக்க பேசத்தொடங்கிய பின்னரே அவளை உணர்ந்து தோள்மேல் கைவைத்தாள். “உடல்நலமில்லையெனத் தோன்றுகிறீர்கள்” என்றாள் தாரை. “ஆம், துயில்நீப்பின் களைப்பு” என்றாள் அசலை. சொன்ன பின்னரே அது மெய் என்று தோன்றியது. அவள் முந்தையநாளிரவு முழுக்க துயிலின்றி விழித்து படுத்திருந்தாள். எண்ணங்கள் அவளை மீறி பெருகிச் சென்றுகொண்டிருந்தன, ஒன்றுடனொன்று இணையாத சொற்களாகவும் காட்சிகளாகவும்.

பானுமதியின் முதலறைச்சேடி அறைக்கதவைத் திறந்து வெளிவந்து அசலையைப் பார்த்து “வருக, அரசி. பட்டத்தரசி புறப்படவிருக்கிறார்கள்” என்றாள். அசலை “வா” என்று சொல்லிவிட்டு பானுமதியின் அறைக்குள் நுழைந்தாள். “என்னடி, ஏன் பிந்திவிட்டாய்? அரசர் அவையமர்வதற்காக எனக்காக காத்திருக்கிறார் என்று செய்தி வந்தது. நீயில்லாமல் செல்ல வேண்டாமென்று நான் பொழுதுகடத்தினேன்” என்றாள் பானுமதி. அசலை புன்னகைத்து “நான் அணிகொள்ள சற்று பொழுதாகியது” என்றாள். “அப்படியொன்றும் கருதி அணி செய்ததுபோல் தெரியவில்லையே” என்றபின் “இது சிற்றவை. அரசருடன் இதில் பேரரசரும் பேரரசியும் கிருபரும் துரோணரும் விதுரரும் மட்டுமே கலந்துகொள்கிறார்கள்” என்றாள்.

“ஆம்” என்றாள் அசலை. “பீஷ்ம பிதாமகர் அரசரிடம் தனது முடிவை இன்று அறிவிப்பார் என்று அவருடைய மாணவர் சொன்னார். நீ கூறியதுபோல அந்த முடிவு நமக்குகந்ததே என அவர் எண்ணுவதாகச் சொன்னார். இந்த அவையிலேயே அரசரை அவரது எண்ணங்களிலிருந்து நம்மால் பின்னிழுக்க முடியும் என்றால் நன்று” என்றாள். அசலை ஒளியற்ற புன்னகையுடன் “பார்ப்போம்” என்றாள். “என்னடி? நேற்று இரவு வரை முழுநம்பிக்கையுடன் இருந்தவள் நீ. இன்று என்ன ஆயிற்று?” என்றாள் பானுமதி. “இல்லை, இப்போதும் நம்பிக்கையுடன்தான் இருக்கிறேன். சற்று தலை வலிக்கிறது. நேற்றிரவு சரியாக துயிலவில்லை” என்று அசலை சொன்னாள்.

அவளை ஐயத்துடன் பார்த்தபின் பானுமதி “கிளம்புக!” என்றாள். அவள் கைகாட்ட சேடியர் மங்கலத்தாலங்களுடன் முன்னால் சென்றனர். நிமித்தச்சேடி சங்கு ஒலித்து அவள் கிளம்புவதை அறிவித்தாள். பானுமதியுடன் அசலையும் தாரையும் இருபக்கமும் நடந்தனர். பானுமதி தாழ்ந்த குரலில் “இன்று பிதாமகரின் கூற்றுக்குப்பின் பிறிதொரு முடிவெடுக்க அரசருக்கு சூழல் இருக்காது என எண்ணுகிறேன் துரோணரும் கிருபரும் பிதாமகருடன் நின்றிருப்போமென சொல்லளித்துள்ளார்கள். பேரரசியும் பேரரசரும் போர் தவிர்க்கப்பட்டாகவேண்டுமென்று உறுதி கொண்டிருக்கிறார்கள். நானும் நீயுமிருக்கிறோம். அரசருக்கு உகந்ததைப் பேச இன்று சிற்றவையில் எவரும் இருக்கப்போவதில்லை” என்றாள். மேலும் குரல் தழைத்து “இதை எண்ணியே அங்கர் இந்த அவைக்கு வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.

அசலை “காந்தாரரும் கணிகரும் வரமாட்டார்களல்லவா?” என்றாள். “ஆம், அவர்களிருவரும் இன்று நகர்புகும் மாளவ அரசரை வரவேற்கும்பொருட்டு கோட்டை முகப்புக்கு சென்றிருக்கிறார்கள். சிற்றவை முடிந்த பின்னரே இப்படி ஒன்று நடந்தது காந்தாரருக்கு தெரியவரும்” என்றாள் பானுமதி. அசலை மீண்டும் நீள்மூச்செறிந்து “பார்ப்போம்” என்றாள். “உன்னுடைய சோர்வு எனக்கும் தொற்றிக்கொள்கிறது. இந்நாளில் இவ்வரண்மனையிலுள்ள அனைவருமே உளச்சோர்வு கொள்வதற்கான உந்துதலுடன் இருக்கிறார்கள். அஸ்தினபுரியில் இன்று சுட்டுவிரலால் உந்தி களிறுகளை சாய்த்துவிடமுடியும் என்று நேற்றுமுன்னாள் ஒரு விறலி பாடினாள். ஆம் என்று நான் எண்ணிக்கொண்டேன்” என்று பானுமதி சொன்னாள்.

“நான் சோர்வுறவில்லை, அக்கையே. நன்று நிகழுமென்றே எண்ணுகிறேன்” என்று அசலை சொன்னாள். அச்சொற்களை அவள் தனக்கென்றே சொல்லிக்கொண்டாள். ஆம், சோர்வு கொள்வதற்கு என்று எதுவுமில்லை. போரைத் தவிர்க்கவேண்டுமென்பதில், அது முதன்மையாக குலப்பிதாமகராகிய தனது கடமை என்பதில், பிதாமகர் உறுதி கொண்டிருப்பதாக விஸ்வசேனர் அவளிடமும் சொன்னார். அவையில் பிறிதொன்றை பீஷ்மர் சொல்ல வாய்ப்பில்லை அதன் பின்னர் அரசர் எந்நிலைப்பாடும் எடுக்க முடியாது. பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அஸ்வத்தாமனும் இன்றி துரியோதனர் களமிறங்கமுடியாது.

அங்க நாட்டரசரின் ஆற்றலை அனைவரும் அறிவர் என்றாலும் அவர் படைமுகம் நின்றால் ஷத்ரிய அரசர்கள் பின்நிற்பார்கள் என்று சொல்ல முடியாது. அவருடைய குலம் அவர்களுக்கு ஏற்புடையதல்ல. மேலும் வேதச்சொல் காக்க வில்கொண்டு எழுவதாக ஆரியவர்த்த மன்னர்கள் கொண்டுள்ள தன்விளக்கம் அங்கர் களம் முன் நிற்பதனாலேயே பொய்யென்றாகும். அவர் நாகவேதத்தின் காவலராக சொல்லுறுதி கொண்டவரென்பது செவியுலாச் செய்தியாக அனைவரும் அறிந்ததே.

எந்தக் கோணத்தில் எண்ணினாலும் பிறிதொன்று நிகழ வாய்ப்பில்லை. ஆனால் எண்ணி எண்ணி உள்ளம் முன்செல்கையில் அறியாது பின்னகர்ந்துகொண்டிருக்கும் ஆழம் எதை அறிந்தது? அதற்கென்று வேறு புலன்கள் உள்ளனவா என்ன? அசலை மீண்டும் பெருமூச்சுவிட்டாள். உளச்சுமை ஏன் பெருமூச்சை எழுப்புகிறது? உள்ளிருக்கும் கரிய நாகமொன்றின் சுருளவிழும் சீறல்போலும் அது.

சிற்றவை வாயிலில் நின்றிருந்த விகர்ணன் பானுமதியைக் கண்டதும் கைகூப்பி “வருக அரசி, தங்கள் வரவை அவைக்கு அறிவிக்கிறேன்” என்றான். பானுமதி “நன்று திகழ்க!” என்று வாழ்த்தினாள். அவளுக்கு முன் மங்கலத்தாலத்துடனும் வலம்புரிச்சங்குடனும் நின்றிருந்த சேடியர் இருபுறமும் தலைவணங்கி அகன்றனர். விகர்ணன் உள்ளே சென்று அவள் வரவை அறிவித்தபின் கதவைத் திறந்து பணிந்து நிற்க கைகளைக் கூப்பியபடி பானுமதி அறைக்குள் நுழைந்தாள். அசலையும் தாரையும் கைகளைக் கூப்பியபடி பின்னால் நுழைந்தனர்.

நீண்ட சிற்றவைக்கூடத்தில் மான்தோலிட்ட பீடங்களில் கிருபரும் துரோணரும் அமர்ந்திருந்தனர். அவள் வருகையைக் கண்டதும் அவர்கள் இருவரும் எழுந்து கைகூப்பினர். அவர்களைப் பணிந்து வணங்கி வாழ்த்துபெற்று வலப்பக்கமாக ஒதுங்கி நின்றாள். அவளருகே அசலையும் தாரையும் நின்றனர். பானுமதி அவை புகுந்த செய்தி சங்கொலியாக அறிவிக்கப்பட்டதும் அருகிலிருந்த அறையிலிருந்து துரியோதனன் துச்சாதனன் தொடர கைகூப்பியபடி அறைக்குள் நுழைந்தான். துரோணரையும் கிருபரையும் குனிந்து கால்தொட்டு சென்னிசூடி வணங்கியபின் தன் அரியணைப்பீடத்தருகே கூப்பிய கைகளுடன் அமர்ந்தான்.

பிறிதொரு சங்கொலி எழ மறுபக்க அறையிலிருந்து சஞ்சயனின் கைகளைப் பற்றியபடி திருதராஷ்டிரரும் சத்யசேனையால் வழிநடத்தப்பட்டு காந்தாரியும் உள்ளே நுழைந்தனர். துரியோதனனும் பானுமதியும் சென்று திருதராஷ்டிரரையும் காந்தாரியையும் கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றனர். கிருபரையும் துரோணரையும் வணங்கியபின் திருதராஷ்டிரர் தனக்குரிய பெரிய பீடத்தில் அமர்ந்தார். அவர் அருகே காந்தாரி அமர்ந்தாள். துரியோதனன் அரியணைப்பீடத்தில் அமர, அருகமைந்த பீடத்தில் பானுமதி அமர்ந்தாள். துரியோதனனுக்கு வலப்பக்கம் கைகளைக் கட்டியபடி துச்சாதனன் நின்றான்.

அவையமைப்பாளராகிய கனகர் கைகாட்ட ஏவலர் தாலங்களில் இன்நீரும் வாய்மணமும் கொண்டுவந்து அனைவருக்கும் அளித்தனர். எவரும் ஓரிரு முறைச்சொற்களுக்கு அப்பால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. உடலசைவுகளின் ஒலி மட்டுமே அவைக்குள் நிறைந்திருந்தது. அசலை அந்த அறை தனக்குள் என எதையோ முணுமுணுத்துக்கொண்டிருப்பதாக எண்ணினாள். கண்ணுக்குத் தெரியாத எவரோ அங்கு உலவுவதின் ஓசை என்று பின்னர் தோன்றியது. அறியாத பேருருவங்கள் கைகளை கோத்துக்கொள்கின்றன. உடல்கள் உரச, மூச்சொலிகள் ஒன்றையொன்று கலைக்க, விழிகளை இணைத்துக்கொண்டு மெல்ல சுற்றிவருகின்றன. மாபெரும் மற்போரொன்றின் தொடக்கம் என.

வாய்மணத்தை மென்றபடி திருதராஷ்டிரர் “விதுரன் எங்கே?” என்றார். கனகர் “வந்துகொண்டிருக்கிறார். பிதாமகர் கிளம்பிவிட்டாரா என்பதை உறுதிசெய்துவிட்டு வருவார்” என்றார். துரியோதனன் “காந்தாரர் வருகிறாரா?” என்றான். கனகர் “அவர் மாளவரை எதிர்கொள்வதற்காக கோட்டை முகப்புக்கு சென்றிருக்கிறார். மாளவருக்குரிய அரண்மனைக்கு அவரை கொண்டுசென்று அமர்த்திவிட்டு அங்கிருந்து கணிகரை அழைத்துக்கொண்டு வருவார்” என்றார். அந்த உரையாடலும் அங்கிருந்த தயக்கத்தை உடைக்கவில்லை. மேலும் சற்று அமைதி நீடித்தது.

துரியோதனன் “இச்சிற்றவைக் கூட்டம் எதன்பொருட்டு? பிதாமகர் என்னிடம் எதையோ சொல்ல விழைவதாக எனக்கு சொல்லப்பட்டது” என்றான். கனகர் “அதை அமைச்சரே தங்களிடம் உரைப்பார், அரசே. இதோ, அவர் வந்துவிட்டாரென்றே எண்ணுகிறேன். நான் அழைத்து வருகிறேன்” என்றபின் கதவைத் திறந்து வெளியே சென்றார். அசலை தன் உள்ளம் மெல்ல அச்சம்கொள்ளத் தொடங்குவதை உணர்ந்தாள். அச்சமூட்டும் எதையோ அவள் விழிகளுக்கு அப்பாலிருக்கும் தன்னுணர்வு ஒன்று கண்டுவிட்டிருந்தது. அதை எங்கு கண்டேன் என அவள் விழிகள் வியந்தபடி, பதற்றமடைந்தபடி அறையை சுற்றிவந்தன. ஒவ்வொரு முகங்களாகத் தொட்டு ஒவ்வொரு உடல்களாக வருடி எதையும் காணாமல் சலித்து மீண்டும் மீண்டும் சுழன்றலைந்தன.

கதவு திறந்து உள்ளே வந்த கனகர் தலைவணங்கி “அமைச்சரும் பிதாமகரும் காந்தாரரும் அவைபுகுகிறார்கள், அரசே” என்றார். பானுமதி திகைப்புடன் அசலையைப் பார்க்க கால்கள் தளர்ந்து அசலை சற்று பின்னடைந்து சுவருடன் சாய்ந்து கொண்டாள். துரியோதனன் “நன்று, அனைவருமே வந்துவிட்டார்கள். இனி தடையேதுமில்லை. அவை நிகழட்டும்” என்றான். கனகர் தலைவணங்கி வெளியே சென்று முகமன் கூறி வரவேற்று பீஷ்மரையும் சகுனியையும் விதுரரையும் உள்ளே அழைத்துவந்தார்.

விதுரர் அறைக்குள் நுழைந்த முதற்கணமே துரோணரை நோக்கி விழிவிலக்கிக்கொள்வதை அசலை கண்டாள். உடனே அவளுக்கு தன் உளம் தொட்ட அந்த செய்தியென்ன என்று புரிந்தது. துரோணரின் விரல்கள் ஒன்றையொன்று தட்டிக்கொண்டிருந்தன. அது அவர் அறிந்திருக்கிறாரென்றும் எதிர்பார்க்கிறாரென்றும் அதில் மகிழ்கிறாரென்றும் காட்டின. அங்கு நிகழப்போவதென்ன என்று ஐயமின்றி அவள் ஆழத்தில் உறையும் பேருருக்கொண்ட பிறிதொன்று அறிந்துவிட்டிருந்தது. அவள் உள்ளத்திலிருந்து பதற்றம் முழுமையாக விலகியது. அதுவரை இருந்த சோர்வும் அகல கைவளைகள் ஒலிக்க மார்பில் கைகளை கட்டிக்கொண்டு தயக்கமற்ற விழிகளால் அவைநுழைந்த பீஷ்மரையும் சகுனியையும் பார்த்துக்கொண்டு நின்றாள்.

பீஷ்மர் கைகூப்பி நிற்க துரோணரும் கிருபரும் எழுந்து கைகூப்பி “பிதாமகருக்கு வணக்கம். தங்கள் சொல்கேட்கும் இந்நாள் சிறப்புறுக!” என்று முகமன் உரைத்தனர். திருதராஷ்டிரரும் காந்தாரியும் எழுந்து கைகூப்பி “வாழ்த்துங்கள், பிதாமகரே” என்றனர். வலக்கையால் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி பின்னர் அப்பால் நின்றிருந்த அரசியரை நோக்கி வாழ்த்தும் முகமாக கைகாட்டிவிட்டு அவர் தன் பீடத்தில் அமர்ந்தார். துரியோதனனும் பானுமதியும் அவர் கால்களைத் தொட்டுவணங்கி வாழ்த்து கொண்டனர். சகுனி துரோணரையும் திருதராஷ்டிரரையும் வணங்கிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.

விதுரர் அவை நடுவே நின்று “பிதாமகர் பீஷ்மரின்பொருட்டு இந்தச் சிற்றவை கூட்டப்பட்டுள்ளது. சில முதன்மை முடிவுகளை அவர் எடுத்திருப்பதாகவும் இந்த அவையில் அவற்றை அரசருக்கும் பிறருக்கும் உரைக்க விரும்புவதாகவும் கூறினார். இங்கு எடுக்கும் முடிவுக்குப் பின்னரே அரசப் பேரவையில் இதை முன்வைக்க வேண்டுமென்று விழைந்தார். நலம் திகழ்க!” என்றார். கனகரும் சஞ்சயனும் தலைவணங்கி வெளியே சென்றனர். விதுரரும் திரும்ப திருதராஷ்டிரர் “நீ எங்கே செல்கிறாய், மூடா?” என்றார். விதுரர் “இது அரசகுடியினருக்குள் மட்டும் நிகழும் உரையாடலாக அமையட்டும் என்று பிதாமகர் விரும்பியமையால்…” என்றார்.

“அதைத்தானே சொன்னேன்? நீயின்றி எப்படி அவை முழுமையடையும்? சொற்பொருளை நீ விளக்காமல் வேறு யார் செய்வார்கள்?” என்றார் திருதராஷ்டிரர். “அறிவிலி…” என தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டு தலையை அசைத்தார். “இருக்கிறேன், மூத்தவரே” என்றார் விதுரர். “எதையுமே சொன்னால் மட்டும் புரிந்துகொள்… மூடன்” என்றார் திருதராஷ்டிரர். “இங்கே வந்து என் அருகே அமர்க!” விதுரர் “இல்லை மூத்தவரே, நான் இங்கு நின்றுகொள்கிறேன்” என்று சொன்னார்.

அசலை அங்கு நிகழ்ந்த முறைமைகளையும் வணக்கங்களையும் விழியசைவுகளால் நோக்கிக்கொண்டு நின்றாள். அவை ஒவ்வொன்றும் முற்றாக வகுக்கப்பட்டிருந்தன. மீண்டும் மீண்டும் ஆற்றப்பட்டு பழுதற்ற அசைவுகள் கொண்டிருந்தன. ஒவ்வொரு சொல்லும் பல்லாயிரம் முறை கூறப்பட்டதன் முழுமை பெற்றிருந்தன. ஒவ்வொன்றும் அத்தனை பழகியதாக பிழையற்றதாக மாறுந்தோறும் அவை குறிக்கும் உறவுகள் மேலும் சிக்கலானவையாக, உள்மடிப்புகள் மிக்கவையாக மாறிக்கொண்டிருந்தன. முதலில் இன்சொற்கள் அங்குள்ள சிடுக்குகள் அனைத்தையும் மறைப்பவையாக ஆயின. பின்னர் அவ்வுள முடிச்சுகளை ஒவ்வொருவரும் பிறருக்குணர்த்தும் அடையாளங்களாக உருமாற்றம் பெற்றுவிட்டிருந்தன.

முறைமைகள் அனைத்தும் முடிந்த பின்னர் சொற்கள் எழவில்லை. ஒவ்வொருவரும் தங்களை அங்கு நிகழ்த்துவதைப்பற்றி எண்ணியபடி, பிறரை கூர்ந்தபடி, தங்கள் அறைகளின் வாயில்களுக்கு அப்பால் தயங்கி நின்றிருந்தனர். எத்தனை நேரம் அது நீளுமென்று பார்க்கலாமென்று அசலை எண்ணினாள். முதலில் அவ்வமைதியை பீஷ்மரே உடைப்பார் என்று அவள் அறிந்திருந்தாள். அங்கிருந்தவர்களில் முறைமைகளுக்கு அப்பால் செல்பவர் அவர் ஒருவரே. தான் கிளம்பிவந்த கங்கர்நாட்டுக் காடுகளில் தன் பெரும்பகுதியை இன்னமும் வைத்திருப்பவர். தன்னை முற்றிலும் மறைத்து பிறிதொருவராக காடுகளிலும் பாலைகளிலும் அறியா நகர்களிலும் அலைபவர்.

காந்தாரியின் மூச்சொலி கேட்டது. கிருபர் அசைந்தமர்ந்தபோது அவரது கை பீடத்தின் கைப்பிடியில் முட்டிய ஓசை எழுந்தது. மீசையை மெல்ல நீவிவிட்ட துரியோதனனின் கங்கணம் குலுங்கியது. பானுமதியின் அணிகள் மெல்ல அசைந்து ஒலித்தன. சாளரத் திரைச்சீலை காற்றில் இருமுறை படபடத்து அமைந்தது. அப்பால் தோட்டத்தில் பறவைகளின் ஓசைக்கு நடுவே அறியாத பறவையொன்றின் நீளொலி எழுந்தமைந்தது. மிகத் தொலைவில் உலோக ஓசையொன்று செவித்தீற்றலாக கடந்து சென்றது. எவரோ எங்கோ மழுங்கிய குரலில் எதையோ ஆணையிட்டனர்.

அசலை மீண்டும் துரோணரை பார்த்தாள். அவர் விழிவிலக்காது பீஷ்மரையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரை தான் அறிந்துவிட்டேன் என்பதை அவருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அசலை விரும்பினாள். அவர்மேல் விழிநிறுத்தி நின்றாள். நோக்கை உணர்ந்து தடுமாறி அவளை நோக்கிய துரோணர் அவள் விழிகளை சந்தித்ததும் பதறி திரும்பிக்கொண்டார். ஒன்றுடன் ஒன்று கோக்கொண்டிருந்த விரல்கள் விலகின. இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியைப் பற்றி நடுங்கும் விரல்களால் அதை வருடத் தொடங்கினார். மீண்டும் அவர் நோக்கு வந்து அசலையின் கண்களை சந்தித்து மீண்டது. மூச்சு எழ அதை அடக்கி தாடியை விரல்களால் சுழற்றி நீவியபடி கண்களை சரித்தார். அவர் முகம் சினம்கொண்டதுபோல, நாணுவதுபோல சிவந்தது.

பீஷ்மர் சற்று முன்னால் சரிந்த ஓசை கேட்டு அனைவரும் அவரை நோக்கினர். அவர் “இந்த அவையில் நான் கூறுவதற்கு ஒன்றேயுள்ளது. நேற்று பேரரசியும் அதன்பின் இளைய அரசியும் வந்து என்னை பார்த்தனர். இப்போரை நிறுத்தவேண்டுமென்றும் இது என் கொடிவழியினரை பேரழிவுக்கு இட்டுச் செல்லுமென்றும் அறிவுறுத்தினர். இப்போரில் குடித்தலைவனாகவும் நாற்படை நடத்துபவனாகவும் நான் கலந்துகொள்ள முடியாதென்று இங்கு அறிவிக்க வேண்டுமென்று கோரினர். நேற்று இரவு முழுக்க அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார்.

“என்னை எவ்வாறு நான் வனைந்துகொள்கிறேன் என்பது முதன்மையான வினா என்று இன்று புலரியில் கண்டடைந்தேன். இளஅகவையில் வரலாற்றுத்தலைவனாக நான் என்னை எண்ணிக்கொண்டேன். நானறிந்த மெய்மையின் அடிப்படையில் வரலாற்றை திசைதிருப்ப வேண்டுமென்றும் மாற்றியமைக்க வேண்டுமென்றும் கற்பனை செய்தேன். நீங்கள் அனைவரும் அறிந்ததுபோல் அம்பெய்து ஆற்றுக்கு அணைகட்ட முயன்றவன் நான். கங்கையை அவ்வாறு அணைகட்ட இயலாதென்று இந்த அகவையில் உணர்கிறேன். கங்கையை அம்பெய்து நிறுத்தும் ஆற்றல்கொண்ட தெய்வங்கள்கூட விண்ணுலாவும் முகில்பெருக்கை நிறுத்த இயலாது.”

“பின்னர் என்னை இக்குடியின் பிதாமகன் என்று எண்ணிக்கொண்டேன். என் கண்ணெதிரில் இவர்களின் வாழ்வழியலாகாதென்ற இலக்கொன்றை முன்வைத்து இதுநாள் வரை வாழ்ந்தேன். அதுவும் என் நெஞ்சுக்கும் அறிவுக்கும் கைகளுக்கும் அப்பாற்பட்டதென்று இப்போது உணர்கிறேன். இன்று என்னை எளிய முதுமகன் மட்டுமே என எண்ணுகிறேன். அதுவாக என்னை நிறுத்திக்கொள்கையிலேயே என்னால் இயன்ற ஒன்றை உறுதியாக இயற்ற முடியும்” என்றார் பீஷ்மர். “அவையீரே, முதுமகனாகிய நான் இரண்டு நெறிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். என் அன்னையரும் தந்தையரும் குலமும் மூதாதையரும் எனக்களித்த ஆணைகளுக்கு முதலில். நான் பிறருக்கு அளித்த சொற்களுக்கு பிறகு. அதையன்றி பிறிதனைத்தையும் என்னிலிருந்து உதிர்த்துவிட முடிவெடுத்தேன்.”

“எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிக்குக் காவலாக படைக்கலமேந்தி துணை நின்றிருப்பேன் என்பது என் அன்னை சத்யவதிக்கும் தந்தை சந்தனுவுக்கும் நான் அளித்த சொல். அதிலிருந்து எதன்பொருட்டும் நான் பிறழ முடியாது. தொல்காலம் முதல் இக்குடி பேணிவரும் நெறிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவன் என்பது நான் என் பிறப்பால் தலைக்கொண்ட கடமை. இங்கு எவரை அரியணை அமர்த்தவேண்டுமென்பது எனது பொறுப்பல்ல. அரியணை அமர்ந்தோருக்குக் காவலென அமைவதே நான் செய்யக்கூடியது. எது குடிமுறையோ அதை பிழையின்றி பேணியாகவேண்டியவன் நான்.”

“குலநெறிகளின்படி இந்த மணிமுடி என் மைந்தன் திருதராஷ்டிரனுக்குரியது. பதினெட்டு ஆண்டுகளுக்கு அவனால் பாண்டுவுக்கு கையளிக்கப்பட்டது. அச்சொல் மூதாதையருக்கும் தெய்வங்களுக்கும் முன் என் விழிசெவி சான்றாக அளிக்கப்பட்டதாகையால் எந்நிலையிலும் மாற்றத்தக்கதல்ல. அவனால் கூட. ஆகவே பதினெட்டாண்டுகள் அகவை நிறைவடைகையிலேயே திருதராஷ்டிரனின் மைந்தன் துரியோதனன் அரியணைக்குரியவனாகிவிட்டான். அவன் கோல்கொண்டு முடிசூடி இங்கு அமர்ந்திருப்பது மாறாத குலநெறிகளின்படியே.”

“ஒரு குடியின் மூத்த மைந்தனே முடிசூட வேண்டுமென்பது தொல்மரபு. ஆனால் அவர்களில் எந்த மைந்தன் முடிசூட வேண்டுமென்று தந்தையர் விரும்புகிறார்களோ அவர்களுக்கே மேலும் உரிமை என்பதும் தொல்மரபே” என பீஷ்மர் தொடர்ந்தார். “குடிமைந்தரில் மூத்தவர் எவர் என்பதும் எளிதில் வகுக்கக்கூடியதல்ல. இன்று ஒருவர் மூத்தவராக இருக்கலாம். உண்மையில் பிறிதொருவரே மூத்தவரென்று பின்னர் தெரியவரலாம். அவ்வாறு தெரியவரும்போதெல்லாம் முடியுரிமை தொடர்ந்து மாற்றப்படுமென்றால் அக்கோல் நிலைபெறாது.”

“ஆகவே அஸ்தினபுரியின் அரசனென அறுதியாக துரியோதனனை நான் ஏற்கிறேன். இனி அதில் எந்த பிறசொல்லுக்கும் இடமில்லை. அவன் அருகே வாளேந்தி நிற்கவும் அவனுக்காக களம்புகவும் உறுதி கொண்டிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். “அவையோரே, எனது சொல் இருமுறை அளிக்கப்பட்டது. முதற்சொல் என் மைந்தனாகிய திருதராஷ்டிரனுக்கு நான் அளித்தது, இறுதி வரை அவனுக்கும் அவன் மைந்தருக்கும் கொடிவழியினருக்கும் உரியவனாக நின்றிருப்பேன் என்று. அவன் ஆணவமனைத்தையும் இழந்து விழியிழந்த வெறும் இளையோனாக அன்று என் முன் வந்துநின்றான். தந்தை என என் உளம் நெகிழ்ந்தது. அச்சொல்லை நான் அவனுக்களிக்கையில் வானும் மண்ணும் சான்றாகுக என்றேன்.”

திருதராஷ்டிரர் விழிகளில் நீர்வழிய கைகூப்பி அமர்ந்திருந்தார். “இரண்டாவது சொல் நான் காந்தாரருக்கு அளித்தது” என பீஷ்மர் தொடர்ந்தார். “அஸ்தினபுரியின் மணிமுடி பாண்டுவுக்கு அளிக்கப்படுகையில் பதினெட்டாண்டுகளுக்குப் பின் அதை நானே பெற்று காந்தார அரசியின் மைந்தனுக்கு அளிக்கிறேன் என்று இளைய காந்தாரருக்கு சொல்லுறுதி அளித்தேன். அதிலிருந்து எந்நிலையிலும் நான் வழுவ இயலாது.” சகுனி தலைவணங்கினார்.

பீஷ்மர் “இவ்விரு சொற்களுக்கும் என் வாழ்வை அளிக்கும் பொறுப்பும் எனக்கு உண்டு. இதற்கப்பால் அஸ்தினபுரியில் அரசுசூழ்தலில் என்ன நிகழ்கிறது என்பதை அறியவோ, வழிநடத்தவோ, முரண் கொள்ளவோ நான் முனையப் போவதில்லை. போர் நிகழவேண்டுமா, நிலம் பகுக்கப்படவேண்டுமா, பிறிதேதும் வழிகள் உண்டா என்பதை இவ்வரசும் அவையும் தங்கள் விருப்பப்படி முடிவெடுக்கட்டும். அதில் ஒருபோதும் ஒரு சொல்லையேனும் நான் உரைக்கப் போவதுமில்லை. இனி எவரும் இதன்பொருட்டு என்னை அணுகவேண்டியதும் இல்லை” என்றார்.

நெடுநேரம் அவை அமைதியில் உறைந்திருந்தது. வேறெங்கோ சென்று மீண்டு கலைந்து எழுந்து அவர் அவையை வணங்கி விதுரரிடம் தான் வெளியேறுவதாக கைகாட்டிவிட்டு நடந்தார். விதுரர் கதவைத் தட்ட வெளியே இருந்து கனகர் கதவை திறந்தார். பீஷ்மர் வெளியே சென்று கதவு மூடப்பட்டதும் துரோணர் எழுந்து “அரசே, நாங்களும் பிறிதொன்று சொல்வதற்கில்லை. அரசுசூழ்தலில் எந்நிலையிலும் நானும் கிருபரும் தலையிடுவதாக இல்லை. பீஷ்ம பிதாமகரின் வழி எதுவோ அதுவே எங்களுடையதும்” என்றபின் தலைவணங்கினார். கிருபரும் உடன் எழுந்து தலைவணங்க விதுரர் கதவை தட்டினார். வெளியே இருந்து கனகர் கதவை திறக்க அவர்கள் வெளியேறினர்.

மலர்ந்த முகத்துடன் துரியோதனன் “முன்னரே அறிந்தது என்றாலும் பீஷ்ம பிதாமகர் இத்தனை தெளிவாக தன் நிலைபாட்டை அறிவித்துவிட்டபின் இதைப்பற்றி நாம் பிறிதொன்றும் பேசவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதை முறையாக பேரவையிலேயே அறிவித்துவிடலாம்” என்றான். சகுனி “ஆம், அவருடைய சொற்கள் இக்குடியை ஆளும் மூதாதை நாவிலிருந்து எழுந்தவைபோல. இந்நகர்மேல் அவை திகழ்க!” என்றார். தாரை அசலையின் செவியில் மெல்ல “தமக்குத்தாமே நடித்துக்கொள்வதில் மானுடர் பல்லாயிரமாண்டு தேர்ச்சி கொண்டவர்கள்” என்றாள்.

முந்தைய கட்டுரைவைரமுத்துவுக்கு ஞானபீடமா?
அடுத்த கட்டுரைபயணத்தகவல்களுக்காக ஒரு தளம்