விஷ்ணுபுரம் விருதுவிழா விவாத அரங்கில் மலேசியாவின் கல்விநிலை குறித்த ஒரு பேச்சு உருவானது. அங்கே ஆரம்பக்கல்வி தமிழில் அளிக்கப்படுகிறது, புனைவிலக்கியம் கல்விநிலைகளில் கற்பிக்கப்படுகிறது என்னும் இருசெய்திகளை வரவேற்று பாவண்ணன். பேசினார். அவர் கடிதத்திலும் அதைக் குறிப்பிட்டிருந்தார் விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11
அதன் முழுமையான பின்னணியை நவீன் அவருடைய இக்குறிப்பில் விளக்குகிறார்
ஜெ
மலேசியத் தமிழ்க்கல்வி சூழல்; பி.எம்.மூர்த்தி மற்றும் விதிசமைப்பவர்கள்
அன்பான ஜெ, எழுத்தாளர் பாவண்ணன் கடிதத்தை வாசித்தேன். மலேசியத் தமிழ்க்கல்வி சூழல் குறித்த அவரது எண்ணம், விஷ்ணுபுரம் விருது விழாவின் மலேசிய அரங்கில் டாக்டர் சண்முகசிவா தமிழ்க்கல்வி குறித்து வழங்கிய எளிய குறிப்புகளால் உண்டானது. அது முழுமையடையாமல் இருந்ததால் பங்கேற்பாளர்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதை இக்கடிதம் வழி உணரமுடிந்தது. அவ்வரங்கிலேயே அதில் சில திருத்தம் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் எளிமையாக இணையத்தில் கிடைக்கக்கூடிய வரலாற்றுத் தகவல்கள், புள்ளி விபரங்கள் அவ்வரங்கின் தீவிரத்தைக் குறைத்துவிடக்கூடும் என இலக்கிய நகர்ச்சி கல்விச் சூழலில் இருந்து உருவாவதில்லை எனும் மற்றுமொரு தளத்துக்குத் தாவிச் சென்றுவிட்டேன். அது தவறு. அவ்வரங்கிலேயே முழு விளக்கங்களைக் கொடுத்திருக்கலாம்.
எளிமையாக விளக்குவதென்றால் 1816இல் பினாங்கில் இருந்த ஆங்கிலப் பள்ளியில் தமிழ் வகுப்புகள் தொடங்கி 1957ஆம் ஆண்டு ரசாக் கல்விச் சட்டத்தின் வழி தமிழ், சீன இனத்தவரின் பள்ளிகள் ‘தேசிய மாதிரி’ என புதிய வடிவத்தில் அரசு பள்ளிகளாயின. அப்போது மலேசியாவில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தது. இன்று 523 ஆகக் குறைந்துள்ளது. இது ஏதோ அரசின் சதிச்செயல்போல ஒரு தரப்பினர் பொங்கி எழுவதுண்டு. தோட்டப்புறங்கள் அழிக்கப்பட்டது, தோட்டங்கள் தனியார் நிலமானது, தரமற்ற – ஆபத்தான தமிழ்ப்பள்ளிகளின் நிலை, குறைந்த மாணவர்களைக்கொண்ட பள்ளிகள் என பல பள்ளிகள் மூடப்பட்டு கூட்டுத் தமிழ்ப்பள்ளிகளாயின என்பதே உண்மைநிலை. தேசியமொழியும் ஆங்கிலமொழியும் தங்கள் சந்ததியினருக்கு விடிவைக்கொடுக்கும் என கணிசமானவர்கள் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. 888 பள்ளிகள் இருந்தபோது ஐம்பதாயிரமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இம்மாணவர்கள் ஆறாம் ஆண்டு வரை தமிழ் பயில்கின்றனர்.
சிக்கல் அதற்குப் பிறகுதான். சிங்கப்பூர் போல மலேசியாவில் தமிழ் கட்டாய பாடமில்லை. அங்கு தமிழ் மாணவன் உயர்நிலைப்பள்ளி வரை தமிழை பயில்வது கட்டாயம். ஆனால் அங்குத் தமிழ்ப்பள்ளிகள் என தனியாக இல்லை. மலேசியாவில் அப்படி எந்தக் கட்டாயமும் இல்லை. தமிழ்ப் பிள்ளைகளின் ஏறக்குறைய 49 விழுக்காட்டினர் மட்டுமே தமிழ்ப் பள்ளியிலும் ஏனைய 51 விழுக்காட்டினர் மலாய், சீனப் பள்ளிகளிலும் பயில்கிறார்கள். ஒருவேளை தமிழ்ப்பள்ளியின் பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் இடைநிலைப்பள்ளியில் தமிழ்ப்பாடம் பயில்வது மாணவனின் தனிப்பட்ட தேர்வு. அது ஒரு விருப்பப் பாடம். அப்படி விரும்பினால் தமிழ் மொழி, தமிழ் மொழி இலக்கியம் என அரசு தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் தமிழை முதன்மை மொழியாகக்கொண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் போதனா முறை உண்டு. மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் வரை செய்யலாம்.
இந்த அடிப்படையான வரையறைக்குள்தான் எண்ணற்ற உட்சிக்கல்கள் உள்ளன. அதை களைய முனைபவர்களே வருங்கால சந்ததிக்கு இலக்கியத்தைக் கடத்துகின்றன. பொதுவாக அதைப்பற்றிய பேச்சுகள்தான் இங்குக் குறைவு. அண்மைய கணக்கெடுப்பின்படி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 3,800 மாணவர்கள் மட்டுமே இடைநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியம் பயில்கின்றனர். சீன இலக்கியம் போலவே தமிழ் இலக்கியமும் கல்வித் திட்டத்திற்கு அப்பால் உள்ள பாடம். அதாவது இப்பாடத்துக்கான பாடநூல்களுக்கோ பாடத்திட்டத்துக்கோ கல்வி அமைச்சு பொறுப்பேற்காது. ஆனால் தேர்வு நடத்தலாம். சில தனிமனிதர்கள் முயற்சியால் அந்தந்த வட்டாரங்களில் இலக்கியப் பாடத்துக்கான நூல்கள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வு வாரியத்தில் அப்போது இருந்த பி.எம்.மூர்த்தி அவர்கள்தான் சில ஆர்வலர்களுடன் இணைந்து தமிழ் இலக்கிய நடவடிக்கைக் குழு என்று ஒன்றை அமைத்து, நாடு முழுவதும் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு நூல்களை இலவசமாகக் கிடைக்கச் செய்தார். ‘இலக்கியகம்’ எனும் அமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கான நூல்களை இலவசமாகக் கொண்டு சேர்க்கும் பணியில் இறங்கினார். அங்கு தொடங்கியது அவருக்குக் கெட்ட காலம்.
எவர் ஒருவர் தன் தொழிலுக்கு அப்பால் சென்று தமிழ்ச் சமூகத்துக்காகச் சிந்திக்கிறார்களோ அவர்களைச் சமூகமே கல்லெறிந்து விரட்டும். மூர்த்தியின் இந்த முயற்சி பணம் சம்பாதிக்கும் உள்நோக்கம் கொண்டது என அரசாங்கத்துக்கு புகார்கள் பறந்தன. அவர் அதற்கெல்லாம் சோர்ந்துபோகவில்லை. நவீன இலக்கியம் இந்நாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் அது கல்விக்கூடங்களில்தான் சாத்தியம் என நம்பினார். 2005இல் ஆறாம் ஆண்டு மாணவர்களின் அரசு சோதனையில் ‘படைப்பிலக்கியம்’ எனும் வடிவத்தைக் புதிதாகக் கொண்டுவந்து ஆரம்பப்பள்ளி மாணவர்களும் சிறுகதை எழுத வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினார். நான் அப்போதுதான் தமிழ் ஆசிரியராக பணியில் இணைந்திருந்தேன். இந்த மாற்றம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. “என்ன நாங்கள் சிறுகதை படிக்க வேண்டுமா?” என அலறினர். படைப்பிலக்கியத்தில் வசனங்கள் பேச்சுமொழியில் இருந்தால் மொழி கெட்டுவிடும் என மொழித்தூய்மைவாதிகள் பத்திரிகைகளில் அறைகூவல் விடுத்தனர். ஆனால் எனக்கு அது முக்கிய முன்னெடுப்பாகத் தோன்றியதால் நான் என் பள்ளி மாணவர்களுக்குச் சிறுகதையை ஒட்டி ஓர் எளிய விளக்க நூல் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்திருந்தேன். அது மீண்டும் மீண்டும் நகல் எடுக்கப்பட்டு வெவ்வேறு பள்ளிகளில் பரவி மூர்த்தியின் பார்வைக்கும் சென்றது. அவருடன் அதே இலாக்காவில் பணியாற்றிய சேகரன் அவர்கள் என்னைப் பள்ளியில் வந்து சந்தித்தார். அந்தப் பயிற்சி நூல் அப்போது சுற்றிலும் அவர்களுக்கு நடந்துகொண்டிருக்கும் சாதகமற்ற சூழலில் ஒரே ஆறுதல் என்றார். நான் பி.எம்.மூர்த்தியுடனும் திரு.சேகருடனுடனும் நெருக்கமானது அப்போதுதான்.
மூர்த்தி படிப்படியாக சிறுகதைகளை கருத்துணர்தல் கேள்விகள் வழி ஆரம்ப இடைநிலை சோதனைத்தாட்களில் புகுத்தினார். மு.வரதராசனை மட்டுமே பயின்றிருந்த தமிழாசிரியர்கள் கவனம் வேறு வழியே இல்லாமல் நவீன இலக்கியம் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பியது. புனைவுகளை வாசிக்கும் கசப்பான பழக்கத்தை மூர்த்தி தமிழ் ஆசிரியர்கள் மத்தியில் உருவாக்கினார். எழுத்தாளர்களாக உள்ள தமிழ் ஆசிரியர்களை ஒன்றிணைத்தார். மாணவர்களுக்கான கதைகள் எழுத ஊக்குவித்துப் பயிற்சியளித்தார். எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எழுத்தாளர்களைக் கொண்டு பட்டறைகள் நடத்தினார். விளைவு, கடந்த ஆண்டு மாணவர்களுக்கான 50 சிறுகதைகளை எழுதி அவரைக் கொண்டே வெளியீடு செய்தேன். பாடத்திட்டத்தில் படைப்பிலக்கியம் சேர்க்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப்பின் மாணவர்களுக்காக வெளிவந்த முதல் சிறுகதை தொகுப்பு நூல் அது. (பயிற்சி நூல் அல்ல) அதை வெளியீடு செய்யும்போது பி.எம்.மூர்த்தி எந்தப் பதவியிலும் பணியிலும் இல்லை. சில புகார்களினால் தேர்வு வாரிய அதிகாரி பொறுப்பில் இருந்து வேறு பணிக்கு மாற்றப்பட்ட அவர் தன் விருப்பத்தின் பேரில் வேலையிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார்.
அவர் ஏற்படுத்திய பாடத்திட்டத்தின் விளைவாக புதிய தலைமுறையில் சிலர் எழுத வந்துள்ளனர். கடந்த ஆண்டு வல்லினம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை எழுதிய ஐஸ்வரியா (http://vallinam.com.my/version2/?p=3481) இந்தப் பாடத்திட்டத்தின் வழி சிறுகதையில் ஆர்வம் ஏற்பட்டு உருவானவரே. இந்தத் தலைமுறை இன்னும் தீவிரமாக வளரும் என்றே நம்புகிறேன்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவரை வீட்டில் சென்று பார்த்தேன். ஜெயமோகன் எழுதிய ‘விதிசமைப்பவர்கள்’ நூலைப் பரிசாகக் கொடுத்தேன். அவர் தீவிரமான வாசகர். ஜெயமோகனின் ஆளுமையினால் கவரப்பட்டவர். அவர் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். நூலை வாசித்து பலமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒருவகையில் அவர் மீண்டுவர அந்த நூல் காரணமாக இருந்தது. இன்று எல்லா மனச்சோர்வையும் கடந்து மாணவர்கள் மத்தியில் நவீன இலக்கியத்தைக் கொண்டு செல்லும் முயற்சியில் நண்பர்கள் சிலருடன் இயங்கி வருகிறார்.
2019லிருந்து இச்சூழலும் மாறுவதாக அரசு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இனி தமிழ் இலக்கியப் பாட நூல் தயாரிக்கப்படவுள்ளது. ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இந்த நிலை ஏற்படுவதற்கு மூர்த்தி போன்ற சிலர் தங்கள் வாழ்வைப் பணையம் வைத்துள்ளனர். வேலையை இழந்து, அந்த வயதுக்கான லௌகீக வாழ்வின் இன்பங்களை இழந்து இன்னமும் சமூகத்துக்காகச் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். என்னைப் போன்றவர்கள் படைப்பிலக்கிய ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதெல்லாம் எழுத்தாளராக இல்லாமல் வாசிப்பின் வழியே இலக்கியத்தின் தேவை அறிந்த பி.எம்.மூர்த்தி போன்றவர்கள் தங்களை தாங்களே இட்டுக்கொண்ட பலியின் நீட்சியில்தான்.
ம.நவீன்
மலேசியா
அன்புள்ள நவீன்,
திரு மூர்த்தி அவர்களைப்பற்றி நான் மலேசியா வந்தபோது பலமுறைச் சொன்னீர்கள். எப்போதுமே வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் தோன்றும் தனிமனிதர்களாலேயே மாற்றங்கள் உருவாகின்றன. ஆனால் எதிர்நிலைச் சக்திகள் பெரும்பாலும் அவர்களைச் சோர்வடையவும் செய்கின்றன. ஏனென்றால் அவர்கள் ஆற்றுவதன் பயன்கள் எழுந்துவர காலம்பிடிக்கும். எதிர்நிலைகளின் கூக்குரல்கள் எழுந்துவந்து உடனடியாகச் சூழ்ந்துகொள்ளும். ஆகவேதான் கடமையச்செய், பயன் தேடிவரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்கு ஒரு கடமை உண்டு, புனிதகடமை என்றே சொல்வேன், அத்தகைய பெருமானுடரை எழுத்தில் பதியவைத்து காலத்தின் பகுதியாக்கி அடுத்தத் தலைமுறைக்கு அளிப்பது
ஜெ