சைவத்தொன்மங்களும் கிறித்தவமும்

samanar

கழுவேற்றமும் சைவமும்
சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை
சமணர் கழுவேற்றம்

அன்புள்ள ஜெ,

இன்றைய சமணமும் கழுவேற்றமும் பின்பவரும் வரிகள், இக்கட்டுரையை மட்டும் வாசிப்பவர்களுக்கு தவறான பொருள் கொள்ளச் சாத்தியம் உள்ளவை. அவ்வாறே பொருள் கொள்ளத் துவங்கி விட்டார்கள்.

அதோடு சைவ பக்திப்புராணங்களில் எல்லாம் கிறிஸ்தவத்தின் வலுவான சாயல் உண்டு. இதை நான் பலமுறை எழுதியிருக்கிறேன். கிறித்தவம் அப்போது இங்கே வலுவாக இருப்பு அறிவித்துவிட்டது. கிறித்தவப்புனிதர்கள் அடைந்த துன்பங்கள், கடவுள் அவர்களுக்கு உதவிசெய்தது போன்றகதைகளை ஒட்டியே சைவநாயன்மார்களின் கதைகள் கட்டமைக்கப்பட்டன. அவற்றுக்கு இந்தியமரபில் பெரிய முன்தொடர்ச்சி ஏதுமில்லை.

இவ்வரிகள் அதற்கு முன் வந்துள்ள ‘அவ்வாறு பக்தியை நிறுவுவதற்காகவே ஆழ்வார், நாயன்மார்களின் கதைகள் புனைவாக்கம் செய்யப்பட்டன.’ வரிகளில் கொடுக்கப்பட்டுள்ள புனைவாக்கம் என்ற வார்த்தையோடு இணைத்து வாசிக்க வேண்டியவை. மேலும் நீங்கள் சொல்வது பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்பட்ட, குறிப்பாக அச்சு நூல்களின் காலத்தில் நிகழ்ந்த இந்து சமய மறுமலர்ச்சியின் போது நிகழ்ந்தவை பற்றி. இது குறித்த தெளிவான பின்வரும் வரிகள், “பதினெட்டாம்நூற்றாண்டு ‘மதமறுமலர்ச்சி’கள் அனைத்துக்கும் ஒரு பொது அம்சம் உண்டு. அவை அனைத்துமே செமிட்டிக் மதங்களின் பாணியில் தொன்மையான மதங்களை உடைத்து வார்க்கும் நோக்கம் கொண்டவை. அந்தப் போக்கையே மதச்சீர்திருத்தம் என அவை குறிப்பிட்டன. சாதகமாகவும் பாதகமாகவும் விளைவுகளை உருவாக்கியது இந்த மனநிலை சாதகமான அம்சம் என்றால் மதத்தில் இருந்த தேக்கநிலையை இவை உடைத்தன. வெற்றுச்சடங்குகளை அகற்றின. சாதிய ஒடுக்குமுறை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்த்து மதங்களை நவீன ஜனநாயக யுகத்திற்கு உரியவையாக ஆக்கின. மதத்தை அதன் சம்பிரதாயமான அமைப்புகளுக்கு வெளியே நின்று ஆராய்வதற்கான அறிவுப்புலத்தை உருவாக்கின”, சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை என்ற கட்டுரையில் வந்துள்ளன. இதன் நீட்சியாகவே அக்கோடிட்ட வரிகளை வாசிக்க வேண்டும். பொதுவாக நம்மவர்கள் இணைப்புகளை சீண்டுவதே இல்லை (வாசிப்பில் மட்டும்). பெரும்பாலோர் நீங்கள் தெய்வநாயகத்திற்கு ஆற்றிய எதிர்வினைகளை (2008 லேயே) வாசித்திருக்கவும் வாய்ப்பில்லை. எனவே மீண்டும் ஒரு வம்பு.

இருப்பினும் இணையத்தில் இக்கட்டுரை தனியாகவே கிடைக்க வாய்ப்பு இருப்பதாலும், இதை தங்கள் குரலுக்கான ஒப்புதல் வரிகளாக தெய்வீகராகத்த்தினர் எடுத்துக்கொள்ளச் சாத்தியம் இருப்பதாலும் அவ்வரிகளுக்கான பின்புலத்தை இக்கட்டுரையில் இணைக்க இயலுமா? (தலையிலடித்துக் கொண்டு தான்..)

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்.

***

அன்புள்ள அருணாச்சலம்,

நாலைந்துநாளாகவே மின்னஞ்சல் முழுக்க மொட்டை வசைகள். சரி அவர்கள் பேசிமுடிக்கட்டும் என்று காத்திருந்தேன். இருவகை வசைகள். ஒன்று மதநம்பிக்கையை வெறுப்பாக வளர்த்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் எதையும் கூர்ந்து வாசிப்பதில்லை, புரிந்துகொள்வதுமில்லை. தங்களுக்கு எதிரானதாக ஒரு கூற்று இருக்கக்கூடுமோ என்ற ஐயமே போதும், உச்சகட்டத்திற்குச் சென்றுவிடுவார்கள். இன்னொருசாரார், இப்படி எனக்கெதிராக உருவாகும் எந்த ஒரு எதிர்ப்பையும் வளர்த்துச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்கள். சாதிக்காழ்ப்பு, அரசியல்காழ்ப்பு. கடந்த சில ஆண்டுகளாக பொதுவெளியே உச்சகட்ட வெறுப்புகளால் துருவப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றும்செய்வதற்கில்லை. நான் செயல்படும் தளம் வேறு. அவர்களால் குழப்பப்பட்டுள்ள என் வாசகர்களுக்காகவே இக்குறிப்பு

நான் என் முதல்கட்டுரையிலேயே மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறேன், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஆன்மிகச்செல்வர்கள் மீது வன்முறைத்தாக்குதல் தொடுக்கும் வழக்கம் பொதுவாக இந்தியாவில் இருந்தது இல்லை. இங்கே பௌத்தம்,சமணம் என்னும் இரண்டு புதிய மதங்கள் எழுந்து வளர்ந்து வேரோடியிருக்கின்றன. அவை எழுந்தபோதே இங்கே இந்துமதப்பிரிவுகள் நிலைகொண்டிருந்தன. சமணமும் பௌத்தமும் அவற்றை அறைகூவி, பல அவைகளில் வென்று, மக்களை ஈர்த்து தங்களை நிலைநாட்டிக்கொண்டிருக்கின்றன. மிகக்கடுமையான கருத்துப்பூசல் நிகழ்ததையும் நாம் காண்கிறோம்.

சமணத்திலும் பௌத்தத்திலும் பலநூறு ஞானிகளின், புனிதர்களின் வரலாறு உள்ளது. அவர்களில் எவரும் மதநிலைபாட்டின்பொருட்டு எந்த மாற்றுமதத்தவரால் வதைக்கப்பட்டவர்களோ கொல்லப்பட்டவர்களோ அல்ல. முழு இந்தியவரலாற்றையும் தேடினால் புஷ்யமித்ர சுங்கர் போன்ற சில அரசர்கள் பௌத்த மதத்தை ஒடுக்க முயன்றதன் செய்திகள் மட்டுமே கிடைக்கின்றன. மிக அரிதான ஒருசில தகவல்கள்.புஷ்யமித்ர சுங்கன் போன்றவர்களின் செய்திகள்கூட மிகமிகப்பிற்காலத்தைய நூல்களில் சொல்லப்படுபவை. பௌத்தருக்கு எமன் போன்ற சில பொதுவான கூற்றுக்கள். பௌத்தர்களால் அவை சொல்லப்படவுமில்லை.இந்துமதத்தை கறாராக அணுகும் மார்க்ஸிய ஆய்வாளர்களுக்குக்கூட அவை போதுமான அளவுக்கு சான்றுகள் கொண்ட கூற்றுகளாகப் படவில்லை. ஆயிரத்தைந்நூறு ஆண்டுக்காலம் இங்கே மூன்றுமதங்களும் ஒன்றாக இருந்திருக்கின்றன என்று நோக்கினால் இதன் முக்கியத்துவம் புரியும்.

இதேபோலவே இந்துமதத்தின் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகியவற்றின் இடையிலும் மதப்பூசல்கள் நிகழ்ந்துள்ளன. ஒட்டுமொத்தமாகவே பக்திமரபு தாந்த்ரீக மரபுக்கு எதிரான நிலைபாடு கொண்டிருந்தது. ஆனால் மாறி மாறி ஞானிகளை மதநம்பிக்கையாளர் வதைத்ததாக நமது வரலாறு காட்டவில்லை. மதம் அரசியலுடன் கலந்தது என்பதனால் ஆட்சிமாற்றத்தால் மதங்கள் பேணப்படுவதும் கைவிடப்படுவதும் நிகழ்ந்திருக்கலாம். அரிதாக மதங்களின் மீது கெடுபிடிகளும் அடக்குமுறைகளும்கூட நடந்திருக்கலாம். ஆனால் ரத்தம்பெருகும் மத ஒடுக்குமுறை இந்தியாவில் நடந்ததற்கான சான்றுகள் இல்லை  நான் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக எண்ணுவது இந்த அம்சத்தைத்தான். இக்கட்டுரையிலும் நான் சுட்டிக்காட்டுவது இதையே.

[உடனே இந்தியாவை புனிதப்படுத்துவதாக இன்னொரு சாரார் தாண்டிக்குதிக்கக்கூடும். காலப்போக்கில் இந்தியாவில் உருவாகி வந்த சாதிய ஒடுக்குமுறையும் தீண்டாமை போன்ற ஆசாரங்களும் இம்மண்ணின் கறை என்றும், அவற்றுக்காக நாணுவதும் கடக்கமுயல்வதும் ஒவ்வொரு இந்துவின் கடமையாகும் என்றும் பலமுறை முன்னரே எழுதியிருக்கிறேன்]

தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் நுழைந்தபோது இங்கே சைவ வைணவ வழிபாடும் வேள்விமரபும் ஆழவேரூன்றியிருந்ததையே சங்கநூல்கள் காட்டுகின்றன. உக்கிரமான தத்துவவிவாதங்களும்  ஓரளவுக்கு மதப்பூசல்களும் நடந்தன என்பதை மணிமேகலை முதல் நீலகேசிவரையிலான நூல்கள் காட்டுகின்றன. ஒரு காலகட்டத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகியவை இணையான முக்கியத்துவத்துடன் காஞ்சியை தத்துவமையமாக்கி திகழ்ந்திருக்கின்றன. மூன்று மதத்தையும் சேர்ந்த ஞானியர் பலர் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் மதத்தின்பொருட்டு ஞானியர் துன்புறுத்தப்பட்டதற்கான தொன்மையான தமிழ்ச்சான்றுகள் ஏதுமில்லை. மாறான சான்றுகளோ ஏராளமானவை.

ஞானியர் மேல் வன்முறை செலுத்துவது பற்றிய சான்றுகள் அனைத்தும் பிற்காலத்தையவை. அவை சுண்ணாம்புக் காளவாயில் போடுதல் கற்றுணைபூட்டி கடலில் பாய்ச்சுதல், கழுவேற்றுதல் போன்ற கொடூரங்களை சித்தரிக்கின்றன. இவறை சமணரும் சைவரும் ஒருவருக்கொருவர் இயற்றிக்கொண்டதாக சொல்கின்றன. இந்தியாவில் சைவமும்சமணமும் ஒரேசமயம் திகழ்ந்த இடம் கர்நாடகம், இன்றும் அந்நிலத்தில் அவ்விரு மதங்களும் அருகருகே திகழ்கின்றன. அங்கெங்கும் இத்தகைய வன்முறை நிகழ்ந்தமைக்கான சான்றுகள் இல்லை.

இவ்வாறு நிகழ்ந்ததாக சைவப்புராணம் சொல்லும் காலகட்டம் ஒரு குறுகிய காலப்பரப்பு. அதற்கு முன்னும் பின்னும் அது நிகழ்ந்ததாக அவர்களும் சொல்லவில்லை.இதேகாலகட்டத்தைச் சேர்ந்த குறைந்தது பத்து தென்னகச் சமண அறிஞர்களின் வரலாறுகளும் பிற்காலக்குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன.அவற்றிலெங்கும் மதப்பெரியோர்கள் வதைக்கப்பட்ட செய்திகள் இல்லை.உண்மையில் நேரடியான மதப்ப்போர் நிகழ்ந்தது இஸ்லாமிய மதத்திற்கும் இந்துமதத்திற்கும்தான். மராட்டிய அரசிலோ நாயக்கர் ஆட்சியிலோ எந்த சூஃபி மெய்ஞானியாவது வதைக்கப்பட்டிருக்கிறாரா?

இச்சித்தரிப்புகள் எங்கிருந்து வந்தன?  அவை ஏன் தமிழகத்தில் மட்டும் உள்ளன? தமிழர்கள் இந்தியச்சூழலில் எங்குமில்லாத குரூரமான மதக்காழ்ப்பு கொண்டவர்களா என்ன? அது உண்மை என்றால் அந்தச் சித்திரவதைகளும் கொலைகளும் ஏன் தொன்மமாக மட்டும் கிடைக்கின்றன? முன்பும் பின்பும் தமிழ்ச்சமூகப்பரப்பில் அத்தகைய வன்முறை ஏன் இல்லை? எங்குமே மாறிமாறி வதைக்கப்பட்ட கொல்லப்பட்ட சைவ, வைணவ ஞானிகளின் நினைவுகள் ஏன் இல்லை? ஏன் சமண பௌத்த வரலாறுகளில் சைவர்களால் வதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட தங்கள் ஞானிகள் குறிப்பிடப்படவில்லை?

அப்படியென்றால் ஞானிகள் வதைக்கப்படுவது, கொல்லப்படுவது என்னும் அந்தக்கருத்து எங்கிருந்து வந்தது? கிபி நான்காம்நூற்றாண்டு முதலே தென்னகத்தின் கடற்கரைகளில் விரிவான கிறித்தவக்குடியேற்றங்களும் மதமாற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. பெரும்பாலான கிறிஸ்தவ மதக்குழுக்கள் சிரியா வழியாக வந்தவை. இன்றுமுள்ள சிரியன் கிறிஸ்தவர்கள் அவர்களின் வழித்தோன்றல்கள். சிரியக் கிறித்தவம், அதன் மூலமான காப்டிக் திருச்சபை,  அது பரவி வந்த வழி முழுக்க மிகக்கடுமையான மத ஒடுக்குமுறையைச் சந்தித்தது. புனித தாமஸ் உட்பட ஏராளமான ஞானிகள் சிரியாவிலேயே கொல்லப்பட்டனர். அந்நினைவுகளைப் புனிதர்வரலாறு என்னும் பேரில் பேணிக்கொண்டு அது வளர்ந்தது.  ‘வதைக்கப்பட்டு கொல்லப்பட்ட புனிதர்கள்’ என்பது அந்த மதத்தின் மையக்கருத்துகளில் ஒன்று. அக்கருத்து கிறித்தவத்திலிருந்து தமிழகச் சைவத்தால் எடுத்துக்கொள்ளப்பட வரலாற்றுரீதியாக வாய்ப்புகள் உள்ளன.

இரண்டு அடிப்படைகளில் அது ஏன் நிகழ்ந்தது என்று ஊகிக்கலாம். நம் மதப்புனைவுகளுக்கு இரண்டு பாணிகள் உண்டு. புராணங்கள்ஒ ருவகையான உருவகக்கதைகள். தொன்மையானவை அவை. கவித்துவமும் தரிசனமும் அவற்றின் இயல்பு. உண்மை மனிதர்களின் வரலாற்றை புராணங்களாகப் புனைந்துகொள்ளுதல் இரண்டாவது வகை. மகாபாரதத் தொன்மங்களுக்கும் பக்தவிஜயத்திலுள்ள தொன்மங்களுக்குமான வேறுபாடுதான் நான் உத்தேசிப்பது. இவற்றையே நான் பக்திப்புராணங்கள் என்கிறேன்.   பக்தி இயக்கம் பத்தாம்நூற்றாண்டுக்குப்பின் வலுவாக எழுந்தபோது பெரியபுராணம் காட்டும் பக்தித் தொன்மங்கள் உருவாயின. அனைத்து சமூகத்தரப்புகளில் இருந்தும் பக்தியினால் மீட்படைந்த புனிதர்களின் கதைகளின் தொகுப்பு அது. இவை செவிவழி வரலாறுகள், ஆனால் புனைவுடன் கலந்து தொன்மமாக ஆக்கப்பட்டவை.

அந்தப்புராண உருவாக்கத்தின்போது கிறித்தவத்தின் வதைக்கப்பட்ட புனிதர்கள் என்னும் கருத்தாக்கம் அதில் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.   அது சைவப்பெருமத உருவாக்கத்திற்கும் உதவியிருக்கலாம். எப்படியாயினும் அது மிகப்பிற்காலத்தைய தொன்மம்.வரலாற்று ஆதாரமற்றது. இந்தியாவில் எப்போதுமிருந்த பொதுமனநிலைக்கு எதிரானது.கிறித்தவம் தமிழ்நிலத்துக்கு வந்து அறுநூறாண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த செல்வாக்கு அது என நான் நினைக்கிறேன்.

இரண்டாவதாக, பொதுவாக தொன்மங்கள் மிக எளிதாக கதைகளினூடாகப் பரவக்கூடியவை என்பதைச் சுட்டுவேன். உலகமெங்கும் எப்போதுமே தொன்மப்பரிமாற்றம் இயல்பாக நிகழ்ந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அனைத்துத் தொன்மமரபுகளும் குடிப்பெயர்வு, வணிகம் மூலம் எப்போதுமே தொடர்பரிமாற்றத்திலேயே உள்ளன. கொண்டும் கொடுத்தும்தான் அவை வளர்கின்றன. எந்த மதமும் புறப்பாதிப்பே அற்ற ‘தூய’ தொன்மங்களைக் கொண்டது அல்ல. மிகத்தொன்மையான வேதகாலத் தொன்மங்களில்கூட பிறபண்பாட்டுத் தொன்மங்களின் பங்களிப்பு உண்டு. இதெல்லாமே ஆய்வாளர்களால் விரிவாக முன்னரே பேசப்பட்டுவிட்டவை.

அத்துடன் இந்துமதத்தின் அனைத்துப்பிரிவுகளும் அனைத்து தத்துவ, தொன்ம, வழிபாட்டு பாதிப்புகளைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு திறந்த அணுகுமுறைகொண்டவைதான். எவையும் எந்த அதிகார அமைப்பாலும் மூடி இறுக்கி வைக்கப்படவுமில்லை

மதநம்பிக்கை எதுவாக இருந்தாலும் ஞானிகளை வணங்குவது என்பது இந்தியச் சமூகத்தின் குணமாக இருந்ததை மிகக்கடைசியாக வந்த ரெவெரெண்ட் மீட்  வரை அனைவருமே பதிவுசெய்திருக்கிறார்கள். ‘இந்தமக்கள் எங்களை வணங்குகிறார்கள், உபசரிக்கிறார்கள், ஏற்றுக்கொள்வதில்லை’ என அவர்கள் எழுதியிருக்கிறார்கள். வீரமாமுனிவர் முதல் சேவியர், இரேனியஸ், கால்டுவெல் வரை கிறித்தவ ஞானியரும் அவ்வாறே இந்து அரசர்களால், இந்து சமூகத்தால் எதிர்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். என் உளநிலையும் அவ்வாறே, எந்த மதத்தின் ஞானியரும் எனக்கு வணக்கத்திற்குரியவர்களே.

ஆகவேதான் புனித தாமஸ் இந்துவால் கொல்லப்பட்டார் என்று கிறித்தவர்களால் மிகப்பின்னர் உருவாக்கப்பட்ட தொன்மம் வரலாற்றுரீதியாக ஏற்புடையதல்ல என்று எழுதினேன். ஆக்டா தோமா முதலிய நூல்கள் புனித தாமஸ் சிரியாவில் கொல்லப்பட்டதையே கூறுகின்றன. அதை இந்தியாவுக்கு வந்த தாமஸ் கானா என்னும் மதக்குழுவின் தலைவருடன் குழப்பிக்கொண்டு அவரை கொன்றவர் இந்து அரசர் என்றார்கள் . சில ஆண்டுகளில் கொன்றவர் பிராமணர் என குடுமிவைத்த சிலைகளை வைக்க ஆரம்பித்தனர். கானாயி தொம்மன் என மலையாளத்தில் கூறப்படும் தாமஸ் கானா சிரியாவிலிருந்து வந்து சென்னையில் செயிண்ட் தாமஸ் மௌண்டில் வாழ்ந்தது கிபி எட்டாம்நூற்றாண்டுக்கு முன்னர்.

இந்து அரசரால் கொல்லப்பட்டதாக சற்றேனும் ஆதாரபூர்வமாக சொல்லத்தக்கவர் தேவசகாயம் பிள்ளை. என் அன்னையின் ஊரைச்சேர்ந்தவர். ஆனால் அதுகூட மதக்கொலையா என்பதில் ஐயம் உண்டு. ஏனென்றால் அன்றைய திருவிதாங்கூரின் உச்சகட்ட அதிகாரத்தில் இருந்தவர் பெரியபடைத்தலைவரான பெனடிக்ட் டி லென்னாய் என்னும் டச்சு கிறித்தவர். அவருக்காக மார்த்தாண்டவர்மா கட்டிய தேவாலயங்கள் இன்றும் உள்ளன. கத்தோலிக்க தேவாலயங்களுக்கு மார்த்தாண்டவர்மா அளித்த கொடைகளுக்கான சான்றுகள் உள்ளன. ஏராளமான மதமாற்றங்கள் நிகழ்ந்த அக்காலகட்டத்தில் வேறு எவரும் மதநம்பிக்கையின்பொருட்டு அவரால் கொல்லப்பட்டனர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை. தேவசகாயம்பிள்ளை சிறைவைக்கப்பட்டிருந்த உதயகிரிக்கோட்டை நேரடியாகவே டி லென்னாயால் ஆளப்பட்டது.

நான் சொல்லவருவதை மீண்டும் சொல்கிறேன், இந்தியப்பெருநிலம் குறைந்தது மூவாயிரமாண்டுகளாக வெவ்வேறு ஞானவழிகள் உருவாகி வாதிட்டு முயங்கி முன்னகரும் ஞானக்களமாக இருந்துள்ளது. ‘அனைத்துநதிகளும் கடலுக்கே செல்கின்றன’ என்னும் உபநிடதவரியே இங்கே அதற்கான வழிகாட்டுமெய்மையாக இருந்துள்ளது. மகாபாரதம் முதல் நாம் அதற்கான சான்றுகளைக் காணலாம். இது நான் கண்டடைந்த பாரததரிசனம்

ஆகவேதான் சைவம், வைணவம் போன்ற மதங்களுக்குள் பூசல்கள் நிகழ்ந்தபோதும்சரி, பௌத்த சமண மதங்கள் எழுந்து வந்தபோதும் சரி தத்துவமோதல் வன்முறையாக மாறவில்லை. ஓஷோ போன்ற தீவிரமாகச் சீண்டும் ஞானியும் சரி மெய்வழிச்சாலை ஆண்டவர் போல மர்மமான வழிகள் கொண்ட ஞானியரும் சரி இங்கே ஏற்கவே பட்டனர். ஞானியர் மீதான வன்முறை என்பது இங்கே அரிதினும் அரிது, அனேகமாக நிகழவேயில்லை. ஆகவே சைவத்தின் புராணங்களில்மட்டும் காணப்படும் ஞானியர்மீதான வன்முறை கிறித்தவத்தின் தொன்மத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.

மங்கலானமூளைகளுக்காக மீண்டும் தெளிவுபடுத்திவிடுகிறேன், சைவத்தின் மெய்ஞானமோ ,சைவ வழிபாட்டு மரபோ, சைவத்தின் புராணங்களோ, சைவச்செல்வர்களைப்பற்றிய அனைத்துத் தொன்மங்களுமோ கிறித்தவத்திலிருந்து எடுக்கப்பட்டது என நான் சொல்லவில்லை.

என் வழி வேதாந்தம். அதில் நான் எந்த ஐயமும் வைப்பதில்லை. ஆகவே முழுவிழிப்பு கொண்ட அறிவே நான் வழிபடுவது. முடிந்தவரை புறவயமாக, தர்க்கப்பூர்வமாக மட்டுமே நான் மதத்தை, ஆன்மிகத்தை அணுகிவருகிறேன். எனக்குச் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. நான் சைவ,வைணவ,சாக்த வழிபாடுகளில் சம்பிரதாயமான ஈடுபாடு கொண்டவன் அல்ல. ஆனால் மதத்தின் தொன்மங்களாலும் படிமங்களாலும் என்னை மீறி ஆழ்ந்த பாதிப்பை அடைபவனும்கூட. ஏனென்றால் நான் எழுத்தாளன். என் ஆழ்மனம் என் கட்டுப்பாட்டில் உள்ளது அல்ல. ஆகவே என்னை முழுமையாக வேதாந்தி என்று சொல்லிக்க்கொள்ளவும் தயங்குவேன். என் அறிவுத்தளம் வேதாந்தம் சார்ந்தது.

நான் சைவ,வைணவ,சாக்த மதத்தின் நம்பிக்கைகளுடன் மட்டுமல்ல இஸ்லாமிய கிறித்தவ மதநம்பிக்கைகளுடனும் மோதுபவன் அல்ல. அவற்றின் செயல்முறையே வேறு என்று அறிந்தவன். ஆகவே அவற்றை நான் எவரிடமும் விவாதிப்பதில்லை. நான் பேசுவது வரலாற்றை மட்டுமே.

உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவுபெரிய மழுங்கலும் அதன்விளைவான வெறியும் எப்படி உருவாகி நாளும் பெருகுகிறது என. நேற்று இங்கே ஞானியர் வதைக்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால் இன்று இவர்களால் எந்த மெய்ஞானியும் கொல்லப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ளன என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது- ம நவீன்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–11