விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 18

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

ஜெ

 

விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால் உங்கள் தளத்தில் கடிதம் எழுதும் பலரை சந்திக்கமுடிந்ததுதான். பலர் புகைப்படம் வழியாகத் தெரிந்தவர்கள். பலர் பெயர் மட்டும் தெரிந்தவர்கள். பலரை ஃபேக் ஐடி என இணையத்தில் வசைபாடுவதை கேட்டிருக்கிறேன். சரவணனிடமும் செந்திலிடமும் அதைச் சொன்னேன். பெரும்பாலும் எல்லா வாசகர்களையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறீர்கள், பெரும்பாலானவர்களைப்பற்றி ஏதேனும் ஒரு கிண்டலைச் சொல்லமுடிகிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. கிருஷ்ணனை நீங்கள் கிண்டல்செய்துகொண்டே இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. என்னை அடுத்தமுறை கிண்டல்செய்யும்படி ஒன்று நடந்தது [அவங்க கூர்க்காவா ?] அதை அடுத்தமுறை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்

 

மணி

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் விழாவின் உச்சகட்ட உரை என்பது ராஜகோபால் ஆற்றியதுதான். கச்சிதமான சொற்களில் தயக்கமே இல்லாமல் பேசினார். மிகமென்மையாக குறைகளையும் சுட்டிக்காட்டினார். இன்று தோரணைகள் ஏதுமில்லாமல் படைப்பின் முன் நின்று மெய்யாகவே ஒரு நல்ல வாசிப்பை அளிப்பவர்கள் மிகச்சிலர். ராஜகோபால் அவர்களில் முக்கியமனாவர்

 

அருண்

 

ஜெ ,

 

அமைப்பு உருவாகவே இந்தக் கட்டுரைதான் காரணம் , அப்போதைய நண்பர்கள் ஒரு எழுத்தாளர் எழுதவும் செய்துவிட்டு இப்படி பதற்றத்தோடு இலக்கிய விழாக்களையும் செய்யவேண்டுமா என்று கேட்டனர் ,

 

//நானும் அஜிதனும் கடைக்குப்போய் பூமாலைகளை வாங்கிக் கொண்டு ஏபிஎன் பிளாஸாவுக்குச் சென்றோம். ஹாலை நன்றாக அமைத்திருந்தார்கள். வழக்கமாக இலக்கியக் கூட்டங்கள் மலிவாகக் கிடைக்கும் பள்ளிக்கூட அறைகளில் அல்லது பொதுக்கூடங்களில்தான் நடக்கும். அந்த தரித்திரச் சாயலே இல்லாத அழகிய இடம். அதுவே உற்சாகமாக இருந்தது. கீழே சென்று டீக்கு ஏற்பாடுசெய்தேன். அருண்மொழியும் சைதன்யாவும் வந்து மேஜைவிரிப்பு போட்டு அலங்காரம் செய்தார்கள்.//

 

http://www.jeyamohan.in/147#.Wj4mLctX7r8

 

அரங்கா

அன்புள்ள ஜெ,

 

விழாவின் முதல்நாள் பங்குபெற முடியாது என்றே எண்ணியிருந்தேன். விஷால், சுரேஷ், தூயன் அரங்குகளில் பங்குபெற முடியாதது குறித்து அவர்களிடம் வருத்தம் எல்லாம் தெரிவித்துவிட்டேன். ‘பாஸ் ஓவரா பண்ணாதீங்க’ என்றார்கள். ராகுல் காந்தியின் பதவி ஏற்பிற்கும் விஷ்ணுபுர விழாவிற்கும் கேயாஸ் தியரி போல் ஒரு தொடர்பிருந்திருக்கிறது. பரிசளிப்பு விழா 24 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. ஆகவே வழக்கம் போல் முதல் நாளே வந்து சேர்ந்தேன். ஐந்து மணிக்கு வந்து சேர்ந்த போதே விஜயராகவன் சார், சுரேஷ் பிரதீப், சீனு இருந்தார்கள். அச்சாகி வந்திருந்த புத்தக பிரதிகளை அவர்களுக்கு காண்பித்து பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்துவங்கினார்கள். ஆரத்தழுவி குசலம்  விசாரித்து உரையாட துவங்கினோம். அரங்குகள் பற்றி எல்லாம் நண்பர்கள் எழுதி கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

விழா நிறைவாக இருந்தது. இம்முறை உங்களுடன் மிகக் குறைவாகவே செலவழித்தேன் என்பது மட்டுமே குறை. அல்லது அதையும்இ வளர்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க வேண்டுமோ என்னமோ. போகன், சுரேஷ் பிரதீப், விஷால் ராஜா, தூயன், நாகபிரகாஷ், கே.ஜெ. அசோக் குமார், நவீன், தயா ஜி, கே. என். செந்தில், அருண் நரசிம்மன் என பல எழுத்தாளர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது.  நிறைய கற்று கொண்டேன். சென்ற வருட விழாவிலிருந்து வாசிப்பு சில படிகள் உயர்ந்திருப்பதை உணர்கிறேன். வினாடி வினாவில் நான்கில் ஒரு பங்கு கேள்விக்கு விடை தெரிந்திருந்தது. இந்த ஆண்டு சரி பாதி கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்ததை ஒரு அளவுகோளாக கொள்ளலாம்.

 

சீ.முத்துசாமி துருதுருவென இருந்தார். ‘இந்த ராஜநாகம் தலைப்ப..எப்புடி புடிச்சீங்க?’ என்று உற்சாகமாக கேட்டார். ‘நீங்க நாவல்ல எழுதோது தான்’ என்றேன். நவீன் இலக்கியத்தின் பால் அயராத செயலூக்கம் கொண்டு செயல்படுகிறார். தனது படைப்புகள் எவ்வித சலூகைகளின் வழியும் மதிப்பிடப்பட கூடாது என்பதில் கறாராக இருக்கிறார். மலேசிய இலக்கியத்தின் முகம் என்பது ஒரு பக்கம் என்றாலும் படைப்பாளியாக சமரசமின்றி தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும் எனும் முனைப்பு, நேர்மை அவரிடம் இருக்கிறது. தயா ஜியும் ஆச்சரியப்படுத்தினார். நெடுநாட்களுக்கு பின் போகனை சந்தித்ததும் மகிழ்ச்சியை அளித்தது. அனீஷ் வந்திருந்தார் என்பதை மறுநாள் தான் அறிந்தேன். அவரிடம் உரையாட முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் கே.என்.செந்தில், கண்ணன் தண்டபாணி, சுரேஷ் பிரதீப், விஷால், நாகப்பிரகாஷ் போன்ற நண்பர்களுடன் அதிகமும் உரையாடியது மகிழ்வளித்தது.

 

 

 

பி. ஏ. கிருஷ்ணன் அவர்களுடனான் அமர்வில் ஆயுர்வேத அலோபதி சர்ச்சையை பற்றி உங்களுக்கு இரண்டு மூன்று கடிதங்கள் வந்திருந்ததால் அதைப்பற்றி எழுத விழைகிறேன். அவரிடம் ஆயுர்வேதம்  vs நவீன அறிவியல்/ மருத்துவம் எனும் கேள்வியை நான் எழுப்பவில்லை. அவருடைய கட்டுரைகளை, விமர்சனங்களை சமூக ஊடகங்களில் வாசித்தவன் என்ற வகையில் அவருடைய பார்வையை திட்டவட்டமாக அறிவேன். அக்கேள்வியை கேட்டு அவரை மடக்கவோ, அலல்து அவருடைய கருத்தை மாற்றவோ நான் முயல வேண்டியதில்லை. இந்த வகையான விவாதத்தில் சொல்வதற்கும் ஈடுபடுவதற்கும் எல்லோருக்கும் ஒரு தரப்பும் அனுபவமும் உண்டு. ஆகவே இவை ஒருபோதும் இறுதியான முடிவை எட்டுவதில்லை. உங்களுக்கு வந்த கடிதங்கள் கூட எனது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணமே வந்திருக்கின்றன.  அவரவர் துவக்க நிலைபாடுகளில் நின்று கொண்டே இருப்பார்கள்.

 

 

 

சமூக ஊடகங்களில் அவர் மரபு மருத்துவம் பற்றி வைக்கும் விமர்சனங்களுக்கு கூட நான் எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் அவருடைய விமர்சனத்தில் நியாயம் உள்ளதா என்பதை தேடி வாசித்து ஒரு முடிவுக்கு வருவேன். அவருடைய நோக்கும் பார்வையும் தெளிவாக அறிந்த பின் அதைப்பற்றி கேள்வி எழுப்பி விவாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நேர விரயமும் கூட. தொடர்ச்சியாக நம் அரங்குகளில் பங்குபெற்றவன் என்ற முறையில் எக்கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்பதில் எனக்கு சில புரிதல்கள் உண்டு. தனிப்பட்ட முறையில் அவரிடம் உரையாடினேன். எழுதி முடிக்காத ஆயுர்வேத புத்தகத்திற்கு முன்னுரை எழுதி விட்டேன். அந்த முன்னுரையில் அவருக்கு நன்றி கூறியிருக்கிறேன் என்றேன். அவசியம் எழுதுங்கள் என்று உற்சாகமூட்டினார்.

 

 

 

அறிவியல் நிரூபணம் இல்லையென்றால் அறிவயல் என அறிவித்து கொள்ளக்கூடாது என்பதே அவருடைய வாதம். அந்த வாதம் எனக்கும் ஏற்புடையதே.  புள்ளியியல் தகவல்கள் வழி நிரூபணங்களை கடந்து அடுத்த நிலையை நோக்கி நவீன மருத்துவம் நகர்ந்து வருகிறது.  நவீன அறிவியல் இப்போது ‘தனியாளுமை மருத்துவத்தை’ (personalised medicine). முக்கியமாக முன்னெடுத்து வருகிறது. ஒவ்வொரு மனிதரையும், நோய் நிலையையும் தனித்தனியாக மதிப்பிட்டு அதற்குகந்த சிகிச்சை அளிக்கும் ஆயுர்வேத வழிமுறையை பரிசொஹ்ட்னைக்கு உட்படுத்தும் சட்டகங்கள் தீர்க்கமாக இனி தான் எழுந்து வரும் என நம்புகிறேன்.

பி.ஏ.கிவிடம் கேள்வியை எழுப்பியது கண்ணன் தண்டபாணி. அதற்கு அவர் எதிர்வினையாற்றினார். அக்கேள்வி அந்த சபையில் எழுந்த பிறகு எனது தரப்பை நான் சொல்லித்தானே ஆக வேண்டும். வேறு எவரையும் காட்டிலும் அதற்கான பதில் சொல்லும் கடமை எனக்குள்ளதே. பி. ஏ. கிருஷ்ணன் அவர்களை மரபு மருத்துவத்தின் மீதான ஆக்கப்பூர்வ விமர்சகர் என்றே நான் எண்ணுகிறேன். அதையே அமர்விலும் பதிவு செய்தேன்.

 

மரபு மருத்துவத்தின் குறைந்த பட்ச பாதுகாப்பை அறிவியல் பூர்வமாக நிறுவ வேண்டும் என்பதே அவருடைய வாதமாக இருக்கிறது. இதன் பின் வெகுமக்களின் நன்மை என்பதை தவிர அவரிடம் எனக்கு வேறு நோக்கங்கள் தென்படவில்லை. ஆகவே பிற மரபு மருத்துவர்கள் அவர் மீது வைக்கும் விமர்சனங்கள் எனக்கு இல்லை. epistemological  crisis பற்றி சுட்டிக்காட்டி இருவர் எழுதி இருந்தார்கள். அவர்கள் எதை புரிந்து கொண்டார்கள், உள்வாங்கி கொண்டார்கள் என தெரியவில்லை.

 

 

நான் கூறியது இரு வேறு தத்துவ புலங்களை கொண்ட அறிவு துறைகள் ஒன்று மற்றொன்றுடன் உரையாடும் போது ஏற்படும் சிக்கலை பற்றியது. வாத பித்த கபங்களை உடலியங்கியல் வழியாக நிறுவுவதில் உள்ள சிக்கலைப் பற்றியது. மரபு மருத்துவத்திலும், நவீன அறிவியலிலும் நல்ல பிடிப்பும் கல்வியும் கொண்ட ஆளுமைகளின் பற்றாக்குறையே இச்சிக்கல்களுக்கான காரணம். இது காலபோக்கில் மாறும். சில ஆய்வகள் நல்ல விளைவுகளை அளித்துள்ளன. இதன் பின்னர் லக்ஷ்மி மணிவண்ணன் நவீன அறிவியல் நோக்கை பற்றிய சில விமர்சனங்களை வைத்தார்.  அந்த ஒரு எதிர்வினைக்கு அப்பால் உரையாடலை வளர்த்த எனக்கு விருப்பமில்லை.  அந்த உரையாடல் உங்கள் தலையீட்டில் முடிவுக்கு வந்தது. இந்த உரையாடல் நீண்டு வம்பாக மாறவில்லை என்றே எண்ணுகிறேன்.

 

 

இதை உங்களுக்கு எழுத வேண்டும் என்று விரும்பினேன். அவ்வளவே. இந்தமுறை நீங்கள் எல்லா விவாத அரங்கிலும் பங்கேற்று கேள்விகள் எழுப்பியது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. நீலகண்ட பிரமாசாரியையும், சுத்தானந்த பாரதியையும் எண்ணிக்கொண்டேன். தம்ழிஹ் நிலம் ஒரு பெரும் புனைவு பரப்பு என தோற்றம் கொண்டது. ஜானிசிடம் அவருடைய sea horse நாவலுக்கு தமிழில்  எழுதிய மதிப்புரையை கிளம்பும் அவசரத்தில் வேகவேகமாக ஆங்கிலத்தில்  வாசித்து காட்டிவிட்டு வந்தேன். மகிழ்ந்தார். இம்முறையில் மேடையில் வழங்கப்பட்ட வாழ்த்துரைகள் அனைத்துமே கச்சிதம். எல்லா உரைகளுமே முக்கியமானதாக இருந்தன.

 

 

 

முதல் நாள் வாங்கிச்சென்று மறுநாள் ‘அம்புப் படுக்கை’ தொகுப்பை வாசித்து முடித்து தனது பார்வைகளை ஆர்வமுடன் சொன்னார் மதி எனும்அதற்கு முன் சந்தித்தே இராத நண்பர். மற்றுமொரு வருடம் கடந்து விட்டது. அங்கிருந்து திரும்பிய முதல் இரண்டு நாட்கள் மனம் அமைதியின்மையில் தத்தளித்தது. வாசிக்கவோ எழுதவோ மனம் குவியவில்லை. இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. Will Durant ன் மெய்யியலின் கதையுடன் அடுத்த பயணத்தை துவக்கிவிட்டேன்.

 

 

 

நன்றி

சுனில்

 

 

அன்புள்ள ஜெ,

 

 

என் முந்தைய  கடிதத்தின் தொடர்ச்சி

 

 

இரண்டாம் நாள் நினைவுகளை பகிர்வதற்கு  முன்  முதல் நாளின் மிக முக்கியமான இரண்டு சம்பவங்களை சொல்ல மறந்து விட்டேன்.

 

கடலூர் சீனு அவர்களை சந்தித்தது.  இத்துணை அமைதியாக இருப்பவரா இவ்வளவு அழுத்தமான கடிதங்களை எழுதுகிறார் என்பதை முதல் பார்வையில் என்னால் நம்பவே முடியவில்லை.

 

 

வெய்யில் அவர்கள்  பேசும் பொழுது சொன்னதும் அதற்க்கு நீங்கள் தந்த பதிலும் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

 

 

” எங்களிடம் எல்லாம் ஒரு நேரத்தில் சொல்வார்கள் ஜெமோவின் கூட்டமா அது தீவிரவாதிகள் போல் ஆயிற்றே என்று சொல்வார்கள் ” எனச் சொன்னதும் நீங்கள் சொன்னீர்கள் “தீவிரவாதியா..ஆமாம் எங்களின் தலைவர் கடலூர் சீனு தான் ” என்றீர்கள்.

 

 

அதை மறக்கவே முடியாது.

 

 

அடுத்து முதல் நாள் மாலை தேநீர் இடைவேளைக்கு பின்பு வெய்யில் மற்றும் போகன் சங்கர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஒரு குட்டி ரவுண்ட் சேர் விவாத அரங்கு நடத்திக் கொண்டிருந்தார்கள். நானும் மெல்ல தயக்கத்தோடு தள்ளி அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நீயா நானா நிகழ்ச்சியில் ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார் வெய்யில். அப்போது தான் இன்ப அதிர்ச்சியாக நீங்களும் எனக்கு பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தீர்கள்.முதன் முறையாக இப்படி ஒரு சுவாரசியமான விவாத நேரம். நீங்கள் அமர்ந்ததும் மொத்த கூட்டமும் உங்களை சுற்றி நின்றும் அமர்ந்தும் கேட்கத்துவங்கினார்கள். அந்த எட்டுச் சேர்களே ஒரு குட்டி மேடையாகி விட்டது சில நிமிடங்களுக்கு.

 

 

 

கன்னியாகுமரியின் பிரத்தியேக மொழி பற்றியும் குமரித்தேசியம் பற்றிக் கூட நீங்கள் பேசிய கருத்துகள் செம. அதற்க்குள் அடுத்த அமர்வுக்கான நேரமாகி விட்டதாக சொல்லப்பட்டதால் கலைய வேண்டியதாகி விட்டது. இப்போது நினைத்தாலும்இனிமையான நினைவுகள்.

 

 

la

 

சரி இரண்டாம் நாளின் நினைவுகளுக்கு வருகிறேன்.

 

நான் காலையில் 6 மணிக்கு எழுந்தும் முகம் கழுவ செல்ல உங்கள் அறையை கடந்து செல்லும் போதே பார்த்தேன். நீங்கள் தயாராகிக் கொண்டிருந்தீர்கள். நான் காபி குடிக்க வெளியே வரும் உங்களோடு சேர்த்து மிக முக்கிய நண்பர்கள் யாருமே இல்லை. நீங்கள் நடைக்கு சென்று விட்டீர்கள் போல.

 

நான் நம் சங்க அரங்கிற்கு எதிரே இருக்கும் டீக் கடைக்குள் நுழையும் போதே அங்கே அஸ்வின் என்றொரு நண்பரை சந்தித்தேன். கணினியில் பணியாற்றுவதாகவும் மதுரையை சேர்ந்தவர் என்றும் தெரிந்து கொண்டேன்.

 

காபி குடித்து முடித்ததும் அஸ்வின் சொன்னார் ” ஜெ குரூப்பா வாக்கிங் போய்ட்டாரு நாமும் தேடிப் போவமா என்றார் ”

 

நானும் தலையாட்டி நாங்கள் சாலையை கடப்பதற்குள் பார்த்தால் நீங்கள் நண்பர்கள் படையோடு வந்து கொண்டிருந்தீர்கள்.

 

நாங்களும் உங்களை அடைந்து நண்பர்களோடு சின்ன சின்ன புன்னகையினை இடமாற்றிக்கொண்டு  இணைந்து கொண்டோம்.

 

உங்களிடமும் உங்களோடு பேசிக்கொண்டே வந்த நண்பர்களின் முகத்திலும் தான் எத்துணை பிரகாசமான புன்னகை. இப்படி இலக்கியம் மட்டுமில்லாமல் பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டே நடந்து எனக்கெல்லாம் பல வருடங்கள் ஆகி விட்டது. கல்லூரி நாட்களில் என் நண்பர் முத்துக்குமாரும் நானும் என்ன பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று தெரியாமல் பல மணி நேரம் செலவழித்து இருக்கிறோம். ஒரே தெருவை முன்னும் பின்னுமாக இரவு ஒரு மணி வரை வெறுமனே  பேசிப் பேசியே கழித்திருக்கிறோம். அப்போது எங்கள் வீடுகளில் கூட தொலைபேசி இல்லை. 2002 முதல் 2005 வரையிலான காலமது. இப்போது ஆண்டிராய்ட் அருகிலே இருந்தும் நாங்கள் பேசும் நேரம் குறைந்து விட்டது.

 

அதற்க்கு பின் உங்களுடனான இந்த நடை தான் அட்டகாசமானது. நீங்கள் கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  நாம் நடந்து வந்த சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் நடந்து சென்றவர்கள் பக்கத்து கட்டிடங்களில் இருந்த வாட்ச்மேன்கள் என எல்லோரின் முகத்திலும் நான் ஒரு ஆச்சர்யத்தை பார்த்தேன்.

 

சினிமா அரசியல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் தவிர்த்து கூட்டமாக மக்கள் மகிழ்ச்சியாக செல்வதை அவர்கள் மிக மிக ஆச்சர்யமாக பார்த்துச் சென்றதை நான் கவனித்தேன்.

 

வெளியில் இருந்து வந்து மாடிப்படிகளை ஒட்டிய நடைபாதையில் விவாதம் துவங்கும் வரை அந்த வாட்ச்மேன்கள் பார்த்துக் கொண்டே இருந்ததை நான் பார்த்தேன்.

 

அப்போது காலை ஏழுமணி இருக்கும் .அடுத்த ஒரு மணி நேரம் தான் இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் நான் மிக முக்கிய மதிப்பான நிமிடங்களாக நினைக்கிறேன்.

 

எத்துணை விஷயங்கள் சொல்கிறீர்கள் நீங்கள். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கேட்கும் மனநிலையோடு வரவேண்டும் என தாங்கள் ஏன் சொன்னீர்கள் எனச் சொன்னதை அப்போது தான் என்னால் அனுபவபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது.

 

araa

பாரிஸ்டர் பட்டம் , திருவிதாங்கூர் சமஸ்தானம், உங்களின் வட மாநில பயணம் பற்றி (முகங்களின் தேசத்தில் படித்திருந்த போதும் நீங்கள் நேரில் சொல்லச் சொல்ல கேட்பது அதி சுவாரசியம் ) நாகர்கோயில் கன்னியாகுமரி பற்றி,ஜெயேந்திரர் மடத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நண்பர் பற்றி, திருவிதாங்கூரின் சாலைகளின் வலிமை பற்றி, பிரிட்டிஷ் காலத்தின் கடைசி நேரங்களில் திருவிதாங்கூர் பாகிஸ்தானிடம் உதவி கேட்ட தகவல் பற்றி, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அடேயப்பா என்னால் கோர்த்து கோர்த்து எழுத கூடமுடியவில்லை. அத்துணை விஷயங்கள். இத்தனைக்கும் திட்டமிட்ட உரையாடல் கூட இல்லை. அதிலேயே இத்துணை செறிவான தகவல்கள்.

 

அடுத்து உங்களுடன் தேநீர் அருந்த கிடைத்த சந்தர்ப்பம்.மீண்டும் பல்வேறு தகவல்கள். நடுவே மூன்று  பேருக்கு நடுவே விழுந்த காக்கையின் எச்சம் கூட இலக்கிய பதிவாகி ;போய் விட்டது.

 

அடுத்து யாரோ உங்களை குளித்து தயாராகச்  சொல்ல நாம் கலைந்தோம்.

 

காலை உணவிற்க்கான பதார்த்தங்களில் கொய்யாப்பழத்தை பார்த்ததும் இரவில் உங்கள் அறையில் நிகழ்ந்த  வினாடி வினா ஞாபகம் வந்ததை தவிர்க்க  முடியவில்லை

 

முதல் அமர்வாய் பி ஏ கிருஷ்ணன் அவர்களுடனான கருத்துப்பரிமாற்றம். மருந்து நிறுவனங்கள் நிகழ்த்தும் தவறுகளுக்கு மருத்துவ முறைகளை குறை சொல்லக் கூடாது எனத்துவங்கிய விவாதம் திசை மாறிய போது மிகச் சரியாக நீங்கள் பேசி விவாதத்தின் பாதையை சரி செய்தீர்கள்.

 

இந்த ஒட்டுமொத்த அரங்கிலும் நீங்கள் பலநேரங்களில் கேள்விகள் மூலமும் நகைச்சுவைகள் மூலமும் செல்லமாய் கண்டிப்பதின் மூலமும் விவாதத்தை கூர்மையாக்கி இருக்கிறீர்கள், அல்லது அதன் திசையினை சரி செய்திருக்கிறீர்கள். சொல்லத் தயங்கி நின்றால் அருமையான விவாதம் பயனற்று போய்விடும் என்பதை தெரிந்து கொண்டேன்.

 

கேள்விகள் கேட்க விருப்பம் தான். ஆனாலும் என் தகவல் அறையின் திறனை விட சொல்லப்பட்ட தகவல்களும் கேட்கப்பட்ட கேள்விகளும் கிருஷ்ணன் அவர்களின் உரையும் தீவிரமாக  இருந்ததால் நான் அமைதியாகி விட்டேன்.
அடுத்த அமர்வு விழா நாயகர் சீ முத்துசாமி அவர்களுடன்.
மீண்டும் மலேசிய இலக்கியம் பற்றியும்  அவரின் பயணம் பற்றியும் அவரின் கதைகள் பற்றியும் ஒரு அழகான பதிவென்றே சொல்ல வேண்டும்.
நானும் கூட ஒரு கேள்வி கேட்டேன்.
மைக் என் கைக்கு வருவதற்கு முன்பே நான் கேள்வியை துவங்கி இருந்தேன் ” வெண்முரசில் ” எனத் துவங்கினேன்.
மைக்கினை கையில் வாங்குவதற்குள் எனக்கு முன்னால்  யாரோ சொன்னார்கள் வெண்முரசு பற்றி இவரிடம் என்ன கேள்வி கேட்க முடியும் ?
நான் கேட்ட கேள்வி இதுதான்
“வெண்முரசில் ஒரு தருணம் வரும். துரியோதனின் மகள் திருமணத்திற்க்காக தர்மரின் மகன் அஸ்தினாபுரம் வருவான். அப்போது அஸ்தினபுரியின் சாலையில் இருப்பக்கமும் மக்கள் தரும் வரவேற்ப்பில் அவன் திகைத்துப் போவான். அழுகை, ஏக்கம், நன்றி, கருணை, ஆனந்தம் என அப்படி ஒரு கோர்வையாக அழுத்தமான உணர்வு எழுச்சியை தாங்க முடியாமல் அவன் தடுமாறி தேரின் தூணினை விழுந்து விடாமல் பிடித்துக் கொள்வான். அப்போது அவன் தம்பி சொல்வான் மக்களால் கொட்டப்படும் எல்லா உணர்வுகளையும் ஒரு மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் தான் கோவில்களில் வணங்க தெய்வ உருவங்களை  கல்லில் அமைக்கிறார்கள் என்றொரு வரி வரும். இதுவொரு ஹைபோதட்டிக்கல் ஸ்பாட். இந்த ஒருவரியை வைத்துக்கொண்டு இந்து மதம் ஏன் புனிதமானது என்றும் பேசலாம், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது இந்துமதம் ஆன்மீக புரிதலுக்கு மட்டும் தான் புனிதமெல்லாம் ஒன்றும் கிடையாது என்றும் பேசலாம். இத்தனைக்கும் இந்தக் கருத்து ஒரு ட்ராவல் டயலாக் மட்டும் தான்.
இப்படி ஒரு ஹைபோதட்டிக்கல் ஸ்பாட் ஒன்று மலேஷியா இலக்கியதிலோ, சிங்கப்பூர் இலக்கியத்திலோ சீன இலக்கியத்திலோ நீங்கள் ரசித்தது உங்களை பாதித்தது ஏதேனும் உண்டா ?
என்று சீ முத்துசாமி அவர்களிடம் கேட்டு  முடித்தும் அவர் சில நொடிகள் யோசிக்க எடுத்துக் கொண்டார். பின்பு அவர் தந்த பதில் இதுதான் ” இது   மிக நுண்ணிய கேள்வி. நிச்சயம் இருக்கும் என்னால் உடனே சொல்ல முடியவில்லை ” என்றார்.
எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே என்றாலும் வெண்முரசினை நினைத்து மிக மிகப் பெருமையாக  இருந்தது.
மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பேரியட் அவர்களுடன் அமர்வு மொழிபெயர்ப்புடன் நிகழ்ந்த போதும் அவரின் முகத்தில் இருந்த புன்னகையை என்னால் மறக்க முடியவில்லை. தெய்வீக சிரிப்பம்மா என்று சொல்லத் தோன்றியது.
மேகாலயா சூழல் பற்றி, தாய் வழிச் சமூகம் பற்றி இன்னும் இன்னும் நிறைய கருத்துப் பரிமாற்றங்கள். மேகாலயாவில் சர்ச்சில் வாராவாரம் ஆண்கள் வந்து மனைவிகளால் நேரும் துயரம் பற்றி தங்களின்  சோகத்தை பகிர்ந்து கொள்வார்கள் எனக் கேட்டபோதுஅரங்கில் சிரிப்பை யாராலும் அடக்க முடியவில்லை.
ar
பெண் நண்பர் ஒருவர் எழுந்து இந்த ஒரே காரணத்துக்காகவே மேகாலயா செல்ல வேண்டும் எனச் சொன்னபோது சிரிப்பின் சத்தம் அடங்க தாமதமானது.
நானும் கூட  ஜேனிஸ் பேரியட் அவர்களின் கதை ஒன்றை நம் தளத்தில் படித்ததை ஒட்டி ஒரு கேள்வி கேட்டேன்.
“மேகாலயா தாய் வழி சமூகம் என்கிறீர்கள்.  உங்களின் கதையில் சுற்றுலா செல்லும் அந்தப் பெண் தான் திரும்பி வரும்வரை  தன்னை சைட் அடிக்கும் உள்ளூர் பையனுக்கு புதிய கேர்ள் பிரண்ட் எதுவும் கிடைத்து விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறாள். அங்கே அவளின் தோழி சிகரெட் பிடித்துக் கொண்டே குளியலறையில் அறிமுகமாகிறாள். அவள் மிக மோசமான பெண் இன்னொரு பெண்ணால் சொல்லப்படுகிறாள். ஆக அதிகபட்சம் சிகரட் பிடிப்பதை தவிர தாய் வழி சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் புதிய கருத்துக்கள் ஏதுமில்லையே . எல்லாமே தந்தை வழி சமூகத்தின் பெண்களின் நடவடிக்கைகள் போலவே இருக்கின்றதே  ?எனக் கேட்டேன்
ஆனால் மொழிபெயர்க்கும் ஏற்பட்ட சிறிய குழப்பத்தால் நான தாய் வழி சமூகத்தில் காதல் பற்றி கேட்டதாக புரிந்து கொண்டு அதற்க்கு ஜேனிஸ் பேரியட் அவர்கள் பதில் தந்து விட்டார். நானும் அமர்வின் நேரமின்மையின் காரணமாக சரியென அமர்ந்து கொண்டேன்.
காலையில் இருந்தே அங்கே ஒரு பெண்ணை தொடர்ந்து கவனித்தேன். உடையில் ஒரு அலட்சியமும் தலைமுடியை விரித்து போட்டபடியும் ஒரு அதிர்ச்சி இலக்கியமாக நடமாடிக் கொண்டிருந்தார். எனக்கும் யார் என்றே கண்டுபிடிக்க இயலவில்லை. ஜேனிஸ் பேரியட் அவர்களுக்கு விழா மரியாதை செய்யும் போது பிரியம்வதா அவர்களும் இந்தப் பெண்ணும் தான் செய்தார்கள். அப்போதும் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வெண்பா என்று யாரோ சொன்னார்கள்.
விழா முடித்து ஊருக்கு வந்த பின் விழா புகைப்படங்களை பார்த்த போது தான் அடையாளம் தெரிந்தது . அட வெண்பா கீதாயன். பொதுவாக அவரின் தங்கிலீஷ் மொழி தான் அதிர்ச்சியாக இருக்கும் (ஹா ஹா ) . அவரை யாரென்றே என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போனது எனக்கு கூடுதல் அதிர்ச்சி.
உணவிற்கு பிறகு மாலை 5.40 க்கு கூடுவோம் என்று தெரிவிக்கப்பட்டது. ஜேனிஸ் பேரியட் அவர்களுடன் புகைப்படமேனும் எடுத்துக் கொள்ளவேண்டும் என நினைத்தேன். ஏதோ தயக்கத்தால் முடியவில்லை.
நீங்கள்  அறைக்கு செல்லும் வழியில் கல்லூரி மானவர்கள் சிலர் உங்களிடம் கையெழுத்து வாங்க மிக ஆர்வமாக புத்தக குவியலோடு வந்தார்கள்.
அதில் ஒரு மாணவரின் பெயர் நவீன் என்றதும் நம்மிடம் நிறைய  நவீன் இருக்கிறார்கள். இவருக்கு ஏதாவது புரட்சிகரமாக பெயர் வைக்க வேண்டும். கிரம்மர் சுரேஷ் போல என்றதும் எழுந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.
உடனே நான் கேட்டேன் என் கடிதத்துக்கு பதில் தந்தீர்களே அது போல அதிவீரபாண்டியன் போலவா என்றேன் ?
உடனே நீங்களும் அதைப்பற்றி பகடியாக சொல்லிவிட்டு சென்றீர்கள். ‘இவரின் முகவரிக்கும் பெயருக்கும் ஒரு பொருத்தமே இல்லையே “
சாப்பிடும் போது உங்களிடம் கையெழுத்து பெற்ற மாணவர்களில் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் உங்களுக்கு  எழுதிய கடிதத்தில் கூட என்னை நினைவு வைத்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
கடைசி நிகழ்வாக உங்களின் அறையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சுவாரசியமான கலந்துரையாடல். தி. ஜானகிராமன், சுஜாதா, இலக்கிய அமர்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள், குற்றால அமர்வின் நினைவுகள், உங்களின் அம்மாவின், மனைவியின், மீனாம்பிகை மேடமின் தி.ஜானகிராமன் பற்றிய பார்வை என இந்த தருணங்களும் நினைவில் இதமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மாலை விருது விழாவில் கலந்து கொள்ள இயலாமல் ஒரு முக்கிய வேலை இருந்ததால் உங்களிடம் விடை பெறலாம் என போயிட்டு வரேன் என உங்களிடம் சொன்னேன்.
என்னை நெஞ்சோடு சேர்த்து அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்து போயிட்டு வாங்க ஊட்டி சந்திப்பில் பார்க்கலாம் என விடைதந்தீர்கள்.
இந்த நிகழ்வின் உச்ச தருணமாய் எனக்கு இதையே எடுத்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்தமாய் இந்த வாழ்வின் மிக அற்புதமான இந்த இரண்டு நாட்களும் உங்களாலும் நம் விஷ்ணுபுர குழும நண்பர்களாலும் தான் சாத்தியமானது. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான நன்றிகள்.
இன்னும்   முழுமையாக சொல்லி முடிக்கவில்லை, நிறைய சொல்ல இயலவில்லை. கருத்துக்களிலும் பெயர்களிலும் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது முழுக்க முழுக்க என்னுடைய கவனக்குறைவே.இருந்தாலும்  இந்த இடத்தில இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
ரா.பிரசன்னா
முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–13
அடுத்த கட்டுரைக‘வதை’ !