வசைமழை

dog

அன்புள்ள ஜெமோ,

ஒரு பொதுப்பார்வையாக இணையத்தை சுற்றிவந்ததில் உங்களைப்பற்றிய கருத்துக்களாகக் கண்ணில்பட்டவற்றில் சில சாம்பிள்கள் இவை

மக்கள் தொகையை கட்டுக்குள் வைப்பதற்கு கருத்தடை செய்வதுபோல் ஜெயமோகன் மூளை நரம்பை துண்டித்து கருத்துத்தடை செய்துவிடலாம்! அவரது இலக்கிய குழந்தைகள் மிதிபட்டே செத்துவிடும்போல!

இவன் ஒரு வெங்காயம். அரைகுறையாய் மேய்ந்துவிட்டு அதுவும் குறை காணும் நாக்கில். இவன் சைவர்கள் அத்தனையையும் படிக்க வேண்டாம் திருவாசகத்தை படிக்கட்டும். எம் இறையோனை இகழும் இவன் மனிதகழிவை உண்ணும் மிருகம்

மூன்று வேளைகளும் தன் மலத்தை தானே நுகர்ந்து ரசித்து திண்ணும் மனிதர்களால் மட்டுந்தான் இது மாதிரியான மனிதர்க்ளைக் கொண்டாடவும் இவர்களின் எழுத்திற்கு வக்காலத்து வாங்கவும் முடியும். எழுதுகிறவன் மட்டுமல்ல அதனைக் கொண்டாடுகிறவனும் மன நோயாளியே.

இவற்றில் இரண்டு இன்குலாப்பை நீங்கள் கவிஞர் இல்லை என்பதற்காக எழுதப்பட்டவை. ஒன்று நீங்கள் சைவத்தொன்மங்களில் கிறித்தவத்தாக்கம் இருக்கலாம் என்பதற்காக எழுதப்பட்டது. கொஞ்சம் பின்னால் சென்றால் திமுகக்காரர்கள் நீங்கள் திராவிட இயக்கவரலாற்றில் எம்.ஜி.ஆரின் இடம் பற்றிச் சொன்னதற்காகத் திட்டியவை. இந்த்துவர்கள் அதைவிட மோசமாகத் திட்டியவை. இப்படி பக்கம் பக்கமாக வசைகள்.

இத்தனை வசைகளின் வழியாக ஒரு வாசகன் உங்களை எப்படி வந்தடைய முடியும்? உங்களை எப்படி திறந்த மனதுடன் அவன் வாசிக்கமுடியும்? இது மிகப்பெரிய தடை அல்லவா?

ராமச்சந்திரன்

***

அன்புள்ள ராமச்சந்திரன்,

இப்படி வசை வாங்காத எந்த நல்ல எழுத்தாளர் தமிழில் செயல்பட்டிருக்கிறார்? புதுமைப்பித்தன்? க.நா.சு? ஜெயகாந்தன்? சுந்தர ராமசாமி?. இது எப்போதுமே இப்படித்தான். மூர்க்கமான நம்பிக்கைகள் மற்றும் முன்முடிவுகளின் அடிப்படையில் செயல்படுபவர்களின் மொழி வெறுப்பும் காழ்ப்பும்தான். இலக்கியம் எப்போதும் அவற்றுக்கு எதிரானது. இந்த வெறுப்புமிழ்தல்களில் உள்ள மொழியே இலக்கியத்தை நோக்கி நல்ல வாசகனை செலுத்தும். அப்படி வரும் நல்ல வாசகர்கள் மட்டும் போதும். அவர்கள் பல்லாயிரக்கணக்காகப் பெருகியிருக்கிறார்கள் என்பதே இந்த வெறுப்புக்குழுக்களைக் கசப்படையச்செய்கிறது.

எனக்கும் இப்படி வசைக்கடிதங்கள் வந்து குவிந்துகொண்டுதான் இருக்கின்றன. சென்ற சிலநாட்களாக ஒரு விளையாட்டு, வசைக்கடிதங்களை திறக்காமலேயே இது இன்குலாப் தரப்பா இந்துத்துவ தரப்பா என்று ஊகிக்க முயல்வது. திறந்தால்கூட வசைகளை வைத்துக்கூட கண்டுபிடிக்கமுடியாது. ஒரே மொழிதான். அந்த மொழியில் சில பொது அம்சங்கள் உள்ளன. மலம், துடைப்பம், செருப்பு [செப்பல்!] சாக்கடை, மயிர் என்னும் பொருட்கள்மீது முற்போக்கும் பிற்போக்கும் கொண்டுள்ள ஒரேவகையான ஒவ்வாமை தெரியவருகிறது. இங்கே தீண்டாமையின் அடிப்படையாக அமைந்தது இந்த ஒவ்வாமைதான். இன்றும் அடிப்படை மனநிலை அப்படியே நீடிக்கிறதென்று தோன்றுகிறது

ஜெ.

முந்தைய கட்டுரைவிழா சிவமணியன் பதிவு
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–12