சாகித்ய அகாடமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்

பொன்னீலன்
பொன்னீலன்

அன்புள்ள ஜெ
ஓரிரு வருடங்களாக அகாடமி தேர்வு குழுவின் விவரங்களையும் வெளியிடுகிறது. இம்முறையும் அண்ணாச்சி பொன்னீலன் உண்டு . செயல் வீரர்கள் :). இணைப்பாக பட்டியலை தந்துள்ளேன் .
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் .

 

இந்திரன்
இந்திரன்
பா செயப்பிரகாசம்
பா செயப்பிரகாசம்

சாகித்ய அக்காதமி விருதுகள் எப்படி பெறப்படுகின்றன என்பதைக் காண்பதற்கு அதை அளித்த ‘நடுவர்கள்’ பட்டியலைப் பார்த்தாலே தெரியும். இந்திரன், பா.செயப்பிரகாசம்,பொன்னீலன். இதில் பொன்னீலன் முன்னரே சாகித்ய அக்காதமி விருது வாங்கியவர். செயப்பிரகாசம் அனைத்து வாசல்களையும் முட்டிக்கொண்டிருப்பவர். அரசுத்துறை உயரதிகாரியாகவும் இடதுசாரிப் புரட்சியமைப்பின் தலைவராகவும் ஒரே சமயம் பணியாற்றிய பெருமை கொண்டவர்.

 

இவர்களில் இந்திரனையும் பா.செயப்பிரகாசத்தையும் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்களுக்கு இவ்வுலகம் என்பது கைகளாலும் கால்களாலும் அள்ளி எடுப்பதற்குரியது மட்டுமே. உடலே கைகளாக எட்டுத்திசையும் துழாவிக்கொண்டிருக்கும் ஆக்டோபஸ்கள் இவர்கள். இலக்கியமும் புரட்சியும் கட்சியரசியலும் அரசாங்கமும் எல்லாமே அதற்கான வழிகள். அவர்களுக்கு உண்மையிலேயே ராஜேஷ்குமார், இன்குலாப், அசோகமித்திரன் ஆகியோர் நடுவே வேறுபாடு தெரியாது. இதில் சென்று மாட்டிக்கொண்ட பொன்னீலன் அண்ணாச்சி தனக்குச் சிறுமைதேடிக்கொண்டிருக்கிறார்.

 

இந்தக் குழு தேர்ந்தெடுத்தால் சாகித்ய அக்காதமி என்ன செய்யும் என்று கேட்கலாம். இந்தக்குழுவையே நீங்கள் பார்க்கலாம், மூவருமே ஏறத்தாழ ஒரே அரசியல் கொண்டவர்கள்.எந்த ஒரு குழுவும் மாறுபட்ட அரசியல் கொண்டவர்களால் ஆனதாக அமைவதே இயல்பு. தற்செயலாக இப்படி ஆவதில்லை. மிகக்கூர்மையாக மூன்றில் இருவர் முடிவுசெய்தால் இன்குலாபுக்கே விருது கிடைக்கும்படி குழு அமைக்கப்பட்டிருக்கிறது

 

ஆக, இன்குலாபுக்கு விருது என்பது நடுவர் குழுவை தெரிவுசெய்வதற்கு முன்னரே முடிவுசெய்யப்பட்டுவிட்டது. ஆறுமாதம் முன்னரே படிப்படியாக அதை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். பலரை தவிர்த்து இன்குலாபை அங்கே கொண்டுசேர்த்திருப்பார்கள். இதைச்செய்தவர்கள் எவரெவர் என்பதும் இங்கே அனைவருக்கும் தெரியும்.

 

இச்சூழ்ச்சியை மறைப்பதற்காக இவர்கள் செய்யும் உத்தி ஒன்று உண்டு, வேறு எவருக்கேனும் இம்முறை விருது அளிக்கப்படும் என்று ஒரு செவிவழிச்செய்தியை பரவவிடுவார்கள். இம்முறை விருது எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை நாவலுக்கே என ‘உறுதியான’ செய்திகள் உலவிக்கொண்டிருந்தன. அப்போதே எனக்கு ஐயம், வேறு எவருக்கோ அது உறுதிசெய்யப்பட்டுவிட்டது, உறுதியாக எஸ்.ராமகிருஷ்ணனுக்குக் கொடுக்கமாட்டார்கள் , வேறு நபருக்கு உறுதிசெய்யப்பட்டுவிட்டது என நண்பர்களிடம் சொல்லியிருந்தேன்.

 

சாகித்ய அக்காதமி என்பது ஓர் அடையாளம். ஒரு தகுதியான படைப்பாளிக்குக் கொடுக்கப்படும்போது மேலதிகச் சிறப்பு. தகுதியற்றவருக்கு அளிக்கப்படும்போது கண்டனங்களையும் இழிவையுமே தேடித்தரும். அதை வெல்ல இவர்கள் அமைக்கும் இந்த வியூகம், கூட்டான சதி போன்றவை குமட்டல் ஏற்படுத்துகின்றன. தரமான படைப்பாளிகளை மறைக்க, அவர்களுக்கு இங்கே கிடைக்கச் சாத்தியமான எளிய அங்கீகாரங்களைக்கூட தாங்கள் கையகப்படுத்த முயல்கிறார்கள்.  அதனூடாக தமிழ் இலக்கிய இயக்கத்திற்கே பெரும் தீங்கை ஈட்டித்தருகிறார்கள்.

 

இத்தகைய அமைப்பு மனிதர்களுடன் இலக்கியவாதி போட்டியே போடமுடியாது. அனைத்துத் தளங்களிலும் இத்தகைய உலகியல்வெறிகொண்டவர்களிடம் தோற்று, விலகித்தான் அவன் இங்கு வருகிறான். ஏற்கனவே  உலகைவென்ற இந்திரன்,பா.செயப்பிரகாசம் போன்ற அமைப்புமனிதர்கள் இங்கும் வந்து அமர்ந்திருப்பதென்பது இலக்கியவாதிக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி.

 

தமிழகத்தின் எந்த இலக்கியவாதிகளுக்கும் இப்படி கல்வியமைப்புகளுடனும் அரசுத்துறைகளுடனும் ரகசிய உறவுகள் இல்லை. அதை கையகப்படுத்த உதவும் தந்திரங்கள் அவர்களுக்குத்தெரியாது. அவர்களுக்காகப் பணிபுரிய சதித்தோழமையும் கொடுக்கல்வாங்கல்களும் இல்லை. ஆகவே தமிழ் இலக்கியவாதி இவர்கள் சதிகளை தொடங்குவதற்கு முன்னரே தோற்றுவிட்டான்

 

இந்த ஒவ்வொரு பிழையான விருதும், அதற்குப்பின் உள்ள ஈனத்தனமான சதியும் உண்மையான ஒரு படைப்பாளியை சிறுமைசெய்கிறது.இம்முறை எஸ்.ராமகிருஷ்ணன்.

 

 *

தமிழ் ஹிந்துவில் வந்த இன்குலாப் பற்றிய பா.செயப்பிரகாசத்தின் கட்டுரை மிக வேடிக்கையானது. இன்குலாப் இருந்திருந்தாலும் விருதை மறுத்திருப்பார் என்கிறார். ஆனால் அவர்தான் இன்குலாபுக்கு சாகித்ய அக்காதமி விருது அளித்த நடுவர்குழுவின் தலைவர். இன்குலாப் விருதுக்கு அப்பாற்பட்டவர் என்கிறார். ஆனால் அவர் வைரமுத்து அளித்த விருதை வீடுதேடிச்சென்று பெற்றார் என்கிறார். இன்குலாப் இடதுசாரிகளின் பதாகை என்கிறார். ஆனால் இன்குலாப் வைரமுத்து அளித்த விருதைப்பெற்றதற்குச் சொன்ன காரணம் அவர் இடதுசாரிகளால் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டதுதான் என்றும் சொல்கிறார்.

 

இவர்களை சொற்களைக்கொண்டு புரிந்துகொள்வது மிகக்கடினம், செயல்களைக்கொண்டு புரிந்துகொள்வது மிகமிக எளிது

 

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12
அடுத்த கட்டுரைபுதிய இருள்