விஷ்ணுபுரம் விருது- சு.யுவராஜன்

 

suyuva

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

வணக்கம்

நலமா? விஷ்ணுபுரம் விருதில் உங்கள் உரை சிறப்பாக இருந்தது. ஆனால் கொஞ்சமாக தொடர்ந்து முச்சு வாங்கி கொண்டேயிருந்தது. உடல் நலத்தைப் பார்த்து கொள்ளுங்கள் சார். விழா அருமையாக இருந்தது. என் மன உணர்வுகளை கட்டுரையாக எழுதினேன். அவை கீழே:

விருதும் தடித்தத் தோல்களும்

எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படிருக்கிறது. அவர் மிகுந்த நிறைவுடன் அவ்விருதைப் பெற்றுக் கொண்டதற்காக மிகவும் மகிழ்கிறேன். அவருக்கு என் வணக்கமும் வாழ்த்துகளும். 2002-இல் அவரை வாசித்துப் பிறகுச் சந்தித்துத் தொடர்ந்து உரையாடி வருபவன் என்ற முறையில் சீ.முத்துசாமி(சீ.மு) மலேசியாவில் நவீன இலக்கியம் படைத்தளித்தவர்களில் நிச்சயமாக தன்னிகரற்றவர் என்று துணிந்து கூறுவேன். அன்றைய நாளிதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் இருந்த கலை அனுபவமற்ற பெரும்பாலான கதைகளுக்கு மாற்றாக சமரசமில்லாமல் எழுதினார் சீ.மு. ஆகவே அவர் எழுத்து புரியவில்லை என்று நமது மகா விமர்சகர்களால் வாழ்த்தப் பெற்றார்.(எழுத்து புரியவில்லை என்றால் புரியாததது போல எழுதிய எழுத்தாளன் மேல் தானே தவறு ? வாசகனின் வாசிப்பு இலட்சணத்தை எழுத்தாளன் கேள்வி எழுப்புவது எத்தனை பாவம் தெரியுமா ?)

2003 அல்லது 2004-ஆக இருக்கலாம். அப்போது ஒரு மாதாந்திர சிறுகதை தேர்வு நிகழ்வு நடந்தது. சீ.மூவின் வனத்தின் குரல் வெளிவந்திருந்த தருணம். சீ.மூவின் அருமையான கதைகளில் ஒன்று. ஆனால் வழக்கம்போல தேர்வாளர் ஒரு பாடாவதி கதையைத் தேர்ந்தெடுத்தார். அது சரி அவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? அதோடு செல்லும் நல்லூழ் அவருக்கு இல்லை என்பது அன்றைய அவரின் தீயூழ். எதோ அறிவுபூர்வமாக சொல்வதாக நினைத்துக் கொண்டு சீ.முத்துசாமி புரியாத கதைகளை எழுதுகிறார், இதனால் யாருக்கு நன்மை போன்ற சொற்களை உதிர்த்தார். நான் பொதுவாக வயதிற்கு மரியாதை கொடுப்பவன். ஆனால் இம்மடத்தனத்திற்கு என் மாற்றுக்கருத்தைப் பதிவு செய்தே ஆகவேண்டுமென நினைத்தேன். என் இயல்பிற்கு மீறி மிகுந்த உணர்ச்சிவசத்துடன் சீ.முத்துசாமியின் கதையைக் குறித்து விளக்கினேன் என்பதை இப்போது யோசித்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது.

ஒரு விடயம் அன்று உறைத்தது. இம்மடத்தனம், தடித்தத் தோல்தனம் என்றும் உள்ளார்ந்த தரமான எழுத்துகளை உணர்வதில் இவர்களுக்குத் தொடர்ந்து இருக்கப் போகிறது. நல்ல எழுத்துகள் இந்த தடித்த தோல்களுக்காக எழுதப்படவில்லை. இத்தோல்கள் என்றும் சுரணையற்று வெற்று கோஷங்களை எழுப்பிக் கொண்டு மெய்மை நோக்கிய பாதைக்கு எதிராக பயணிக்கும் என்பதும் புரிந்தது. ஆகவே இவற்றுடன் சதா மோதிக் கொண்டிருப்பது போன்ற அவசம் வேறெதுவுமில்லை. ஆகவே தரமானவர்களை, தகுதியானவர்களைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதும், எழுதிக் கொண்டிருப்பதுமே நம்மால் இயன்றது என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஜெயமோகன் இலக்கியத்தைத் தரமதிப்பிடுவதில் உள்ள காத்திரத்தை நான் சொல்லிதான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை. மலேசிய எழுத்துகளில் பெரும்பாலும் பாடாவதிகள்தான் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சூழலுக்கு முற்றிலும் எதிரான உள்ளார்ந்த, தரமான, கலாபூர்வமான எழுத்துகள் இந்த பொதுமைப்படுத்தல்களில் கரைந்து போய்விடக் கூடாதென்ற பதைப்பு எனக்கு எப்போதும் உண்டு. ஜெயமோகன் பாராட்டிதான் ஆக வேண்டுமென்று அவசியமில்லை. விமர்சனபூர்வமாக முக்கியமான எழுத்தாளர்களை அவர் படித்துக் கருத்துரைத்தாலே இங்கே சதா அல்லக்கைகளின் அடிவருடிகளின் சலசலப்பில் அடியில் முடங்கியிருக்கும் தரமான எழுத்துகளுக்கு ஒரு வெளிச்சம் கிடைக்குமென்ற எண்ணம்தான் அவரிடம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் இயல்பான கூச்சத்தை மீறி சீ.முத்துசாமி உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களின் பெயர்களை அவர் காதுகள் கேட்கச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். ஆனால் ஆச்சர்யமாக ஒவ்வொருமுறை நான் சொல்லும்பொழுதும் ஜெயமோகன் அதில் ஆர்வமிருப்பது போல் காட்டிக் கொள்ளவே மாட்டார். எப்போது படித்தார் என்றே தெரியவில்லை.

ஜெயமோகனிடம் நான் எதிர்பார்த்தது ஒரு விமர்சனபூர்வமான மலேசிய இலக்கியம் ஒட்டிய கட்டுரைதான். இவ்வாண்டு கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் நடந்த இலக்கிய முகாமில் விஷ்ணுபுரம் விருது சீ.முவிற்கு அளிக்கப்படுவதாக ஜெயமோகன் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சமரமில்லாமல், கூஜா தூக்காமல், எளிய பிரசுர வசதிக்கெல்லாம் விலை போகாமல், எங்கே விருதோ பரிசோ கிடைக்கும் என்பதற்காக நாக்கை தொங்கப் போடாமல் வாழும் எழுத்தாளர்களும் இப்புவியில் உண்டுதான். என்ன அவர்களை நாம் அஞ்சலி குறிப்பில்தான் விதந்தோதுவோம். சிலமுறை தப்பித் தவறி வாழும்போதே அவர்களைப் பாராட்டி விடுகிறோம். அந்த நல்லூழ் சீ.முவிற்கு வாழும்போதே அமைந்ததில் அவரைத் தொடர்ந்து பின் தொடர்பவன் என்ற வகையில் மிகுந்த நிறைவை அடைகிறேன். சீ.முவிற்கு விருதளித்து நம்மை நாமே மரியாதை செய்து கொண்ட இக்கணங்கள் போல மேலும் பல கணங்கள் மலேசிய தமிழ் இலக்கியதிற்கு வாய்க்கட்டும். சீ.முவிற்கு மீண்டும் என் வணக்கமும் வாழ்த்துகளும்.

பின்குறிப்பு: விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 மாதத்திற்கு மேலாகிறது. இலக்கியம் தவிர்த்து பொதுவான தமிழ் அமைப்புகளோ அல்லது ஊடகங்களே இதைப் பற்றி  செய்தியோ அல்லது நேர்காணலோ எடுத்ததாக தெரியவில்லை. இதை எடுத்துக் கூறினால் என்னிடமே கட்டுரை எழுதி அனுப்புங்கள் போடுகிறோம் என்பார்கள். தடித்தத் தோல் என்பது இதுதான் ஐயா. மொண்ணைத்தனம் என்ற வேறொரு சொல்லும் உண்டு. சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டால் வெட்கமடா என்று பாடிக் கொண்டே வாழ்ந்து எழுதி சாக வேண்டியதுதான்.

சு யுவராஜன்

மலேசியா

முந்தைய கட்டுரைவிழா-வசந்தகுமார் பதிவு
அடுத்த கட்டுரைவீரர் அஞ்சலி -கடிதங்கள்