விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்
அன்புமிக்க திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
விஷ்ணுபுரம் விருது விழா- 2017 நிகழ்வுகளைக் கட்டுரைகளாகவும், புகைப்படங்களாகவும், காணொளிக் காட்சிகளாகவும் உங்கள் வலைத்தளத்தில் கண்டு மகிழ்ந்தேன். ஆண்டுக்காண்டு விழா மென்மேலும் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பலரையும், அவர்களின் உற்சாகமான வாசகர் வட்டத்தின் ஒரு பகுதியையும் சந்தித்து உறவாடி, உரையாடும் நற்பேரினை நீங்கள் முன்வந்து எனக்கு அளித்த போதிலும், ‘வலிய வந்த ஸ்ரீதேவியை’ப் புறக்கணித்ததின் வலியோடு இதை எழுதுகிறேன்.
எனினும் என் முடிவு சரியானதுதான் என்று இப்போதும் நான் உணர்கிறேன். நான் இலக்கியத்தை நுனிப்புல் மேய்பவன். இலக்கியம் பற்றி எனக்கு ஆழ்ந்த அறிவு கிடையாது. நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பொருளியல் ஆசிரியனாகப் பணியாற்றியதில் அந்தத் துறையில் ஓரளவிற்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். அது தவிரச் சட்டம், வரலாறு, அறிவியல் போன்ற சில துறைகளில் அவ்வப்போது மூக்கை நுழைத்திருக்கிறேன். தீவிர இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டதில்லை. வெகுஜனப் பத்திரிக்கைகளில் வந்த இலக்கிய ஆளுமைகள் பலரின் கதை, கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். இளமையில் இருந்த இலக்கிய வாசிப்பு, பின்னர் குறைந்துவிட்டது.
என் துறைசார்ந்த வாசிப்புக் கூடக் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் குறுகிவிட்டது! ஒரு பேனாவாயினும் சரி, நட்பாயினும் சரி, அதன் உண்மையான முழு மதிப்பை அதை இழக்கும்போதுதான் அறியமுடியுமென்று பொருளியலில் ‘நுகர்வோர் உபரி’க் கோட்பாட்டை விளக்கும்போது கூறுவேன். முதுமையை இயல்பானதாக நான் ஏற்றுக் கொண்ட போதிலும், என் நினைவாற்றல் தேய்வதைப் பேரிழப்பாகவே உணர்கிறேன். ஒரு புத்தகம் படிக்கும்போது ஆரம்ப இயல்களில் புரிந்துகொண்டதை, இறுதி இயல்களைப் படிக்கும்போதே மறந்து விடுகிற அவலத்தை அனுபவித்ததால், முழுப் புத்தகங்கள் படிப்பதையே நிறுத்தி விட்டேன்! அதற்குப்பதிலாக இணையத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமான கட்டுரைகளைப் படிப்பதில்தான் என் நேரத்தைச் செலவு செய்கிறேன். உங்களின் வலைத்தளம், அ.இரா. வெங்கடாசலபதி, நாஞ்சில்நாடன், எஸ்.ரா., ஞானி, அதியமான், சமஸ், ஜெயரஞ்சன் உட்படப் பலரின் தமிழ் வலைத்தளங்களை அனேகமாகத் தினமும் படித்து விடுகிறேன். படித்த சில மணித்துளிகளுக்குள்ளேயே என்ன படித்தேன் என்பதை மறந்துவிடும் மாயம் நடந்துகொண்டே இருக்கிறது! இப்படிப்பட்ட சூழலில் கூட்டங்களில் பங்கெடுக்கும்போது முன்னுக்குப் பின் முரண்படப் பேசுவேன் என்கிற ஐயம் என் தன்னம்பிக்கையையே தகர்த்து விடுகிறது.
நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘நவச்செவ்வியல் பொருளியல்’ [‘ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை’ நூலின் தொடர்ச்சி] நூலை எழுதுவதிலும் என் நினைவாற்றல் இழப்பு பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. அவைகளைக் கடந்து ஒரு வழியாக நூலை எழுதி முடித்து விட்டேன். புத்தகம் மார்ச் மாத இறுதியில் வெளிவர வாய்ப்புண்டு. பதிப்பித்தவுடன் உங்களுக்கு அதன் பிரதியை அனுப்புகிறேன்.
சினிமாத் துறையில் ‘பிலிம்ஃபேர்’ விருதுவிழா தனிக்கவனம் பெற்றிருப்பதுபோல, தமிழ் இலக்கியத் துறையில் ‘விஷ்ணுபுரம் விருதுவிழா’ சிறப்புப் பெருமளவுக்கு அதனை வளர வைத்திருக்கும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள்.
அன்புடன்,
எஸ். நீலகண்டன்.
அன்புள்ள நீலகண்டன் அவர்களுக்கு
உடல்நிலையை பேணுக. நீங்கள் குறிப்பிட்டது அனைவரும் எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்தான். முதுமை. பல பேரரறிஞர்கள் எண்ணியவாறு இயற்றமுடியாதநிலையில் இருந்ததைக் கண்டிருக்கிறேன். ஆகவேதான் உலகியல்கடமைகளை முடித்துவிட்டு அறிவார்ந்த பணிகளுக்குத் திரும்பவேண்டும் என்பவர்களிடம் அது சாத்தியமே இல்லை என்றும் அவ்வாறு செய்வது உலகியலுக்கு உள ஆற்றலை முழுதாக அளிப்பது மட்டுமே என்றும் நான் சொல்வது
நூலை அனுப்புக. அடுத்த நூலையும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். செயலே வாழ்வதற்கான அடிப்படை. நீங்கள் விழாவுக்கு வந்திருந்தால் அடுத்த தலைமுறையினரின் தீவிரத்தையும் உற்சாகத்தையும் கண்டிருப்பீர்கள். முதன்மையாக இது ஒரு விழா. கொண்டாட்டமே மனநிலை. அது நம் நம்பிக்கைகளை மீட்கிறது
ஜெ
பொருளின் அறமும் இன்பமும்
துறைசார் நூல்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
ஒரு விழா ,விழாவன்று காலை தொடங்குவதில்லை.பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விடுகிறது.எண்ணமாக,விழைவாக,கலந்துரையாடலாக ,திட்டமிடலாக,மீள மீளஆய்வுகளாக பல பரிமாணங்களுக்குப் பிறகு ஆயிரத்தோராம் முறையாக விழாவன்று பரு வடிவில் நடை பெறும்.மாவட்ட அளவிலான பல அரசு விழாக்களை நடத்திய அனுபவத்தில் சொல்கிறேன்.விழா என்பது ஒரு தவம் மாதிரி.முதல் விழாவைப் போலவே பத்தாவது விழாவிலும் சொதப்புபவர்கள் உண்டு.ஐம்பதாவது விழாவை முதல் விழா போல் திட்டமிடுபவர்களும் உண்டு. உங்கள் நண்பர்கள் விழா நிபுணர்கள் ஆகி வருகிறார்கள்.
விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவை பிறர் வியக்கும் போது பிரமாண்ட உழைப்பே கண் முன் தோன்றுகிறது.விழா தொடர்பான அனைவருக்கும் பாராட்டுக்கள்.நேர நிர்வாகமும்,துல்லிய கவனமும் மெருகு கூடிக் கொண்டே செல்கிறது.வாழ்த்துக்கள்.விழா பற்றிய வாசகர் கடிதங்களில் கே.ஆர்.செந்தில் குமார் கடிதம் முக்கியமானது.
நான் கடவுளை சபிக்கும் தருணங்கள் குறைவு.இது ஒன்று. நேரடி அனுபவத்துக்கு நிகர் இல்லைதான்.திருதராஷ்டிரர்கள் என்ன செய்வது?ஆனால்,திருதராஷ்டிரருக்கு கிடைத்தது,என்னதான் பேரரசராக இருந்தாலும்,ஒரு சஞ்சயன் தான்!
ஜெ.சாந்த மூர்த்தி,
மன்னார்குடி.
அன்புள்ள சாந்தமூர்த்தி அவர்களுக்கு,
உண்மை. நாங்கள் அடுத்த விஷ்ணுபுரம் விழா பற்றிய திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறோம்
ஜெ
அன்புள்ள ஜெ. வணக்கம் கடந்தமுறை வந்து இரு நாள்களும் அனுபவித்த எனக்கு இங்கு மார்கழி முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு ஆற்ற வேண்டிய சூழல் வந்து விட்டதால் வர இயலவில்லை. ஆனால் தங்களின் “இலக்கியத்தைக் கொண்டாடுதல்-2017” நேரே பார்ப்பது போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தி விட்டது. எந்த ஒரு சிறு நிகழ்வையும்விட்டு விடாமல் அதுவும் புது சட்டையிலிருந்து தேநீர் ஊர்வலம் வரைசுவைபடக்கூறியிருக்கிறீர்கள் நன்றி
வளவ துரையன்