விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 15

 

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

 விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

 

மிக மேலோட்டமாக வாசிக்கிறேன் என்பதை உணர்ந்து கடந்த சில மாதங்களாகவே ஒரு விதமான பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இது போன்ற இலக்கிய சந்திப்புகள் நம்முடைய வாசிப்பை புரிதலை மேம்படுத்தக் கூடியவை. அவ்வாறாகவே கடந்த முறை புதிய வாசகராக சென்ற கொண்டாட்ட மனநிலை இல்லையென்றாலும் இந்த முறை என்னை மேலும் கூர்மைப் படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக விழாவிற்கு வந்தேன். திருநெல்வேலியில் இருந்து கிளம்பும் போதே ரயில் நிலையத்தில் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இணையத்தில் இந்து நாளிதழில், பேஸ்புக்கில் அவரது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அதே ரயிலில் தான் ஜெமோவும் இன்னும் பிறரும் வந்திருப்பதை பின்னர் தான் அறிந்து கொண்டேன். ரயிலிலேயே எழுத்தாளர்  ரோஸ் ஆன்றோ மற்றும் லஷ்மி மணிவண்ணனையும் சந்தித்தேன்.

 

இளைய எழுத்தாளர்களின் அரங்கில் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களின் படைப்பு குறித்து பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்பப் பட்டன. நான் சுரேஷ் பிரதீப்பின் ஒளிர் நிழல் நாவலை மட்டும் தான் வாசித்திருந்தேன். மற்ற இளம் படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்திருக்க வில்லை. மேலும் மேலோட்டமாக வாசித்திருப்பதால் பெரிதாக எந்த கேள்வியும் எழவில்லை. ஆதலால் அரங்கில் எழும் கேள்விகளுக்கு செவிசாய்த்து அமர்ந்திருந்தேன். அரங்கு தொய்வடையும் போதெல்லாம் ஜெமோ கேள்விகளை கேட்டு மேலும் முன்னோக்கி இழுத்துச் சென்றார். அது புதிய படைப்பாளிகளுக்கு பல திருப்புகளை அளித்திருக்க கூடும். எல்லா அரங்குகளும் கச்சிதமாக சென்று கொண்டிருந்தன. அரங்கிலிருந்து எழுந்த கேள்விகளுக்கு இளம் படைப்பாளிகள் கூடுமான வரை கள்ளம் கபடமற்று  பதிலளித்தனர் அல்லது பதிலளிக்க முயன்றனர். அவர்கள் சற்று பதற்றத்தில் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது.  அடுத்த தாக எழுத்தாளர் அபிலாஷ் லாவகமாக அரங்கின் கேள்விகளை எதிர்கொண்டார். போகன் சங்கர் கேள்விகளை தும்வசப் படுத்தினார். எழுத்தாளர் அபிலாசும் போகன் சங்கரும் சொல்வதை அப்படியே நம்பாதே என ஒரு குரல் எச்சரித்துக் கொண்டே இருந்தது.  அடுத்ததாக கவிஞர் வெய்யிலிடம் அவரது கவிதைகள் குறித்த  உரையாடல் நிகழ்ந்தது. அரசியல் கவிதைகளுக்காக வெய்யில் பாவ மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.

 

மலேசிய எழுத்தாளர்கள் நவீன், தயாஜி, விஜயலட்சுமி சண்முக சிவா மற்றும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுடன் மலேசிய இலக்கியம் குறித்த உரையாடலில்

 

மலேசிய இலக்கியத்தின் சுருக்கமான வரலாற்றைப் சொல்லித் தொடங்கிய நவீன் தற்காலத்தில் மலேசிய தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் சிக்கல்கள் அங்கீகாரமின்மை மற்றும் மலேய சீன மொழிகளுடனான தமிழ் இலக்கியத்தின் உரையாடல் போன்றவை குறித்த கேள்விகள் சற்று ஊன்றி கவனிக்கும் படி இருந்தன.

 

பி. ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். மேற்க்கத்திய ஓவியங்களைப் பற்றி அவர் எழுதிய புத்தகங்களையோ அல்லது அவரது புனைவுகளையோ வாசித்ததில்லை. தமிழில் அவரது கட்டுரைகள் அறிவுப்பூர்வமாகவும் வரலாறு அரசியல் போன்றவற்றை சமநியையுடன் அனுகுபவை. இறுதியாக அவர் எழுத இருக்கும் நாவலைப் பற்றி பகிர்ந்து கொண்டார். வரலாற்றை எத்தனை முறை வாசித்திருந்தாலும் திரும்ப சிலர் எடுத்துக் காட்டும் சித்திரங்கள் புது திறப்பை அளிக்கக் கூடியவை. அவ்வகையில் அவர் தமிழ்நாட்டின் வரலாற்றில் 1798 முதல் 1805 வரையிலான காலம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வெல்லெஸ்லி முதலான  உலகின் மிக முக்கியமான படைத் தளபதிகள் இந்த நிலத்தில் போரில் ஈடு பட்டிருந்தனர். அவர்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நிலத்தின் போர்த்தளபதிகள் எந்த அளவிற்கு தகுதியானவர்கள் என்பதையும் , நான்காம் மைசூர் – ஆங்கிலேய போருக்கு பின் பாளையக்காரர்கள் அடுத்த சில ஆண்டுகளில் முற்றிலும் ஒழிக்கப் பட்டது பற்றியும் குறிபிட்டது மிக முக்கியமாக பட்டது. அதற்குப் பின் தான் ஏறத்தாள தென்னிந்தியா முழுவதும் ஆங்கிலேய கட்டுப்பாட்டில் வந்தது. மேலும் தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம். மைசூர் கர்நாடக போர்களால் ஏற்ப்பட்ட குழப்பங்கள் பாளையக்காரர்கள் எழுச்சி பின் அவர்கள் அடக்கப் பட்டது குறித்து வேறு விதமான ஒரு சித்திரத்தை மிக குறைந்த வார்த்தைகளில் எழுப்பினார். அதுகுறித்தான தனது நாவல்களுக்கு தரவுகளை கடந்த சில ஆண்டுகளாக திரட்டி வருவதாக கூறினார். ஜெயமோகன் பி ஏ கிருஷ்ணன் அவர்களை அந்த நாவலை எழுதும் போது அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் சிலகாலம் தங்கியிருந்து எழுதும் படி கேட்டுக் கொண்டதை ஒரு கலைஞனின் முன்னுனர்வாகவே உணர்ந்து புன்னகைத்துக் கொண்டேன். நாவல் எழுதி முடித்த பின் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாமல் கூட ஆகலாம் அல்லவா?

 

தனது இறுதி உரையில் இங்கிருந்து 1820 முதல் 1920 வரை காலனி ஆதிக்கத்தின் காரணமாக உலகம் முழுக்க இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப் பட்ட கூலிகள் ஒட்டு மொத்தமாகவே 12 லட்சம் தான் என பிரிட்டிஷ் கால ஆவணங்கள் இருப்பதாக கூறினார். அதில் தமிழர்கள் தான் அதிகம் என்பதையும் அதிலும் கணிசமானவர்கள் தலித்துகள் என்பதையும்  குறிப்பிட்டதும், அதற்கான காரணங்களாக வழக்கமாக நான் அறிந்து வைத்திருந்த பஞ்சம் போன்ற காரணங்களை தவிர்த்து , வரிவிதிப்பு, ஜாதிய கொடுமைகள் இன்னும் பிற இருக்கலாம் எனவும் குறிப்பிட்டதும் முக்கியமான விசயமாக பட்டது. இங்கிருந்த பாரம்பரிய அரசுகள் அவற்றின் வரி விதிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஒருமுறை மராத்தியர்களின் வரிவிதிப்பு முறை சௌத் மற்றும் சர்தேஷ்முகி வரிவிதிப்பு முறையை பற்றி வாசித்த சிலவாசகங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிராமம், மராத்திய படைகளால் கொள்ளை அடிக்கப் படாமல்  இருக்க ஒரு வரியையும் மற்றவர்களால் கொள்ளை அடிக்கப் படாமல் தடுத்து  பாதுகாப்பதற்கு மராத்திய படைகள் உதவ ஒரு வரியையும் அளிக்க வேண்டும். இது பற்றிய பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் இது ஒரு புதிய திறப்பை அளித்த வரி. அதுபோல தமிழகத்திலும் ஏதேனும் இருக்கலாம்.

 

ஜெனிஸ் பரியத்

மேகலாயாவைச் சேர்ந்த ஆங்கிலேய இந்திய எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் உடனான அரங்கில் வடகிழக்கு மாநில காசி பழங்குடிகள் காலனி ஆதிக்கத்தின் தாக்கம், அவர்களின் தாய்வழி சமூக முறை, ஆங்கிலேய சாக்சன் பண்பாட்டின் மொழியில் இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகளின் கதைகள் சொல்லப் படும்போது எழும் சவால்கள், பழங்குடி மொழியின் சொற்களை ஆங்கில புனைவில் அப்படியே பயன்படுத்துவது பற்றி கூறியது மொழிக்கும் பண்பாட்டிற்கும் உள்ள ஆழமான தொடர்புகளையும், எழுத்துவடிவம் அற்ற காசி மொழிக்கு கிருத்துவ மத பரப்புனர்களால் கிடைத்த வரிவடிவம், கிருத்துவ மிஷனரிகளின்  தாக்கம் போன்றவை பற்றியும் ஒருவாறாக எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. சமீப ஒரு வருடமாகத்தான் ஆங்கில வாசிப்பை மேம்படுத்த முயன்றுகொண்டிருக்கிறேன். மேடையில் ஜெனிஸ் மெல்லிய அசைவுகளுடன் கூடிய ஒரு அழகிய நடனத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தார். அவரின் சொற்கள் ஒரு ஆழ்ந்த இனிய பாடலைப் போல ஒலித்துக் கொண்டிருந்தது நிசப்த்தம் நிறைந்த அந்த குளிரூட்டப் பட்ட அறையின் பின்புலத்தில் ஒருவிதமான கனவு நிலைக்கு இழுத்துச் சென்றது. மொழி என்பது வெறும் அர்த்தம் ஊர்ந்து செல்லும் வாகனம் மட்டும் தானா என்ன ? ஆங்கிலம் அரைகுறையாய் புரிந்தது ஒன்றும் அவ்வளவு தவறல்ல என்று எண்ணிக்கொண்டேன்.

 

சீ.முத்துசாமி

முத்துசாமி அவர்களின் எழுத்துக்களை விஷ்ணுபுரம் விழாவின் பொருட்டு தான் வாசித்தேன். இருளுள் அலையும் குரல்கள் தொகுதி முழுக்க துயரமும் சிதிலமும் மட்டுமே காட்டப் பட்ட மலேசிய ரப்பர் தொட்ட தொழிலாளிகளின் வாழ்வு நிறைந்த எழுத்துக்கள். தன்னுடைய வாழ்வின் மீதான பார்வையே தனது எழுத்துக்களில் பிரதி பலிப்பதாக கூறினார். மானுட வாழ்வு ஊழின் முன் நிச்சயமாக தோற்கும்,  வாழ்வின் எதிர் மறையையே தன்னுடைய தான் காண்பதாக கூறினார். கலைஞனுக்கும் செயல்வீரர்களுக்கும் உள்ள வேறு பாடுதான் இவை. செயல் வீரன் ஊழை வென்றுவிட முடியும் என நம்பி செயல் ஆற்றுகிறான். இறுதியில் அவன் ஊழ் வெல்லும் என்பதை அறிந்து கொள்கிறான். ஆனால் கலைஞனோ தன் நுண்ணுணர்வால் ஊழ்தான் வெல்லும் என்று முதலிலேயே  அறிந்த பின்னும் அதனை எதிர்த்து நிற்கிறான். அது துயரமானது தான்.

 

தமிழ் நிலத்தில் புலம் பெயர்வது பற்றிய சித்திரம் கரிகாலன் காலத்திலிருந்தே வரலாற்றில் பதிவாகியுள்ளது. பொதுவாக புலம் பெயர்ந்த மக்களின் மொழி மெல்ல அவர்களிடம் இருந்து அழிந்து போகும் சென்ற நிலத்தின் மொழியும் பண்பாடும் காலப் போக்கில் அதை உள்வாங்கிக் கொள்ளும். ஏறத்தாள 8௦௦  வருடங்களுகுக்கு முன் இஸ்லாமிய படையெடுப்புகளால் அதன் காரணமாக தென்னிந்தியாவில் நடைபெற்ற போர்களால் புலம் பெயர்ந்து வந்த தெலுங்கு பேசும் மக்கள் மெல்ல மெல்ல இந்த பண்பாட்டில் கலந்து கொண்டிருப்பதை காண்கிறேன். தமிழ் நிலத்தின்  ஆட்சியாளர்களாகவும் இருந்த போதிலும் தெலுங்கு பேசிய மக்கள் காலப்போக்கில்  மெல்ல மெல்ல தமிழுடன் கலந்து.கொண்டுவிட்டார்கள். இந்தியா முழுக்க இது நிகழ்ந்திருக்கும். ஆனால் காலனி ஆதிக்கம் அதன் காரணமான ஆங்கில மொழி  மட்டும்  இதில் வேறுவிதமான சித்திரத்தைக் காட்டுகிறது. மலேசியாவில் பிழைப்பு தேடி தமிழர்களைப் போலவே தென்னாப்பிரிக்கவிலும் மற்றும் மொரிசியஸ் ரியூனியன் தீவுகள் போன்றவற்றிற்கும் தமிழர்கள் கூலிகளாக கொண்டு செல்லப் பட்டனர். தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை அதை ஒரு ஐரோப்பிய குடியேற்றமாக உருவாக்குவதில் ஆங்கிலேயர்களும் போயர்களும் மிகுந்த கவனத்துடன் செயல் பட்டுள்ளார்கள். கூலிகளின் பெருக்கம் தங்களுக்கு தங்களின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆபத்து என்பதை உணர்ந்து. அவர்கள் வித்தித்த கட்டுபாடுகளால் தான் தென்னாப்பிரிக்காவில் பிரச்சனை ஏற்ப்பட்டது. காந்தி அதில் இருந்து தான் மிகப்பெரிய ஆளுமையாக உருவாகி வந்தார். இதை ராமச்சந்திர குஹா தன் தென்னாப்பிரிக்காவில் காந்தி நூலில் விரிவாக பதிவு செய்துள்ளார். சில உரிமைகளை பெற முடிந்தாலும் மலேசியாவைப் போல அங்கு ஒரு தமிழ் சமூகம் உருவாகி மொழியை நிலை நிறுத்த முயற்சிக்க  வில்லை.

 

ஒரு நிலத்தில் அந்த மொழியை பேசும் மக்கள் கணிசமாக  இல்லாதவரை அந்த மொழி பெரும்பான்மையினரின் மொழியோடு காலப் போக்கில் கலந்து அழியும் என்றே நினைக்கிறேன். ஒருவேளை இந்த நவீன தகவல் தொடர்பு யுகம் இதற்க்கு வேறுவிதமான பதிலைத் தரலாம்.. நிலத்திற்கும் மொழிக்கும் உள்ள தொடர்ப்பு மொழிக்கும் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பு என விரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறேன். மலேசியாவிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அன்றாட வாழ்வில் தமிழின் பயன்பாடும் , தமிழ்வழி கல்வி கற்பவர்களும் குறைந்து கொண்டே வருகிறார்கள். மேலும் தமிழின் மீதான வாசிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் தமிழிலக்கியம் அங்கு போராடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் முத்துசாமி முன்னோடியாகக் கொண்டு இந்த விருது அவருக்கு அளிக்கப் பட்டுள்ளது. நவீன் போன்ற இந்த தலைமுறை எழுத்தாளர்களுக்கான ஊக்கமாகவும் இது இருக்கும் என்பாதையும் புரிந்து கொள்ள முடிந்தது. இதுவரை விஷ்ணுபுரம் விருது பெற்றவர்களின் வரிசையில் அந்தவகையில் சீ முத்துசாமி தன்னை இணைத்துக் கொள்கிறார்.

 

ஜெயமோகன்

எப்போதுமே ஆசிரியரின் உரை கணம் மிகுந்ததாகவும் அதே அளவுக்கு பகடி நிறைந்ததாகவும் இருக்கும். இந்த உறையும் அப்படிதான் இருந்தது. தற்கால புலம் பெயர் தமிழர்களை பற்றிய அவர்கள் எதிர்கொண்டு இக்கட்டான சிக்கல்கள், அவற்றை பகடியின் மூலம் எதிர்கொள்ளும்  காலம் செல்வத்தின் எழுத்துக்களையும், ஜெனிஸ் பரியத்தை முன்வைத்து பெண் எழுத்தாளர்கள் மீதான சிறு விமர்சனத்தையும் , தமிழகத்தின் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான புதுமை பித்தன், கு.ப ராஜகோபாலன் போன்றோரை முன்வைத்து சீ முத்துசமாயின் மீதான விமர்சனத்தையும் மேடையில் முன்வைத்தார். இந்த முறை ஆசிரியரின் சொற்களில்  இருந்து பெற்றுக்கொண்டது உலகெங்கிலும் தென்னாபிரிக்கா ரியூனியன் தீவுகள் மலேசியா போன்ற நாடுகளுக்கு   புலம் பெயர் தமிழர்களின் சித்திரமும் அவர்கள் மூலம் தமிழ் இலக்கியம் அடைந்தது என்ன என்பதையும் அதன் போதாமைகளையும் மேலும் அதன் மீதான எதிர் பார்ப்புகளையும் தான். யூதர்களை முன்வைத்து பேசிய சொற்கள் மிகுந்த கவனத்தையும் உழைப்பையும் கோருபவையாக உள்ளன.. பல நூறு ஆண்டுகளாக துரத்தப் பட்ட யூதர்களைப் பற்றிய இலக்கிய  பதிவுகள்,  வரலாறுகள் போன்றவற்றை வாசிக்க வேண்டும். அவர்கள் எவ்வாறு தங்கள் பண்பாட்டையும் மொழியையும் காத்துக் கொண்டார்கள் என்பதை அறிய உலக வரலாறும்  அது பற்றிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள விரிவான வாசிப்பும் அவசியம் என உணர்ந்தேன். அது இந்த ஆண்டிற்கான சவாலாக இருக்கும். இதை தவிர்த்து எனக்கிருக்கும் மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் இவற்றோடு மானுட வாழ்க்கையின் தொடர்பு குறித்த கேள்விகள் இன்னும் அழுத்தம் பெற்றுள்ளன.

 

இந்த சந்திப்பில் ஜானகி ராமன் புதிய நண்பராக அறிமுகமானார். சென்ற ஆண்டில் பழகிய சுரேஷ் பிரதீப், சுசீல், ராதா மற்றும் சிவமனியனுடனும் உரையாடினேன். எழுத்தாளர் அபிலாஷ் மற்றும் சுனில் கிருஷ்ணனுடன் அறிமுகம் செய்து கொண்டேன். இறுதியாக ஆசிரியரின் ஆசீர்வாதங்களுடன் இந்த விழா அரங்கிலிருந்து வெளியேறினேன்.

 

அன்புடன்

விஷ்ணு.

அன்பு ஜெயன் சார்,

மற்றவர்கள் சொல்லாமல் விட்ட இடத்தை பூர்த்தி செய்யவே இக் கடிதம்.

சென்ற வருடமும் இவ் வருடமும் விழாவின் நட்சத்திர அழைப்பாளர்களான H.S.ஷிவபிரகாஷையும்,ஜேனிஸ் பரியட்டையும் அழைத்து வரும் மற்றும் கவனித்து கொள்ளும் பொறுப்பை குவிஸ் செந்தில் சொல்லியிருந்தார்.

வெள்ளி மதியமே ஜாஜா வருவதாக சொன்னதால் நானும் வெள்ளி மாலையே கோவை வந்துவிட்டேன்.

சனிகிழமை காலை நடராஜனின் ஓட்டுனரும் நானும் பூங்கொத்தோடு ஏர்போர்ட் சென்று நம் கலெக்டர் ராம்குமாரையும் ஜேனிஸையும் வரவேற்று அழைத்துவந்தபோது, ராம் வீட்டுக்கு போய்விட்டு வருவதாக சொல்லி சென்றுவிட்டார்.

காலையுணவுக்கு ஜேனிஸை அன்னபூர்ணாவுக்கு அழைத்து சென்றபோது அவருக்கும் பில்டர் காபியும் மட்டன் பிரியாணியும் பிடிக்கும், என்பதை தெரிந்து கொண்டு சஹஹிருதஹி என புரிந்து கொண்டேன்.

தேர்ந்த அறிவுகூர்மையுள்ள ஒருவர் நம்மை பொறுட்படுத்துவது, நாம் அவர்கள் கவனிக்கும் வண்ணம் நுட்பமாக சொல்லும்போதுதான்.

சம்பிரதாயமாக பேசிகொண்டிருந்த ஜேனிஸிடம் அவரது போட்ஸ் ஆன் லேண்ட் ல் முதல்கதையான குதிரைகள் அருவியை மொழிபெயர்த்ததாக சொன்னேன்.

ஓ அப்படியா என்றார்.

சாம் துரை நீர்வீழ்ச்சி அருகே நின்று கொண்டு,

ஏன் இப்படி நிகழ்ந்தது?

சரி அதுவும் கடைசியில் நிம்மதிதான்… எனகூறுவது ஒரு இருத்தலியலின் அழுத்தமும் சோகமும் கூடத்தான்.

என சொல்லியவுடன் அவர் கண்கள் பளிச்சிட்டது.

அதன்பின் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு உண்மையாக பேச ஆரம்பித்தார்.

குதிரைகள் அருவி என்ன சொல்ல வருகிறதென்று நீங்கள் சொல்லுங்கள் என்றார்.

ஒரு கூட்டு நன்மைக்காக தீமையின் வழியை பின்பற்றினால் முடிவில் தீமையே வந்து சேரும் என்பதை மாயாயதார்த்த பாணியில் சொல்லியிருப்பதாக சொன்னேன்.

நம் இரு (காசீ & தமிழ்) கலாச்சாரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை பற்றி சொன்னார்.

ஒரு எழுத்தாளராக அவர் முக்கியமாக கருதுவதை கேட்டேன்.

1.ஒரு படைப்பாளிக்கு தான் எழுதும் சமூகம் மற்றும் அதன் கலாச்சாரம் சார்ந்த பின்புல சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

2.படைப்பாளிக்கு தொடர்ந்த வாசிப்புஅவசியம்.

3.Craft எனும் தொழில்முறை லாவகம் கைவரவேண்டும்

4.Form எனும் வடிவ ஒழுங்கும் வேண்டும்.

5.தனிப்பட்ட முறையில் அவருக்கு நுண்விவரனையில் பிடித்தம் உண்டு என்றார்.

நான் படித்த வரையில் இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் இந்திய நெடியில்லாமல் ஒரு ஐரோப்பிய எழுத்தாளரை படிப்பதுபோலிருக்கிறதே என்றதற்கு

தனதுஅஸ்ஸாமிய தேயிலைதோட்ட வாழ்க்கையும் ஐரிஷ் நன்கள் நடத்திய காண்வெண்ட் படிப்பும் லண்டனில் படித்ததுவுமே காரணம் என்றுவிட்டு

ஆனாலும் தனது காசீ இனத்தின் வேர்களை மறந்ததேயில்லை என்றார்.

கவிதையும் எழுதியுள்ளீர்கள் அதைபற்றிவிளக்குங்கள் என்றேன்..

கவிதையில் சொல்லவரும் ஐடியா துல்லியமாகவும் அதேசமயம் தெளிவின்மையும்(Ambiguity) ஒருசேர இருக்க வேண்டும் என்றார்.

இவரது சிறுகதை தொகுதிமுழுக்க ஒரு மென் சோகம் இழையோடுகிறதே ஏன் என கேட்டதற்கு

வாழ்வில் சந்தோஷம் தற்காலிகமானதே சோகரசமே சாஸ்வதம்.மனித வாழ்க்கை அப்படித்தான் உள்ளது என்றது யோசிக்க வைத்தது.

டெல்லி வாழ்க்கையை பற்றி கேட்டதற்கு,

மேற்படிப்பிற்காக வந்து தங்கி அந்நகர் மேல் அன்பும் வெறுப்பும் கலந்த உணர்வோடு வாழ்ந்து வருவதாக சொன்னபோது

வெறுப்பு ஏன் என கேட்டேன்.

வட கிழக்கிந்தியர்களை வந்தேறிகளாகவும், அன்னியராகவும் பார்க்கும் பார்வை இருப்பதாக சொல்லி தனக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவத்தை விவரித்தபோது வருத்தமாக இருந்தது.

வீட்டில் செடி கொடிகள் வளர்ப்பதும் மண்பாண்டங்கள் வனைவதும் பிடித்த பொழுது போக்குகள் என்றார்.

முதலில் தெரு நாய்களை வளர்த்து வந்தாராம்.தற்போது ஒரு பூனையை வளர்த்து வருகிறாராம்.தன் குழந்தை என்றார். உண்மைதான் நானும் ஒரு கன்னிஇன நாயை வளர்க்கிறேன்,ஜெ ஒரு டோபர்மேனை என்றேன்.

விமர்சனங்களை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என கேட்டதற்கு

எனக்கான எல்லைகள் எனக்கு தெரியும் அதனால் எதிர்மறை விமர்சனங்கள் வரும்போது அதில் உள்ள உண்மைதன்மையை பற்றி யோசிப்பேன்.

நேர்மறை விமர்சனங்கள் சந்தோஷபடவைக்கும் என்றார்.

அடுத்த நாவல் ஒரு பெண்ணை பற்றிய ஒன்பது பேரின் நினைவு குறிப்புகளில் போகும் போக்கு, யானையை குருடர்கள் தடவி அறிந்ததை போலவா என கேட்டதற்கு

படித்து தெரிந்து கொள்ள சொல்லி சிரித்தார்.

ஜேனிஸின் கதைகளில் ஜேனீஸ் எவ்வளவு சதவிகிதம் வருகிறார் ?

55.54% மீதி புனைவு என்றார்.

மேக்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் தாக்கம் எப்படி வந்தது?

கிருத்துவ காண்வெண்ட்களில் சிறுகுழந்தையாக இருக்கும்போது Choir பாடல்களை கேட்டும் பின் அதை வளர்த்துகொண்டதாலும் என்றார்.

பிரயாணங்கள் எப்போதும் பிடித்த ஒன்று என்றும் வருடத்தில் மூன்று பெரிய பயணங்கள் மேற்கொள்வதாக சொன்னார்.

அதற்குள் டிராபிக் கனமாக இருந்தும் தங்குமிடம் வந்துவிட்டது.எதிர் கொண்டு குவிஸ் செந்தில் வரவேற்ற போது ஜேனிஸ் என்னை சார் என்றார்,பதறி விஜய் எனவே கூப்பிடலாமே என்றேன்,ஓகே விஜய்ய்ய்என ஜேனிஸ் குயில, அருகிருந்த செந்தில் அதை கலெக்டரிடம் சொல்ல அது உடனே தொன்மமானது.

ஒரு பெற்றவனாக இந்தவிழாவில் அஷ்வினும் சூரியாவும் இலக்கிய க்விஸில் பரிசுகள் பெற்றது ஆழ்ந்த மன நெகிழ்வைஅளித்தது.

விழா முடிந்தவுடன் சூர்யாவின் பைக்கிலேயே அன்றிரவே ஈரோடு செல்லவேண்டியிருந்ததால் உங்களிடம் சரியாககூட சொல்லி விடைபெற முடியவில்லை.

இரவு பைக்பயணத்தில் காற்று முகத்தில் மோத நினைவுகளை அசைபோட்டபடி நடுஇரவில் வீடு வந்து சேர்ந்தேன்.

விஜயராகவன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 14
அடுத்த கட்டுரைவிழா சிவமணியன் பதிவு