விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 16

IMG_0077

இனிய ஜெயம் ,

 

இம்முறை விழாவுக்கு ஒருநாள் முன்னதாகவே வந்து, விழா பணிகளில் மீனாம்பிகையுடன் இணைந்து கொள்வது என முடிவெடுத்து இருந்தேன் . [2015 விழாவில் பல ஆரம்ப ஏற்பாடுகளுக்கு மீனா தனியாக ஓடிக்கொண்டு இருந்தாள் .  அரங்கன் திட்டிட்டான் என எதற்க்கோ அழுகாச்சி வேறு வைத்தாள்  ]   மீனா வந்து அழைத்துக்கொண்டாள் .  டெட்டி போனமுறைக்கு இந்த முறை சற்று தைரியம் மேம்பட்டு இருந்தான் .கிட்ட வராத கடித்தாலும் கடித்து வைப்பேன் என சொன்னான் .

 

அடுத்த நாள் விழாவுக்கான பரபரப்பு இன்றே துவங்கியது .  ஜெயகாந்தன் குறித்து பேசியபடியே  சமையல் செய்தாள் . இடையிடையே செய்யவேண்டிவை இன்னும் என்னென்ன என தனக்குத்தானே ஒப்பித்துக்கொண்டாள் . கையருகே இருக்கும் வெங்காயத்தை குசினிஅறை  முழுவதும் தேடி சலித்தாள்.  இரண்டு முறை அரிசி பொங்கினாள்.  கறிவேப்பிலை உதிர்த்து , தண்டை வாணலியியிலும், இலைகளை தூரவும் போட்டாள்.  குளுப்பாட்டுன தண்ணியோட சேத்து புள்ளைய வெளிய ஊத்துன கதை என்பார்களே அதை அரங்கேற்றிக்கொண்டிருந்தாள் .

 

உண்டு வெளியேறி விருந்தாளிகள் அழைப்பு  சரிபார்க்க விடுதி சென்றோம் .  முன்னதாகவே அங்கே பாட்டையா பார்வதிபுரம் மணி அவர்கள் வந்திருந்தார் .  என்னை கண்டதும்  ”டாய் டாய் டாய், வா வா வா , உன் கடிதம் எல்லாம் படிச்சேன் .ராஸ்கல் ராஸ்கல் நல்லா எழுதறடா நீ ” என அவரது பாணியில் ஆசீர்வதித்து வரவேற்றார் . அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம் . பின் இலங்கையில் இருந்து வரும் நண்பர் தமிழ் அவர்களை  வரவேற்க விமானநிலையம் சென்றோம் . மலேசியாவிலிருந்து வந்து நரேனின் அறையில் தங்கி இருந்த நண்பரும் வந்து இணைந்து கொண்டார் .  நண்பர்களை அறைக்கு சேர்த்துவிட்டு ,மதிய உணவு முடித்து ,  விருந்தினர் பரிசுகள் வாங்க சுற்றினோம் . ஜாஜா , காளி ,விஜயராகவன்   மதியம் வந்து ,விழாவுக்கு ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்த விருந்தினர்களை தனித்தனியாக வரவேற்று தங்குமிடங்களுக்கு அழைத்து சென்றுகொண்டிருந்தார்கள்.  மாலை அரங்காவுடன் இணைந்து புத்தக பரிசுகள் தேர்வு செய்ய  விஜயா பதிப்பகம்  சுற்றினோம் . முடித்து அரங்காவும் ,மீனாவும் வேறு பணிகளுக்கு மீள ,நானும் நரேனும் கடைகடையாக ஏறி இறங்கி பொன்னாடைகள் தேர்வு செய்தோம் .  இரவு உணவு முடித்து, சீ முத்துசாமி உள்ளிட்ட அவரது இல்லத்தினர்களை சந்தித்து விட்டு ,  ராஜஸ்தானி சங் வந்து ,இளம் எழுத்தாளர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட அறையின் சாவிகளை வாங்கிக்கொண்டு அறைக்குள் பைகளை போட்டு விட்டு வெளியே வந்தோம் .  நவீன் அவரது நண்பர்களுடன்  திருச்சியில் இருந்து இமயம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வாடகை வாகனத்தில்   வந்து இறங்கினார். வாகன சாரதி கேட்ட வாடகையில் மிரண்டே போனார். நான் மலேஷியால இருந்து இந்தியா வரவே இவ்ளோ ஆகலைங்க என்றார் .  நண்பர்கள் கூடி மூர்க்கமான பேரத்தில் ஈடுபட்டார்கள் . நான் நவீன் குழுவினரை அவர்களின் அறை  கொண்டு சேர்த்தேன் .

 

லக்‌ஷ்மி மணிவண்ணன்
லக்‌ஷ்மி மணிவண்ணன்

சனிக்கிழமை அதி காலை முதல் நபராக  சுரேஷ் பிரதீப்  வந்திருந்தார் .  தொடர்ந்து ஒவ்வொரு நண்பர்களாக ,ஆளுமைகளாக  வர வர அவர்களை நானும் நண்பர்களும் வரவேற்க நாள்   துவங்கியது .  ஜெயமோகன் அவர்களை வரவேற்க  அவரது அறைக்கு சென்றேன் . குழும நண்பர்கள் குவிந்திருந்தனர் .  வழமை போல என்னை களபலி தந்து இலக்கியப் போரை [அல்லது அக்கப்போரை] துவங்கினர்.  எஸ்ரா கதை குறித்து நான் அளித்த சுட்டிக்காக  என்னை மல்லாக்கப்போட்டு மிதித்து சாணியைப் பிதுக்கியபின்பே ஓய்ந்தனர் .  இந்தனை வெறியர்கள் கொண்ட  நமது சொல்புதிது விவாதக்குழுமம் ஈராண்டுகளாக கோமாவில் கிடப்பது ஏனோ ?

 

காலை உணவு முடிந்து  கே ஜெ அஷோக் குமார் ,  தூயன் அமர்வு துவங்கியது .    ஊக்குவித்தல் தேவைதான் ஆனால் மதிப்பீட்டு விமர்சனம் தான் இளம் படைப்பாளிகளுக்கு முக்கிய தேவை  என தனது பேட்டியில் தூயன் தெரிவித்து இருந்தார் .   இன்றைய விமர்சன சூழல் சார்ந்து தூயன் வசம் வினா எழுப்பினேன் .  வேறொரு அமர்வில்  விமர்சகர் ஜெயமோகன் எழுந்து ”இனி நான் இளம் படைப்பாளிகளை விமர்சிப்பதாக இல்லை ” என அறிவித்தார் .அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.

 

வெளியிட தகுதி அற்ற படைப்பை அனுப்பி விமர்சிக்க கோருவார்கள். விமர்சிப்பேன் . அது குறித்து எந்த சலனமும் காட்டாமல் ,இரண்டொரு மாதத்தில் ஏதேனும் பதிப்பகத்திலிருந்து அது வெளியாகும் .   எழுதியவர் தன்னை மேம்படுத்திக்கொள்ளவே விமர்சனம் .   அது நிகழாதபோது எதற்கு விமர்சிக்கவேண்டும் .இதுவே ஜெயமோகன் சொன்ன காரணம்.

 

தனிப்பட்ட முறையில் ஜெயமோகன் கொண்டிருக்கும் இந்த நிலைப்பாடு எனக்கு ஏற்புடையதல்ல . இன்றைய வாசிப்பு சூழலில் , சுஜாதா போன்றோர் நிலைநிறுத்தி வைத்திருந்த  வெகுஜன வாசிப்பு கலாச்சாரம் இன்று முற்றிலும் காலாவதி ஆகி விட்டது .  எனவே வெகுஜனவாசிப்பு வழியே ,வாசிப்புக்குள் நுழைந்து ,சுஜாதா போன்றோர் சுட்டும் தீவிர இலக்கிய உலகுக்குள் வாசகன்  நுழையும் வாசிப்பு படி நிலை இன்று கிடையாது .

 

வாசகனுக்கு இருக்கும் ஒரே வெளி ,புத்தக சந்தையில் பேசப்படும் நூல்கள் . அகாடமி விருது  வெளிச்சத்தில் தோல் நாவலை ,இலக்கிய வாசிப்பில் தனது முதல் நூலாக ஒருவன் தேர்வு செய்தான் எனில்  அதன் பின் அவன் கதி என்ன ?

 

நான் ஒரு சிறந்த  விவசாயி, விவசாயத்தின் மேல் காதல் கொண்டு அதில் திளைப்பவன் , என்னிடம்   பலம் குன்றிய ,அல்லது பிழையான விதையை  ஒருவர் கொண்டு வருகிறார் . அந்த விதை குறித்து விசாரிக்கிறார் . நான் அதன் சாதகபாதங்களை சொல்கிறேன் .  கொஞ்சநாள் கழித்து  அந்த விதை முளைத்திருக்கிறது .  நான் என்ன செய்வேன் ? அதை விதைத்தவன் எனக்கொரு பொருட்டே அல்ல .  அந்த விதையை உண்பவனே  எனக்கு முக்கியம் .   உண்பவனை நோக்கி இந்த விதைகளின் தரமின்மை குறித்து நிச்சயம் பேசுவேன்.  ஒரு விவசாயியாக  என் நிறைவாழ்வு அதன் ஒரு பகுதி அது . நிற்க .

 

போகன் பேசுவதை  முதல் முறையாக கேட்கிறேன் . நிகழ்வுகள் முடிந்த பின்னும் ,விடை பெரும் வரை அவரது பேச்சை இடைவெட்டின்றி கவனித்தேன் .  மெல்லிய நிலநடுக்கம் ஒன்றினை அனுபவிப்போம் .மறுநாள் காலை அரசு அறிவித்தபின்தான் அது நிலநடுக்கம் என்றே அறிவோம். பின் மிகுந்த துணுக்குரலுடன் நினைவுகளை பின்செலுத்தி ,அந்த தருணம் நம்மில் எவ்வாறு கடந்தது என மீள மீள மீட்டிப்பார்ப்போம் . அந்த நிலையில் என்னை தள்ளி விட்டார் போகன்.   ஆவிகள் உலகம் பத்திரிக்கையில் பங்களித்தது போகன் விடை பெறுகையில் எனக்கு ஆச்சரியமாக இல்லை .  ஏதேனும் கோட்பாட்டு விமர்சகர் போகன் எனக்கு பில்லி சூன்யம் வைத்து விட்டார் என முகநூலில் குமுறி குமுறி அழுதாலும் இனி  ஆச்சர்யப்பட மாட்டேன்.

00

விஷால் ராஜா , சுரேஷ் பிரதீப் அரங்கு  மிக  அருமையான ஒன்று .  தூயனை  மூச்சு வாங்கிக்க கேப் விடாம அடிச்சாங்க . நல்ல வேலை எனக்கு விஷால் கிடைச்சார் .அவரை துவைக்கும்போது நான் கொஞ்சம் மூச்சு விட்டுக்குவேன் .என்னை துவைக்கும்போது அவர் கொஞ்சம் மூச்சு விட்டுக்கிட்டார்  என்றார் சுரேஷ்  புன்னகையுடன்  உணவு சந்திப்பின்போது. பேசிக்கொண்டே நாகப்பிரகாஷ் வசம் ”நேத்து என் தளத்துக்கு வருகை பத்தாயிரம் மேல காட்டுது என்னவா இருக்கும் ?” என்றார் .நாகு  வருகையாளர் பதிவு எண்ணிக்கை காட்டுவதில் நிகழும் ,சைபர் வெளி பிழை குறித்து சுரேசுக்கு விளக்கினார் .”ஒரு இளம் எழுத்தாளன் சந்தோசபடுற மாதிரி ஒரு காரணமும் சொல்லமாட்றீங்களே ” என்று விசனப்பட்டார் சுரேஷ் பிரதீப் .

 

டாக்டர் ஷண்முக சிவா அவர்களின் பணி  குறித்தெல்லாம் ஜெ தளம் வழியே அறிந்திருக்கிறேன் .  அவர் அமரும் மேடையில் நான் எனும் நினைவே என்னை பதட்டம் அடைய வைத்து விட்டது . அந்த மேடையின் அத்தனை ஆளுமைகளையும் அறிமுகம் செய்ய ஜெ வே  சரியானவர் . ஜெ நிகழ்த்திய அறிமுகமும் , நவீன் அவர்களின் உரையாடலும் அன்றைய நாளின் சிகரம் .

 

வினாடிவினா நிகழ்வு அடுத்த முறை  அரங்குக்குக்குள் இருக்கும் அத்தனை எழுத்தாளர்கள் முன்னிலும் நடைபெற வேண்டும் . அமர்வுகளில் வெறும் பார்வையாளர்களாக இருந்த வாசகர்கள் பலர் ,இறங்கி சிக்ஸர் அடித்தார்கள் .தாங்கள் எத்தகு வாசகர்கள் முன்பு அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து மகிழ்வதைக்காட்டிலும் எழுத்தாளன் அடையும் பெரிய  மகிழ்ச்சி வேறுண்டா என்ன ?

 

அன்றிரவு   நவீன் ,தயாஜி ,விஜயலட்சுமி  அவர்களுடன் குல்பி  ருசித்தபடி சாலையோரம் நின்று நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம் .  மலேஷிய  சூழலில்  பாலர் இலக்கியம்  என்னவாக  இருக்கிறது , விஜயலக்ஷ்மி  அவர்கள்  மாணவர்களுக்காக  நடத்தும் பத்திரிகை ,  அங்கே மலேஷியாவில் நடக்கும் பிற தொழில்கள் ,  அங்குள்ள கேங் வார் ,பிரிவுகள்  அதன் வேர்கள் ,அதன் செயல்பாட்டு முறைகள், என அந்த நிலத்தின் பல்வேறு சூழல்களை நவீன் விவரித்தார் .  கபாலி படத்தில் அவரது ,மற்றும் அங்குள்ள முக்கியமான சிலரின் பங்களிப்பு பற்றி சொன்னார் . ”படத்துல நன்றி பட்டியல்ல இந்த பேரெல்லாம் வர்ற மாதிரி தெரியலையே ”என்றேன் .  புன்னகைத்துவிட்டு வாங்க போலாம் என நடக்கத்துவங்கினார் நவீன் .

 

மறுநாள் அமர்வுகளில்  களைகட்டிய அரங்கு ,ஜெனிஸ் பரியட்  அவர்களின் அமர்வுதான்   ஆங்கிலத்தில் அவரது நூலை பெரும்பாலானோர் வாசித்து விட்டு வந்து வினாக்கள் தொடுத்தது ஆச்சர்யம் அளித்தது . [ மாவட்ட ஆட்சியாளர் ராம் இதில் ஏதேனும் உள்குத்து வைத்திருக்கிறாரரா என உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து விசாரிக்கவேண்டும் ].

 

மொத்த விழா நாட்களிலும்  தனிப்பட்ட முறையில் எனது நாயகன் என நவீன் அவர்களையே சொல்வேன் .  குறிப்பாக ராமின் கேள்வியை அவர் எதிர்கொண்ட விதம் . விருது மேடையில்  ஜெயகாந்தனின் எந்தெந்த ஆளுமை அலகுகளை   தமதாக்கிக்கொண்டு எழுந்து வந்த மலேஷிய இலக்கிய முன்னோடிகள்  மற்றும் சி மு அவர்களை குறித்து அவர் அறிமுகம் செய்த விதம்  என ..  தன்னியல்பால்  ஜெயகாந்தன் எவ்வாறு வெளிப்பட்டாரோ ,அவ்வாறே வெளிப்பட்டார் நவீன் . குறிப்பாக விழா மேடையில் நவீன் தன்னை முன்வைத்து அளித்த பிரகடனம் . ”எங்கிட்ட ஒண்ணு சொல்றீங்க அப்டின்னா ,வரலாறு கிட்ட சொல்றீங்கன்னு அர்த்தம் ”  அப்படியே ஜெயகாந்தன்தான் .

 

நான் பிரபல பத்திரிக்கையில் எழுதுகிறேனா ,அல்லது பனை மட்டையில் எழுதுகிறேனா என்பது முக்கியம் இல்லை .எழுதுபவன் ”நான்” அதுவே முக்கியம் .

 

ஒரு முன்னுரையில் ஜெயகாந்தன் அவர்கள் சொல் இது . சிறு பத்திரிக்கையில் எழுதப்படுவது, வயதுக்கு வந்த பெண் அடுக்களை கதவுக்கு பின்னிருத்து பேசும் ரகசிய குரலில் பேசுவது அதுவே இலக்கியம் என்று  விமர்சகர்கள் வகுத்து இயம்பிக்கொண்டிருந்த சூழலில், சங்கநாதம் என ஒலித்தவர் ஜெயகாந்தன் . இதோ  அவரது வெல்லும் சொல் ,  நவீன் வடிவில் இங்கே வந்து நிற்கிறது . விகடன் வழியே மலேஷியா சென்ற ஜெயகாந்தனின் சொல்லே ,மலேஷிய நவீன தமிழ் இலக்கியம் என இன்று முளை விட்டிருக்கும் துளிரின் வீரியமிக்க விதை .

 

தமிழில் ”இன்று ”எழுதும் எழுத்தாளர் அனைவருக்கும்  இந்த தருணம் ஒரு அறைகூவல் தருணம் . தான் இறந்த பிறகு  எது என்னவானால் எனக்கென்ன என்று இனி ஒரு எழுத்தாளன் சொல்லக் கூடாது . நீ வாழ்வதும் , கட்டை மண்ணாவதும் உன்னோடு சேர்ந்த அற்ப விஷயம் , ஆனால் உன் எழுத்து அது பண்பாட்டின் சொத்து . ஜெயகாந்தனின் சொல் பண்பாட்டின் சொத்து . அதன் ஆவணம் இந்த விழா .

 

கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்

விழா நிறைந்ததும் ஓடிச்சென்று ,கிளம்பிக்கொண்டிருந்த நவீனை கட்டி அணைத்து விடை கொடுத்தேன் , அப்போதே விடைபெறும்  தருணம் நெருங்கிவிட்டது அறிந்து மனம் அதை ஒத்திப்போட்டது . மறுநாள் ஜெயமோகனுடன் இருக்கவேண்டும் என முடிவெடுத்து இருந்தேன் .  அதே நேரம் மீனா வீடு செல்ல விரும்பினாள் .நரேன் விருந்தினர்களை வழி அனுப்பும் பணியில் தனியே . பொதுவாக விழா முடிந்ததும் எல்லோர் அகமும் இயல்பாக ஜெயமோகனை நோக்கியே ஓடும் . அனைவரும் ஜெயமோகன் அருகே இருக்க ஒருவர் மட்டும் ,வழி அனுப்பும் பணியில் இருப்பது போல கொடுமை வேறில்லை .ஆகவே சென்று நரேன் உடன் இணைந்து கொண்டேன் .பரியட்,பி ஏ கிருஷ்ணன் ,சீ  மு  என ஒவ்வொருவரையும் அவர்களின் இல்லத்தினரையும் தனித்தனியாக சந்தித்து விடையளித்தோம் . செந்தில் அலுவலகத்தில் இருந்தவாறே வழியனுப்பும் நிகழ்வுகளில் ,நேரம் தவறாமல் அனைத்தும் ஒருங்கிணையும் வண்ணம் தொலைபேசியில் தொடர்ந்துகொண்டிருந்தார் . டாக்டர் பங்களா  விட்டு கிளம்பும்போதே  முற்றிலும் நிலையழிந்திருந்தேன் .  வானதியின் நண்பர் சுகதேவ் அவர்களின் நினைவே அலைக்கழித்தது. ஜெயமோகன் வானதி பெயரை சொன்ன விநாடி, சுகதேவ்  முகம் அடைந்த தீவிரம்…ஒரு  நட்பின் பிரிவு என்பது  எது கொண்டும் சமன் செய்ய இயலாத ஒன்று .  தினமும் எவருக்கேனும் நான் ரசித்த கவிதைகளை வாட்சப்பில் பகிர்வேன் .இன்றும் முதல் பகிர்வு வானதிக்குத்தான் . ஆம்  என்னளவில் அவள் அப்பக்கமிருந்து இப்போதும் நான் அனுப்பும் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறாள். என்றேனும் அவள் அதை சுகதேவுக்கும் உணர்த்துவாள் .

 

 

எல்லோரையும் தொடர்வண்டி ஏற்றி விட்டு , மீனாவுடன்  அனைத்து அறைகளையும் காலி செய்த வகையில் ,மிச்ச கணக்கு வழக்குகளை, தங்குமிடங்களில் முடித்து விட்டு , இரவு உணவுக்கு ஒரு உணவகம் சென்று அமர்ந்தோம் . உணவு வரும் வரை உள்ளே ஏதேதோ சித்திரங்கள் .பேச்சை மாற்றும் பொருட்டு இங்க  கொழுக்கட்டை நல்லா இருக்கும் சொல்லட்டா என்றாள் . ஏறிட்டுப்  பார்த்தேன் அவள் கண்களும் நீர்  துளிர்த்திருந்தது .

 

 

கடலூர் சீனு

 

 

கே.என்.செந்தில்
கே.என்.செந்தில்

அன்புள்ள சார்,

 

விழா மனநிலை என்பது இருநாட்கள் முன்பிருந்தே துவங்குவது. ” நம்ம  சர்வர் down ஆகி, கஸ்டமர் ஆஃபீஸ்ல billing  பண்ண முடியாம ஹார்பர்ல கேட் முன்னாடி  லாரில்லாம் வரிசையா  நிற்குதாம்” என incident manager  சொல்லும்போது, அப்படியா அந்த வாசல் டீ கடையில நல்ல வியாபாரம் ஆகிருக்குமே என்று பதில் கருத்து சொல்கையில் சிஸ்டம் அட்மின் போய் ஒரு முன்நவீனத்துவன் வந்திருப்பதை உணர்ந்தேன். ரயிலில் ஏறுகையில் அந்தப்பெட்டியில் நான் மட்டுமே தனியாளாக வந்திருக்கிறேன் என புரிகிறது. மற்ற அனைவரும் ஒரு கும்பலாக ஊட்டி சுற்றிப்பார்க்க கிளம்பிய ஏதோ  ஒரு அசோசியேஷன் குடும்பத்தினர். ஒரு “ரயிலில் பயணங்களில்..” அனுபவம் உங்களைப்போல எனக்கும் வாய்க்கிறது.

 

அங்கும் ஒரு உணவு மேற்பார்வையாளர் இருக்கிறார். ” சாருக்கு யார்றா பரோட்டா குருமா கொடுத்தது?” என அது பிடுங்கப்பட்டு  ” நாலு இட்லியும் துணையாக ஒரு கொஞ்சம் பாலும் அளிக்கப்படுகிறது.

 

அதிலும் ஒரு காது கடுக்கண் போட்ட சுற்றுலா அமைப்பாளர் இருக்கிறார். மிடில் பர்த்தை  ஒருவர் மேலிருந்து சங்கிலியை  இறக்கி சீட்டைத்தூக்கி பொருத்தும்போது, இருகைகளையும்  இடுப்பில் வைத்தபடி, ”  அத இப்படி பொறட்டி மாட்றா.. இது கூடத் தெரியதா.உன்னையெல்லாம் வச்சுகிட்டு..” என்கிறார்

 

லோயர் பர்த் allot ஆகி அதிலேயே பயணம் வந்த்தும் இதுதான் முதல் தடவை. மேலே பர்த்தில் இருந்த பெண் சிறிது நேரத்தில் அழத்துவங்குகிறார். பெண்மணி எனக்கூறலாம். என்னாச்சு என ஆளாளுக்குப் பதற,  என்னை விட்டுட்டு அந்த கம்பார்ட்மெண்டுக்கு அவள் போயிட்டால்ல என குலுங்கி குலுங்கி அழுகிறார். அதற்குள் செல்போனில் தகவல் பறக்க அந்த அம்மாள் வருகிறார்.  அவங்களை கவனிச்சிட்டு வர வேணாமா.. உன்னை விட்டு பொயிருக்கேனா சொல்லு என கொஞ்சுகிறார். இந்த தோழமையைக்கண்டு அழுவதா சிரிப்பதா எனத்தெரியாமல் தடுமாறி சரி சிரிக்கலாம் என முடிவெடுத்தபோது, இன்னொரு சுட்டிப்பெண் வருகிறார். மிடில் பெர்த்தா.. அவ்வ்ளோ ஹைட் ஏறணுமா என திகைக்கிறார். ஊட்டி இதைவிட ஹைட்டும்மா ஏறு என உற்சாகமூட்டுகிறார் அமைப்பாளர். ஹைய்யோ இவ்ளொ ஹைட் ஏறினதே இல்ல.. என அவ்வப்போது லோயர் பர்த்தை பார்க்கிறார். கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட் ல் இருக்கும் நான்  அதை இன்னும் தீவிரமாக படிக்கிறேன்.  சைட்லோயரில் இருந்த பெண்மனியால் இந்த நாடகத்தை  சகி்க்க முடியவில்லை.  சுட்டிப்பெண்ணிடம் நீ வேணும்னா இங்க படுத்துக்க எனச் சொல்லி, ஒரு ஸ்டெப் முன்னால் வந்து பக்கத்து மிடில் பெர்த்தில் கையை ஊன்றியபடி ஒரு ஜம்ப். அப்படியே ஏறி மிடில் பர்த்தில் அமர்ந்தபடி, போ என்கிறார்.

 

காலை ஐந்து மணிக்கு அமைப்பாளர் அனைவருக்கும் பஞ்சு தரு

வெய்யில்
வெய்யில்

கிறார். “ஊட்டி குளிரும்! அதனால இதை வச்சுகங்க..”

 

வண்டி நின்றதும் கட கட வென இறங்குகிறார்கள்.

” ஏய்.. எல்லோரும் இறங்கற வரைக்கும் நிற்க மாட்டியா அப்படியே ஏறி வர்றியே.. உன்னை பெத்தாங்கபாரு அவங்கள சொல்லணும்”

 

“அப்பா நாந்தாம்பா.. இது திருப்பூரு.. ட்ரெயினு ஒரு அவர் லேட்டு.. எல்லோரும் உள்ள போங்க”

ஒரு அமைப்பாளரின் பிரச்சனை சாதாரணமானது இல்லை.

 

ஒருவழியாக,  கோவை வந்து வெள்ளி  பகல் முழுதும் விசூ வீட்டில் ஜாஜா மற்றும் ராதாவுடன் கழிந்தது.

 

மறுநாள்அபிலாஷ் வந்தார். ஒரு புது நண்பர் கிடைத்தார் எனச்சொல்லவேண்டும்.  அவருடன் எடுத்த எடுப்பிலேயே சரளமாக உரையாட முடிந்தது. அவருக்கும் பாவண்ணனுக்கும் ஒரே அறை. பாவண்ணன் சாரை அழைத்து வரச்சென்றபோது அதே வண்டியில் விஷால்ராஜாவும் ஏவிமணிகண்டனும் வந்திருந்தாரகள். பாவண்ணனின், பாதை சிறுகதையில் வரும் ஆயாவைப்பற்றிய உரையாடலுடன் துவங்குகிறது அன்றைய விவாதம். நான் அடுத்த அறைக்கு செல்கிறேன்.  பக்கத்து அறையில் பாரதிமணி இருக்கிறார்.

 

“நான் ஸ்மோக் பண்றதுல உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே..”

 

“இல்ல சார்..”

 

“இருந்தா இப்பவே வெளிய போயிருங்க.. எனக்கு ஒரு சுக்கும் இல்ல”

 

பாவண்ணன், வெண்முரசு கிருஷ்ணனை நினைவு படுத்துகிறார். எப்போதும் புன்னகையோடு இருக்கிறார். பாட்டா அறையிலிருந்து  மீண்டும் அவர் அறைக்குள் போனபோது அதே  புன்னகையோடு இருந்தார். அறைநண்பரோடு நவீனத்துவம் பற்றி பேசியிருக்கக்கூடும்.

 

” என்னாச்சு சார்..”

 

” என்னோட பர்ஸ் காணும். அதில் எல்லா ஐடி கார்டும் பணமும் இருக்கு.. ட்ரெயின் ல விட்டுட்டேன்ன்னு நினைக்கிறேன்” நன்றாக உற்றுப்பார்க்கிறேன். புன்னகையேதான்..

 

கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஒரு குஜராத்தி சேட் அந்த பர்ஸை கண்டெடுத்து தொலைபேசியில் அழைத்துவிட்டார்.

 

” மிக்க மகிழ்ச்சி.. இந்தநாள் இனியநாள்”என்கிறார் பாவண்ணன் புன்னகையோடு,

 

குஜாராத்திகள் நேர்மையானவர்கள். உணவு சரியில்லையெனில் இதை  நெகிழ்ச்சியாக விவரித்து விரா அண்ணனிடம் மதிய சாப்பாடு உஷார் செய்துவிடலாம்.

1

அவர்கள் கிளம்பியபின் முத்துசாமி அவர்களை உணவகத்தில் சந்தித்தேன். பொதுவாக எழுத்தாளர்களுடன் தள்ளி நின்று உரையாடுவது வழக்கம். அதுவும் உங்களுடன் பேசும் தருணங்களில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை அடுத்தவரிடமும் எடுத்துக்கொள்ளக்கூடாதே என ஒரு கவனமும் இருக்கும் ஆனால் அவரைப்பார்த்ததும் அப்படி ஏதும் தோன்றவில்லை. அவர் கதைகளைப்பற்றி ஒரு உரையாடல் நிகழ்ந்த்து. ஒரு கதாபாத்திரம் ஒழுக்கமீறலுக்கு நிர்பந்திக்கப்படுவதை சொல்லிவிட்டு அது மீறியதா இல்லையா என்பதைக்கூட தன் எழுத்தில் வைக்க விரும்பாத ஒரு பரிவு அவர் கதைகளில் உண்டு. அதை ஆரம்பித்து அவரிடம்  சொல்லும்போது எங்கெங்கோ  சென்றது அந்த உரையாடல். மிக ஆச்சரியமாக  இருந்தது. அவர் ஒரு கோபக்கார்ர். ரப்பர் விதைகள் அதிகம் தேய்த்தால் சூடு பறக்குமாம். அதனாலதான் அந்த documentary க்கு அந்த பெயரை வைத்தத்தாக நவீன் கூறினார்.   கவனமாக உரையாடவேண்டும் என்றே கருதியிருந்தேன். ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருந்த்து… இவ்வளவு சரளமாக உரையாடல் செல்லும் என எதிர்பார்க்கவில்லை. இறுதியில் விழா முடிந்து வண்டி ஏறும்போது என் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்.

 

உணவு பரிமாறுவதில் நண்பர்கள் அதிக பொறுப்பு எடுத்துக்கொண்டனர். சேனைகிழங்கும் உருளைக்கிழங்கும் கலந்த பொரியலை கட்லட் என்று கோவையில் ழைக்கிறார்கள். கட்லெட் வை என விசூ அதிகாரம் பண்ண, கட்லெட் இல்லை என அதையே  பொரியல் வழியாக கையில் வைத்திருக்கும் ராகவ பதில் கூற, போன பந்தியில் கட்லெட்டே வைக்கலையே என ஒருவர் இடைமறிக்க செம ஜாலியாக இருந்த்து. சோற்றுக்கணக்கு கெத்தேல்சாயிபாக நண்பர்கள் தம்மை நினைத்துக்கொண்டு பொரியல்  மற்றும் வடை களில் தாராளம் காட்டி இறுதிப்பந்திக்கு பாத்திர மணத்தை மிச்சம் வைத்திருந்தார்கள். அவர்களை கட்டம் கட்டவேண்டும்.

IMG_0340

கவிஞர் வெயிலின் உரையாடல் மிக நெகிழ்வாக இருந்த்து. சீனாவின் கேள்விக்கான அவரது பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்த்து.  அவரை இப்போதுதான் வாசிக்கத்துவங்கியுள்ளேன். அவர் அரசியலை புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும். விவாதங்களை கேமிரா கொண்டு பதிவு செய்வது பேசுபவர்களுக்கு ஒரு்தடையை ஏற்படுத்தியதாக கருதுகிறேன். அது அணைக்கப்பட்டதும் இன்னும் வெளிப்படையாக பேசினர். அடுத்தமுறை கேண்டிட் கேமிராவாக வைத்துவிடவேண்டும். :-)  ஒவ்வொரு உரையாடலையும் இறுதி பஞ்ச் வைத்து முடித்துவைத்தார் பாரதிமணி. முத்துசாமியை hundred degree எழுதச்சொன்னது அதில் உச்சம்.

 

அருட்செல்வபேர்ரசன், காட்சன், கவிதா சொர்ணவல்லி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் உணவு இடைவேளையில் மட்டுமே உரையாட முடிந்த்து. சு.வேணுகோபாலின் மொத்த தொகுப்புகளையும் வாங்கிக்கொண்டேன்.

 

மலேசிய எழுத்தாளர்களுக்கு குல்ஃபி ஐஸையும், ஜெனிஸ் பரியட் க்கு பில்டர் காபியையும் அறிமுகப்படுத்தி இலக்கியுலகில் தம்மை நிலைநிறுத்தக்கொண்ட விஜயராகவன் சார் பற்றி குறிப்பிடாமல் போனால் இந்த கடிதம் முழுமையடையாது.

 

இறுதியாக விழா முடிந்து அரங்கிலிருந்து  நான் விஜயகிருஷ்ணன் கோபிராம்மூர்த்தி சுதாகர் ஆகியோர் கிளம்பினோம். தஞ்சைவரை கேஜே அசோக்குமார் வந்தார். அவரும் விடைபெற்று சென்றதும் ஒரு வெறுமை ஏற்பட்டது. Call me once you reached என அலுவலகத்திலிருந்து மெயில்.அதுவரை மிதந்து கொண்டிருந்தவன் கால் மெல்ல  தரையில் பதிந்தது.

 

அன்புடன்

 

R.காளிப்ரசாத்

 

விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–12
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 17