விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 13

IMG_9744

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

மிக கச்சிதமான  எப்போதும்  போன்ற விழாவாக  இருக்கப்  போகிறது  என்கிற  எண்ணம்  இருந்தாலும்  திருவிழாவை  காணப்போகும் சிறுவனைப் போன்ற மனநிலையில் தான்  இருந்தேன்.  15 அன்று இரவு  நன்றாக  நினைவிருக்கிறது.  சாலையில்   இறங்கி  ரயிலடிக்குள்  செல்ல ஆரம்பித்ததுமே  வீட்டுக்  கவலைகள்,  பிரச்சனைகள்,  செய்ய  நினைத்திருந்த  வேலைகள்  எல்லாம்   காணாமல்   போயின.  நண்பர்களும்,  இலக்கியமும்  அது  தரும்  சுகமும்  என  நினைப்பு  முழுவதும்  இவைகளே  என  ஆயிப்போயின.

 

ரயிலினுள்  கூட்டமில்லாமல்  எந்த பிரச்சனையும்  இன்றி  அமைதியாக  இருந்தது.  அதனால் தான்  என்னவோ  தூக்கமே  இல்லை. வெவ்வேறு   யோசனைகள். போன  ஆண்டும்  இரண்டாம்  நாள்  நிகழ்வில்  மட்டுமே  கலந்து கொண்டேன்.  (வாசகசாலை  விருதிற்காக  சென்னை  செல்ல வேண்டியிருந்தது).  தூரத்தாலும்  வேலையாலும்  வாய்க்காத  முழுமையான விஷ்ணுபுரம்  விழா  இந்த ஆண்டுதான்  அமைகிறது.

 

காலையில்  ராஜஸ்தானி  அரங்கில்  வந்திறங்கியபோது பின்னால்  மீனா  வந்து  இறங்கினார்.  அவரின்  வழிகாட்டுதலால்  சரியாக  வரமுடிந்திருந்தது.  மீனாவும்,  குவிஸ் செந்திலின்  அர்ப்பணிப்பும்  இந்த விழாவின்  முக்கிய அம்சம்  என நினைக்கிறேன்.  வந்திறங்கிய  கொஞ்ச நேரத்தில்  முன்பே வந்திருந்த  நண்பர்களோடு  ஒரு நடையும்  தேநீர் அருந்துவதும்  நிகழ்ந்தது.  கடலூர் சீனு,  சுனில் கிருஷ்ணன்,  சுரேஷ் பிரதீப்,  மீனா,  குவிஸ் செந்தில்,  விஜயராகவன்  ஆகியோரோடு  ஒரு நடை சென்றோம்.  அங்கிருந்தே இலக்கிய  பேச்சுக்கள்  ஆரம்பமாகிவிட்டன.

IMG_9604

 

குளித்துவிட்டு  கிழே வந்தபோது  சின்ன இலக்கிய  அரங்கம் தொடங்கிவிட்டிருந்தது. புதிய நண்பர்கள்,  பழைய நண்பர்கள்  அறிமுகமும்,  நலவிசாரிப்புகளும்  என்று  விரிவடைய தொடங்கியது.  நவீன்,  விஜயலக்ஷ்மி  ஆகியோர்  வந்தார்கள்  அவர்களுடனான  பேச்சுகள்  மலேசிய  இலக்கியத்தின்  முகங்களை  புரிந்து  கொள்ள உதவின என்றால்  மிகையில்லை.  கேள்விகளுக்கு  நேரடியாக அடக்கத்துடன் மட்டுமே  பதிலளித்தார் நவீன்.  ஆனாலும்  காத்திரமான பேச்சு.  நவீன  மலேசிய இலக்கியத்தின்  முக்கிய நபர்  என்பது  அவர்  பேச்சிலேயே  புரிந்துக் கொள்ள  முடிந்தது.

 

கூட்டம் ஆரம்பிக்கும்போது  நீங்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டீர்கள். தஞ்சைக் கூடலின்  வேடிக்கைகளை  (நான் சொல்லமலேயே) அ றிந்து மற்றவர்களுக்கு  பகிர்ந்து  மகிழ்ச்சியை  இரட்டிப்பாக்கிவிட்டீர்கள்.  சிஷ்யனை குரு அறிந்த அகம் அது.  புனே வந்திருந்தபோது  ஆகும்பேயில் நடந்த வேடிக்கைகளை  சொல்லி  சிரிப்பு  மூட்டியதை  நினைத்துக் கொண்டேன்.

 

முதல்  அமர்வில்  நானும் தூயனும்.  ஆரம்பத்தில் தஞ்சைக் கூடல் ஆரம்பித்தபோது ஹரணியும்,  தூயனும்,  நா.விச்வநாதனும்தான்  கை  கொடுத்தார்கள்.  முதல் கூட்டத்திற்கு  அவர்  புதுக்கோட்டையிலிருந்து  பஸ்பிடித்து  தஞ்சை  வந்திருந்தார்.  படைப்புகளில்  இருக்கும்  இருண்மைகளைப் பற்றி கேட்கப் பட்டதற்கு  இருவரும்  சரியாக  பதிலளித்தோம்  என நினைக்கிறேன்.  பிரிதொன்றில்லாமை  பற்றி  நீங்கள்  கேட்ட போது  அதிலிருந்து  தப்பிக்க  முடியாமல்   போய்விட்டது.  ஆனால்  வெளியே  வந்த சமயம்  பாவண்ணன்  ‘ஆனாலும்  வாழ்க்கை அப்படிதானே இருக்கு’  என்று  சமாதனப்படுத்தினாலும்  மனம்  அந்த  கேள்வியிலேயே  தொங்கியிருந்தது.

 

அபிலாஷின்  வார்த்தைகள்  நழுவிச் செல்லும்  தன்மை  அவர்  எழுத்தைப்போலவே இருந்தது.  நிலைத்து  நிற்க எழுதவில்லை  என்று கூறி  தப்பித்துக் கொள்ள நினைத்தவரை  கேஎன்.செந்தில் விடாமல்  துரத்தினார்.  ஒருவகையில்  அந்த நிகழ்வு  சுவாரஸ்யமாக  முடிந்தது.  சுரேஷ், விஷாலின்  அமர்வின்போது  மேலும்  வாசகர்களிடையே  கேள்விகள்  சூடுபிடிக்க  ஆரம்பித்தது என  நினைக்கிறேன்.  காலையில்  இருந்த  கூட்டம்  அப்போது குறைந்திருந்தது.  வருவதும்  வெளியேறுவதுமாக இருந்ந்தாலும்  வேறு எந்த  இலக்கியக் கூட்டத்தை விட  அதிகமாகவும்,  செறிவான  வாசகர்களாகவே இருந்தார்கள்.

 

போகனின்  அமர்வை  பலபேர்  ரசிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.  அவர் அளித்த பதில்களும்  எழுப்பிய  கேள்விகளும்  பொதுச் சிந்தனைக்கு  எதிரானதாக  ஒரு தோற்றத்தை அளிக்கிறது.  ஆனால் ஒருசாரார்  சுவாரஸ்யமாக  எதிர்வினையாற்றினார்கள்.  முகநூலில்  அதன் தொடர்விவாதங்கள்  நடைபெறும்.  அவர் அமர்வில் கைதட்டி  ரசிக்கும்படி பலவிஷயங்கள்  இருந்தன.  குறிப்பாக ’வண்ணதாசனின் திருநெல்வேலி ’  அழகு.

 

பின்  வெய்யிலின்  அமர்வில்  எப்படி இலக்கியத்தை  அணுகுகிறேன் என்பதை  அரசியலையும்,  தினப்பிரச்சனைகளையும்  எவ்வள்வு தூரத்தில்  வைத்திருக்கிறேன்  என்று கூறினார். நீங்கள்  கேட்ட கேள்விகளில்  அவரும் சற்று  பின்வாங்க  ஆரம்பித்தார்.  இதேப்போல்  அபிலாஷ்  அமர்வின்போது  நீங்கள் இருந்து  கேட்டிருந்தால்  நன்றாக இருந்திருக்கும்.  மாலை மலேசிய எழுத்தாளர்கள்  நவீன் உட்பட இருந்த அமர்வில்  அவர் எப்படி இலக்கியத்தை  கவனிக்கிறார்கள்  என்பதிலிருந்து இன்று  எந்தளவிற்கு  வந்திருக்கிறார்கள்  என்பதுவரையான  வரலாற்றைப் புரிந்துக் கொள்ளமுடிந்தது.

 

இரவு நடந்த  குவிஸ் போட்டியில்  நான்  கலந்துக் கொள்ள்வில்லை.  ஆனால் காலையிலேயே பிஏ கிருஷ்ணனின்  அமர்வு அமர்களமாக ஆரம்பித்தது.  அவர்  எந்த  கேள்வியையும் கேட்கலாம்  என்று சொல்லியும்  மிகக் குறைவான  கேள்விகளே வந்தன.  குறிப்பாக  அவரது பெரியார்  நிலைப்பாடுகளைப்   பற்றி கேட்கலாம்  என்று தோன்றியது.  அவரது புனைவிலக்கியம்  பற்றிய  பேச்சுகள் தடைபடும்  என்பதால் கேட்கவில்லை.

IMG_9611

அடுத்து சீ.முத்துசாமியின் அமர்வு,  காலையில்  காட்டப்பட்ட காணோளியையே  ஒத்திருந்தது  அந்த அமர்வு.  பலகேள்விகளுக்கு  அவர் நிறைவாக  திறந்த மனதுடனே  பதிலளித்தார்.  குறிப்பாக ‘ஓரியாடுதல்’.  இருபது  ஆண்டுகள்  ஒருவர்  தன்  நினைவுகளை   எதன்பொருட்டோ  சுமந்தலைவது  ஒருவகையில்  பெரிய காரியம்தான்.  ஜேனிஸ்  பேரியடை  வேறு நிகழ்ச்சியாக  இருந்திருந்தால் சந்தித்திருக்கவே முடியாது.  அவரின் அனுபவங்கள்,  பார்வைகள்  எல்லாம் த மிழ்  வாசர்கர்  வாசகிகளுக்கு  அவசியம் தேவையானது.

கூடவே  ஒருங்கிணைத்தவர்களை  பாராட்டியே  ஆகவேண்டும்.  ராஜகோபாலன்,  ஏவி மணிகண்டன்,  கிருஷ்ணன்,  காளிபிரசாத்,  சிறில் அலெக்ஸ்,  கடலூர் சீனு,  விஜயராகவன்   ஆகியோருக்கு  என் நன்றிகள்.  விழாவில்  உங்கள்  உரை  அற்புதமாக இருந்தது.  ஒவ்வொரு  சொல்லாக  அதை பெயர்க்கவேண்டும்  என  நினைத்துக்  கொள்கிறேன்.   யூதர்களின் அளவிற்கு  இடப்பெயர்வு  தமிழர்களுக்கு உண்டு  என்று  அதை  எழுதப்படவில்லை  என்பது  அதிர்ச்சிதான்.  துயரங்களின்  வரலாற்றை  நினைக்கும் தோறும் அதிர்ச்சிதான்.

 

கிளம்பிச்  செல்லும் வரை  இலக்கியப் பேச்சுகள் என்று அமர்களமாக இருந்தது.  நாஞ்சில்நாடன்,  பாவண்ணன்,  கோபாலகிருஷ்ணன்,  நிர்மால்யா,  மோகனரங்கன்,  போன்ற  ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பாக  இந்த விழா  அமைந்திருந்தது.  எல்லாவற்றிற்கும்  மேலாக  ஒரு கட்டுப்படுத்தப்பட்ட  ஆர்ப்பாட்டம்  இருந்தது.  மனதில்  என்றும்  தங்கியிருக்கும்  நிகழ்வாக  அமைந்தது  குறித்து  உங்களுக்கு  எவ்வளவு  நன்றி  சொன்னாலும் தகும்.

கே.ஜே.அசோக்குமார்

IMG_9631

அன்புள்ள ஜெயமோகன்,

அம்மாவுக்கு கண்புரை சிகிச்சை நடைபெற இருந்ததால் என்னால் ‘விஷ்ணுபுரம் விருது’ விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்களின் உயர் ரத்த அழுத்தம் சீராகாததால் சிகிச்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திப்போடப்பட்டது. அதற்குப் பிறகு வருகையை அமைப்பாளர்களுக்கு தெரிவிக்கவும் பதிவு செய்து கொள்ளவும் நேரமில்லாததால், நானும், என் அண்ணாவும் ஓரிரு மணிநேரங்கள் மட்டும் சுவையறிய தொட்டுக் கொள்வதுபோல் விழாவில் கலந்து கொண்டோம்.

சனிக்கிழமை பின்மதியம் அரங்கில் நுழைந்தபோது எழுத்தாளர் போகன் சங்கர் அவர்களின் அமர்வு. குறைவாகவே வாசித்திருந்தாலும், நான் பெண்ணாக (அல்லது பேயாக!) இல்லாமல் இருந்தாலும், போகன் பிரியத்துக்குரிய எழுத்தாளர்தான். பின்வரிசையில் அமர்ந்தபோது, பெரும்பாலான எழுத்தாளர்கள் இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தப்பட்ட மனப்பிறழ்வு கொண்ட மனிதர்கள் என்ற அர்த்தத்தில் கலந்துரையாடல் சென்று கொண்டிருந்தது. (இடையில் நுழைந்ததால் நான் கொண்ட பொருளில் பிழையிருக்கலாம்.) கலை மூலம் தன்னை மீட்டுக் கொள்வதாக சொன்ன போகன் சங்கர், உங்களையும் உதாரணமாக்கிக் கொண்டிருந்தார். கலைமகள் எழுதுபவர்களுக்கு மீட்பு அளிக்கிறாள் என்பதில் சந்தேகமில்லை, அவ்வரம் வாசிப்பவர்களுக்கும் கிட்டுமா?

IMG_9639

 

‘வெள்ளையானை’யின் பஞ்ச காட்சிகள் என்னை வாரக்கணக்கில் தூக்கமின்றி அலையச் செய்தது ஞாபகம் வந்தது. நான் கொண்டிருந்த சமூக அரசியல் கருத்துக்கள், அதையொட்டி உருவாக்கி வைத்திருந்த வசதியான அடையாளம் (அல்லது அடையாளத்தை ஒட்டித்தான் வசதியான சமூக அரசியல் கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறோமோ?) ஆகியவை பசியின்/பஞ்சத்தின் உக்கிரத்தில் காணாமல் போக, பலநாட்கள் எதற்கும் அர்த்தமில்லாதது போல ஒரு வெறுமை சூழ்ந்து விட்டிருந்தது. நாவலை வாசித்து முடிக்கையில் என் புத்தக அலமாரியும் அதிலிருந்த புத்தகங்களும் அபத்தமாக தோன்றின. இரவில் அர்த்தமற்ற கனவுகள். ஒரு கட்டத்தில் மருத்துவ உதவியை நாட வேண்டுமோ என்றுகூட சந்தேகம் எழுந்தது. படிப்படியாக மனம் சமநிலையை அடைந்தபோது அதுவரையிலான என் மதிப்பீடுகள் தீவிர மறுபரிசீலனைக்கு ஆளாகியிருப்பது தெரிந்தது. அது ஒருவகையில் மீட்புதான்.

அடுத்த அமர்வில் கவிஞர் வெயில் அவர்களின் பெயர் புனைபெயர் அல்ல என்று உங்கள் கேள்வி மூலம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அரசியல், கவிதையின் அரசியல், கவிஞனின் அரசியல் என்று பல கேள்விகளை அவரின் அமர்வு எழுப்பியது. சமூகம் பற்றி நம் எல்லோருக்கும் இருக்கும் தார்மீகக் கோபம் பெரும்பாலும் இடதுசாரி அரசியலிலேயே வடிகால் காணுவது வியப்பான ஒன்று. கருத்தியல் தளத்தில் மார்க்சியம் அடைந்திருக்கும் உச்சம், மற்ற அரசியல் சித்தாந்தங்கள் (குறிப்பாக நம் மண்ணில் தோன்றியவை) செல்ல வேண்டிய தூரம் மலைக்க வைப்பது. கவிஞர் வெயிலை வாசிக்க வேண்டும்.

இடைவேளையில் தங்கள் தளத்தில் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதும் வாசகர்கள், எழுத்தாளர்களைப் பார்க்க முடிந்தது. கடிதங்களோடு வெளியாகும் புகைப்படங்கள் சட்டென்று உயிர்பெற்று எழுந்து வந்து நடமாடுவதுபோல. வீடு திரும்ப வேண்டியிருந்ததால் நானும், அண்ணாவும் கிளம்பிவிட்டோம். கிளம்புவதற்கு முன்னால் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளரான நாஞ்சில் நாடன் அவர்களிடம் அப்போது வாங்கிய புத்தகத்தில் சார் கையெழுத்து வாங்கிக் கொள்ளலாமா என்று கேட்டபோது, தான் தற்போது ஒரு கெஸ்ட்டுடன் இருப்பதாகவும் பிறகு போட்டுத்தருவதாகவும் மறுநாளும் தான் இருப்பேன் என்றும் அவருக்கே உரிய பாணியில் சொன்னார். ‘கொஞ்சம் கட்டாயப்படுத்தினால் அவருக்கு விளக்கெண்ணையை புகட்டிவிட முடியும்’ என்று நீங்கள் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தாலும், எளிய வாசகர்கள் என்பதால் ‘சரி சார்’ என்றபடி வெளியே வந்தோம்.

IMG_9663

ஞாயிற்றுக்கிழமை நாங்கள் கோவை வந்து சேர்ந்தபோது மாலையாகிவிட்டிருந்தது. அணிந்திருந்த பையில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் இரண்டு. இன்று அவர் கையெழுத்து இல்லாமல் ஊர் மண்ணை மிதிக்க மாட்டோம் என்று ஊர் எல்லையில் கருப்பசாமி ஆலயத்தில் வஞ்சினம் உரைத்திருந்தோம். அரங்கில் நுழைந்தபோது ராஜகோபாலன் அவர்களின் சிறப்பான உரை. சீ.முத்துசாமி அவர்களின் சிறுகதைகளில் விரிவான சூழல் சித்தரிப்புகளுக்குள் நாலைந்து வரிகளில் கதையின் மையம் எழுதிக் கடக்கப்பட்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். பின்வரிசையில் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்தோம்.

தங்களின் உரை புலம்பெயர் தமிழ் வாழ்வையும் அதன் பின்னுள்ள இன்னும் எழுதப்பட வேண்டிய பெரும் துயரத்தையும் உணர்த்துவதாக இருந்தது. சிதறடிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்க்கைப் போராட்டம் பற்றிய பிரக்ஞை தமிழக பொதுசமூகத்துக்கு ஏற்படும் முன் தமிழக கலைமனத்துக்கு ஏற்பட்டது என்பது முக்கியமாகப்பட்டது, புரிந்துகொள்ளவும் முடிந்தது. உலகத்தமிழர்களை பிணைப்பது மேலோட்டமான அரசியல் அல்ல, வெறும் ட்ரைபலிசம் அல்ல, அது மேலும் ஆழமான ஒன்று என்னும் நிலையில், பாரதியும், புதுமைப்பித்தனும் அல்லாமல் வேறு யார் அவர்களின் வலியை அந்தரங்கமாக உணர்ந்திருக்க முடியும்? அந்த ஆழமான பிணைப்பு குறித்த அக்கறையின்மையும், அறிவின்மையும் தமிழகத்தில் நிலவும்வரை, வெற்று அரசியல் கூச்சல்களால் ஆக்கப்பூர்வமாக என்ன சாதித்துவிட முடியும்?

IMG_9699

சீ.முத்துசாமி அவர்களின் ஏற்புரை ஆத்மார்த்தமாக இருந்தது. வண்ணதாசனை சந்திக்க நேர்ந்ததை நெகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டே இருந்தார், அதேபோல் தன் இந்தப் பயணத்தில் தன் முன்னோர்களின் நிலத்தை பார்த்ததையும். அன்னிய மண்ணின் கல்விப்புலம் பற்றிய அவரது கசப்பான குற்றச்சாட்டுகள் தமிழக கல்விப்புலத்துக்கும் பொருந்திப் போவது தமிழ் சினிமா பாஷையில் சொல்வதானால் ‘என்ன மாதிரியான டிசைன்’ என்றே புரியவில்லை. மலேசியாவில் தங்களின் மொழி/பண்பாட்டு அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டம் பற்றி அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது, இலக்கிய செயல்பாடு ஒரு இனக்கூட்டத்திற்கும் மீட்பை அளிக்க முடியும் என்று தோன்றியது.

தேசியகீதம் இசைக்கப்பட்ட பிறகு நாஞ்சில் நாடன் வாசகர்களுக்கு கையெழுத்து போட்டுக் கொடுப்பதைப் பார்த்தோம். அண்ணாவின் சமஸ்கிருதப் பெயருக்கு இணையான தமிழ் உச்சரிப்பைச் சொல்லி, இரண்டில் எது அவரின் சரியான பெயர் என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டு கையெழுத்து போட்டுத் தந்தார். வணங்கி மனநிறைவுடன் விடை பெற்றோம். விழாவின் சிறப்பம்சங்கள் பலதை தவறவிட்டிருக்கிறோம் என்பது நண்பர்களின் கடிதங்கள் மூலம் தெரியவருகிறது என்றாலும், சில சமயங்களில் நதியில் கால் நனைப்பதும் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. குளியல், பிறகு பார்ப்போம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

 

பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையோரத்தில் யாரோ பெரியபாண்டியனுக்கு அஞ்சலி பேனர் வைத்திருந்தார்கள்.
அன்புடன்,
சேது

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–10
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது- ம நவீன்