கவிதையின் புரட்சிகரம்

kadamma

அன்புள்ள  ஜெயமோகன்  அவர்களுக்கு,

நீங்கள்  இன்குலாப்  பற்றி  எழுதியிருந்ததை  வாசித்தேன்.

கடம்மனிட்ட  ராமகிருஷ்ணன்  பற்றி வரலாற்றைத் தாண்டி…  என்று  ஒரு நல்ல  பதிவை  எழுதி  இருந்தீர்கள். அவருடைய  கவிதைகளும்  உரக்கப் பேசுபவையே  என்று  குறிப்பிட்டிருந்தீர்கள்.  அதில்  உங்கள் நண்பர்  ‘இது  அடிமைப்பட்டவனின்  கவிதை.  நெஞ்சில்  ஈட்டி  இறக்கப்பட்டவனின்  கவிதை.  இது அலறலாகத்தான்  இருக்கும்  தோழர்…’ என்கிறார்.  இன்குலாப்பை  இந்த  சேர்க்கமுடியாதா?  கடம்மனிட்ட  ராமகிருஷ்ணனிடம்  இருந்த  உணர்ச்சியைப் போல  உண்மையாக இல்லாமல்  இருக்கக் கூடும்.  [தனிப்பட்ட  முறையில்  நீங்கள்  எதையேனும் அறிந்திருக்கக் கூடும்].  இன்குலாப்  அப்பாவியான  மனிதர்  என்று  நீங்கள் அதையே  குறிப்பிடுகிறீர்கள்  என நினைக்கிறேன்.  அவர்  அரசு வேலையில்  இருந்தாலும்,  ஒடுக்கப்பட்ட  மக்களை  எண்ணி வருந்தியிருக்கக் கூடுமா?

மாலதி மைத்ரி,  வெயில்  போல  அது   ஒரு தலைமுறைக்  கவிஞர்களையே பாதித்திருக்கிறது  போலவே. ஒரு வேளை  தனிப்பட்ட முறையில்  அவர்  அந்தக் கவிதைகளுக்கு  உண்மையாக  இல்லை  என்று கருதுவீர்களானால் கூட,  போராட்ட  இலக்கியம்  ஒரு  கருவியை  உற்பத்தி  செய்வது  போல   கூட ஆகாதா?  அவர் அதைப் பயன்படுத்தாவிட்டால்தான்  என்ன?  ஒரு  தலைமுறையே  பயன்படுத்தி இருக்கிறதே?

இன்குலாபை எப்படி புரிந்து கொள்வது?  நல்ல மனிதர்,  நல்ல கவிதை , நல்ல நோக்கம்  ஆகியவற்றை  எப்படி  பிரித்துப்  பார்ப்பது?

அன்புள்ள,

மாத்யூ அர்னால்ட்

சேரபந்த ராஜு
சேரபந்த ராஜு

அன்புள்ள மாத்யூ,

வழக்கமாக கருத்தரங்குகளில் ‘நல்ல கேள்வி’ என்று சொல்லி ஆரம்பிப்பார்கள்.

இந்த விவாதமே கவிதையைப் புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வு கொண்டவர்களை நோக்கித்தான். இயல்பிலேயே அது இல்லாதவர்கள், அரசியல் நிலைபாடுகளால் மூடப்பட்டவர்கள், இந்த விவாதத்திற்குள் இல்லை. நல்லகவிதை எது என எவராலும் அனைவருக்குமாக ‘நிரூபிக்க’ முடியாது. இன்றுவரை இந்தச்சிந்தனைகள் அனைத்தும் anti-empirical என்றே வரையறுக்கப்படுகின்றன. ஆகவே உணர்ந்தும் தெளிவாக வகுத்துக்கொள்ள முடியாதவர்களுக்காகவே இவ்விவாதம். எல்லா கவிதை விவாதங்களும் அப்படித்தான். சொல்லியும் பிடிகிடைக்கவில்லை என்றால் ’சரி, அப்ப பாப்பம்’தான் பதில்

கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் மெய்யாகவே மக்கள் கவிஞர். பல்லாயிரம் மக்கள் நடுவே நின்று பாடியவர். நெருக்கடிநிலை உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நின்றவர். அரசியல் களப்பணியாளர். சேரபந்தராஜுவும், பாப்லோ நெரூதாவும், மயகோவ்ஸ்கியும் மக்கள் கவிஞர்கள். மக்களிடம் பேசியவர்கள், இழந்தவர்கள். அவர்களை உலகமெங்கும் எல்லா அரசியல்தரப்புகளையும் சேர்ந்த கவிதைவாசகர்கள் ஏற்பார்கள். அவர்களின் கவிதையின் அறவியலும் அவ்வாசகர்களுக்குள் ஊடுருவிச் செல்லும்.

என்ன சிக்கல் என்றால் கடம்மனிட்ட ராமகிருஷ்ணனையோ சேரபந்த ராஜுவையோ நெரூதாவையோ ஏற்கும் அரசியல்த்தரப்பு கொண்ட பல்லாயிரக்கணக்கான அடிமாட்டுத்தொண்டர்கள் மற்றும் அரசியல்சூழ்ச்சியாளர்களுக்கு அவர்களுக்கும் அக்கட்சிகளில் சுவர்வாசகமும் தட்டிவாசகமும் எழுதுபவர்களுக்குமான வேறுபாடுகள் சுத்தமாகத் தெரியாதென்பதுதான். இவ்வமைப்புக்களில் பெருங்கவிஞர்கள்கூட அவமானப்படுத்தப்பட்டிருப்பது இந்த ’ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும்’ மொண்ணைத்தனத்தால்தான்.

இன்குலாபை கவிஞர் என சொல்லும் ஒருவருக்கு நெரூதா ஏன் கவிஞர் என்றே தெரியாது என்பதே பொருள். இன்குலாப் கவிஞர் என்றால் நம்மூர்  ‘புரட்சிப்பயல்’களான இளங்கவிஞர்களின் அதிரடிக்கவிதைகளுக்கு என்ன குறை? கேட்டால் ஆமாம் இவனும் அவரைப்போலவே கவிஞர்தான் என்பார்கள்.

இன்று இன்குலாபை நானும் ஆதரிக்கிறேன் என்பது முகநூலில் அதைச் சொல்பவருக்கு ஓரிருநாளுக்கு ஒரு புரட்சிப்பிம்பத்தை அளிக்கிறது. அவர் எந்தக்காலத்திலும் கவிதைத்தளத்திலும், அரசியல் தளத்திலும் கவனிக்கப்பட்டவரோ புகழ்பெற்றவரோ அல்ல. சென்ற காலங்களில் அவருடைய எந்தக்கவிதை பேசப்பட்டிருக்கிறது, எந்தக்கவிதை மேற்கோளாக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள், புரியும்.

பாப்லோ நெரூதா
பாப்லோ நெரூதா

கவிதைக்கும் அல்லதுக்கும்என்ன வேறுபாடு? மிகப்பொதுவாக கவிதைக்கான சில அடையாளங்களை புறவயமாக வகுத்துக்கொள்ளலாம்.

அ. அவை அக்கவிஞரின் தனித்தன்மையின் வெளிப்பாடாக இருக்கும். அவருடைய ஆழ்மனத்தின் மொழிவடிவமாக இருக்கும்.

ஆ. அக்காரணத்தாலேயே அவை தனக்குரிய மொழிவெளிப்பாட்டை, படிமவெளிப்பாட்டைக் கொண்டிருக்கும். ஆகவே பிறிதொன்றிலாத தன்மை கொண்டிருக்கும்

இ. அவை பொதுவான தேய்வழக்குகள், வழக்கமான உணர்வுகள், பழகிப்போன கருத்துக்களைக் கொண்டிருக்காது. பொதுமையைக் கடந்துசெல்லுதல் கவிதையின் அடிப்படை இயல்புகளில் ஒன்று

ஈ. அவை அக்கவிஞனால் கண்டடையப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கைநோக்கை, அதாவது தரிசனத்தை கொண்டிருக்கும். அது ஒரு பண்பாட்டிலிருந்து எழுந்ததாகவும் முந்தைய சிந்தனைகளின் நீட்சியாகவும் இருக்கும்போதே தனித்தன்மையும் கொண்டிருக்கும்.

ab
அப்துல் ரகுமான்

கவிதைவாசகனுக்கு அவை எடுக்கும் அரசியல்நிலைபாடு முக்கியமல்ல. அவை முற்போக்கோ பிற்போக்கோ, மதம்சார்ந்தவையோ மறுப்பவையோ, தனிநபர்நோக்கு கொண்டவையோ பொதுவெளியின் குரலோ  அது அளவீடே அல்ல. நல்ல வாசகன் கவிதையை அது என்ன சொல்கிறதென்பதனால் மதிப்பிடுவதில்லை. ஏனென்றால் மொழி என்பது ஒரு மாபெரும் கருத்துவெளி, படிமவெளி. இதில் ஒவ்வொரு தரப்பும் தன் பங்கை ஆற்றுகிறது. அத்தனைபங்களிப்புகளும் அவை நேர்மையானவையாக, ஆற்றல்கொண்டவையாக இருக்கையில் முக்கியமானவையே.

நல்ல கவிதைவாசகனால் தன் அரசியலுக்கும் நம்பிக்கைக்கும் நேர் எதிரான கவிதையையும் ரசிக்க, உடன் எழ முடியும். ஏனென்றால் அதை அவன் ஒரு மானுடக்குரலாகவே பார்ப்பான். அந்த உணர்வுகளை அக்கவிஞனாக ஆகியே அக்கணத்தில் அடைவான். அவன் கவிதையை உணர்வுரீதியாக கரையும் நிலையில்தான் ஏற்கிறான். ஆழ்மனத்தைத்தான் கவிஞனுக்கு அவன் அளிக்கிறான், அரசியலும் நம்பிக்கையும் ஆளும் புழக்கமனதை அல்ல

விளாடிமிர் மயகோவ்ஸ்கி
விளாடிமிர் மயகோவ்ஸ்கி

இக்காரணங்களால்தான் கடம்மனிட்ட ராமகிருஷ்ணனும் சேரபந்த ராஜுவும் கவிஞர்கள். இன்குலாப் கவிஞர் அல்ல. கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் மலையாளத்தின் தனக்கான கவிமொழியை, படிம அமைப்பை உருவாக்கியவர். நாட்டார்ப் பாடல்முறைகளை நவீனக்கவிதைக்குள் அழகுணர்வுடன் கொண்டுவந்த முன்னோடி. கேரள நவகவிதை இயக்கத்தில் வசனத்தை மிக ஆற்றலுடன் பயன்படுத்தியவர்.

இன்குலாபின் வரிகள் அனைத்துமே பொதுவான கவிதைச்சந்தையில் அன்றாடம் புழங்குபவை. மொழியாட்சி திராவிட மேடைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. அவருடைய வசைகள் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் வகைமையானவை.அவருடைய உணர்வுகள் அனைத்துமே கடன்வாங்கப்பட்டவை.

இன்னும் கூர்ந்து இதைச்சொல்லலாம். தெலுங்குப் புரட்சிக்கவிஞர்களில் சேரபந்தராஜு கவிஞர். ஆனால், கத்தார் வெறும்பாடகர், கவிஞரல்ல. இருவருமே நேர்மையாக புரட்சிவாழ்க்கை வாழ்ந்தவர்கள். உண்மையான உள எழுச்சியைக் கவிதையாக்கியவர்கள். புரட்சிப்படைக்கு இருவருமே சமம்தான். ஆனால் கவிதையை அறிந்தவன் வேறுபாட்டை சுட்டிக்காட்டுவான்

இது என்றுமே உள்ளதுதான். கம்பன் கவிஞன். கச்சியப்ப சிவாச்சாரியார் பண்டிதர். ஆனால் கந்தபுராணப்பிள்ளைவாள்கள் திருநெல்வேலிப்பக்கம் கம்ப ராமாயணத்தைவிட கந்தபுராணமே மேலான காவியம் என்பார்கள். முந்நூறாண்டுகளுக்கும் மேலாக அவர்களை எந்தச் சக்தியும் பேசிப்புரியவைக்க முடியவில்லை என்பது வரலாறு. கம்பனின் கவிதையில் மொழியும், படிமமும், தரிசனமும் ஒவ்வொரு கணமும் புதிது. கச்சியப்பர் ஒவ்வொரு இடத்திலும் எல்லாரும் எப்போதும் எதைச்சொல்வார்களோ அதையே சொல்லிவைக்கிறார்.

கடைசியாக இன்குலாபின் நேர்மை குறித்து. ஒருவருக்கு ராஜராஜசோழன் ‘செத்தபின்னரும் மக்களாட்சியின் மாண்பைச் சீர்குலைப்பவன்’ என்றால் காந்தி ‘கேடுகெட்ட நாய்’ என்றால், அதேசமயம் அவருக்கு தன் மதம்பற்றியோ நபி குறித்தோ அத்தனை கலிஃபாக்களையும் படையெடுப்பாளர்களையும் பற்றியோ துளிகூட விமர்சனம் இல்லை என்றால் அவருடையது புரட்சியா, மாற்றுச்சட்டை போட்ட மதநோக்கா?  அவர் எதை எதிர்த்தார்? எதற்காக நிலைகொண்டார்? எதை இழந்தார்? அவர் உண்மையான புரட்சியாளர் என்றால் அவருக்கு முதல் எதிர்ப்பு அவருடைய மதத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும்தான் வந்திருக்கும்.

மதநம்பிக்கை கவிஞர்களுக்கு இருக்கலாமா? இருக்கலாம் என்பது மட்டுமல்ல, அது மேலதிக அழகையும் அளிக்கக்கூடும். கவிஞர் அப்துல்ரகுமானின் அழகியவரிகள் சூஃபி மரபுடனும் கஸலுடனும் அவர் உறவுகொள்ளத் தொடங்கியபின்னரே நிகழ்ந்தன. இன்குலாப் புரட்சிகர முகமூடிக்காக அதையும் துறந்தார். உண்மையில் அவருடைய மதத்திலுள்ள ஆன்மிகத்தையும் அவரால் சென்றடையமுடியவில்லை.

ஒருவரை புரட்சிகரக் கவிஞர் என்கிறார்கள். அப்படி என்னய்யா புரட்சி செய்தார் என்று கேட்டால்  ‘ஆ, அவமதிப்பு’ என்கிறார்கள். காந்தியை கேடுகெட்ட நாய் என்று சொல்லும் ஒருவரை அவருடைய கவிதைகள் உண்மையானவைதானா என்று கேட்டதுமே ‘மரியாதையாகப் பேசுடா’ என கொந்தளிக்கிறார்கள். இந்த புரட்சிகரஜிப்பா என்பது மிகவும் சாயம்போன ஒரு உறை. அது எவரையும் இனி மறைக்காது

ஜெ

பிகு

உங்கள் புனைபெயரும் நன்றாக இருக்கிறது

கவிஞர் அபி
கவிஞர் அபி

அன்புள்ள ஜெ

நேரடியாகவே ஒன்று கேட்கலாமென நினைக்கிறேன். வானம்பாடி கவிதையியக்கம் தமிழுக்கு ஒரு பங்களிப்பாற்றியிருக்கிறது. கவிதையை கொஞ்சம் நீர்த்துப்போகச் செய்தனர் என்பது உண்மை. ஆனால் வெகுஜனப்படுத்தினர். அம்மரபில் உங்களுக்கு எந்தக்கவிஞருமே உவப்பானவர்கள் அல்லவா? மொத்தமாக நிராகரிக்கிறீர்களா?

செந்தில்

***

அன்புள்ள செந்தில்

வானம்பாடிக் கவிஞர்களில் முதன்மையானவர் என்றால் அப்துல் ரகுமான்தான். அவருடைய பங்களிப்பு பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். அந்த மரபு உருவாக்கிய தளர்வானகவிதை வடிவம், நேரடியான கூறுமுறை ஆகியவற்றுடன் அமைந்த கவிதைகள் அவை. அதேசமயம் அவருடைய தனிப்பட்ட மொழியாட்சியும் பார்வையும் வெளிப்படும் பல படைப்புக்கள் உள்ளன. அடுத்தபடியாக கங்கைகொண்டான், நா.காமராசன் இருவரையும் சொல்லலாம். ஆரம்பகாலக் கவிதைகளைக்கொண்டு – மிகவும் தயங்கி.

வானம்பாடிகளுடன் சேர்ந்த்தே பார்க்கப்படுபவர் அபி. ஆனால் அவர் அவர்களின் அழகியல், கருத்தியல் மரபைச் சேர்ந்தவர் அல்ல. பிரமிளுக்குப்பின் தேவதேவனுக்குமுன் சேர்க்கவேண்டியவர். தமிழின் பெருங்கவிஞர்களில் ஒருவர். விரிவாக முன்னரே எழுதியிருக்கிறேன். உள்ளுணர்வின் தடத்தில் என்னும் கவிதைகுறித்த விமர்சன நூலில் அக்கட்டுரை உள்ளது.

ஜெ

***

கவிஞர் அபி கவிதைப்பக்கங்கள்

முந்தைய கட்டுரைவீரர் அஞ்சலி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–9