விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -6

மலேசிய நண்பர்கள் தமிழ்மாறன் குமாரசாமி மற்றும் ,சுவாமி பிரம்மானந்தா,
மலேசிய நண்பர்கள் தமிழ்மாறன் குமாரசாமி மற்றும் ,சுவாமி பிரம்மானந்தா,

அன்புள்ள ஜெ

விழா புகைப்படங்களில் நீங்கள் பேசிய ஓர் அரங்கின் படங்களைப்பார்த்தேன். அதைப்பற்றிய செய்திகள் எவருமே எழுதவில்லை. அந்த அரங்குபற்றிய செய்திகளைச் சொல்லுங்கள்

மகாதேவன்

***

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

சிங்கப்பூர் செட்டிநாடு ஓட்டல் உரிமையாளர் கணேஷ், பி.ஏ.கிருஷ்ணன், சிறில் அலெக்ஸ்
சிங்கப்பூர் செட்டிநாடு ஓட்டல் உரிமையாளர் கணேஷ், பி.ஏ.கிருஷ்ணன், சிறில் அலெக்ஸ்

அன்புள்ள மகாதேவன்,

அது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் மேடையை சரிபார்த்தது. சும்மா வேடிக்கைக்காக நாற்காலியில் அமர என் நண்பர்கள் கீழே என்னைக் கேலிசெய்து கேள்விகள் கேட்டார்கள். வழக்கம்போல கிருஷ்ணனை ‘கலாய்த்து’க்கொண்டிருந்தோம்

விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிகளில் என் அரங்கு இருக்காது. என்னைப்பற்றிய பேச்சுகளும் இருக்காது

ஜெ

***

1

ஜெ

ஒரு புத்தகக் கண்காட்சியின் சிறப்பு என்னவென்றால் நாம் ஒட்டுமொத்தமாகத் தமிழிலே எவ்வளவு  அறிவுச்செயல்பாடுகள் நடக்கின்றன, என்னவகையான நூல்கள் வெளிவருகின்றன என்பதைக் கண்ணாலேயே பார்த்துவிடலாமென்பதுதான். இந்த விழாவும் அப்படி ஆகிவிட்டது. ஒரேநாளில் தமிழில் எத்தனை இலக்கியப்போக்குகள் உள்ளன என்று தெரிந்துகொண்டேன். லட்சுமிமணிவண்ணன், நவீன் போன்றவர்கள் இலக்கியத்தை மிகச்சீரியஸாக எடுத்துக்கொள்ளும் தரப்பினர். கே.என்.செந்திலும் அப்படித்தான் பேசினார். அபிலாஷ் அதை ஒருவகை உயர்தர பொழுதுபோக்கு என்று நினைக்கிறார். போகன் அதை ஒருபக்கம் சீரியஸாக எடுத்துக்கொண்டு மறுபக்கம் விளையாடவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்தமான பார்வைதான் விழாக்களுக்கு உரிய சிறப்பு என நினைக்கிறேன். மிகச்சிறந்த அனுபவம். நன்றி

கார்த்திக் ராஜ்

 

 

பிரியம்வதா சீ.முத்துசாமியின் துணைவியுடன்
பிரியம்வதா சீ.முத்துசாமியின் துணைவியுடன்

அன்புள்ள ஜெமோ

விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்தது மனநிறைவளிக்கும் நிகழ்வாக இருந்தது. எல்லா அரங்குகளுமே உற்சாகமானவையாக இருந்தன அத்தனை அரங்குகளிலும் இளைஞர்களின் பங்கேற்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. கூர்மையான கேள்விகள். பதில்களைவிட கேள்விகள் எனக்கு முக்கியமானவையாகத்தோன்றின. எந்தெந்தக் கோணத்தில் கேள்விகள் வருகின்றன என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தமிழ் எழுத்தாளனை அடுத்த தலைமுறையினர் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று பார்த்தேன். எழுத்தாளனை வழிகாட்டி என்றுதான் அனைவரும் பார்க்கிறார்கள் என நினைத்தேன். போகனிடம் சிலர் தனிப்பட்ட ஆலோசனைகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே எனக்குச் சமூகம் பற்றிக் கவலையில்லை என்று எழுத்தாளர் சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

 

IMG_0567

இரண்டுபேர் ஒரே அரங்கு என்பது சரியா என்ற எண்ணம் வந்தது. ஆனால் அது உலகம் முழுக்க உள்ள வழக்கம். ஒருவர் பேசும்போது இன்னொருவர் தொகுத்துக்கொள்ளமுடிகிறது. இளம் எழுத்தாளர்களுக்கு அது உதவிகரமானது. அசட்டுத்தனாமான கேள்விகளோ பொதுவானகேள்விகளோ ஏதுமில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம்

ஜெனிஸ் பரியத் தான் நிகழ்ச்சியின் உச்சம். அவருடைய குரலும் சிரிப்பும் ஆணித்தரமான கருத்துக்களும் நிகழ்ச்சியை அழகாக ஆக்கிவிட்டன

செல்வகுமார்

 ***

மகிழ்மலர், பி.ஏ.கிருஷ்ணன்
மகிழ்மலர், பி.ஏ.கிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

2017 என்பது விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து 20 ஆண்டுநிறைவு ஆகும் வருடம். ஏற்கனவே குங்குமத்தில் இதைப்பற்றி ஒருசெய்தி வந்தது. ஆனால் விஷ்ணுபுரம் அரங்கிலே ஒருவர்கூட அதைப்பற்றிச் சொல்லவில்லை. ஞாபகப்படுத்திக்கொள்ளவுமில்லை. அது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் நான் விஷ்ணுபுரம்நாவலைத்தான் உங்கள் மாஸ்டர்பீஸ் என நினைக்கிறேன்

கெ. மாதவன்

***

விஜய் சூரியன்
விஜய் சூரியன்

அன்புள்ள மாதவன்,

ஏற்கனவே அதைப்பற்றிச் சொன்னார்கள். விஷ்ணுபுரம் அமைப்பு அந்நாவலைப்பற்றியது அல்ல. அதையோ என் படைப்பையோ பேச இந்த அமைப்பு முயலாது. அதன் நோக்கம் பிற எழுத்தாளர்களை முன்னிறுத்துவதே

விஷ்ணுபுரம் என ஏன் பெயர்வைக்கப்பட்டது என்றால் ஒரு அறைகூவலாகவே. அமைப்புகளும் அரசுகளும் முற்றாகவே நவீன இலக்கியத்தைக் கைவிட்ட சூழலில் ஒரு வாசகர் குழுமமே அதைச்செய்கிறது என்பது ஒவ்வொருமுறை பெயரைக் கேட்கும்போதும் ஞாபகம் வரவேண்டும் என்று. அது நிகழ்கிறதென்பதை அத்தனை விவாதங்களிலும் காணலாம்

ஜெ

***

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -5
அடுத்த கட்டுரைகழுவேற்றமும் சைவமும்