இலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

இந்தமுறை விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்த ஒரு சின்ன பதற்றம் எல்லாருக்கும் இருந்துகொண்டே இருந்தது. அது சென்றமுறை விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நடந்ததை ஒட்டி உருவானது. முதல்விஷயம், சென்றமுறை விருதுபெற்றவர் தமிழின் இலக்கிய நட்சத்திரங்களில் ஒருவர். இரண்டாவது, அதற்கு முந்தையவிழாவில் நிகழ்ந்த சிறுபிழைகளை எல்லாம் கணக்கில்கொண்டு முறையாக செம்மைசெய்து அவ்விழாவை ஒருங்கிணைத்திருந்தோம். ஆகவே இம்முறை விழா சற்று கீழே வந்தால்கூட சென்றமுறை போல இல்லை என்ற குரலே ஒலிக்குமென எண்ணினோம்.

இம்முறை நிதி போதிய அளவில் வந்தது. ஆகவே நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுக்க தமிழ் ஹிந்து நாளிதழில் விளம்பரம் அளித்தோம். தினமலர் நாளிதழில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக விளம்பரம் அளிக்கப்பட்டது. நகரில் இருபது இடங்களில் விளம்பரத்தட்டிகள் அமைத்தோம். இணையத்திலும் விரிவாக விளம்பரம் செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததுபோல திரளாக மக்கள் வந்திருந்தனர். சென்றமுறை அமைந்ததை விடவும் மேலாக என்ற பேச்சுதான் எங்கும். இந்நாளின் மனநிறைவு அதுதான்.

 

வழக்கமாக விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு முந்தையநாள் முறைமைசாராத கலந்துரையாடல்கள் நிகழும். முதல்விருதுவிழாவன்று காலையில் தன்னியல்பாக அப்படி ஒரு உரையாடல் நிகழ்ந்தது. அதையே சென்ற ஆண்டுவரை தொடர்ந்தோம். சென்றமுறை முந்தையநாளே வருபவர்களின் எண்ணிக்கை இருமடங்கு. வட்டமாக அமர்ந்து பேசுவது இயலாதது ஆகியது. சென்றமுறை முதல் ஒருமணிநேரம் சந்திப்பு வழக்கமான கலந்துரையாடலாக நிகழ்ந்தபோது பெரும்பாலானவர்களால் கவனிக்கமுடியவில்லை. ஆகவே இன்னொரு அரங்குக்குக் கொண்டுசென்று ‘ஆசிரியரைச் சந்தியுங்கள்’ நிகழ்வாக ஆக்கினோம். வந்திருந்த இலக்கிய ஆசிரியர்களை மேடையேற்றி வாசகர்களிடம் உரையாடவிட்டோம். உச்சகட்டமாக எச்.எஸ்.சிவப்பிரகாஷ் நிகழ்ச்சி அமைந்தது. அவருடைய திடமான கருத்துக்களும் தத்துவம், அரசியல், இலக்கியம் என விரிந்துசென்ற உரையாடலும் பெரிய ஒரு அலையை உருவாக்கியது.

ஆகவே இம்முறை அச்சந்திப்பு நிகழ்ச்சிகளை முறைப்படுத்தலாமென முடிவெடுத்தோம். இது பரவலான வாசகர்களுக்கு இலக்கிய ஆசிரியர்களை அறிமுகம்செய்யும் நிகழ்ச்சி. பெரும்பாலான வாசகர்கள் மேலோட்டமாகவே அடுத்த தலைமுறை ஆசிரியர்களை அறிந்திருப்பார்கள். ஆசிரியரைச் சந்தியுங்கள் நிகழ்ச்சி வெவ்வேறுகோணங்களினான வினாக்கள் மூலம் அவர்களை ஒரேநோக்கில் ஏறத்தாழ அனைத்துபக்கங்களிலும் அறிமுகம் செய்கிறது. சட்டென்று அந்த ஆசிரியரிடம் வாசகனுக்கு ஓர் ஈர்ப்பும் அணுக்கமும் உருவாகிறது. நூலை, ஆசிரியரை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பதற்கு முதன்மையான வழி இதுவே.

ஆகவேதான் உலகமெங்கும் இந்நிகழ்ச்சி தொடர்ச்சியாக நிகழ்கிறது. ஆங்கிலத்தில் எழுதும் படைப்பாளிகளை பதிப்பகமே உலகமெங்கும் நிகழும் ஆசிரியரைச் சந்தியுங்கள் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச்செய்யும், பதிப்பகமே ஏற்பாடு செய்வதுமுண்டு. தமிழகத்தில் அனேகமாக இத்தகைய நிகழ்ச்சிகள் இல்லை. சாகித்ய அக்காதமி நடத்துகிறது. ஆனால் அங்கே இந்நிகழ்ச்சியின் ஒழுங்கு தெரியாததனால் சம்பந்தமில்லாத எவரேனும் எழுந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இதை முறையாக தொடரலாம் என்றும், புதிய எழுத்தாளர்களை வாசகர்களுக்குக் கொண்டுசெல்லலாம் என்றும் எண்ணினோம்

அவ்வகையிலேயே இம்முறை இந்த ஆண்டு தொகுப்பு வெளியிட்ட நான்கு படைப்பாளிகளை தெரிவுசெய்தோம். தூயன், சுரேஷ் பிரதீப், கே.ஜே.அசோக் குமார், விஷால்ராஜா. அவர்களை பரவலாக வாசகர்களிடம் கொண்டுசென்றதில் நண்பர் சுநீல்கிருஷ்ணனின் பங்களிப்பு மிக முக்கியமானது.[நடுவில் ஒருவரி, சுனீல் ஒரு சிறுகதையாசிரியர். ஆனால் கணையாழியில் பரிசுபெற்ற பேசும்பூனை அவருடைய முதல்படைப்பு என்று சொல்வேன். தமிழின் சிறந்த சிறுகதைகளின் சிறிய வரிசையில் ஒன்றை எழுத அவரால் முடிந்திருக்கிறது. ஓர் இளம்படைப்பாளி நல்ல கதை எழுதினால்கூட ஐந்துநிமிடம் பொறாமையால் காதுபுகை வருகிறதென்பதை உணர்ந்தேன். அது நான் இன்னமும் இளமையாகவே இருக்கிறேன் என்பதற்கான சான்று எனக்கு] ஆகவே கணிசமானவர்கள் அவர்களை வாசித்துவிட்டு வந்திருந்தார்கள்.

கூடவே இப்போது வெவ்வேறு தளங்களில் எழுதிக்கொண்டிருக்கும் மூன்று படைப்பாளிகளையும் அறிமுகம் செய்தோம். அவர்களின் புனைவுலகு, வாழ்க்கை, கருத்துநிலை மூன்றையும் வாசகர்கள் அறிவதற்குரிய களமாக இதை வடிவமைத்தோம். அதனுடன் வழக்கம்போல சிறப்பு அழைப்பாளர்கள், விருதுபெறுபவர்களின் அரங்கு.

இவையனைத்தையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை செந்தில் எடுத்துக்கொண்டார். ஓர் உயர்நிலை நிர்வாகியால்தான் அதைச் சரியாகச் செய்யமுடியும் என்பதை சென்றமுறையிலேயே உணர்ந்தோம். அவருக்கு நிதிமேலாண்மையில் மீனாம்பிகை உதவினார். விளம்பரம் மற்றும் மக்கள்தொடர்பு திருக்குறளரசி செல்வேந்திரன். டைனமிக் நடராஜன், ராதாகிருஷ்ணன் அரங்கசாமி ஆகியோர் பிறபணிகளில் உறுதுணையாக இருந்தனர்.

சரியான ஒருங்கிணைப்பு என்பது மேலும் மேலும் நவீன வாழ்க்கைக்குத்தேவையாக உள்ளது. ஏனென்றால் இன்று ஓர் இலக்கியநிகழ்வின் மதிப்பிற்குரியவர்கள் அதில் பங்கேற்கும் மக்கள்தான். அவர்களின் நேரம் முக்கியம். அவர்கள் பங்கெடுக்கும் அரங்கின் தரம் முக்கியம். முப்பதாண்டுகளாக தமிழகத்தின் இலக்கியச் சூழலில் இருப்பவன் என்ற முறையில் தமிழ் இலக்கியச்சூழலின்மேல் எனக்கு கடுமையான கசப்புகள் உண்டு. ஒரு நூல்வெளியீட்டுநிகழ்வில் எவருமே அந்நூலைப் படிக்காமலிருப்பது, சம்பந்தமில்லாமல் எதையாவது பேசுவது இங்கே சாதாரணம். இரண்டுமணிநேரமெல்லாம் பார்வையாளர்களைக் காக்கவைப்பது, பேசிமுடிக்காமல் நிகழ்ச்சி சென்றுகொண்டே இருப்பது, ஒருவரே பலமணிநேரம் பேசுவது, கேள்விகேட்கிறேன் என சம்பந்தமே இல்லாத ஒருவர் எழுந்து ஒருமணிநேரம் எதையாவது பேசுவது என பெரும்பாலான இலக்கிய நிகழ்வுகள் இங்கே நேரவிரயங்களே. தொடர்ச்சியாக இலக்கியநிகழ்வுகள் தோல்வியுறுவதற்கு, ஒருமுறை வந்தவர்கள் பின்னர் புறக்கணிப்பதற்குக் காரணம் அவை பெரும்பாலும் பயனற்றவை என்பதுதான். பயனுற நிகழ அதற்கான ஒருங்கிணைப்பு இன்றியமையாது

செல்வி மகிழ்மலரை பி. ஏ கே பாராட்டுகிறார்

 

அதோடு இது எழுத்தாளர்களின் உலகம். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவர்தான் உலகின் மையம். அத்தனைபேரையும் முறையாக உபசரிக்கவேண்டும். வரவேற்றல், தங்குமிடம் ஏற்பாடு செய்தல் என தொடங்கி வழியனுப்பி வைப்பதுவரை ஒவ்வொருவரையும் தனித்தனியாக கவனிக்கவேண்டும். பொதுவாக அமைப்பு, அரசு நடத்தும் விழா என்றால் அதையெல்லாம் பெரிதாக எண்ண மாட்டார்கள். எழுத்தாளர்களே நடத்தும் விழாவில் அதையே பிரச்சினை ஆக்கிவிடுவார்கள். எங்கள் விழாக்கள் அனைத்திலுமே விருந்தினர் உபசரிப்பை முறையாகச் செய்திருந்தோம். இம்முறை அது மிகச்சிறப்பாக இருக்கவேண்டும் என திட்டமிட்டோம். அதை சாதித்தோம் என்று பெருமிதம் கொள்கிறேன். ஊழியர்கள் இல்லாத ஓர் அமைப்பு, முழுக்கமுழுக்க நண்பர்களைக்கொண்டு இதைச் சாதிப்பது இன்றையதினத்தில் தமிழகத்தில் வேறெங்கும் சாத்தியமில்லை. நண்பர்கள் ராஜகோபாலன், விஜயராகவன், சேலம் பிரசாத், ராம்குமார், ‘டைனமிக்’ நடராஜன், நரேன், அரங்கசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் அப்பணியை மிகச்சிறப்பாகச் செய்தனர்.

 

 

விழாவன்று காலைதான் நான் வந்துசேர்ந்தேன். வரும்போதே அனைத்து ஏற்பாடுகளும் முழுமையடைந்திருந்தன. எட்டுமணிக்கு வந்து ஒன்பது மணிக்கு அரங்கில் அமர்ந்திருந்தேன். முதல் அரங்கு தூயன், கே.ஜே.அசோக்குமார் இருவரும் பங்கெடுப்பது. ராஜகோபாலன் ஒருங்கிணைத்தார். ஆசிரியரைச் சந்தித்தல் என்னும் நிகழ்வு தமிழகத்தில் பரவலாக இல்லை என்பதனால் ஒருங்கிணைப்பாளர் தேவை என முடிவெடுத்திருந்தோம். ஒன்றரை மணிநேரம் இரு ஆசிரியர்களுக்கு. அந்தச் சிறுபொழுதில் அவர்களின் ஆளுமை அரங்கில் வெளிப்படவேண்டும். அதற்கு பலகோணங்களிலான கேள்விகள் தேவை. அவர்கள் நன்றாகப் பதிலளிக்கவேண்டுமானால் கேள்விகள் சுருக்கமாக அமையவேண்டும். அந்த நேரம் முழுமையாக அவ்விருவருக்கும் அளிக்கப்படவேண்டும். அதை ஒருங்கிணைப்பாளர் கவனிக்கவேண்டும் என முடிவுசெய்திருந்தோம்.

நான் சென்றமுறை அதிகமாக விவாதங்களில் பங்கெடுக்கவில்லை. இம்முறை இந்தப்புதிய அமர்வை அதன் இயல்பில் நடத்தவேண்டியிருந்தமையால் அரங்குகள் அனைத்திலும் முழுமையாகவே இருந்தேன். என் பணிகளாக மூன்று விஷயங்களை வகுத்துக்கொண்டேன். ஆசிரியரைச் சந்தித்தலின் பிரச்சினைகளில் தலையாயது ஒரே விஷயம் மட்டும் அதிகநேரம் பேசப்படுவது. இரண்டாவது சில தளங்கள் தொடப்படாமலேயே சென்றுவிடுவது. இரண்டையும் தவிர்ப்பதற்காகவே என் வினாக்களை அமைத்துக்கொண்டேன். உதாரணமாக போகன் ஆவிகள் உலகம் போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். அது அவர் ஆளுமையில் ஒரு பகுதி. அதை நான் கேட்காவிடில் அவர் சொல்லியிருக்கமாட்டார். கவிஞர் வெய்யிலின் பெயர் தென்தமிழ்நாட்டின் வெயிலுகந்தஅம்மன் பெயரிலிருந்து அமைந்தது. இதைப்போல கேள்விகளைக் கேட்டு அவர்களைப் பேசவிட்டேன். ஆனால் எந்த பதிலிலும் என் தரப்பாக, என் விமர்சனமாக, எதையுமே சொல்லவில்லை. ஏனென்றால் இது என் அவை அல்ல. இயல்பாக மூன்றாவதாக ஒரு பணியும் வந்தது. பல இளம்வாசகர்கள் கூரிய கேள்விகளைக் கேட்டனர். ஆனால் சரியாக சொல்லமைக்கவில்லை. ஆகவே அக்கேள்வி உரிய மறுமொழி பெறவில்லை. அக்கேள்விகளை மேலும் கூர்மையாக்கி நான் கேட்கவேண்டியிருந்தது

விஜயராகவன்

 

நான் எண்ணியிருந்ததற்கு மாறாக இளம் எழுத்தாளர்கள் நால்வருமே திடமாகவும் தன்னம்பிக்கையுடனும் கூட்டத்தை எதிர்கொண்டார்கள். அவர்களின் படைப்புகளிலிருந்து நிறையக்கேள்விகள் எழுந்து வந்தன. கூடவே தமிழின் இன்றைய ஊடகச்சூழலை அவர்கள் எதிர்கொள்ளும் முறை, அவர்களின் வாழ்க்கைநோக்கு சார்ந்த கேள்விகளும் எழுந்தன. வெவ்வேறு வகைக்கேள்விகள் தொடர்ச்சியாக எழும்போது மனதை மாற்றிமாற்றிப் பதில்சொல்வது ஒரு பெரிய கலை. அதை இவர்கள் எதிர்கொண்டது நிறைவளித்தது. பொதுவாக ஐம்பதுபேர் வரை கொண்ட கூட்டம் ஒரு குழு. முந்நூறுபேர் என்றால் அது திரள். குழுவுக்கு கொஞ்சம் மனிதாபிமானம் எல்லாம் உண்டு. திரள் ஒருவகையில் இரக்கமற்றது. நாம் யார் , எதுவரை என அது திட்டவட்டமாகவே காட்டிவிடும். அதை நால்வருமே வென்றார்கள் என்பதை பின்னர் எதிர்வினைகளிலிருந்து தெரிந்துகொண்டேன். அவர்களுக்கும் அந்த வெற்றி தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது என அடுத்தடுத்த நாட்களின் அவர்களின் மனநிலை காட்டியது.

போகன்,வெயில்,அபிலாஷ் மூவரின் அரங்குகளும் வெவ்வேறுவகையில் சுவாரசியமாக அமைந்திருந்தன. எழுத்துக்களினூடாக நாமறிந்த ஓர் எழுத்தாளரை நேரில்பார்க்கும் அனுபவம் என்பது முற்றிலும் வேறு. இவர்களில் முதலிருவரும் முகநூல்வழியாக பிரபலமானவர்கள். முகநூலுக்கு அப்பால் போகனின் ஈடுபாடுகள் மேலும் விரிவானது என தெரிந்தது என வாசகர்கள் சொன்னார்கள். வெயிலின் உரையாடலும் நேர்மையான தீவிரமான வெளிப்பாடாக அமைந்தது. பொதுவாக மூவருமே வெளிப்படையாக திரளை எதிர்கொண்டார்கள். வெய்யில் அரங்கை ஏ.வி.மணிகண்டனும் அபிலாஷின் அரங்கை சிறில் அலெக்ஸும் நடத்தினர்.

மலேசிய இலக்கிய அரங்குக்கு நவீன்தான் மையம் என்று சொல்லவேண்டும். ஷண்முகசிவா, சுவாமி பிரம்மானந்தா இருவரும் அவருடைய ஆசிரியர்கள். தயாஜி, விஜயலட்சுமி இருவரும் அவருடைய மாணவர்கள்போல. நவீன் எப்போதுமே தீவிரமும் கூர்மையும் கொண்டவர். அரங்கில் மிகத்தீவிரமான செல்வாக்கை உருவாக்கிய ஆளுமையும் அவருடையதே. இலக்கியத்தை, கருத்தியல்வாழ்க்கையை முழுத்தீவிரத்துடன் எடுத்துக்கொண்டு அதன்பொருட்டு எதையும் துறக்கச் சித்தமாக இருக்கும் அவருடைய இயல்பும், அவருடைய விரிவான இலக்கியவரலாற்று ஞானமும் இளைஞர்கள் பலரை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது என தெரிந்தது. மலேசிய இலக்கியத்தின் இயல்பு குறித்த ஒரு கேள்விக்கு ‘மலேசிய இலக்கியத்தில் எது முன்னிறுத்தப்படுகிறதோ அதை வாசித்துவிட்டு நீங்கள் கருத்து சொல்லக்கூடாது. அங்கும் இங்குபோலவே உண்மையான கலைஞர்களின் குரல் வெளியே கேட்பதில்லை’ என அவர் கூர்மையாக விடையளித்தார். அரங்கை கடலூர் சீனு வழிநடத்தினார்.

 

அந்தியில் இலக்கிய வினாடிவினா. ஒருவகை உற்சாகமான விளையாட்டுதான் அது. சென்றமுறை செய்துபார்த்தோம். மிகச்சிறந்த அனுபவமாக அமைந்தமையால் இம்முறை விரிவாக்கினோம். தொழில்முறை வினாடிவினா நிபுணரான செந்தில் அதை நடத்தினார். எழுத்தாளர்கள் அந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தால் தங்கள் வாசகர்கள் முன் தாங்கள் எத்தனை சிறியவர்கள் என அறிந்திருப்பார்கள். சென்றமுறையே சிக்கலான, அரிய கேள்விகளுக்குக்கூட பதில் வந்தது. ஆகவே இம்முறை மேலும் தந்திரமாகக் கேள்விகளை செந்தில் ஒருங்கிணைத்திருந்தார். உதாரணமாக டிஸ்கவரி ஆஃப் இண்டியாவின் முதல்வரியைச் சொல்லி எந்த நூல் என்ற கேள்வி. அது ஒரு நாவலின் தொடக்கவரியாகவே தெரியும். மோகமுள்ளின் ஒருவரியைச் சொல்லி அது எந்த வரி என்று கேட்டார். அது மோகமுள்ளின் ‘முத்திரைகள்’ எதுவும் இல்லாத வரி. ஆனால் இம்முறையும் அத்தனை கேள்விகளும் பதிலளிக்கப்பட்டன. எனக்கு எட்டு கேள்விகளுக்கு மட்டுமே விடைதெரிந்திருந்தது. பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில்நாடன் இருவருமே பரவசமடைந்துவிட்டனர்

இலக்கியவினாடிவினாவை பிற இலக்கியக்கூடுகைகளிலும் நடத்தலாமென நினைக்கிறேன். ஏப்ரலில் ஊட்டியில் அடுத்த காவியமுகாம் நிகழும்போது குறிப்பிட்ட தலைப்புக்களில் வினாடிவினா நடத்தலாம். அல்லது அங்கே பேசப்பட்டதை ஒட்டியேகூட இலக்கியவினாடிவினா நடத்தலாம். நவீன இலக்கியம், ஆங்கில இலக்கியம் சார்ந்த வினாடிவினாக்களை கல்லூரிகளில்கூட நடத்தலாம் [[email protected] ]

பி.ஏ.கிருஷ்ணன் என்னிடம் “ஒரு கேள்வி வந்ததுமே பத்துபுத்தகம் நம் மூளைவழியாகக் கடந்துபோகுது. அந்த ஞாபகப்படுத்திக்கொள்ளல்தான் பெரிய பரவசம்” என்றார். அதுதான் வினாடிவிடையின் பெரிய இன்பம். ஒன் ஃப்ளு ஓவர் த குக்கூஸ் நெஸ்ட், லோலிதா, டாக்டர் ஷிவாகோ என விதவிதமான பெரும்படைப்புகளை வரிசையாக எண்ணிக்கொண்டே செல்வது.

ஜான் சுந்தர் பாடல்

 

வழக்கமாகவே உணவை சிறப்பாக ஏற்பாடு செய்வோம். இம்முறை இன்னும் பெரிதாக. பலருக்கும் மிக செலவேறிய விருந்துணவு என்னும் எண்ணம் வந்திருக்கும். ‘கையேந்திபவன் விலைதான் சார்” என்று உணவு முழுமைக்கும் பொறுப்பேற்றுக்கொண்ட விஜய்சூரியன் சொன்னார். அவருடைய தனிப்பட்டத் தொடர்பால் அமைந்தது அவ்வாய்ப்பு – ஏனென்றால் அவ்வாறு பல ஆர்டர்களை ஆண்டுமுழுக்க கொடுக்கும் நிலையில் தொழில்புரிபவர் அவர். மொத்தமாக இந்த விழாவை இதற்கு இருமடங்கு செலவில்லாமல் எவரும் நடத்தமுடியாது. ராம்குமார் ஐ.ஏ.எஸ், செந்தில் ஆகியோரின் தனிப்பட்ட செல்வாக்குகள்தான் அனைத்தையும் குறைந்த விலையில் கிடைக்கவைத்தன. விமானம், ரயில் கட்டணங்களையும் இவ்வாறு இவர்கள் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கால் குறைத்து பெற்றுத்தரவேண்டும் என விரும்புகிறோம்

இவ்விழாவில் முக்கியமான அம்சமாக எப்போதுமிருப்பது விழா முடிந்தபின் நிகழும் நீண்ட உரையாடல்கள். அதை முழுக்கமுழுக்க தன்னிச்சையாக விட்டுவிடுவது வழக்கம். எப்போதும் தேவதேவனைச்சூழ்ந்து ஓரு பத்துபேர் இருப்பார்கள். பாவண்ணனைச் சுற்றி கொஞ்சம்பேர். இளம்வாசகர்கள் ஒரு கூட்டமாக விடியவிடிய உரையாடியதாகக் கேள்விப்பட்டேன். என் அறையில் முப்பதுபேர் கூடினோம். பெரும்பாலும் நையாண்டி வேடிக்கை. கூடவே இலக்கியம், வரலாறு என நீண்ட உரையாடல். நடுவே ஒரு சின்ன இலக்கிய- பண்பாட்டு வினாடிவினாவும் நடத்தினோம். பதில் சொன்னவர்களுக்கு சரவணன் சந்திரன் கொண்டுவந்த கொய்யாப்பழங்கள் பரிசு. பரிசே பெறாத ராஜமாணிக்கம் மன்றாடியதன்பேரில் அவருக்கு மட்டும் அன்புக்கொடையாக ஒன்று கொடுக்கப்பட்டது.

செல்வேந்திரன்

அரட்டை முடிய இரவு இரண்டுமணி. படுத்து தூங்கி காலை ஐந்து மணிக்கே எழுந்துகொண்டு பெரிய ஊர்வலமாக ஐம்பதுபேர் டீ குடிக்கச்சென்றோம். ஐம்பதுபேருக்குமேல் டீ என்றால் பணம்கொடுக்கவேண்டிய தார்மீகக்கடமை கொண்ட கோபி ராமமூர்த்தி கொஞ்சம் தாமதமாக வந்ததனால் நாங்களே கொடுக்கவேண்டியிருந்தது. எட்டரை மணிவரைக்கும் பேச்சு, விவாதம். இத்தகைய விவாதங்களில் பேச்சு தொட்டுத்தொட்டுச்செல்வது குறை. ஆனால் புதிய சில திறப்புகள் நிகழுமென்பது நல்ல விஷயம்.

நண்பர்கள் தங்குவதற்கு ராஜஸ்தானி அரங்கில் 20 அறைகள் இருந்தன. அவற்றில் உபரிப் படுக்கைகளுடன் 60 பேர் தங்கலாம். டாக்டர் பங்களா என்ற ஒன்று அருகே ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அங்கே நூறுபேர். மொத்தம் 170 பேர் தங்கினர். சிறப்புவிருந்தினருக்கு  ஃபார்ச்சூன் ரிசார்ட்ஸ் விடுதியில் அறைகள் போடப்பட்டிருந்தன. முதல்நாள் மதியம் 350 பேர் உணவருந்தினர். மொத்தம் ஆறுவேளை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். கிட்டத்தட்ட ஒர் இரண்டுநாள் கல்யாணம்

 

சுருதி தொலைக்காட்சியின் கபிலன் தன் தனிமுயற்சியில் ஒளிப்பதிவாளர்களை அனுப்பி நிகழ்ச்சியை முழுமையாகவே பதிவுசெய்தார். இம்முறை கூடவே ஒரு ‘நிகழ்வுப்பதிவாளரை’யும் அனுப்பியிருந்தார். மிகவிரைவிலேயே நன்கு படத்தொகுப்பு செய்யப்பட்ட காணொளிகள் வலையேற்றமும் செய்யப்பட்டன. அவருக்கு வாசகர்கள் நன்றிசொல்லவேண்டும்.

ஞாயிறன்று ஒன்பதுமணிக்கு முதல் அமர்வு பி.ஏ.கிருஷ்ணன். அவருடைய புனைவுலகம் குறித்தும், ஓவியங்கள் பற்றிய அவருடைய கருத்துக்கள் குறித்தும் விவாதம். முந்தையநாள் சில இளைஞர்கள் என்னிடம் ஃபேஸ்புக் விவாதங்களின் தொடர்ச்சி நிகழ்ந்துவிடக்கூடாது என அஞ்சியதாகவும், நிகழாததனால் ஆறுதல் என்றும் சொன்னார்கள். ஃபேஸ்புக் மீதான சலிப்பு 25 வயதுக்குக்குறைவான பெரும்பாலானவர்களிடம் இருப்பதை தொடர்ந்து பார்த்துவருகிறேன். அது தனிமைகொண்ட நடுவயதினரின் ஊடகம் என நினைக்கிறார்கள். ஆகவே ஃபேஸ்புக்கில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதிவரும் அரசியல்,சமூகவியல் சார்ந்த எந்தவிவாதமும் இங்கே நிகழாமல் பார்த்துக்கொண்டோம்

 

ராஜகோபாலன்

 

முன்னரே, இவ்வரங்கில் அரசியல், சினிமா, விளையாட்டு,சமகால நிகழ்வுகள் போன்றவற்றை முற்றாகத் தவிர்க்க திட்டமிட்டிருந்தோம். ஏனென்றால் வருடத்தில் முழுநாட்களும் தமிழகத்தில் அவை மட்டுமே பேசப்படுகின்றன. இரண்டுநாளாவது இலக்கியம் பேசத்தான் இவ்வரங்கு இத்தனை உழைப்பில் கூட்டப்படுகிறது. அந்த தலைப்புகளில் ஒருசிலவரி பேசப்பட்டாலும் மொத்தவிவாதமும் இலக்கியத்தை விட்டு முழுமையாக விலகிச்சென்றுவிடுமென்பது தமிழ்ச்சூழலின் இயல்பு. இங்கே அத்தனை அரங்குகளும் அன்றாட அரசியல்,சினிமா சார்ந்த அரட்டைகளால் கடத்திச்செல்லப்படுகின்றன என்பதே நிதர்சனம். ஆனால் எங்களை மீறி பி.ஏ.கிருஷ்ணன் அரங்கு கொஞ்சம் மருத்துவவிவாதமாக ஆகியது. அதை நான் ஓவியம்நோக்கித் திருப்பவேண்டியிருந்தது. அரங்கை ஈரோடு கிருஷ்ணன் வழிநடத்தினார்

சுனீல் கிருஷ்ணன்

 

சீ.முத்துசாமியின் அரங்கு சென்னை நண்பரும் இளம் எழுத்தாளருமான காளிப்பிரசாத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. முத்துசாமியின் பின்புலம், அவருடைய வாழ்க்கைப்பயணம், அவருடைய இலக்கியக் கொள்கைகள் என வெவ்வேறு கோணங்களில் கேள்விகள். முத்துசாமி சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். முத்துசாமியின் படைப்புகளை வாசித்து அவற்றிலிருந்து கேள்விகளை காளிப்பிரசாத்தே முன்னெடுத்தார்.  பொதுவாக அரங்கை வழிநடத்தியவர்களே முதன்மையான கேள்விகளையும் கேட்டனர். அவ்வெழுத்தாளர்களை ஏறத்தாழ முழுமையாக வாசித்தவர்களே அரங்கை நடத்தினர்.

ஒவ்வொரு அரங்கிலும் முன்னிறுத்தப்பட்ட எழுத்தாளர்களை மூத்த எழுத்தாளர்கள் கௌரவித்தனர். இதுவும் ஒரு தொடர்ச்சியை உருவகிப்பதற்கான குறியீட்டுநிகழ்வே. முதல் அரங்கில் பாவண்ணன் தூயனுக்கும் அசோக்குமாருக்கும் பரிசுகள் வழங்கி, பாராட்டி கௌரவித்தார். பாவண்ணனை நண்பர் யோகேஸ்வரன் ராமநாதன் கௌரவித்தார்.  ஆர்.அபிலாஷை கவிஞர் க.மோகனரங்கன் கௌரவிக்க மோகனரங்கனை நண்பர் விஜய்சூரியன் கௌரவித்தார். சுரேஷ் பிரதீப்பையும் விஷால்ராஜாவையும் கவிஞர் லக்‌ஷ்மி மணிவண்ணன் கௌரவிக்க அவரை நண்பர் ஏ.வி.மணிகண்டன் கௌரவித்தார். போகனை நாஞ்சில்நாடன் கௌரவித்தார். கவிஞர் வெய்யிலை தேவதேவன் கௌரவித்தார்.

மலேசிய எழுத்தாளர்களின் அரங்கில் டைனமிக் நடராஜன் எழுத்தாளர்களைக் கௌரவித்தார். மறுநாள் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களை இயககோ சுப்ரமணியம் அவர்களும், சீ.முத்துசாமியை பாவண்ணன்,சு.வேணுகோபால் இருவரும் கௌரவித்தார்கள்.  ஜனிஸ் பரியத்தை பிரியம்வதாவும், வெண்பா கீதாயனும் கௌரவித்தனர். இத்தகைய சிறிய செயல்கள் அனைவரும் பங்கெடுத்த உணர்வை உருவாக்குகின்றன. விழா என்பது சிறிய கொண்டாட்டங்களின் தொகுப்புதான்.

பி ஏ கிருஷ்ணன்

 

ஜெனிஸ் பரியத் அரங்கு இறுதியாக. அதற்கு முன் மேகாலயா குறித்த ஒரு சித்திரத்தை ராம்குமார் அளித்தார். மேகாலயாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணிபுரிகிறார். மேகாலயாமேல் பெரும் மோகம் கொண்டவர், அந்நிலத்திற்கு பல முக்கியமான வளர்ச்சிப்பணிகளைச் செய்தவர் என அறியப்படுபவர் ராம்குமார். மேகாலயா சீனப்பெருநிலத்திலிருந்து குடியேறிய காஸி,காரோ எனும் இரு முதன்மை பழங்குடிகளினால் ஆனது. மேகாலயாவின் மொழிகள் காசி,காரோ. அவை ஆங்கில லிபியில் எழுதப்படுகின்றன. ஆகவே மேகாலயாவின் மையமொழி ஆங்கிலம்தான். மேகாலய எழுத்தாளர்கள் ஆங்கிலம் வழி பிரபலமாக இருக்கிறார்கள். ஜெனிஸ் பரியத் ஆங்கிலத்தில் எழுதும் மேகாலய எழுத்தாளர்

நவீன்

 

ஜெனிஸ் பரியத்தின் சந்திப்பு நிகழ்ச்சி இவ்விருநாட்களில் நிகழ்ந்தவற்றுக்கு மகுடம். சென்றமுறை எச்.எஸ்.சிவப்பிரகாஷ் அவருடைய நிமிர்வான, தூக்கிவீசும் தன்மைகொண்ட கருத்துக்களால் மிகப்பெரிய ஒரு அதிர்வை உருவாக்கினார். இம்முறை ஜெனிஸ் மென்மையான கூரிய அணுகுமுறையால் அதேபோன்ற அதிர்வை உருவாக்கினார். அவருடைய புனைவுகள் சார்ந்து பல நுட்பமான கேள்விகள் எழுப்பப் பட்டன. உதாரணமாக, ஆணிடம் பெண்கொள்ளும் உணர்வுகள் தாய்வழிச் சமூக அமைப்புகொண்ட மேகாலயாவில் தந்தைவழிச்சமூகத்தைப்போலத்தான் இருக்குமா என்னும் கேள்வி. ஜெனிஸின் கதைமாந்தர் உயர்குடியினர், அவர்களால் மேகாலயாவின் யதார்த்தத்தை பிரதிபலிக்கமுடியுமா என்னும் கேள்வி.ஜெனிஸ் பேராசிரியர் என்பதனால் தெளிவான மொழியில் தயக்கமில்லாமல் பதிலளித்தார். மேகாலயாவின் நாட்டாரியல் தொன்மவுலகையும் உணர்வுகளையும் நவீன இலக்கியமாக ஆக்குவதைப்பற்றிச் சொன்னார்.

இந்திய அளவில் நிகழும் புகழ்பெற்ற பல இலக்கியவிழாக்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்கே ஒரு சிக்கல் உண்டு. ஐந்துநாள் விழா என்றால் ஒருநாளுக்கு ஐந்து அரங்குகள் என இருபத்தைந்துபேரைத்தான் கூடிப்போனால் அழைக்கமுடியும். ஆனால் இருநூற்றைம்பதுபேரை அழைப்பார்கள். ஏனென்றால் அவர்கள்தான் அரங்கினரும். ஆகவே பேனல் டிஸ்கஷன் என்ற பேரில் ஆறுபேர் ஏழுபேராக அமரச்செய்வார்கள். ஒருவர் வழிநடத்துவார். அவரே ஐந்துநிமிடம் பேசுவார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்துநிமிடம் பேசக்கிடைக்கும். எழுத்தாளர்கள் இன்னொருவர் பேசக்கேட்காதவர்கள் என்பதனால் அரங்கில் 15 பேர் இருப்பார்கள். அவர்களும் அடுத்த அமர்வுக்கானவர்கள். அது ஒருவகைச் சடங்கு. அந்த முகம் உள்ளூர் இதழ்களிலும் பிறவற்றிலும் அச்சாகும், அது நூல்விற்பனைக்கான ஒர் உத்தி. ஜெனிஸ் அத்தகைய அமர்வுகளிலேயே அதிகமும் பங்கெடுத்திருக்கிறார். கோவை அரங்கில் அத்தனை திரளான வாசகர்கள், அத்தனை தீவிரமான கேள்விகள் அவரை மகிழ்வித்தன. திரும்பத்திரும்ப அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார்

 

டைனமிக் நடராஜன்

 

மதியம் 1.30க்கு அமர்வுகள் முடிந்தன.  மாலை ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி. இடைப்பட்ட நேரம் வாசகர்கள் எழுத்தாளர்களைச் சந்திப்பதற்கானது. பிடித்த எழுத்தாளர்களைச் சூழ்ந்து நின்று பேசிக்கொண்டிருந்த பல குழுக்களைப்பார்த்தேன். நின்றுகொண்டே இருக்கிறார்களே என தோன்றியது, ஆனால் ஒன்றும் செய்யமுடியாது. அதையும் ஒரு சிறப்பாக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். என் அறைக்குச் சென்றேன், முப்பதுபேர் உடன் வந்தனர். பேசிக்கொண்டிருந்துவிட்டு நாலரை மணிக்கு டீ குடிக்க மீண்டும் ஊர்வலமாகச் சென்றோம். சும்மா சென்றதற்கு ஏதாவது கோஷம்போட்டுக்கொண்டே சென்றிருக்கலாமென ஒருவர் கருத்துதெரிவித்தார்

ஐந்து நாற்பதுக்கு அரங்குக்குள் நிறையத் தொடங்கினோம். சேலம் நண்பர் பிரசாத் எனக்கு இரண்டு சட்டைகள் வாங்கிவந்திருந்தார். அதில் ஒன்றைப் போட்டுக்கொண்டேன், என் சட்டைகளில் பரவலாகப் பாராட்டுவாங்கிய சட்டை அது என இரவுக்குள் வந்த குறுஞ்செய்திகள் தெரிவித்தன. அரங்கு நிறையத் தொடங்கியது. மேலும் மேலும் நாற்காலிகள் போட்டுக்கொண்டே சென்றோம். கோவை ஞானி வந்திருந்தார். நண்பர் செந்தமிழ்த்தேனியிடம் கார் அனுப்பி கூட்டிவந்தோம். வண்ணதாசன் வந்திருந்தார். புவியரசு இம்முறை வரவில்லை என்பது ஒரு குறை.

 

நரேன்

 

கோவையின் விழாவாக இது அமையவேண்டுமென்பது எங்கள் விருப்பம். ஆகவே இலக்கிய, பண்பாட்டு நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட முக்கியமானவர்கள் அனைவரையும் அழைத்திருந்தோம். வானவராயர், டி.பாலசுந்தரம், சௌந்தரராஜன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், இயக்காகோ சுப்ரமணியம் என கோவையின் முதன்மை முகங்கள் வந்திருந்தனர். மேடைகளில் அனைவரும் சிறிதளவேனும் பங்களிப்பை ஆற்றவேண்டுமென்பது எங்கள் திட்டம். ஏனென்றால் இது ஊர்கூடி அளிக்கும் பரிசு என தெரியவேண்டும். ஆகவே சிறிய நிகழ்ச்சிகள் பலவற்றின் தொகுப்பாக மேடைநிகழ்வை வடிவமைத்திருந்தோம்.

வழக்கம்போல செல்வேந்திரன் தொகுத்துவழங்கினார். சீ.முத்துசாமிபற்றி நவீன் எடுத்த ஆவணப்படத்தின் 15 நிமிடவெட்டுக்காட்சி ஒளிபரப்பப் பட்டது. [முழுவடிவம் விரைவில் யூடியூபில் வெளிவரும்] அதன்பின் அனைவரும் மேடையேறினர். செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். கே.வி.அரங்கசாமி அமைப்பாளர் குறிப்பை வாசித்தார்.  பி.ஏ.கிருஷ்ணனை சுனில்கிருஷ்ணன் அறிமுகம் செய்தார். ஜெனிஸ் பரியத்தை விஜயராகவன் அறிமுகம் செய்தார். ஒவ்வொருவரையும் கௌரவிக்க தனித்தனி நண்பர்களை மேடைக்கு அழைத்தோம். அத்தனை நண்பர்களின் விழாவாக அரங்கம் மாறியது

நண்பர் கண்ணனின் மகள் மகிழ்மலர் ஓர் அரிய பாடகி. அவர் ஓர் இலட்சியவாத வாழ்க்கை வாழ்பவர். கோவை அருகே சொந்த ஊரில் இயற்கைவேளாண்மை செய்கிறார். மகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே கற்பிக்கிறார். மகிழ்மதி தேவாரப்பாடல்களை பாடினார்.சொந்த ரயில்காரி என்னும் கவிதத்தொகுதியின் ஆசிரியரும் பாடகருமான ஜான் சுந்தர் பாரதிதாசனின் ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே என்று சங்கே முழங்கு’ பாடலை இசையமைத்து தன் மகள் மற்றும் மகனுடன் மேடையில் பாடினார். விருதை டைனமிக் நடராஜன் வாசித்து அளித்தார்

 

 

திருமதி சீ.முத்துசாமியை பிரியம்வதாவும் ஜெனிஸ் பரியத்தை மீனாம்பிகையும் கௌரவித்தனர். நவீனை நண்பர் சௌந்தர் கௌரவித்தார். ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன் ஆவணப்படத்தை தேவதேவன் வெளியிட பாவண்ணன் பெற்றுக்கொண்டார். சீ முத்துசாமி, மலேசிய இலக்கியமுன்னோடி நூலை வண்ணதாசன் வெளியிட நாஞ்சில்நாடன் பெற்றுக்கொண்டார். அதன்பின் விருதை பி.ஏ.கிருஷ்ணனும் ஜெனிஸ் பரியத்தும் சேர்ந்து சீ.முத்துசாமிக்கு வழங்கினர். அவர்களின் உரைகள் காணொளிப்பதிவாக உள்ளன.விழா முடிந்து நரேன் நன்றி சொன்னார். இவ்வரங்கின் விருந்தினர் ஒருங்கிணைப்புக்கு மற்றவர்கள்தான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

வழக்கம்போல விழாமுடிவின் சந்திப்புகள், புகைப்படங்கள், சிரிப்புகள். தூக்கம் தொலைத்து இரண்டுநாட்களாயின. ஆனாலும் உள்ளம் அடங்கவில்லை.அன்றிரவு பாதிப்பேர்தான் கிளம்பினார்கள். எஞ்சியோர் அன்றும் தங்கி அரட்டையடித்தோம். அன்று தூங்க விடிகாலை மூன்றுமணி ஆகியது. மறுநாள் காலை ஆறுமணிக்கே ராஜஸ்தானிசங்க அரங்கை காலிசெய்யவேண்டும். ஆகவே ஏழுமணிக்கு காலிசெய்து டாக்டர் பங்களா சென்றோம். அங்கே அமர்ந்து மீண்டும் அரட்டை, இலக்கியவிவாதம். உண்மையில் அதன்பின்னர்தான் மேலும் தீவிரமான விவாதம் நடந்தது. அந்த பங்களாவை மூன்றுமணிக்கு காலிசெய்யவேண்டும். ஆகவே எஞ்சியவர்களை வலுக்கட்டாயமாக ஊருக்கு அனுப்பிவிட்டு பதினைந்துபேர் மட்டும் விடுதிக்குச் சென்றோம். ஆறேமுக்கால் மணிவரை அங்கே பேசிக்கொண்டிருந்தோம். ஏழரைக்கு எனக்கு ரயில். நானும் போகனும் தேவதேவனும் அவருடன் வந்த மாணவி லக்‌ஷ்மியும் ஷாகுல் ஹமீதும் நாகர்கோயில் ரயிலில் ஏறிக்கொண்டோம். மேலும் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குத்தான் தூங்கினேன். மிகநீளமான ஒரே பகல் முடிந்து தூங்குவதுபோலிருந்தது.

இந்த விருதுக்காக நான் முதன்மையாக நன்றிதெரிவிக்க வேண்டியவர்கள் இதற்கு நிதியளித்தவர்கள். நான் கோரியதற்கேற்ப உலகமெங்கணுமிருந்து நண்பர்கள் நிதியளித்தனர். இவ்விழாவை ஒருமுறைகூட பார்த்திராதவர்கள் அவர்களில் உண்டு. கோவையில் நிகழ்ந்த, கோவையின் பெருமிதமாக இன்று மாறிவிட்ட இவ்விழாவுக்கு உண்மையில் கோவையின் பங்களிப்பு குறைவே. சென்ற எட்டாண்டுகளாக எங்கள் அமைப்பைத் தாங்கிவரும் நண்பர்கள் உண்டு. இவ்வாண்டு நிதியளித்த நண்பர்கள் பலர் உருவாகிவந்திருக்கின்றனர். அனைவரையும் பணிந்து நன்றிசொல்கிறேன்.

விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்

விஷ்ணுபுரம் விருது 2017 புகைப்படங்கள்

மேலும் புகைப்படங்கள்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5