விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3

s

விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்

 

அன்புடன் ஆசிரியருக்கு

 

விஷ்ணுபுரம் விழாவிற்கு சென்றமுறை வருகையில் பயணத்தின் போதிருந்த தயக்கம் இம்முறை பதற்றமாக மாறியிருந்தது. காந்திபுரத்திற்கு சனிக்கிழமை காலை மூன்று மணிக்கெல்லாம் வந்திறங்கிய போது அந்த பதற்றம் விடைபெற்றுக் கொண்டிருப்பதை இப்போது உணர்கிறேன். கூகுள் நேவிகேஷன் துணையுடன் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ராஜஸ்தானி சங்கம் கட்டிடத்திற்கு நடந்தே வந்துவிடலாம் என முடிவு செய்து கொண்டேன். அந்த செயலி சாத்தியமான குறைந்த தூரத்தைக் காட்டியிருக்கிறது (shortest possible distance). அகன்ற சில இடங்களில் இடுங்கலான சாலைகள் கொண்ட தெருக்களின் வழியே நடந்தவர வேண்டியிருந்தது. அப்படி முழுதாக அடங்கியிருக்கும் தெருவில் நடப்பது முன்பின்னறியாத ஒருவர் வீட்டில் ஆளில்லாத போது அமர்ந்திருக்க நேர்வது போன்றதொரு உணர்வைத் தந்தது. உறங்கிக் கிடந்த மௌனமான குடியிருப்புத் தெருக்களில் நடப்பதற்கு சற்று பயமாகவும் இருந்தது. மூன்று இடங்களில் குரைத்தாலும் நாய்கள் நெருங்கி வரவில்லை.

 

கிறிஸ்டி
கிறிஸ்டி

ராஜஸ்தானி சங்கம் பூட்டிக் கிடந்தது. அலைபேசியில் அழைத்த மறுநொடி சீனு அண்ணன் உற்சாகத்துடன் வந்து வாயிற்கதவை திறந்ததுமே பேச்சுகள் தொடங்கிவிட்டன. அப்போது நான்கு மணி. நன்கு உறங்கி எழ வேண்டும் என்ற எண்ணம் அவரைப் பார்த்ததுமே நீங்கிவிட்டது. சுனில் கிருஷ்ணன் சற்று நேரத்துக்கெல்லாம் வந்துவிட்டார். ம.நவீன் எங்களுக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்தார். கே.ஜே.அசோக்குமார் தூயன் ஆகியோர் விடிந்த பிறகே வந்தனர். விஷாலையும் அரங்கில் தான் சந்தித்தேன். ம.நவீனுடனான காலை உரையாடல்கள் மலேசிய இலக்கியம் குறித்த தெளிவான சித்திரத்தை அளித்தன. இவ்வாண்டில் நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர் நவீன் தான் என நினைக்கிறேன். புதியவர்களிடம் பேசும் தயக்கங்கள் ஏதுமின்றி உரையாடினார். பொதுவான மலேசிய  இலக்கியச் சூழல் வாசிக்கப்படும் நூல்கள் புனைவிலக்கியம் அல்லாது அபுனைவுகளுக்கென நடைபெறும் செயல்பாடுகள் குறித்துப் பேசினோம். நவீன் இனிவரும் நிகழ்வுகளிலும் பங்கேற்க வேண்டுமென நண்பனாக விழைகிறேன். வல்லினம் 100 (நூறு வல்லினம் இதழ்களின் தொகுப்பு) நூலினை எனக்குப் பரிசாக அளித்திருக்கிறார். அதை அவர் எனக்குக் கொடுத்த அன்பான  அங்கீகாரமாகவே எண்ணுகிறேன். நவீனிடம் நான் சொல்ல விழைவது அவர் மற்றும் அவரது சக படைப்பாளிகளை வாசிக்க விமர்சிக்க இங்கொரு வாசகர் குழு உருவாகி இருக்கிறது என்பதையே.

அவரிடம் ஒரு நிதானமான (அதிகம் கோபப்பட்டதால் வந்திருக்கலாம்) அணுகுமுறை தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்டது போல அபூர்வமாக மட்டுமே நிகழக்கூடிய ஆளுமை நவீன்.

 

காலை உணவின்போதே பகடிகளும் விவாதங்களும் தொடங்கிவிட்டன. இம்முறையும் உங்களுடனான முதல் கைக்குலுக்கலை கணேஷ் சரியாக படம் பிடித்திருந்தார்.

 

அருட்செல்வப்பேரரசன்
அருட்செல்வப்பேரரசன்

முதலரங்கில் கே.ஜே. அசோக்குமார் மற்றும் தூயன் பங்கு கொண்டனர். முதல்முறை எதிர்கொள்ளவதால் சிலத் தயக்கங்களும் அதேநேரம் புதிய எழுத்தாளர்கள்  என்பதால் அடுத்தடுத்த முயற்சிகள் எவ்வகையிலானதாக இருக்கும் என்பது குறித்து அறியும் கேள்வியாளர்களின் ஆர்வமும் அரங்கில் வெளிப்பட்டது. அதிகமாக இருண்மை மற்றும் அகவுலகச் சித்தரிப்பு குறித்த கேள்விகள் வழியாக  அரங்கு சென்றது. இரண்டு எழுத்தாளர்களுமே பதற்றமின்றி நிதானமாக பதிலளித்தனர். அபிலாஷுடனான அரங்கு ஒரு மனக்கலைவினை உண்டு பண்ணியது. இலக்கியத்தின் மீதான அவரது நோக்குக்கு எதிர்திசையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டேன். ஆனால் எழுதி எழுதி கைபழக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டது மகிழ்வளித்தது.

 

விஷாலும் நானும் பங்கேற்ற அரங்கை ஏ.வி.மணிகண்டன் ஒருங்கமைத்தது நிறைவுடன் உணரச் செய்தது. தளத்தில் வெளியாகியிருக்கும் அவரது கட்டுரைகள் மிக மிக முக்கியமானவை. தனியே உரையாடத் திட்டமிட்டிருந்தோம். அமையவில்லை. முதல் கேள்வியே இலக்கியத்தை எவ்வகையான மனநிலையுடன் அணுகுகிறீர்கள் என்கிற ரீதியில் அமைந்தது. இந்த ஒரு கேள்விக்கு மட்டுமே நானும் விஷாலும் ஒரே வகையான பதிலளித்தோம் என நினைக்கிறேன். பின்னர் காட்சி ஊடகங்கள் எழுத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கேள்விகள் உற்சாகம் அளித்தன. அதோடு இந்த இரு நாட்களின் எல்லா அரங்குகளிலும் பங்கு கொண்டு நீங்களும் வினாக்களை எழுப்பியது இலக்கியத்திலிருந்து விவாதம் விலகிச் செல்வதை வெகுவாகக் குறைத்தது என்று நினைக்கிறேன். ” எதிர்மறை அல்லது இருண்மைச் சித்தரிப்புகளில் மட்டுமே உங்களது படைப்பூக்கம் வெளிப்படுகிறது நேர்மறைச் சித்தரிப்புகள் தட்டையாகவே உள்ளன. அது ஏன்?” என்ற உங்களது கேள்வி சிந்திக்க வைத்துவிட்டது. அதற்கு பதிலென ஏதோ உளறினேன் அல்லது மழுப்பினேன்.அந்த ஒரு தருணம் தவிர அமர்வு முழுக்க நிறைவுடன் கடந்தது. இன்னும் அக்கேள்விக்கான விடை தெரியவில்லை. எழுதித்தான் கண்டறிய வேண்டும் போல . கிறிஸ்டி அவர்கள் என்னிடம் கேட்ட தொடர் கேள்வி உங்களை கோபப்படுத்துகிறதோ என அஞ்சினேன். ஆனால் அவையும் நீங்களும் அவற்றை புன்னகையுடனே எதிர்கொண்டீர்கள். விஷாலும் நானும் இருவருக்குமாக எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு எதிர் எதிரான பதில்களையே சொன்னோம் என நினைக்கிறேன்.

te

மதிய உணவுக்கான உணவிடைவேளைக்குப் பிறகு போகனின் அரங்கு. அவரது அரங்கின் போது சமீபத்தில் சுரேஷ்குமார இந்திரஜித்திற்கு நீங்கள் எழுதிய கபாடபுரம் இதழ் ஐந்தில் வெளியான  கடிதத்தில் பயன்படுத்திய மூர்த்த-அமூர்த்த கலை என்ற பிரயோகம் நினைவில் வந்தது. போகன் தன்னை அமூர்த்தத்துக்கு அருகே வைத்துக் கொள்ள விரும்பும் மூர்த்தக் கலைஞன் என்று எண்ணிக் கொண்டேன். வெய்யிலை நானும் அரசியல் கவிஞராகவே எண்ணியிருந்தேன். ஆனால் இவ்வாண்டின் விகடன் நம்பிக்கை விருதினை வெய்யில் பெற்ற பிறகு அவரை கொஞ்சமாக  வாசிக்கத் தொடங்யிருக்கிறேன். மிக இயல்பான அரங்காக அது அமைந்தது. அவ்வரங்கையும். ஏ.வி.மணிகண்டனே ஒருங்கமைத்தது பொருத்தமாக அமைந்தது. அதன்பிறகு மலேசிய வருகையாளர்களுடனான உரையாடல். மலேசிய இலக்கிய மற்றும் சமூகப் போக்குகள் குறித்து அறிந்து கொள்ளும் களமாக அவ்வரங்கு அமைந்தது. ஆனால் அதன் நீளம் அதிகம் என எனக்குப்பட்டது. ஒருவகையில் பேசப்பட்ட விஷயங்கள் மீண்டும் மீண்டும் அவ்வரங்கில் எதிரொலித்தன.

ar

 

இரவுணவுக்குப் பின் வினாடிவினா. ஒரேயொரு கேள்விக்குப் பதில் சொல்லி இரண்டு நூல்களை நாஞ்சில் நாடன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன். கதிரேசன்,ப்ரியம்வதா,மகேஷ் ஆகியோர் எங்கள் குழுவில்  மற்ற கேள்விகளுக்கு பதிலளித்தனர். ஆனால் மொழிபெயர்ப்பு சுற்றில் எம்.ஏ.சுசீலா , டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற பரவலாக அறியப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றி கேட்டதை மட்டும் தவிர்த்திருக்கலாம். அரங்குகள் அளவுக்கே அல்லது அதனினும் கூடுதலாக  இரவு அரட்டையுடன் கூடிய உங்களுடனான உரையாடல் மேலும் செறிவாக அமைந்தது. அறை திரும்பிய பிறகும் அவ்வுரையாடல் குறித்து சுனிலும் விஷாலும் நாகபிரகாஷும் நானும் உரையாடிக் கொண்டிருந்தோம். நீலகண்ட பிரம்மச்சாரி, சுத்தானந்த பாரதி என வாழும் போதே தொன்மத்தன்மை அடைந்து ஆச்சரியம் ஏற்படுத்தியவர்கள் எனத் தொடங்கி வெறும் தொன்மங்களும் ஒற்றை வரி வரலாற்று ஆதரங்கள் கூட இல்லாத நிகழ்வுகளும் மனிதர்களும் சூழலை அடைப்பதாக முடிந்த வாதம் நகைச்சுவையாக இருந்தாலும் சிந்திக்க வைத்தது. ஊடாக நடந்த வினாடி வினாவும் ஆர்மூட்டியது. (நான் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன் மறந்துவிட்டது. கேள்வி இதுதான். ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளை ஒரு தொகுப்பாகவும் சிறுகதைகளை இரண்டு தொகுப்பாகவும் அவர் இறந்த பிறகு மொத்தமாக தொகுத்து ஒரு பதிப்பகம் வெளியிட்டது. அப்பதிப்பகம் எது) உறங்க இரண்டு மணியாகிவிட்டது.

araa

 

ஜனிஸ் பரியேட்டின் எழுத்து முறை குறித்து விவாதித்தபடியே உறங்கிப்போனாம். தமிழில் எழுதப்படும் வழக்கமான சிறுகதைகளை விட அவற்றின் நீளம் அதிகம் (20 முதல் 25 பக்கங்கள்). ஆனால் அக்கதைகளில் உணர்வு ஒருமை சிதைபடவே இல்லை என்கிற ரீதியில் வாதம் சென்றது. நாகபிரகாஷ் ஜனிஸ் பரியேட் அவரது கூறுமுறையும் நடையும் கல்விப் பின்புலத்தால் பயின்று அடைந்தது என வாதிட நானும் விஷாலும் அதை மறுத்து வாதாடினோம். நான் சு.வேணுகோபாலை எண்ணிக் கொண்டேன். அவரது கதைகளின் வடிவத்தை அவரது மொழியை அவரது கல்வி செறிவூட்டுகிறதே அன்றி கட்டுப்படுத்தவில்லை என எண்ணிக் கொண்டேன்.  மறுநாள் நடைபெற்ற ஜனிஸ் பரியேட்டின் அரங்கு நானும் விஷாலும் குறிப்பிட்டதற்கு வலு சேர்ப்பதாகவே இருந்தது. சீ.முத்துசாமி அவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நிலம் மற்றும் சூழல் படைப்புகளின் வடிவத்தில் ஒரு எல்லைவரை பாதிப்பை செலுத்துகிறது என எண்ணிக் கொள்கிறேன்.

a
கோபி ராமமூர்த்தியுடன்

 

 

சீ.முத்துசாமி தன் எழுத்துலகு குறித்து மிக விரிவாகவே பகிர்ந்து கொண்டார். ஏதோவொரு விதத்தில் நவீனத்துவம் வளர்த்தெடுத்த மனநிலையான தனிமை அவர் கதைகளிலும் அப்பிக்கிடக்கிறது. ஆனால் தன் போக்கில் அதை சீ. முத்துசாமி விளக்கிக் கொள்கிறார். அவர் படைப்புகள் இந்த “பொதுவான இருத்தலிய தனிமைக் காரணிகளில்” இருந்து விலகி நிற்கும் இடம் அவருடைய கதாமாந்தர்கள் எளியவர்களாக இருப்பதே. தனிமையை சூடிக் கொண்டவர்கள் அல்ல தனிமை திணிக்கப்பட்டவர்கள் என அவர் படைப்புகளின் இழப்புக்குள்ளாவர்களையும் கண்ணீர் சிந்துகிறவர்களையும் அவருடைய உரையிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

 

 

ஏற்பாடுகள் மேலும் கூர்மை கொண்டுள்ளன. விஷ்ணுபுரம் அமைப்பின் கொஞ்சமும் அலட்டலற்ற பேருழைப்பு பிரம்மிக்க வைக்கிறது. பெரும்பாலும் நீங்கள் எல்லா அரங்குகளிலும் பங்கேற்றதோடு வினாக்களையும் எழுப்பியது நிறைவாக உணரச்செய்தது. குறை என்று இல்லாவிட்டாலும் நான் நிகழ்ந்திருக்கலாம் என எண்ணியது ஒன்றுண்டு. சென்ற விழாவினைப் போலவே நாஞ்சில் நாடனுடன் ஒரு பொது உரையாடல் அமைந்திருக்கலாம் என. வினா விடை போல அல்லாமல் மரபிலக்கியம் குறித்த ஒரு உரை நிகழ்வாகவே. ஏனெனில் சென்ற விழாவை விட இம்முறை  இடைவேளை நேரம் அதிகமாகவே இருந்தது. இடைவேளை நேரங்களில் எழுத்தாளர்  கே.என்.செந்தில் அண்ணனுடன் உரையாடிக் கொண்டிருந்தோம்.

 

r

மாலை ஐந்தரைக்குத் தொடங்கிய விழாவின் மனநிலையை நவீனின் “ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்” என்ற சீ.முத்துசாமியை வைத்து இயக்கப்பட்ட குறும்படம் வெகுவாக கட்டமைத்தது என நினைக்கிறேன். காலம் செலவன் பற்றி   நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் அதிர்ச்சியை  அளித்தன. ஆனால் உங்கள் உரை உலகம் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழர்களின் சரிவின் சித்திரத்தை கோபத்துடன் முன் வைத்தது. அவ்வகையில் இலங்கையும் மலேசியாவும் பண்பாட்டுக் கூறுகளை தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் விஷ்ணுபுரம்  விருது மிகப் பொருத்தமான ஒருவருக்கு அளிக்கப்பட்டதன் வழியாக அந்த போராட்ட நோக்கத்திற்கு வலுசேர்க்கிறது. நீண்டதாக இருப்பினும் சீ.முத்துசாமி அவர்களின் உணர்வுப்பூர்வமான உரை இவ்விழாவுக்கு ஒரு இனிய  முடிவினை அமைத்துத் தந்தது.

 

 

இரண்டு நாட்கள் கடந்த சென்ற விரைவை எண்ணித் தொகுக்க முடியவில்லை. முழுவிழாவிலும் மனமோ உடலோ எங்கும் சுணங்கவோ களைப்படையவோ இல்லை. எழுதும் இந்த நொடி வரை கொப்பளிக்கும் உற்சாகம் அதன் நீட்சியே எனக் கொள்கிறேன். விடைபெறும் போது நாங்கள  தன்னம்பிக்கையுடன் பேசியதாக கூறினீர்கள். அதற்கு ஆசிரியர்கள் விதைத்த கனவே காரணம் என எண்ணுகிறேன். ஒருவகையில் அது “அசட்டு தைரியமாக” கூட இருக்கலாம். ஆனால் அதுவும் தைரியம் தானே. (உளறத் தொடங்குகிறேன்:)

 

 

எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் மொழிபெயர்த்த தஸ்தாவெய்ஸ்கி நூலொன்றினை பரிசாக அளித்தார்கள். புறப்படும் நேரம் சீனு அண்ணன் உங்களது ஃபிரேம் செய்யப்பட்ட படத்தினை பரிசாக அளித்தார். நெகிழ்ந்து நின்ற தருணமது. அர்த்தங்கள் சிதறி மொழி அரற்றலாக மாறும் கணமென்பதால் நிறுத்துகிறேன்.

 

அன்புடன்

 

சுரேஷ் பிரதீப் 

 

25442785_933453936811967_4027196166625025682_n

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. சென்றமுறை வரவேண்டுமென நினைத்தேன். முடியவில்லை. இந்தமுறை எல்லாப்பிரச்சினைகளையும் தூக்கிப்போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டேன். மிகச்சிறந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு திருவிழா. விழாக்கொண்டாட்டங்களில் எப்போதுமிருக்கும் ஒரு நிறைவான நிலை. ஒரு சின்னப்பதற்றம். எங்கே எவரைப்பார்ப்பது என்று தெரியாமல் முட்டிமோதிக்கொண்டிருந்தாலும் உற்சாகம் குறையவில்லை

 

அரங்குக்கு வெளியே நிகழ்ந்த உரையாடல்கள் மிகச்சிறப்பாக இருந்தன. போகனிடம் உரையாடினேன். லட்சுமி மணிவண்ணனும் சிறப்பாக உரையாடினார். தேவதேவனைச் சந்தித்ததும் அவருடன் ஒரு வாக்கிங் போனதும் அற்புதமான அனுபவங்களாக இருந்தன. முழுக்கமுழுக்க வாசகர்களை மனதில்கொண்டே அமைக்கப்பட்ட நிகழ்வாக இருந்தது. வாசகர்களின் ரசனையும் அவர்களின் சௌகரியங்களும் கருத்தில்கொள்ளப்பட்டிருந்தன

 la[வெயில் ,லட்சுமிமணிவண்ணன், சு வேணுகோபால், ரோஸ் ஆண்டோ [படிகம்]

 

[எனக்குத் தனிப்பட்டமுறையில் விழாவில் சிறப்பு என்பது வினாடிவினா நிகழ்ச்சி. அதற்கு மேடையிலிருந்த பல எழுத்தாளர்கள் வராமல் போய்விட்டார்கள். வந்திருந்தார்கள் என்றால் அவர்கள் எத்தகைய வாசகர்களை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். மிகச்சிக்கலான கேள்விகள். ஆனால் ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்லப்படாமல் போகவில்லை. நாவலில் ஒருவரியைச் சொல்லி எந்த நாவல் என்று கேட்டபோது பதில் வந்தது. ஒரு நாவலின் தலைப்பு எந்த நர்சரி ரைமில் இருந்து வந்தது என்ற வினாவுக்கும் விடை வந்தது. நேருவின் டிஸ்கவரி ஆஃப் இண்டியா நாவலின் முதல்வரியைச் சொல்லி எந்த நூல் என்று கேட்டதெல்லாம் மிகமிக அபாரமான உத்தி. அந்தவரி ஒரு நாவலின் தொடக்கவரிபோல இருந்தது. பலர் ஏமாறினாலும் ஓர் அம்மா பதில்சொல்லிவிட்டார். தமிழில் அபாரமாக வாசிக்கக்கூடிய ஒரு தலைமுறை வந்துவிட்டதென்பது தெரிந்தது. ஆனால் அந்த அளவுக்குச் சென்றதலைமுறை எழுத்தாளர்கள், போகனைத்தவிர, தயாராக இல்லையோ என்ற எண்ணமும் இந்த அரங்கிலே ஏற்பட்டது

 

மகேஷ்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4