விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 2

1

[பி. ஏ கிருஷ்ணன், நெறியாள்கை கிருஷ்ணன்,ஈரோடு]

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. விழா என்ற சொல்லுக்கு ஏற்ப ஆரம்பம் முதல் கடைசிவரை கொண்டாட்ட மனநிலை நீடித்தது.  இரண்டுநாளும் ஓர் உச்சநிலையிலேயே இருந்துகொண்டிருந்தேன். இத்தகைய ஒரு எழுச்சியான சந்திப்பு என் அளவில் இதற்கு முன் நடந்தது இல்லை. எல்லாச்சந்திப்புகளும் மிக உற்சாகமாக இருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் வந்த பதில்களுக்குச் சமானமாக நாமும் வெவ்வேறு கேள்விகளை மனசுக்குள் கேட்டுக்கொண்டிருந்தோம். இளம்படைப்பாளிகள் இத்தனை தீர்மானமாகவும் துல்லியமாகவும் பதிலளித்தது ஆச்சரியமான விஷயம் என நினைக்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் ஒரே வயசுதான் என்பதனால் அந்த பேச்சுக்களுடன் என்னை இயல்பாக இணைத்துக்கொள்ளவும் முடிந்தது

 

என்னுடைய ஏமாற்றங்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும். போனமுறை அனைவரும் ஒரே பெரிய ஹாலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இரவிலே பேசிக்கொண்டிருந்தது இன்றைக்கும் மிகப்பெரிய ஒரு அனுபவம். விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகளின் சிறப்புகளில் ஒன்று இந்த கட்டுக்கடங்காத உரையாடல்கள். ஆனால் இம்முறை பாஷ் ஆன அறைகளில் எல்லாரையும் தங்கவைத்திருந்ததனால் என்ன ஆயிற்றென்றால் அப்படிப்பட்ட பொதுச்சந்திப்பு நடக்கவில்லை. சுரேஷ்பிரதீப்புடன் நீண்ட உரையாடல் நடந்தது, ராத்திரி இரண்டுமணிவரை போயிற்று என்று நண்பர் மறுநாள் சொன்னார். எனக்குத்தெரியவில்லை. உங்கள் அறையில் சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்தீர்கள், வேடிக்கையும் இருந்தது, நீங்கள் தூங்க இரண்டுமணி ஆகியது என்று மறுநாள் உங்கள் நண்பர் சொன்னார். அதெல்லாம் தெரியாமல்போய்விட்டது. மிஸ் பண்ணிய உணர்வு

1

அதேபோல சிறப்பு எழுத்தாளர்களுக்கு லக்சுரி ரிசார்ட்டில் போட்டு தனியாகத் தங்கைவைத்திருந்தீர்கள் என்றார்கள். அவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் ரூமுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களைச் சந்திக்கமுடியவில்லை. லட்சுமி மணிவண்ணனிடம் பேசுவதற்காகத்தேடினால் அவர் தனிப்பட்டமுறையில் வெளியே சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்கள். இதுவும் ஒரு குறையாகவே இருந்தது. விழா அன்று காலை நிகழ்ச்சி முடிந்து மதியம் முழுக்க நிறையநேரம் இருந்தது. ஆனால் எழுத்தாளர்கள் எல்லாரும் தனித்தனியா அறைகளுக்குச் சென்றுவிட்டார்கள். நல்லவேளையாக சுரேஷ்பிரதீப், விஷால்ராஜா, பாவண்ணன் இருந்தார்கள். அவர்களுடன் பேசியது உற்சாகமான அனுபவமாக இருந்தது. எழுத்தாளர்கள் இப்படி விலகி இருப்பது நல்லதா என்று சந்தேகமாக இருந்தது

 

ஆர். ராகவ்

2

அன்புள்ள ராகவ்

 

அழைக்கப்பட்டவர்களுக்குக் கூடுமானவரை நல்ல உணவு, தங்குமிடம்,பயண ஏற்பாடுகள் செய்யவேண்டியது எங்கள் கடமை. வாசகர்களைச் சந்திப்பது உரையாடுவது அந்தந்த எழுத்தாளர்களின் சுதந்திரம்.

 

ஜெ

3

[தூயன் பேசுகிறார், அருகே கே.ஜே.அசோக்குமார்]

 

அன்பின் ஜெ அவர்களுக்கு,

 

ஔிமயமான கந்தர்வலோகத்திலிருந்து கீழே விழுந்துகொண்டிருக்கும் கந்தர்வியின் மனநிலை தற்போது. இந்த வருட விஷ்ணுபுரம் இலக்கிய விருதுவிழாவிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கிறேன். 2009 ல் ஆரம்பித்து இந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழா கோயம்புத்தூரில் ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்து கொண்டுதானிருந்திருக்கிறது. 2017 ம் வருட இறுதியில் நான் மண்ணுலகிலேயே விண்ணுலகிற்கு செல்வேன்   எனவும் அங்கு படைப்பின் ரகசியங்களை நேரிலேயே காண்பேன் எனவும் என் கனவுகளில் கண்டிருக்கவில்லை. ஆனால் பகற்கனவுகள் காெண்டிருந்தேன்.

 

 

பள்ளி செல்லும் வயதிலே எனக்கோர் மிகப்பெரிய கவலை தோன்ற ஆரம்பித்து வேலை கிடைத்தும் கூட அது அரித்துக் கொண்டிருந்தது. அது வெறும் கவலை மட்டுமல்ல. பேராசையுடன் கூடிய கவலை. நான் ஏன் பிளாட்டோ சாக்ரடீஸ் அரிஸ்டாட்டில் புத்தர்  காலத்தில் பிறக்கவில்லை; அடர்ந்த காட்டிலோ பெரு நதிக்கரையிலோ எரியும் நெருப்பு வட்டத்தினுள் ஒற்றைக்  காலில்  நின்றுகொண்டு  பிரம்மாவையோ சிவபெருமானையோ நினைத்து தவம் புரியும் முனிவர்கள் காலத்தில் பிறக்கவில்லை; குருவின் காலடியில் அமர்ந்துகொண்டு அவரோடு கூடவே வாழ்ந்திருந்து கல்வியறிவு பெறும் பாக்கியமான காலத்தில்   பிறக்கவில்லையென ஆதங்கங்களும் பெருமூச்சுகளும்கொண்டதுமான கவலை அது.  இப்போது அதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

 

சுனீல் கிருஷ்ணன்
சுனீல் கிருஷ்ணன்

கடந்த ஒன்றரை வருடங்களாக உண்மையில் அந்த அரித்துக் கொண்டிருந்த கவலைகள் என்னை தாக்கிக் கொண்டிருந்ததற்கான தடயங்களே  இல்லை. இதற்கு நான் என் நண்பன் மூலம் இலக்கிய வாழ்வு வாழத் தொடங்கியிருந்ததுதான் காரணம். ஒரு வெறுமையிலிருந்து நிறைவை நோக்கி நடத்தப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். என் இழப்புணர்வுகள் முற்றிலும் அழிந்திருக்கின்றன என உணர்ந்து கொள்ள முடிகிறது. நான் கனவுகண்ட அறிவுலோகத்தை இனம் கண்டு கொண்டேன். விஷ்ணுபுர விழா நடக்கவிருக்கிறது  என்று தெரிவிக்கப்பட்டு அவ்விழாவுக்கு அழைக்கப்பட்ட கணம் முதல், மூன்றரை   மாதங்களாக  அந்த லோகத்திற்குள் நுழைந்து விண்தேவர்களையும் நட்சத்திர மாந்தர்களையும் இந்த மண்ணுலக விழிகளால் காணப் போகிறோமென்ற பரவசத்திலேயே என் விழிகள் என்றும் வானவில்லைப் பிரதிபலித்தன. அதையும் தாண்டி உடல் நடுங்கி சில்லென்று குளிர் உச்சந்தலையில் ஏறுமளவிற்கு பேரிரைச்சலுடன் மழையும் பெய்தது. நிசப்தமும் கலங்கலுமாக இந்த காலங்களை நான் கழித்ததை எண்ணும்போது ஏழுலகையும் தாண்டி எட்டாம் உலகில் வாழ்ந்து கொண்டிருந்த உணர்வு தண்டுவடக் குளிராக எழுந்தமைகிறது.

 

 

 

பி ஏ கிருஷ்ணன் அதை உண்மையாக்கும் வண்ணம் நிகழ்ந்த இந்த டிசம்பர் மாத விஷ்ணுபுர இலக்கிய விழா எனக்குமட்டுமேயான ஒரு திருவருகைக் காலமே. 25 ம் தேதி பிறக்கவிருந்த தேவகுமாரன் என்னை 16 ம் தேதியே எதிர்கொண்டழைக்க எழுந்துவிட்டார் என்றே தாேன்றியது. எனக்கு இதுதான் இம்மண்ணுலகில் நிகழ்ந்த பெருநிகழ்வு. 16, 17 இந்த இருதினங்களிலும் தேவனின் படைகளின் உள்ளங்கைகளில் குட்டி இளவரசியாக தாங்கப்பட்டிருந்தேன். இந்நினைவை நானே எத்தனை முறை மறுத்து விலக்க நினைத்தாலும் மீண்டும் மீண்டும் அவ்வெண்ணமே என் உள்ளத்திலும் உடலிலும் சர்ப்ப சீறலாக உணரப்படுவதை எவ்வகையிலும் என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த இருநாட்களில் குழந்தைகள் இளையோரானார்கள்; இளையோர் மூத்தார்கள்; மூத்தோர் கனிந்தார்கள்; கனிந்தாேர் விண்மீண்டார்கள். இரண்டாம் நாள் முடிவினில் இலைநுனியில் நழுவிவிடத் துடிக்கும் பனித்துளியின் முழுமையின் கணத்தை உணர்ந்தேன். முதல்நாள் கொண்ட தேடலை நான் விடைபெறுமுன் உணர்வதற்காகவே, அம்முழுமையின் தருணத்தை நானே  நேரடியாக அனுபவிக்கும்படியாகவே, நிகழ்வுகள் அனைத்தும்

 

தயாஜி,விஜலட்சுமி,நவீன்,ஷண்முகசிவா,சுவாமி பிரம்மானந்தா
கடலூர்சீனு வழிகாட்டலில் தயாஜி ,விஜய்ட்சுமி,நவீன்,ஷண்முகசிவா,சுவாமி பிரம்மானந்தா

 

ஒருங்கமைக்கப்பட்டதோ என்ற உளமயக்கும் ஏற்பட்டது. ராஜஸ்தானியில்  உள்நுழைந்த தருணத்திலேயே ஆசானின் முதல் தரிசனம்தான் உண்மை நோக்கிய என் இருநாள் பயணத்தை தொடங்கிவைத்திருக்கிறதென்ற நிதர்சனம் விளங்கியது. அந்தக் கணம் மூன்றரை மாத படபடப்பும் உளவெழுச்சியும் முழுமை கொண்டு கனத்து வீழ்ந்து காெண்டிருந்ததை அள்ளியெடுத்து வானத்தில் வீசி, முற்றிலும் என் எடையிழந்து பெருவெளியில் மிதந்து பறந்த கணமது. மீண்டு கூட்டுக்குள் வர சில நாழிகைகள் தேவைப்பட்டது. பாதுகாப்பாக தாய்ப்பறவை பஞ்சுப் பொதிச் சிறகுகளுக்குள் அமைந்துகொண்டதும் அன்னையின் விழியினூடாக அரியனவற்றை, உயரிய மானிடரை அறிந்து கொள்ள பாதை ஒன்று உருவானது.

 

வெய்யில்
வெய்யில்

 

நினைத்திராத வண்ணங்கள்; மறக்க முடியாத தருணங்கள்; உந்தியெழ வைத்த வழிகாட்டுதல்கள். நான் கனவு கண்ட தத்துவ உலகில் வாழ்ந்தேன்; நான் விழைந்த தவ முனிவர்களின் உலகைக் கண்டேன். குருகல்விமுறை என்னைக் கைவிட்டுவிடவில்லை என அறிந்து காெண்டேன். குருவின் காலடியில் முழுமையாக அடிபற்றி பணிந்திருந்தேன். நான் பிறந்ததின் பலனை உணர்ந்த தருணங்கள்; அப்படியே உயிர் போய்விடக்கூடாதா எனத் தவித்த கணம்..   புல்நுனிநீர்த்துளி எடைதாழாது விழுவதற்கு முந்தைய கணம்…  ஆத்மார்த்த தழுவல்களுடன் ஆன்மீக வருடல்களுடன் முற்றிலும் பிரக்ஞையுடன் கூடிய மெய்மையை நோக்கிய அறிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். முடிவில்லா பூஜ்யங்களைக் கொண்ட முழுவெண் பதிக்கப்பட்ட மைல்கல் சட்டென என்கண்முன் தோன்றி மறைந்தது. கண்ணெட்டும் தூரம் வரை வானம் மண்ணை இணைத்துக் கொண்டிருக்க, மிரண்டுவிடாவண்ணம் என் இருமருங்கிலும் கவசத் தோழர் தோழியர் படைகள் இணைந்து கொள்ளக் கண்டேன். தடம் மாறாது வழிநடத்த தேவனால் அனுப்பப்பட்ட விண்மீன்கள், வண்ணத்துப்பூச்சிகள். அவை வாய்திறந்து மொழியுரைக்கையில் ஸ்தம்பித்தன சில கணங்கள்.

p

[ராம்குமார் ,மேகாலயா]

 

 

முட்கள் கீறிய பாதங்கள்..வழிநெடுகக் குருதிகள்.. வாரியணைக்கப்பட்டன செம்மென்கரங்கள் கொண்டு. அக்கரங்களைக் கொள்ளும் விழைவே அகல் விளக்கேந்தி சீரடி எடுத்துவைத்து முன்செல்ல வைக்கிறது. தடுமாறும் கணங்களில் தாங்கிக் கொள்ளவும் ஏந்திக் கொள்ளவும் காவற் கோபுரங்கள்.  பலியாகிப் பலிகொள்ளும் பாதை; கண்டுகொண்டோர் மீளவிரும்பாப் பாதை; முடிவிலெழும் முற்றமைதிக்காக பதற்றங்கள் நிறைந்த பாதை. பதற்றங்கள் கொண்டவனே முற்றமைதியை உருவாக்குகிறான் என உணரவைத்த நாட்கள். இருளின் வழியே ஔியைக் கண்டடைகிறான் எனவும் சொல்ல வைக்கிறது.

op

மென்வெண்சிறகினுள் பொத்தி வைத்து, படைக்கலத்தை செவிவழியே உணரவைத்து, கூட்டின் விளிம்பில் நின்றுகாெண்டு, அன்னைக் கழுகினால் பறக்கவிடப்பட்டு, மண்ணுலகை நோக்கி நழுவி வந்து கொண்டிருக்கும் ஒரு கந்தர்வப் பறவை.  இப்பாதையைக் கண்டடையா எடைமிக்க மானுட குலத்தை,  எடையவித்து பறக்க வைக்க,   பெருமூச்சொன்று வெளியேறுகையில் எழுகின்ற விசை, நழுவிவிழுந்து விடாமல் உந்தியெழுந்து மேலும் உயரே பறக்க வைக்கிறது. குனிந்து பார்க்கும் கருணைப் பார்வை பறவையின் விழிகளில் வந்தமைகிறது.

 

எனக்கு சாெல்லத் தாேன்றுவதெல்லாம், “அறமாந்தர்களை படைக்கலமெனக் கொண்டு அகலொளி  மட்டும் எட்டும் தூரம் கருணைப் பார்வை காெண்டு தீர்க்கமாக வாழ்ந்துத் திரும்பி வா” என்று உள்ளத்தின் மூலையில் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல், குருவாக வாழ்கையில் சாபவிமோச்சனம் அடைந்து மீண்டுவிடுவேன் மீண்டும் என் கந்தர்வலோகம் என்பதுதான்!

 

அன்புடன்

கிறிஸ்டி.

8

[நெறியாள்கை ஏ.வி.மணிகண்டன், வெய்யில்]

 

அன்புள்ள ஆசானுக்கு …

விஷ்ணுபுரம் இலக்கிய விழாவிற்கு சனிக்கிழமை வருவதாகத் தான் இருந்தேன் ஆனால் கல்லூரி காரணமாக ஞாயிறு வர வேண்டிய சூழல்.உண்மையிலேயே ஒரு சிறிய படபடப்பு இருந்தது.எப்படி உங்களுடன் பேசுவது? எப்படி என்னை அறிமுகம் செய்துகொள்வது என்ற குழப்பமும் இணையை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு காலை வந்து சேர்ந்தேன்.என் முதல் இலக்கிய சந்திப்பு இதுதான்.உடன் வந்த நண்பர்கள் தீவிர வாசிப்பாளர்கள் அல்ல..ஆனால் உங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.அரங்கத்திற்கு வெளியே தான் உங்களை முதலில் பார்த்தோம். உள்ளுர நடுக்கமும் இருந்தது.பேசினால் கண்டிப்பாக நா பிறழும் என்பதால் முதலில் சந்திக்காமல் நிகழ்ச்சியை காண உள்ளே சென்றோம்.அப்போதுதான் சீ.முத்துசாமி அவர்களுடனான வாசகர் சந்திப்பு.கேள்விகள் கேட்டார்கள்.நான் அவருடைய எந்த புத்தகத்தையும் வாசித்ததில்லை என்பதால் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.கண்டிப்பாக இனி வாசிக்க வேண்டும்.

6

அவருக்கு பிறகு மேகாலயா எழுத்தாளர்  ஜெனிஸ் பரியத் உடனான உரையாடல் புதிதாக இருந்தது.இப்படிப்பட்ட சந்திப்புகளை பார்க்கும் போது இன்னும் அதிகம் வாசிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.மேகாலயாவிலிருந்து ஒரு புத்தகம் அதுவும் முதல் முறையாக தமிழில் வருகிறது.அந்த மக்களின் வாழ்வையும்,சில அடிப்படை புரிதல்களையும் தர இது உதவும்.இத்தனை நாட்களை வாசிப்பிலே கழித்திருக்கிறேன்

 

ஆனாலும் பெரிய இலக்கிய உரையாடலை யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை.காரணம் அப்படிப்பட்ட நட்பு பட்டியல் என்னிடம் இல்லாதுதான்.கதைகளை படிப்பது நேர விரயம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் தலைமுறையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.அதில் கிடைக்கும் மாபெரும் கண்டடைதல்களையோ ஆழ்மனத் தேடலை பற்றிய அறிதல் இல்லை.கடந்த ஆண்டு வரை நானும் கதைகளைப் படிப்பது வீண் என எண்ணியே இருந்தேன்.ஆனால் நீங்கள் எழுதிய ஊமைச்செந்நாய் தொகுப்பில் இருந்த மத்தகம் என்னை சில நாட்கள் ஒரு நிலையில் வைத்திருந்தது.திரும்பத் திரும்ப யானை கனவில் வந்து கொண்டிருக்கவே அதிலிருந்து விடுபட ஏழாம் உலகம்,இன்றைய காந்தி ,காடு, உச்சவழு,அறம்,இரவு (தற்போது வாசிப்பில்)எனத் தேடிப்படிக்கத் துவங்கினேன்.நிச்சயமாக மனநிலை மாறியிருக்கிறது.கண்டிப்பாக உங்களின் வாசகனாக பெருமை கொள்கிறேன்.வெறும் கதை சொல்வது மட்டுமே கதை சொல்லியின் வேலை அல்ல..அதையும் மீறிய ஒரு தொடுதல் படிப்பவனின் மனதிற்கு சவால் விடும் வகையில் அமைய வேண்டும்.உங்களை தவிர வேறு புதிய எழுத்தாளருடன் பேச வேண்டும் என இருந்தேன்.போகன் அவர்கள் நண்பர்கள் சூழ் இருந்தமையால் தூயன் அவர்களை சந்தித்தேன் .முகம் சிறுகதை பற்றிய என்னுடயை சில விமர்சனங்களை சொன்னேன்.பேசினார்.

4

எழுத்தாளனை அணுகுதல் பற்றிய உங்களின் பதிவு படித்திருக்கிறேன்.விஷ்ணுபுரம் விழாவில் மதியஉணவு இடைவேளையின் போதுதான் உங்களை சந்தித்தேன்.சரியாக அணுகினேனா என்று தெரியவில்லை.பதற்றத்திலே அழைத்தேன் .உற்சாகமாக பதில் அளித்தீர்கள்.சின்ன தயார் நிலையில் இருந்தேன் ஆனால் நீங்கள் பேச ஆரம்பித்ததும் உடல் நடுக்கம் கொண்டது.சில நிமிடங்கள் பேசினாலும் மறக்க முடியாத கணங்கள். கல்லூரிகளில் கூட இந்த அளவிற்கு ஒரு நிகழ்ச்சியை கச்சிதமாக நடத்துவார்களா என்றால் நிச்சயம் இல்லை.சரியான வாசகர்கள்.எந்த விதமான நேர விரயத்திற்கும் இடம் கொடுக்காத ஒருங்கிணைவு. நல்ல திட்டமிடல்.

 

உங்களை சந்தித்துவிட்டு உணவருந்த சென்றேன்.பக்கத்தில் பிரசன்னா என்கிற நண்பருடன் உரையாடல் .ரொம்பவே நெகிழ்வாக உங்களைப் பற்றி பேசினார்.கேட்க கேட்க ஆவலாக இருந்தது.வெண்முரசு ஒரு பெரிய கனவு.எழுதி முடித்த பிறகு மற்ற எழுத்தாளர்களுக்கு எவ்வளவு பெரிய உந்துதலாக அமையும்! எதற்காக எழுதுகிறோம்,எழுதி என்ன கிடைத்துவிடப் போகிறது என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது பதில் சொல்லும். மூன்று மணிக்கே கிளம்பலாம் என வெளியே வந்தேன்.மீண்டும் உங்களை சந்தித்து பேசத் தோன்றியது.ஆனாலும் என்னை விட பல மடங்கு தீவிரத்துடன் உங்களை கொண்டாடுபவர்களுக்கும் உங்களுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா ?

 

1

 

சொல்லிவிட்டு கிளம்பலாம் என்றாலும் அது ஒன்றும் கல்யாண விழாவோ,பிரிவு உபச்சார விழாவோ அல்ல.முழுக்க முழுக்க அறிவார்ந்த கூடுதல். எவ்வளவு நேரம் இருக்கிறோமோ அவ்வளவும் நமக்கானது! அதனால் சொல்லவில்லை.கட்டிடத்தின் முகப்பில் நின்றுகொண்டு திரும்ப உள்ளே பார்த்தேன் எல்லாரும் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தார்கள்.மேலே இரண்டு நண்பர்கள் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அதைப்பற்றிய பேச்சு. சாலைக்கு வந்ததும் பிரசன்னா யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார் “அதுதான் அந்த மக்கள் போகும்போது  ரெண்டு பக்கமும் நீர்  இருக்கும்…கோவில் சிற்பம்..” என காலையில் சீ.முத்துசாமி அவர்களிடம் கேட்ட வாசக கேள்வியை சொல்லிக்கொண்டிருந்தார் . மனதில் பட்டது ஜெயமோகன் எழுத்து அல்ல..ஒரு இயக்கம்!  இரண்டு நாட்களும் இலக்கியத்தை கொண்டாடிய நண்பர்களுக்கு வாழ்த்துகள்,நன்றிகள்.

பேரன்புடன்

ஷங்கர் சதா

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -1
அடுத்த கட்டுரைஇலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017