விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்
விஷ்ணுபுர இலக்கிய சந்திப்பு – சில குறிப்புகள்
முதல் நாள்
காலை முதலே நண்பர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள் சென்றமுறை சந்தித்தித்த நிறைய நண்பர்கள் கலந்துகொண்டாலும் புதியவர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். இந்த வருடம் புதியவர்களுக்கான ஒரு களமாக இருந்தது.
முதலில் துயனும் அசோக்கும் அமர்வில் கலந்து கொண்டார்கள். இருவருமே தங்களின் எழுத்துக்கள் அகத்துக்கும் புறத்துக்கும் ஆன ஊடாட்டம் என்று சொன்னார்கள். குறிப்பாக இருவருமே தனிமை அழுத்தத்தை பற்றியே ஏன் எழுதுகிறீர்கள் என்று கேள்விகள் எழுந்தது.மேலும் துயனின் கதைகள் மிகவும் உயர்வெப்பநிலையில் உள்ளதாக பேசப்பட்டது.
இதன்பின் ஆர். அபிலாஷ் உடனான அமர்வு. அபிலாஷின் இலக்கியம் பற்றிய தன்னுடைய பார்வை எதையும் ஒரு விளையாட்டாக செய்வது மிகவும் பிடித்திருக்கிறது என்றார். அனுபவம் சார்ந்து மட்டுமே எழுத வேண்டுமா என்ற கேள்விக்கு அது முக்கியம் என்றாலும் அது மட்டும் தேவை என்று இல்லை. குறிப்பாக அ.முத்துலிங்கம் படைப்புகள் அவரின் அனுபவம் சார்ந்து அதிகம் எழுதவில்லை என்றார். மேலும் இது ஒரு விதமான தொழில்நுட்பம் பழக்கத்தால் கைவரப்படும் ஒன்று என்றார். இந்த விதமான தொழில்நுட்பத்தை நம் பொதுவெளியில் யாரும் கற்பிப்பதில்லை என்றும் நாம் ஒரு மிஸ்டிக் போலே செயல்படுகிறோம் என்றார். எந்த செய்திக்கும் எதிர் வினை ஆற்றுவது தன் வாசகர்களுடனான உறவை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது என்றார். இவரின் கட்டுரைகளின் கறார்தன்மைக்கு தன்னுடைய அசட்டு துணிச்சல் மற்றும் தன்னுடை பயமின்மை தன்மையால் அமைகிறது என்றார். எந்த இலக்கிய வடிவமும் பத்து வருடங்களில் தேய் வழக்காக மாறுவதை சுட்டிக்காட்டி மிகவும் எதார்த்தமாக எழுதுவதே தன் பாணி என்றும் பிரபலமாக உள்ள இலக்கிய வடிவத்தில் எழுதி பார்ப்பது தனக்கு பிடித்து இருக்கிறது என்றார். எடுத்துக்காட்டாக ஒரு பேய் கதையை மௌனியின் கதை வடிவத்தில் எழுதுதல் மற்றும் எம்.சி சுரேஷ் படைப்புகள், ஜெ வின் உலோகம். இவரின் மொழிபெயர்ப்பு கவிதைகள் தனக்கு பிடித்தால் மட்டும் எழுதுவாக கூறினார்.
மூன்றாவது அமர்வாக சுரேஷ் பிரதீப் மற்றும் விஷால் ராஜா உடன் நடந்தது. சுரேஷ் தனக்கு ஏற்படும் முரணை எழுதி கடப்பதாக கூறினார். தன்னுடைய கதைகளில் வரும் உணர்வுகள் கதாபாத்திரங்களின் உணர்வே அன்றி ஆசிரியரின் குரலாக எடுக்கத்தேவை இல்லை என்றார். மேலும் கதாபாத்திரங்களின் உணர்வு எப்போதும் உயர் பிரக்ஜ்னை கொஞ்சம் குறை என்றார். மேலும் தன்னுடைய கதைகளில் தேவைக்கு ஏற்பவே மென்னுணர்வுகளை பயன்படுத்துவதாகவும் கூறினார். தஞ்சை மண்ணை பற்றி தான் அதிகமாக எழுத இருப்பதாக கூறினார். விஷால் தன்னுடைய கதைகளில் முடிந்தவரை மிகையுணர்வுகளை தவிர்ப்பதாகவும் அலைகளை போல் கடலை மறைப்பது என்ற வரி தன்னை வழி நடத்துவதாக குறிப்பிட்டார். இருவருமே முந்தய காலங்களில் இருந்த வழிகாட்டுதல் இல்லை. பொதுவாகவே இப்போது filtering இல்லை என்று பேசப்பட்டது. ஜெ தன்னுடைய முதல் நாவலை எழுதி சுந்தர ராமசாமி கொடுத்தபோது இப்போது வேண்டாம் என்றார் என்று குறிப்பிட்டு அப்போது இருந்த அந்த சூழ்நிலை இப்போது இல்லை என்றார்.
கவிஞர் போகன் மற்றும் வெய்யில் உடனான சந்திப்பில் வெய்யில் தான் வெறும் கவிஞன் என்றும் வேறு எந்த அடையாளத்தை சூடிக்கொள்வதை விரும்பவில்லை என்றும் தான் கோட்பாட்டில் ஏற்பு உண்டு என்றும் ஆனால் நடைமுறை அரசியல் மற்றும் லட்சசியவாதத்தில் நம்பிக்கை இல்லை என்றார். தன்னுடைய கவிதைகள் ஒரு ஞாபகமூட்டல் மட்டுமே. கவிதை ஒரு மனப்பழக்கமாக வருவதை தான் விரும்புவதில்லை என்றும் சவால் இருந்தால் மட்டுமே எழுதுவதாக கூறினார்.
இதன்பின் நவீனின் அமர்வில்இதில் நவீன் ஒரு மிக அழகான ஒரு மலேசிய இலக்கிய சித்திரத்தை அளித்தார். தன்னையுடைய நூல்களில் உள்ள உரையாடல் பலவீனம் தன்னுடைய போதாமையே என்றும் அது தான் இருக்கும் இடத்தினால் உருவானது இல்லை என்றார். மேலும் கூறுகையில் மலேசிய இலக்கிய களம் தோட்டபுரத்தை மட்டும் பதிவு செய்து இருக்கிறது என்றும் மீனவர்கள், தேயிலை தோட்டம் மாற்றும் குப்பை அள்ளும் மக்களின் களங்களை பற்றி இன்னும் எழுதவில்லை என்றார். அவர் களமாக்குவது அதையே என்று குறிப்பிட்டார்
-திருமலை
***
ஜெயமோகன் அவர்களுக்கு,
விஷ்ணுபுரம் விழாவில் தங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியான அனுபவம். இரண்டாம் நாள் விழாவிற்கு வந்திருந்த என்னால் மதிய உணவு இடைவேளை வரை மட்டுமே இருக்க முடிந்தது. சற்றே நீண்ட பயணங்களை மேற்கொண்டால் கை வீங்கி வலியும் மிகுதியாக இருக்கிறது. வலி மிகுதி காரணமாக காய்ச்சலும் ஏற்பட்டதால் உடனே தஞ்சைக்குத் திரும்பி விட்டேன்.
மாலை விருதளிப்பு விழாவிலும் இருந்து உங்களிடம் சிறிது மனம் விட்டுப் பேசவும் ஆவல் கொண்டிருந்தேன். இயலாது போயிற்று. இது எனக்கு ஏமாற்றமே. ஆனால் நான் அரங்கில் இருந்த சில மணி நேரங்கள் பயனுள்ளதாகவே அமைந்தது. குறிப்பாக திரு.பி.ஏ.கிருஷ்ணன் அளித்த பதில்கள். விவாதங்களில் உங்களுடைய பங்களிப்பு பிரதானமாக இருந்தது.
சிவமணியன்
பரிசளிப்பு, படைப்பாளிகளை கௌரவித்தல், ஏற்புரை இவற்றை மட்டும் மேடையில் வைத்துக்கொண்டு விவாதங்களைத் தரையில் வட்டம் கட்டி அமர்ந்து நிகழ்த்தினால் இன்னும் சிறப்பாக இருக்குமோ என்று தோன்றியது.
சமீபமாக நான் கலந்துக்கொண்ட இலக்கிய விழாக்களில் படைப்பாளிகள் அதிகம் பேரை சந்திக்க இயன்றது விஷ்ணுபுரம் விழாவில் மட்டுமே. அடுத்த ஆண்டு எல்லா அமர்விலும் இருந்து பார்க்க, பங்குபெற முயற்சிப்பேன். வாழ்த்துக்கள்.
அன்புள்ள
கீரனூர் ஜாகிர்ராஜா.
அன்புள்ள ஜாகீர்
அப்படித்தான் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் ஐம்பதுபேருக்குத்தான் அதுசரிவரும். அதற்குமேலிருந்தால் பின்னாலிருப்பவருக்கு முகம் தெரியாது. ஒரு சிறுமேடை அமைக்கச் சொல்லியிருந்தோம். அதுவும் உயரம்போதவில்லை. ஆகவே கடைசிநேரத்தில் மேடைக்கே கொண்டுசென்றுவிட்டோம்.
ஜெ
விவாதநிகழ்ச்சிகள்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதில் ஒருவார்த்தைகூடப் பேசாமல் கலந்துகொண்ட சென்னை வாசகனாகிய நான் பன்னிரண்டு ஆண்டுகள் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கல்விபயின்றவன். நூறுக்கும் மேல் கருத்தரங்குகளில் கலந்துகொண்டவன். தமிழ்நாட்டில் கல்வித்துறைசார்ந்த முக்கியமான கருத்தரங்குகள்கூட முறையான திட்டமிடல் இல்லாமல் பிழையாக குழப்பமாக நடைபெறுவதைக் கண்டு வருந்தியிருக்கிறேன். இந்தியாவுக்கு வெளியே முறையான திட்டமிடல் இல்லாமல் நடைபெற்ற ஒரே ஒரு நிகழ்ச்சியைக்கூட நான் பார்த்ததில்லை. நம்மிடம் ஏதோ குறை உள்ளது என்பதே என் எண்ணமாக இருந்தது.
விஷ்ணுபுரம் நிகழ்ச்சி அவ்வெண்ணத்தை மாற்றியது. மிகச்சரியான நேரத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் தொடங்கி சரியான நேரத்தில் முடிந்தன. மிகச்சிறப்பாக விவாதங்கள் வழிநடத்தப்பட்டன. ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ள முறையில் நிகழ்ந்தது. இது ஒரு சாதனைதான். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக்கட்டுப்பாடு பார்வையாளர்மீதான மரியாதை. பார்வையாளனுக்கு நேரவீணடிப்பு நடக்கக்கூடாது என்றும் அவனுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்றும் நினைத்து செய்யப்படவேண்டியது. எல்லா கருத்தரங்கிலும் பார்வையாளனே முக்கிய்மானவன் என்று நினைக்கப்படவேண்டும்.
அதோடு Meet the auther என்ற நிகழ்ச்சியின் அர்த்தமென்ன என்பது நம்மில் மிகப்பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை என்பதை நான் கண்டிருக்கிறேன். நான் இருக்கும் துறையிலேயே கூட ஒரு Meet the personality நிகழ்ச்சி நடக்கும்போது அர்த்தமேயில்லாமல்தான் போகும். அது ஒரு நிபுணரை மற்றவர்கள் நேருக்குநேர் பார்ப்பதும் அவருடைய எல்லா பகுதிகளையும் முழுமையாகத் தெரிந்துகொள்வதுமாகும். ஒருவர் எழுதியதை எவ்வளவு வாசித்தாலும், அவரைப்பற்றி எவ்வளவு வாசித்திருந்தாலும், நேரில் பார்த்துப் பேச்சைக்கேட்பதென்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். Surgeon களைப் பொறுத்தவரை நேரில்பார்த்தால் அதுவரை அறியாத ஒரு பிம்பம் உருவாகும். அவர் சொல்வதே அதற்குப்பிறகுதான் தெளிவாகத் புரியத்தொடங்கும்.
ஆகவே Meet the personality நிகழ்ச்சியில் அந்த மனிதரின் முழுமையான படம் மட்டுமே வெளிவரவேண்டும். கேள்விகள் அதற்காகவே அமையவேண்டும். நாம் என்ன நினைக்கிறோம் என்பதை அங்கே சொல்லக்கூடாது. நம் கருத்தைச் சொல்வது அவரை எதிர்த்துவாதிடுவது போன்றவற்றுக்கெல்லாம் அங்கே இடமில்லை. அது ஒரு group discussion இல்லை. discussion ல் இருபதுபேருக்குமேல் இருக்கக்கூடாது. எல்லாரும் சமானமா அறிவுள்ளவர்களாக இருக்கவேண்டு. ஒரே துறையில் ஒரேமாதிரியானவர்வள்.
Meet the personality நிகழ்ச்சியில் கூடுமானவரை அவருடைய எல்லா முகங்களும் வெளியாகவேண்டும். உதாரணமாக ஒரு Surgeon-க்கு தோட்டக்கலையில் ஈடுபாடு உண்டு என்றால் அது முக்கியம். முத்துசாமிக்கு நாய் பிடிக்கும் என்பது பெரிய செய்தி. அதேமாதிரி அரங்கில் எவ்வளவு பெரிய expert இருந்தாலும் அது முக்கியமில்லை. அந்த நிகழ்ச்சி அப்போது மேடையில் இருப்பவருக்கு உரியது. அவரைத்தெரிந்துகொள்வதற்குரியது
அமெரிக்காவில் meet the author நிகழ்ச்சிகளெல்லாமே இந்தவகையானவைதான். இங்கே பெரும்பாலும் அந்த personality பேசவே விடாமல் வந்திருப்பவர்கள் பேசித்தள்ளிவிடுவார்கள். நான் ‘ஐயா உங்கள் பேச்சு உண்டு என்று அழைப்பிதழில் இல்லை. ஆகவே உங்கள் பேச்சை கேட்க நான் வரவில்லை’ என்று சொல்லியிருக்கிறேன். பெரும்பாலும் நேர விரயம். லட்சக்கணக்கிலே செலவழித்து நடக்கும் நிகழ்ச்சிகள்கூட வீணாகத்தான் நடக்கும்
உங்கள் நிகழ்ச்சியில் Meet the personality நிகழ்ச்சி ஓரளவு நன்றாகவே நடைபெற்றது. வந்திருந்த எவரும் ஜாஸ்தியாகப் பேசவோ தங்களை முன்னால்நிறுத்தவோ முயற்சி செய்யவில்லை. மடக்கவும் முயலவில்லை. சில விஷயங்கள் நீட்டிக்கொண்டுபோனபோது சரியாக அதை நிறுத்தி அந்த நோக்கி பேச்சைக் கொண்டுசெல்லப்பட்டது. ஆனாலும் ஆயுர்வேதம் பற்றி ஒருவர் வேறு எங்கோ நடந்த ஒரு சர்ச்சையையும் அதில் அவரது கருத்தையும் சொன்னது கொஞ்சம் அதிகம்.
அதேபோல personality சம்பந்தமான தனிப்பட்ட கேள்விகள் கொஞ்சம் குறைவு. உதாரணமாக அபிலாஷ் என்னும் இளம்எழுத்தாளருக்கு கால்கள் இல்லாதது கிரிக்கெட் மீதான ஆர்வமாக மாறியது ஒரு பெரிய புரிந்துகொள்ளலை அளித்தது. அதேபோல எழுத்தாளர் போகன் மருத்துவம் சார்ந்தவர் என்பது [அவர் டிரக் பற்றி சொன்னதும் சரி, ஆயுர்வேதவைத்தியர் epistomolgycal system பற்றிச் சொன்னதும் சரி எனக்கு உடன்பாடானவை கிடையாது. மாத்திரைகளை abuse செய்வதைவைத்து Use செய்வதை விமர்சிக்கக்கூடாது. அதேபோல cause and effect ல் வேறுபட்ட epistomolgy இருக்கமுடியும். Objectivity, empiricism ஆகியவற்றில் வேறு வகை முறைகள் இருக்கமுடியாது. ஆனால் இதெல்லாம் அந்த சபையில் பேசவேண்டியவை அல்ல. பி.ஏ.கிருஷ்ணனின் மனம் எப்படிச் செயல்படுகிறது என்பதுதான் அந்த விவாதத்தில் முக்கியமாக நாம் அறியவேண்டியது. நான் அங்கே பேச்சாளன் இல்லை ]
அதே போல Meet the personality நிகழ்ச்சியில் பல்வேறு தனிப்பட்ட கேள்விகளும் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். இந்தவகையான நேரடி உரையாடல்களை மேலைநாடுகளில் ஏராளமாக நடத்துகிறார்கள். அது எழுத்தாளரைப்பற்றிய ஒரு holistic அறிமுகத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அதன்பின் அவருடைய எழுத்தைப்பற்றிய வாசகர்களின் பார்வையே ஒட்டுமொத்தமாக மாறிவிடும். அதேபோல கீழே போவதும் உண்டு. நால் சல்மான் ருஷ்தியின் ஒரு நிகழ்ச்சிக்குப்பின்னால் அவரைப்பற்றிய மதிப்பை இழந்தேன். ஆனால் பலபேரை அந்த வகையான சந்திப்புக்குப்பிறகே முழுமையாகப்புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். இந்த நிகழ்ச்சிகள்தான் உங்கள் அமைப்பின் சாதனை என நினைக்கிறேன். இன்னும் சிறப்பாக நிகழவேண்டுமென வாழ்த்துகிறேன்.
கே.ஆர்.செந்தில்குமார்
***
அன்புள்ள செந்தில்குமார்
நீங்கள் சொல்வது உண்மை. நமக்கு இன்னமும் கலந்துரையாடல், கருத்தரங்கு, ஆசிரியர்சந்திப்பு ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் தெரியவில்லை. அதற்குக் காரணம் நெடுங்காலமாக இங்கே இலக்கியவிவாதம் நாலைந்துபேருக்குள் நிகழும் வெறும்பேச்சு ஆகவே நிகழ்ந்துவந்துள்ளது. இந்தியக் கல்வியமைப்பு இவற்றைக் கற்றுத்தருவதுமில்லை. படித்தவர்களுக்குக்கூட வேறுபாடும், விதிகளும் தெரிவதில்லை.ஊட்டியில் ஆண்டுதோறும் கலந்துரையாடல் நிகழ்வை நடத்துகிறோம். அங்கே கலந்துரையாடலின் முறைமையைக் கடைப்பிடிக்கிறோம்.
ஐரோப்பிய, அமெரிக்கச் சூழல் வேறு. அங்கே நிகழ்வின்நெறிகள், விவாதத்தின் தர்க்கமுறைமை ஆகியவை அனைவருக்குமே கல்விநிலையங்கள் வழி அளிக்கப்படுகின்றன. இங்கும் அவை மெல்லமெல்ல வரும், முயல்கிறோம்.
ஜெ
***