எப்போதுமில்லாமல் சென்ற வருடம் தான் தமிழில் நிறையப் படைப்புகள் வெளிவந்ததும் பேசப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இதற்கு முக்கியக் காரணம் இணையத்த்துடன் நாம் எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதே. ஒருபக்கம் நிறைய வாட்ஸ் அப் குழுக்கல் உருவாகி, நுால்குறித்து விவாதிப்பதும் பின் சண்டையிட்டு வெளியேறுவதும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் எழுத முடியாமல், வெறும் ஆடியோ மெசஜில் திட்டிக்கொண்டதும் உண்டு. இக்கருவிகள் எல்லாம் ஒரு நல்ல படைப்பை எப்படியோ வாசகா்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிடுகின்றன. இப்படித்தான் ஒளிர் நிழல் பற்றிய உரையாடல் ஒன்று உருவானது. அதற்குக்காரணம் ஜெயமோகனின் விமா்சனம். இதுவரை தமிழ் சூழலில் (இணைத்திற்கு பிறகு) ஒரு படைப்பைப் பற்றிய உரையாடலை ஜெயமோகனே துவக்கி வைத்திருக்கிறார். அது அப்படைப்பபைப் பற்றிய விமர்சனாக இருந்தாலும் அதை நிரகாரிப்பதாக (அதிலும் சில தரவும் அளவீடும் உண்டு) இருந்தாலும்.
ஒளிர் நிழல் சுரேஷ் பிரதிப்பின் முதல் நாவல், முதல் நுாலும் கூட. எனக்கு சுரேஷ் பிரதிப்பை ஒரு விமா்சகராகவும் நல்ல வாசகராகவும் தான் தெரியும். ஜெ தளத்தில் சு.வேணுகோபாலின் படைப்புலகம் பற்றிய ஒரு நீண்ட கட்டுரை வழிதான் அவரைத் தெரிந்துகொண்டேன். சு.வேணுகோபலைப் பற்றிய மிக நுட்பமான புரிதல் அதை வெளிப்படுத்தும். ஜெயமோகனுக்குப்பிறகு வேணுகோபாலை அனுகுவதற்கான வழியை சுரேஷ் பிரதிப் உருவாக்கியிருப்பார்.
இந்த நாவல் ஒரு மெட்டாபிக்சன் வகைமையைச்சார்ந்தது. நாவலை வாசிக்கத் தொடங்கியதும் சுரேஷ் பிரதிப் என்கிற எழுத்தாளன் எழுதுவதாக சொல்வதிலிருந்தே இதை உணரலாம். சக்தி, அருணா, சந்திரசேகர், மீனா என ஒரு சிறு கதாப்பாத்திரத்தைக் கூட நுட்பமாக சித்தரித்திருக்கிறார். மேலும் காலத்தை மாற்றி போட்டு உருவாக்கும் புனைவு சாத்தியமும் மிக இயல்பாக வருகிறது. உதாரணம் பள்ளியில் தற்கொலை செய்து கொள்ளும் கிழவன். நாவலின் ஊடே சுரேஷ் பிரதிப் என்கிற படைப்பாளனின் வாழ்வையும் (அதுவும் ஒரு கதாப்பாத்திரம் தான்) அவனின் லட்சியங்களையும் பேசும் கதையையும் (தற்கொலையைப் பற்றியும் அதன் தா்க்கத்தையும் பேசவதில்லை) யதார்த்தப் புனைவு மீபுனைவு என ஆசிரியர் வாசகனுடன் சேர்ந்தே அவற்றை உருவாக்குகிறார். இது மெட்டாபிக்சன் வடிமைக்கேயுரிய இயல்பு.
எனக்கு நாவலில் இருக்கும் தடையாக இந்த மெட்டாபிக்சனைத்தான் கூற முடிகிறது. இப்படைப்புக்கு இவ்வடிவம் எந்த வகையில் தன்னை மாற்றிவிட்டிருக்கிறது ? அதோடு நாவலின் வடிவம் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் தனித்தவொரு செயல் அல்ல மாறாக, அது தன்னளவில் தோ்ந்தெடுக்கும் மாற்றம், அதன் சிந்தனை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் எழுத்தாளனின் சிந்தனையின் தொடர்ச்சியே அதுதான். அதுதான் அப்படைப்பின் வடிவத்தை நிர்ணயிக்கும். ஒரு புழுவின் கூடு போல எழுதும்போதே அப்பரிணாமம் நிகழும்.
இன்னொன்று கதை, துண்டுத்துண்டாக டைரிக் குறிப்புகள் போல சுரேஷ் பிரதிப் இதில் பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொன்றும் இரயில் பயணக் காட்சிகள் போல சென்றுவிடுகின்றன. சரியாகச் சொல்வதென்றால் சிறுகதைக்குரிய இடைவெளிகளைக் கொண்டிருக்கின்றன.. சிறுகதையில் வாசகன் ஊகிக்கலாம் நாவலில் அப்படியல்ல. அது பெரிய கேன்வாஸ். வாழ்க்கையின் துண்டு அல்ல.. பிறப்பு முதல் இறப்பு வரை சொல்ல வேண்டியதில்லை. அனுபவங்கள், முரண்கள், தா்க்கம் ,அரசியல் என ஒன்றொடொன்று ஊடாடி நிகழ்த்தும் கலை. தரிசனத்தைக் கொடுக்க வேண்டும், எல்லவாற்றையும் குவித்து பின் சிதைத்துவிட்டு நகர வேண்டும். இப்படியெல்லாம்தான் நாவல் கலை உருவாகி வருகிறது. என்னளவில் நானும் அப்படித்தான் வாசித்திருக்கிறேன். அருணாவுக்கும் சக்திக்கும் இடையேயான உலகம் அதுதான். அருணா அவனின் ஆங்காரத்தை பிரதிபலிக்கிறாள். அது அவன் கண்டுணராத ஆங்காரம். ஆனால் அத்துடன் அது முடிந்துவிடுகிறது. இருவருக்குமான தர்க்கம் உறவுசிக்கல் என்பதற்கு மேல் வேறொன்றாக மேழெந்து வரவில்லை. பிறகு சந்திரசேகர் வாழ்வும் ஒரு சிறு தெறிப்பு போல நழுவிச் செல்கிறது. இப்படியே ஒவ்வொன்றும் வாசகனின் கற்பனையுலகிலிருந்து வெளியேறிக்கொண்டே சென்று ஒருகட்டத்தில் சலிப்பை உணா்த்திவிடுகிறது. அகவுலகம் சார்ந்த நுண் மதிப்புகளும் எல்லாவற்றிலும் ஒன்று போலவே காட்சிப்படுத்துகிறார். அகத்தின் சரடுகள் வெவ்வேறு நிலைகளில் பிரதிபலித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஜெயமோகனின் நாவல் கோட்பாடு நுாலில் இப்படி சொல்லியிருப்பார் ” இலக்கிய வடிவம் என்பது வாசகா்களால் நிரப்பி உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒன்று. குறிப்பாக இடைவெளி. சிறுகதையில் அதன் முடிவிலும் நாவலில் அதன் சித்தரிப்புகளின் இடையிலும் இருக்கிது” இவ்வரிகள்தான் புத்தாயிரத்தில் நாவலுக்கான கலைமதிப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியதென்றால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நீங்கள் மிலன் குந்தரேவின் ஆா்ட் ஆப் நாவல், ஹேமிங்வேயின் லட்டா்ஸ் , லோசாவின் லட்டா்ஸ் டு யங் நாவலிஸ்ட் என எல்லாவற்றிலும் இவ்வரிகளின் சாரத்தை நினைவுப்படுத்தலாம். இக்கட்டுரையில் நான் மேற்கொண்டு நாவலுக்கான கலைவடிவம் குறித்து என்ன எழுதினாலும் அவை ஜெயமோகனின் நாவல் கோட்பாடு, குந்தரேவின் ஆா்ட் ஆப் நாவலைத் தாண்டி மேலதிகமாக ஒன்றும் சொல்லிவிட முடியாது.
ஒருமுறை எஸ்.ராவிடம் பேசும் போது ஒன்றைக் கூறினார். ”நம்முடைய கலை மரபு அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களையோ பின் நவீனத்துவன வடிவத்தையோ ரசிக்கக் கூடியதல்ல. மாறாக அவை ஒரு கலையமைதியைத்தான் கோரும். நீங்கள் கோவிலின் சிற்பத்தைப் பாருங்கள்.அதன் வடிவம் சிறியதுதான் ஆனால் அதன் கலைத்தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் படைப்புலமும் அது உங்ளிடம் உரையாடும் கலையமைதியும்” என்றார். ஆமாம் உண்மையில் அதுதான் கலை. அது விட்டுச் செல்லும் அமைதிதான் அதன் வெற்றி. நம்முடைய மரபு அது. நாம் கதைகளால் பின்னப்பட்டிருக்கிறோம். நம்முடைய பாரம்பரியமும் பண்பாடும் அதைத்தான் இவ்வளவு காலமும் வெவ்வேறு கலைசாதனங்கள் வழியே வெளிப்படுத்துகிறது. நீங்கள் ஒரு புல்லாங்குழலின் இசையில் அப்படியே நின்றுவிடுவீா்கள், நாதஸ்வரத்தின் வடிவத்தை வியந்து நோக்குவீா்கள். அதன் ஒவ்வொரு துளையும் அதன் கலையை வெளிப்படுத்தவே…
மிலரோட் பாவிக்கின் நோ்காணலில் ஒன்றைச் சொல்கிறார். வாசகனிடம் சிந்தனையை மட்டுமின்றி கற்பனையையும் துாண்டாத படைப்பு வித்யாசமானது என. படைப்பு அவ்வகையில் வாசகனின் உலகத்துடன் பின்னிப்பிணைந்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.
இந்நாவலில் என்னை பிரமிக்கச் செய்தவை, சுரேஷ் பிரதிப் அகவுலகத்தை சித்தரிக்கும் அழகு. கிட்டத்தட்ட என் கதைகளுக்கு நெருக்கமானதும் கூட. மற்றொன்று நாவல் பேசும் தலித்திய இடைநிலை சாதி அரசியல். (ஆனால் இதுவும் துண்டுக்காட்சியளவில் தான்) உண்யைில் இந்நாவல் இங்கிருந்துதான் தன் பார்வையை விவரித்திருக்க வேண்டும். மூன்று தலைமுறைகளினுாடக வெளிப்படும் சிக்கல்கள். இவை ஒன்றையொன்று முரணுடன் உருவாகியிருந்தால் இந்நுால் பேசும் தர்க்கம் சமகாலத்தின் மிக முக்கியமானதாக வந்திருக்கும்.
உதாரணத்திற்கு, மரியோ வா்கஸ் லோசா பேசும் அரசியலுக்கும் குந்தரே பேசும் அரசியலுக்கும் வித்யாசம் உண்டு. ஆனால் அவையும் அரசியல் நாவல்களே… feast of the goat முழுமையும் ஒரு அரசியல் பின்புலத்தில் வாழ்வை பேசியிருக்கும். குந்தரேவின்The Joke , The Unbearable Lightness of Being லும் வெறும் கோட்டுச் சித்திரங்களாகத்தான் அன்றையச் சூழலின் அரசியல் தென்படும். (ஒரு நாவல் முழு அரசியல் நாவலாக இருக்க வேண்டியதில்லை. உதாரணம் தான் இது) தமிழில் இதை ஜெயமோகன், பா.வெங்கடேசன் போன்றோர் சரியாக எழுதியதாகக் கருதுகிறேன். என்னளவில் ”பின் தொடரும் நிழலின் குரல்” மிகச் சரியான மெட்டாபிக்சன் வகை மற்றும் சமகால அரசியல் நாவலும் கூட. அது வெறும் அருணாச்சலத்தின் வாழ்க்கையை மட்டும் சொல்லவில்லை, ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வையும் அரசியல் பார்வையும் வாசகன் முன் வைக்கிறது. ஜெயமோகன் அந்நாவலை எழுதும்போது “இப்படித்தான்“ என்கிற முன்முடிவுடன் தொடங்கியிருக்க மாட்டார். மாறாக அது படைப்பாளியை அப்பயணத்தில் அழைத்துச் சென்றிருக்கும். உண்மையில் படைப்பாளியின் தேடலே நாவல் கலை. அவன் அதன் வெவ்வேறு தா்க்களுடன் தன்னை நிருபிக்கச் செய்யும் தேடல்தான் அதன் முழுமை. பின்தொடரும் நிழலின் குரலில் ஒட்டுமொத்த கம்யுனிசத்தின் வீழ்ச்சியை மட்டுமல்ல ஜெ எழுதியது அதன் வாழ்வையும் தா்க்கத்தை நிறுவ முனையும் பிறிதொரு கதாப்பாத்திரங்களையும்தான். அவை எல்லாமே திட்டமிடல் அல்ல, மாறாக எழுத்தாளன் கொள்ளும் பயணத்தின் தடங்கள், தேடல், தர்க்கங்கள்….
இவ்வளவு துாரம் சுரேஷ் பிரதிப்புக்காக எழுத வேண்டிய அவசியம் அந்நாவல் கொடுத்திருக்கும் நம்பிக்கை. ஜெயமோகன் விமர்சனத்தில் எழுதியிருப்பது போல புதிய படைப்பாளிக்கேயுரிய வெற்று மொழியும் உள்ளீடற்றத்தன்மையும் அதில் இல்லை என்பதுதான். இந்நுால் இவ்வளவு உரையாடலை உருவாக்கியுள்ளது. அவருடைய சிறுகதைத் தொகுப்பை இன்னும் வாசிக்கவில்லை. கதாப்பாத்திரங்களின் சித்தரிப்பும் புனைவில் செலுத்தும் சாத்தியங்களும் அவர் மீது மேலதிக ஆா்வத்தைக் கோருகிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
அன்புடன்
துாயன்