வீரர் அஞ்சலி -கடிதங்கள்

periya

அஞ்சலி பெரியபாண்டியன்

வீரவழிபாடு…

 

அன்புள்ள ஜெமோ

 

பெரிய பாண்டியன் தனது கடமைக்காக உயிர் இழந்தது மட்டுமல்ல.போற்றப்படவேண்டியவர்.

 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அவர், தனது ஊரில், சிறார்கள் கல்வி பெறுவதற்காக சொந்த நிலத்தை (15 செண்ட்) துவக்கப்பள்ளி கட்டுவதற்காக தானம் கொடுத்தவர் என்ற வகையில் மேலும் போற்றுதலுக்குரியவர்.

 

அவரது ஊரில் அவர் குடும்பம் மட்டுமே தேவர் சாதியினர். மற்ற அனைவரும் தலித் சாதியினர்.

 

தலித் குழந்தைகள் படிப்பதற்காக தனது நிலத்தை தானம் கொடுத்தது, அதுவும் நெல்லை மாவட்டத்தில், அவர் கடவுளுக்கு நிகரானவர்.

 

இப்படிப்பட்ட மனிதாபிமானம் உள்ள ஒரு காவல் அதிகாரியின் மரணம் மிகவும் கொடுமை.

 

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

 

அன்புடன்

 

செல்லப்பா சுந்தரம்..

*

அன்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு. நலமாக இருப்பீர்களென நம்புகிறேன்.

தான் சார்ந்த சமுதாயத்தில் நடக்கும் அராஜகங்கள், வக்கிரங்கள் என எவற்றையும் கண்டுகொள்ளாமல், தம் கர்ப்பனா உலகில், தேசமே இன்பமயமாகவும், அமைதி மயமாகவும், சுவர்க பூமியாகவும் காட்சியளிப்பது போல நினைத்துக்கொண்டு, வார்த்தை ஜாலம் புரியும் உரிமை நம் நாட்டு கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இருப்பதாகவே பல படைப்பாளிகள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் ஒருவேளை இந்த சமூக சிக்கல்களிலெல்லாம் கவனம் செலுத்தினால், தம் படைப்பாற்றல் பாதிக்கப்படும் என கருதுகிறார்களோ என்னவோ. அவர்கள் அப்படி இருக்கலாமா என்பதல்ல இப்போது கூற வருவது.

தங்கள் இந்த செயல் உண்மையில் மிகவும் பொறுப்பு மிக்கது என்பதே நான் கூற வந்தது.

இனி செய்தி குறித்து,

திரு. பெரிய பாண்டியன் அவர்கள் பணி காரணமாக மிகக் குறைந்த படைபலத்துடனும், மொழி தெரியாத மாநிலத்தில் அம்மாநில போலிசாரின் துணையின்றியும் கலம் கண்டு வீர மரணம் அடைந்திருக்கிறார்.

அவரின் இந்த செயல் மிகுந்த தைரியமும், வீரமும், கடமையுணர்வும் கொண்டிருப்பது மறுக்க முடியாதது.

இருந்த போதும், விவரமறிந்தோர், மேல் மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்ட விதத்தில் பல தவறுகள் இறுப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான ஆப்பரேஷன்களில் ஈடுபடுத்துவதற்கென தனியாக பயிற்சி பெற்ற காவலர் பிரிவு இருக்கும் போதும், சட்டம் ஒழுங்கு பிரிவினர் இதை முன்னெடுத்தது, அதிகாலை இரண்டு மணிக்கு சென்றது, உள்ளூர் போலீசாரை நாடாதது என சில முக்கிய பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

எது எப்படி இருப்பினும், தம் பணிக்காக துணிச்சலுடன் கொள்ளையர்களுடன் போராடி உயிர் நீத்த திரு.பெரிய பாண்டியன் அவர்களின் செயல் அசாதாரனமானது என்பதில் சந்தேகமில்லை. அவரது ஆத்மா ஸாந்தியடையட்டும்.

இப்படிக்கு.
ஏ.ஜி.ஸ்ரீநிவாசன்

 

 

அன்புள்ள ஸ்ரீனிவாசன்

 

இதேபோன்ற விஷயங்களில் நாம் எப்போதும் மேலதிகாரிகளின் செய்திகளையே அடைகிறோம். செய்தியாளர்களைச் சந்திக்க அவர்களுக்கு உரிமையுள்ளது. கீழிருப்பவர்கள் கிசுகிசுக்கத்தான் முடியும். ஆகவே கிடைக்கும்செய்திகளைக்கொண்டு கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளக்கூடாது

 

பொதுவாக, பணியில் உயிரிழப்பு நிகழ்ந்ததுமே மேலதிகாரிகள் செய்வது உயிரிழந்தவர் பணியில் கவனக்குறைவாக இருந்தார் என்றும் அவரது பணி முறையாகச்செய்யப்படவில்லை என்றும் ஒரு அலுவலகமுறையான கடிதம் அனுப்புவதே. அது மேலதிகாரிகளை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கிறது. அவர்கள்மேல் நடவடிக்கை வராது. அது அவர்களே தங்களுக்குள் செய்துகொள்வது

 

போலீஸில் மேலதிகாரிகள் இம்மாதிரி வழக்குகளுக்கு அரசு அளித்துள்ள பயணப்படி, தங்குமிடச்செலவு உள்ளிட்டவற்றைக்கூட அளிப்பதில்லை என்பதும் புகார்கொடுத்தவர்களின் செலவிலேயே சென்றுவரவேண்டியிருக்கிறது என்பதையும் முன்னரே பலமுறை காவலர்கள் சொல்லியிருக்கிறார்கள். காவல்அலுவலக நிர்வாகத்துக்கான பணம் கூட உயரதிகாரிகளால் கீழே அளிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காவல்நிலையமும் ’சுயநிதி’ அமைப்பாகவே இயங்கவேண்டியிருக்கிறது.

 

இந்நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்கவேண்டும் என உண்மையில் நினைத்தால் இதுவே வழி. வழக்கமாகச் செய்வதும் இதுவே. இதில் கொலைநிகழ்ந்ததும் சட்டம், சம்பிரதாயம் என்று பேசி மேலிருப்பவர்கள் விலகிக்கொள்கிறார்கள். இது காவல்துறையில் மட்டுமல்ல, அத்தனை அரசாங்க அலுவலகங்களிலும் நிகழ்வதே. சரி, மேலிருப்பவர்கள் அவர்கள் சொல்லும் சம்பிரதாயப்படி ஏன் இந்த வழக்கில் படைகளை அனுப்பவில்லை. இதற்குமுன் இதேபோன்று எந்த வழக்குகளுக்கு படைகளை அனுப்பியிருக்கிறார்கள்?

 

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது- சு.யுவராஜன்
அடுத்த கட்டுரைகவிதையின் புரட்சிகரம்