வீரவழிபாடு

periya

அஞ்சலி பெரியபாண்டியன்

இனிய ஜெயம் ,

பெரிய பாண்டியன் அவர்களுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்பு வாசித்தேன் .

”தான் வாழ்ந்த சமூகத்தின் நல்வாழ்வுக்காக, அதன் காவலின்பொருட்டு உயிர்துறந்தார். அத்தகைய அர்ப்பணிப்புகளை அடையாளம் கண்டு வணங்கும், அதை அடுத்த தலைமுறையினருக்கும் முன்னுதாரணமாகக் காட்டும் சமூகங்களே உலகில் வெல்கின்றன, வாழ்கின்றன. ஜனநாயகத்தின் உச்சியில் நின்றிருக்கும் தேசங்களே அதற்கும் நமக்கு வழிகாட்டுகின்றன.”

இலக்கியவாதியின் சொல்லில் குடியேறி விட்டார்  இனி அவரது ஆளுமையின் சாரத்துக்கு மரணமில்லை .  உங்களது தேடல்களையும் ,நீங்கள் கவனம் குவிக்கும் அலகுகளையும் பின்தொடர முயல்பவன் எனும் முறையில் ,பாண்டியன் அவர்கள் குறித்த தகவல்களை திரட்டினேன் .

விரும்பி தேர்ந்து ,அனைத்து அவமானங்களும் தாங்கி ,  தான் கொண்ட நேர்மையின் பொருட்டே , பணி மாற்றம் ,பதவி இரக்கம் கண்டும் ,அதில் நிற்கும் மிக சில காவல் துறை நண்பர்கள் எனக்கு உண்டு .   அத்தகைய சிலரில் ஒருவர்  என்றே பாண்டியன் அவர்களை எண்ண தோன்றுகிறது .

எனது ஊடக நண்பர்கள் சொன்னார்கள் .பாண்டியன் அவர்கள் தனது பணியிலும் தனி வாழ்விலும் நேர்மையானவர் என்று . அதைக்காட்டிலும் முக்கியம் அவர் ஒரு களப்பணியாளர் .தனது உழைப்பில் ஒரு நிலம் வாங்கி , அதில்  அடுத்த தலைமுறை செழிக்கும் வண்ணம்  ஒரு பள்ளிக்கு அதை நன்கொடை செய்திருப்பதாக சொன்னார்கள் . இப்படிப்பட்ட ஆளுமை எவரும் வெளியில் தெரியாத பல வாழ்வாதார உதவிகள் பலருக்கு செய்பவராகவே இருப்பர் .

பொதுவாக  இத்தகு வேட்டைகளுக்கு  ஒத்த மனமும் ,செயல்திறனும் கொண்ட நண்பர்களே குழுவாக இணைந்து  செல்வார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன் .இதோ இது அவர்கள் வேட்டைக்கு கிளம்புமுன் எடுத்துக்கொண்ட படம் . இவர்களின் மத்தியில்தான் ,இவர்களின் மடியில்தான் அவர் உயிர் பிரிந்திருக்கிறது .

வருந்தும் அவரது நண்பர்களுக்கும் ,அவரது இல்லத்தினருக்கும்   நேர்மையை வழிபடும்  பலநூறு முகமறியா  மனங்களின் சார்பாக  ஆறுதலும் ,  அஞ்சலியும் .

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு,

மேற்கிலிருந்து நமக்கு வரும் அரைவேக்காட்டுச் சிந்தனைகள் முதன்மையாக இரண்டு.

ஒன்று : பாலியல்விடுதலை என்பது கட்டற்றபாலுறவு. அதுவே மகிழ்ச்சியானது.

இரண்டு: குற்றவாளிகளின் வன்முறை சமூகத்தால்செய்யப்படுவது, நீதி அளிக்கும் தண்டனைதான் உண்மையான வன்முறை

மேற்கிலிருந்து எதுவந்தாலும் ’ஓகோ !அப்ப இதுதான் போலிருக்கு இப்ப’ என கைதூக்கிவிடும் அரைவேக்காட்டு அறிவுஜீவிக்கும்பல் இங்கும் உள்ளது. அவர்களால் பல்வேறு சொற்களால் இது முன்வைக்கப்படுகிறது.

மேற்கில் அவ்விரு சிந்தனைகளும் உருவானதற்கு ஒரு பின்னணி உண்டு. மதம்சார்ந்த பாலியல் ஒடுக்குமுறை பலநூற்றாண்டுகளாக நிலவிய மண் ஐரோப்பா.அந்த ஒடுக்குமுறைக்கருத்துகளுக்கு எதிரான ஒரு கருத்தியல்போர் அங்கே நிகழ்ந்தது. அந்தக்கருத்தியல் போராட்டத்தின் கருத்துக்களை தங்களுக்குத்தேவையானபடி மிகைப்படுத்தித்தான் கட்டற்ற பாலியல் சார்ந்த கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை எவருக்கும் எந்தவகையிலும் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதை சமூகவியலாய்வுகள் திரும்பத்திரும்பச் சொன்னாலும்கூட அதை ஒரு ‘முற்போக்கு, கலக’ கொள்கையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

மேற்கே ஒருங்கிணைக்கப்பட்ட வலுவான அரசுகள் நெடுங்காலம் நிலவின. மதநிறுவனங்கள் தண்டிக்கும் ஆற்றலுடன் திகழ்ந்தன. குற்றம்சார்ந்து ஒற்றைப்படையான மனநிலை நிலவியது. ஆகவே அந்த ஆதிக்கத்திற்கு எதிராக குற்றத்தை ஒரு சமூகநிகழ்வாகவும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் சிந்தனைத்தளத்தில் உருவாகியது. அதை அரைவேக்காட்டு உற்சாகத்துடன் மிகையாக்கி எப்போதுமே குற்றவாளிகளைச் சார்ந்து பேசுவதும், அமைப்புக்கு எதிராக ஒலிப்பதுமே முற்போக்கு என்னும் மனநிலையாக ஆக்கிக்கொண்டார்கள் நம்மில் சிலர்.

நம் சூழல் முற்றிலும் மாறானது. இங்கே மையப்படுத்தப்பட்ட அதிகாரமோ நெறிமுறைகளோ எப்போதுமே உருவாகவில்லை. சென்ற இருநூறாண்டுகளாகவே இங்கே பொதுநீதி, பொதுவான நெறி, மைய அரசு போன்றவை உருவாகியுள்ளன. இச்சூழலை கருத்தில் கொள்ளாமல் மேற்கிலுள்ள ‘அதிதீவிர’ நிலைபாடு எதுவோ அதையே கைக்கொள்வதன் அபத்தமே நம் சூழலில் காணக்கிடைக்கிறது.

இந்தியச்சூழலில் வலுவான பொதுநீதியை நோக்கி, சட்டத்தின் ஆட்சியை நோக்கியே நாம் செல்லவேண்டியிருக்கிறது. அத்தகைய அமைப்பால் செய்யப்படும் பிழைகள், விடுபடல்களைப் பரிசீலிக்கும் காலம் அதற்குமேலேதான் வரவேண்டும். இங்கே இன்னும் பல இடங்களில் சட்டமே செல்லுபடியாகவில்லை. அந்நிலையில் அரசின் கைகளாகச் செயல்பட்டுச் சட்டத்தின்பொருட்டு நிற்பவர்கள்மேல் நமக்கு மதிப்பு உருவாகவேண்டும்

பதினெட்டாம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்தவர்கள் பிரிட்டிஷார் எத்தகைய கடுமையான நடவடிக்கைகள் வழியாக சாலைகளைப் பாதுகாப்பானவையாக ஆக்கினர், எப்படி கொள்ளைக்குழுக்களை அழித்தனர், சாதிமதக்குழுக்களின் ஆதிக்கத்தையும் அவர்களின் தண்டனைமுறைகளை ஒடுக்கினர் என்பதைக் காணலாம். அதன்பின்னரே இங்கே வணிகம் ஓங்கியது. சமூகவாழ்க்கை மேம்பட்டது. அதன்மேல் நின்றுதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அச்செயல்பாடு மேலும் செல்லவேண்டிய தொலைவு அதிகம்

பெரியபாண்டியனை அந்த இருநூறாண்டுக்காலச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகவே நான் பார்க்கிறேன். அவரைப்போன்றவர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். இதை ராஜஸ்தான், குஜராத்தின் கட்ச், பிகாரின் கயா, உத்தரப்பிரதேசத்தின் தென்பகுதிகள், ஜார்கண்ட், சட்டிஸ்கர், மத்தியப்பிரதேசத்தின் சம்பல் போன்ற பகுதிகளில் பயணம் செய்பவர்கள் உணரமுடியும். பயணம்செய்தறிந்தவன் என்ற வகையில் நான் சொல்வது என் பட்டறிவு.ஏட்டுக்கருத்து அல்ல. அங்கே அவர்கள் ஏங்குவது பெரியபாண்டியனைப்போன்றவர்களுக்காக

பொதுநலனுக்கான வீரம் என்பது ஒரு பெரும் விழுமியம். அதை மதிக்கவேண்டும் எழுத்தாளன். என் முன்னோர்கள் வீரத்தைப்பாடியவர்களே

ஜெ  

 

periya

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

முதலில் உங்களின் இந்த  அஞ்சலிக் குறிப்பின்  தலைப்பை  பார்த்த போது சற்று புதிராகத்தான்  இருந்தது .படித்த பின்  தெரிந்தது சரியாகவே நீங்கள் ‘அஞ்சலி’ செலுத்தியிருக்கிறீகள்.ஆனால்  வழக்கம்போலவே  இந்நிகழ்ச்சி  பற்றி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி  ஊடகங்களிலும்  வரும் செய்திகளையும், கலந்துரையாடல்களையும்   கண்டபோது  கடுமையான  எரிச்சலும், வேதனையும்தான் ஏற்பட்டது.

முதலில்  ராஜஸ்தான் காவல்துறை  ஒத்துழைப்பு அளிக்காததால்தான் இந்த துர்சம்பவம்   நடைபெற்றது என்பது  போன்ற  மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்.உண்மையில் இந்த கொள்ளைக்கூட்டத்தை  பிடிக்கும் சாதனையில் தங்கள் பங்களிப்பு மட்டுமே  இருக்கவேண்டும் என்பது போல்  நினைத்து நமது காவல்துறையினர்  செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.அடுத்து துரதிர்ஷ்டவிதமாக  இறந்த   இந்த  அதிகாரியின்  குடும்பத்திற்கு  முதல்வர் அவர்கள் ஒரு  கோடி ரூபாய்  நிவாரணம்  அ ளித்ததை  பற்றிய  தொலைக்காட்சி  சர்ச்சைகள் மிகுந்த  அருவருப்பை  ஏற்படுத்தியது.

ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற முன்னணி வழக்கறிஞர்   ஒருவர்   இந்தப்  பெருந்தொகை  அளித்ததை  மிகக் கொச்சையாக விமர்சித்தார்.  அவரைப்  பொறுத்தவரை  இந்தமாதிரி  சமூகத்தை  காக்கும் தீரச்செயல்களில்  ஈடுபட்டு  பலியாவதும், சாலை  விபத்துகளில் பலியாவதும், குடித்துச் சாவதும்  ஒன்றாம்!.  அந்நிகழ்ச்சியில் பங்கு  பெற்ற  ஓய்வுபெற்ற காவல்துறை  அதிகாரி  தெரிவித்த  ஒரு  கருத்து  காவல்துறையினரின்  மாண்பையம்,  தியாகத்தையும்  பறைசாற்றும்  விதமாக  இருந்தது. நமது நாடு சுதந்திரம்  அடைந்தபின்  நடைபெற்ற  சீன,  பாகிஸ்தானுடன்   நடந்த  போர்களில்  பலியான  வீரர்களைக்  காட்டிலும்  இதுவரை  நமது நாட்டு  காவல்துறையில் சிறப்பாக  பணியாற்றும்  போது  பலியான  வீரர்களின்  எண்ணிக்கை  அதிகமாம்!

இதே போன்று  கொள்ளைக்காரன் வீரப்பனை சுட்டுக் கொன்றபோது, காவல்துறையினருக்கு அளித்த  வெகுமதிகளை  விமர்சித்தும்  வந்த  கருத்துக்களை நீங்கள்  அறிந்திருப்பீர்கள்.

Tamil Nadu cop’s death: Rajasthan police detain unidentified men; FIR registered

இன்ஸ்பெக்டர் பலி: பிடிபட்ட கொலையாளிகள்!

 அன்புடன்,

அ .சேஷகிரி.  .      

***

அன்புள்ள சேஷகிரி,

சமூகவிரோதிகளுக்கு வீரவழிபாடு செய்யும்நாம் உண்மையான வீரர்களை மறந்துவிடுகிறோம். ஆகவேதான் அக்குறிப்பு.

உங்கள் கடிதத்தில் ஒரு வரி- உண்மையில் இந்த கொள்ளைக்கூட்டத்தை பிடிக்கும் சாதனையில் தங்கள் பங்களிப்பு மட்டுமே இருக்கவேண்டும் என்பது போல் நினைத்து நமது காவல்துறையினர் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. யார் சொன்னது இதை? ஊடகங்களிலிருந்து நீங்கள் எடுத்துக்கொண்டது. நம்ப விரும்புவது. நீங்கள் கொடுத்த சுட்டியிலேயே பதில் உள்ளது. அதை நீங்கள் கருத்தில்கொள்வதில்லை

ராஜஸ்தான், குஜராத், பிகார், மத்தியப்பிரதேசம் போன்ற ஊர்களின் சிக்கல்கள் வேறு. அங்கே காவல்துறை என்பது இரண்டு அடுக்கு. கீழ்மட்டக்காவலர்கள் சிலகுறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். அச்சாதிகளில்தான் குற்றவாளிகளும் உள்ளனர். சாதிக்கட்டுமானத்தை மீறி காவலர்கள் செயல்படுவதில்லை. பல ஊர்களில் காவல்துறையே ஊரின் தயவில் செயல்படவேண்டியிருக்கிறது. பல ஊர்கள் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்துக்கு அப்பாற்பட்டவை. இதெல்லாம் நான் வாசித்து அறிந்தவை அல்ல, சென்று அறிந்தவை. எந்த ஒரு வழக்கிலும் அங்குள்ள காவல்துறைக்குச் செய்திதெரிவித்துவிட்டுச் சென்றால் குற்றவாளிகளை பிடிக்க முடியாதென்பதே உண்மை. இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிகழ்ந்த எல்லா கைதுகளும் அங்குள்ள காவலர்களுக்குத்தெரியாமல் உளவாளிகள் மூலம் நிகழ்ந்தவையே

நமக்கு எந்த உண்மையும் தெரியாது. தொலைக்காட்சி பார்த்து அதில் சொல்லப்படுவதைவைத்து கருத்து உருவாக்குகிறோம். தொலைக்காட்சிப் பேச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் ஒருவகை வீணர்கள். அந்நிகழ்ச்சியை அதிரடியாக ஆக்கும்பொருட்டு எதையாவது பேசும் தொழில்முறை நடிகர்கள் அவர்கள். கருத்துருவாக்கத்திற்கு அவர்களை நம்பக்கூடாது

ஜெ

***
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4
அடுத்த கட்டுரையூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி மொழியாக்க விருது!