இன்று விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது.

c.mu2

 

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

இன்று விஷ்ணுபுரம் விருதுவிழா. மலேசியாவின் மூத்தபடைப்பாளியாகிய சீ முத்துசாமிக்கு 2017 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. 2010ல் கோவையில் தொடங்கப்பட்ட விருது இது. தொடர்ச்சியாக தமிழின் மூத்த படைப்பாளிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஆ.மாதவன்,பூமணி,தேவதேவன்,தெளிவத்தை ஜோசப்,ஞானக்கூத்தன்,தேவதச்சன்,வண்ணதாசன் ஆகியோருக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளது.

 

சீ.முத்துசாமி மலேசியாவின் மூத்தபடைப்பாளிகளில் ஒருவர். மலேசியத்தமிழர்கள் நூற்றைம்பதாண்டுகளுக்கு முன் மலேசியாவில் தோட்டத்தொழில் தோன்றியபோது பிரிட்டிஷாரால் அங்கு கொண்டுசெல்லப்பட்டவர்கள். தோட்டக்காட்டில் பண்ணையடிமைகள்போல வாழ்ந்தவர்கள்.கடும் துயரங்களும் தொடர்போராட்டங்களும் நிறைந்தது அவர்களின் வாழ்க்கை. இன்று மலேசியாவின் பொருளியல் வளர்ச்சியால் அவர்களின் வாழ்க்கை மாறியிருக்கிறது. ஆயினும் சமஉரிமைக்காக, கல்வியுரிகைக்காக அவர்களின் போராட்டம் தொடர்கிறது

raja
ராஜஸ்தானி சங் அரங்கம் ஆர் எஸ் புரம் கோவை

 

போராட்ட இலக்கியம் என்பது அரசியல்சார்புகள் சார்ந்த பார்வை கொண்டதாகவும், உரக்கக்கூச்சலிடுவதாகவும்தான் வழக்கமாக இருக்கும். அவையிரண்டுமே உண்மையிலிருந்து விலக்கக்கூடியவையும்கூட. முத்துசாமி எழுதியவையும் போராட்ட இலக்கியங்களே. ஆனால் அவர் தான் அறிந்த உண்மையை நெஞ்சுக்கு நெருக்கமாக, மிகைப்படுத்தாமல் எழுதினார். அவ்வாறு மலேசிய நவீன இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியாக ஆனார்.

 

இன்று மலேசியாவில் நவீன இலக்கியம் வலிமையுடன் எழுந்து வந்துள்ளது. ம.நவீன், சு,யுவராஜன், கே. பாலமுருகன் போன்ற இளையபடைப்பாளிகள் வீச்சுடன் எழுதுகிறார்கள். அவர்களில் நவீன் இந்த விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்குகளில் கலந்துகொள்கிறார். அவருடன் மலேசியாவின் இளையதலைமுறை எழுத்தாளர்களும், மூத்தபடைப்பாளியான ஷண்முகசிவா அவர்களும் கலந்துகொள்கிறார். மலேசியப் பண்பாட்டியக்கத்தின் மையங்களில் ஒன்று என்று சொல்லத்தக்க சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

 

*

 

நேற்று மாலையே கோவை செல்வதற்கான பதற்றங்கள். இலக்கியவினாடி விடையில் அளிப்பதற்கான பரிசுநூல்களை எடுத்துக் கட்டிவைத்தேன். சென்றமுறை கட்டித்தூக்கிவந்தமையால் கை இற்றுவிட்டது. ஆகவே இம்முறை சக்கரமுள்ள பெட்டி. வீடு கண்ராவியாக கிடந்தது. அனேகமாக பலநாட்கள் வீட்டிலேயே இல்லை. கடற்கரை அவலம் சார்ந்து வந்த இதழியல் நண்பர்களுடன் சுற்றிவிட்டு திரும்பிவந்து கொஞ்சம் எழுதிவிட்டு சோர்ந்து படுத்து அப்படியே எழுந்து அடுத்தவேலை.

 

அருண்மொழியும் பிள்ளைகளும் ராஜஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்கள். 17 ஆம் தேதி முடிந்தே ஊருக்கு வருவார்கள். அருண்மொழி வரும்போது வீடு ஒருமாதிரி பார்க்கிறமாதிரி இருக்கவேண்டும் என்பதற்காக கூட்டிப்பெருக்கி கழுவி துடைத்து மூச்சுவாங்கினேன்.  வந்து பார்த்து “வீடு கெடக்கிற கெடையப்பாரு” என்று சொல்வாள். அதை பொய்யாகச் சொன்னால் அவளுக்கு நிறைவாக இருக்கும். மெய்யாகவே சொல்லும்படி இருந்தால் நிலைமை சிக்கல்தான்.

 

நான் பெரும்பாலான நாட்களில் முன்கதவை வெளியே பூட்டியே வைத்திருந்தேன்.பலவகையான தொந்தரவுகள். டோராவுக்கும் எனக்கும் நானே சமைத்தேன். அரைமணிநேரச் சமையல். டோராவுக்கு சிக்கன்போட்ட கேழவரகுக்கூழ். எனக்கு அரிசிக்கூழ். அதை சோறுபதத்திற்கு எடுக்கவேண்டும் என்றால் அங்கேயே நிற்கவேண்டும். அதற்கு எனக்குப் பொறுமையில்லை. அடிப்பிடித்த சோற்றையும் டோரா கூழுடன் சேர்த்தேன். முதலில் முகம்சுளித்தாலும் என்னைப்பார்த்து “சரி, நமக்குள்ள என்ன?’ என்று முகம் காட்டி சாப்பிட்டாள். இரண்டுநாளில் பிறகு பழகிவிட்டாள். அருண்மொழி வந்ததும் கரிமணம் உள்ள கூழை எதிர்பார்த்து ஏமாறுவாளென நினைக்கிறேன்.

 

மூன்றுநாள் கடலோர உணவகங்களில் உணவு. குமரிமாவட்டக் கடலோரப்பகுதிகளில் எங்குமே உண்ணும்படிச் சாப்பாடு கிடைக்காது, மீன்கூட. கொந்தளித்துப்போய் நேற்று நாகர்கோயிலில் சாப்பிடலாமென அலைந்தேன். ஏடிஎம் பணம் எடுப்பதே நாகர்கோயிலில் பெரிய பணி. பத்துக்கு ஒரு ஏடிஎம்மில்தான் பணம் இருக்கும். ஆயிரம் ரூபாய் எடுக்க நூறுரூபாய் ஆட்டோவுக்குச் செலவாகும். ஒருவழியாக எடுத்து ஒரு சைவ ஓட்டலில் சாப்பிட்டேன். வழக்கமான மைதா, சோடா உப்புக்கலவை. தரமற்ற மளிகை,காய்கறிகளை மறைக்க மிதமிஞ்சிய காரம்.

 

நாகர்கோயிலில் நானறிய ஒரே ஒரு சைவ ஓட்டலில்தான் சுவை என்ற அம்சம் இருந்தது. அவர்களும் மைதாப் பண்பாட்டுக்குச் சென்றுவிட்டார்கள். [மீட்சி ]உண்மையில் கொஞ்சம் சுவையாகச் சமைத்தால் என்னதான் குறைகிறது இவர்களுக்கு? இவர்கள் வைக்கும் விலை சென்னை அளவுக்கே அதிகம். அந்த விலையையும் வாங்கிக்கொண்டு ஏன் இத்தனை கீழான உணவை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்கள். இத்தனை உணவகங்களில் ஒரே ஒருவருக்குக்கூட கொஞ்சம் தரமான உணவை அளிப்போம் என ஏன் தோன்றவில்லை? இதைப்பற்றி இவர்களுக்குள் ஏதேனும் பொதுவிதி இருக்குமா? உண்மையில் இந்த ரப்பர் எண்ணை, மைதாமாவு, சோடா உப்புக் கலவை அவ்வளவு லாபத்தை அளிக்கிறதா என்ன?

 

விதிவிலக்காக இன்றும் இருப்பது பிரபு ஓட்டல்.அது அசைவம், சிற்றுண்டிக்கு தோதுபடாது. அனீஷ்கிருஷ்ணன் நாயரிடம் பேசினேன். ஓட்டலுணவில் உயிர்வாழ்பவர் அவர். உடுப்பி ஓட்டலில் சாப்பிடலாம், வயிறுகெடாது என்பதற்கு மட்டும் உத்தரவாதம் என்றார். அவர் மாத்வர், ஆகவே உடுப்பியைச் சொல்கிறார் என்று தோன்றியது. நாகர்கோயில் போன்ற நகரங்களில் வெளியே சாப்பிட்டு வாழ்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.

 

நான் மனநிறைவுடன் சாப்பிட்ட உணவகங்கள் சிங்கப்பூரில் உள்ள இந்திய –தமிழ் உணவகங்கள்தான். என் நண்பர் கணேஷ் நடத்தும் செட்டிநாடு உணவகம் போல சுவையான அசைவ உணவை நானறிய தமிழ்நாட்டில் எங்கும் உண்ணமுடியாது. இங்கே உணவுத்தரக் கட்டுப்பாடுகள் எல்லாம் ஊழல். ஆகவே ஓட்டல் ஆரம்பித்த சிலநாட்களிலேயே தரவீழ்ச்சி ஆரம்பித்துவிடுகிறது. அரிதாகச் சில ஓட்டல்களிலேயே தரம் பேணப்படுகிறது.

 

நெல்லையில் நல்ல உணவகங்கள் உள்ளன. தென்காசியில்கூட தரமான சில உணவகங்கள் உள்ளன. சுந்தர ராமசாமிக்கு நாகர்கோயிலில் ஒரு நல்ல ஓட்டல் நடத்தவேண்டுமென கனவு இருந்ததாகச் சொல்லியிருக்கிறார். நானேகூட நடத்தலாம், ஆனால் அடிப்பிடித்த உணவை டோராபோல மக்கள் சாப்பிடமாட்டார்கள்.

 

*

 

நான் நாகர்கோயிலில் இருந்து கோவை ரயிலில் கிளம்பி 16 அன்று காலைதான் கோவையை வந்தடைவேன். என்னுடன் போகன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் வருகிறார்கள். நாங்கள் சென்றடையும்போதே அங்கு ஒருவகையான விழாக்கோலம் ஆரம்பமாகியிருக்குமென நினைக்கிறேன். 16 அன்று விடிகாலைமுதலே ராஜஸ்தானிசங் அரங்கம் நிறையத் தொடங்கியிருக்கும். நூற்றைம்பது பேர் வரை அங்கே தங்கக்கூடுமென தோன்றுகிறது.

 

காலை ஒன்பது மணிக்கே முதல் அரங்கை ஆரம்பித்துவிடவேண்டும் என்பது திட்டம். ஏனென்றால் தொடர்ச்சியாக, இடைவெளியே இல்லாமல் நிகழ்ச்சி என்பதுதான் விஷ்ணுபுரம் அரங்குகளின் வழக்கம். வருபவர்கள் பெரும்பாலும் அனைவருமே அத்தகைய இலக்கிய விழைவுடன் இருப்பவர்களே. ஏராளமான சந்திப்புநிகழ்ச்சிகள், உரையாடல்கள்.

 

ராஜஸ்தானி சங் அரங்கம், ஆர் எஸ் புரம் கோவை
ராஜஸ்தானி சங் அரங்கம், ஆர் எஸ் புரம் கோவை

காலையில் இளம் படைப்பாளிகளான தூயன்,கே.ஜே.அசோக்குமார் பங்கெடுக்கும் அரங்கு. ஆசிரியரை வாசகர்கள் சந்திக்கும் அரங்கு இது. வாசகர்கள் அவர்களின் படைப்புலகிலிருந்து கேள்விகளைக் கேட்கலாம். அவர்கள் பதில் சொல்வார்கள். அடுத்து ஆர்.அபிலாஷ் வாசகர்களைச் சந்திக்கிறார். அதன்பின் விஷால்ராஜா, சுரேஷ் பிரதீப் இருவரும் வாசகர்களைச் சந்திக்கும் அரங்கு.

 

மாலையில் எழுத்தாளர் போகன் வாசகர்களைச் சந்திக்கிறார். அதன்பின் கவிஞர் வெயிலுடனான உரையாடல். அந்தியில் மலேசிய இலக்கியம் குறித்து நவீன், ஷண்முகசிவா,சுவாமிபிரம்மானந்தா ஆகியோருடன் ஓர் உரையாடல். இரவில் வழக்கம்போல நண்பர் ’குவிஸ்’ செந்தில் நடத்தும் இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சி.

 

சீ. முத்துசாமி 8 ஆம்தேதியே இந்தியா வந்துவிட்டார். அவருடன் அவருடைய குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் ஒரு தமிழகச் சுற்றுப்பயணம் முடித்து 15 அன்று கோவைக்கு வந்தனர். பிற மலேசிய நண்பர்களும் வந்துவிட்டார்கள்.  அரங்கில் சீ முத்துசாமி எழுதிய நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

 

 

இடம் ராஜஸ்தானி சங் அரங்கம்

No 579, D B Road,R S puram, – 641002

தொடர்புக்கு   9894033123,  9965846999,  7339055954

முன்பெல்லாம் ஒரு திருமணத்தை முன்வைத்து உறவினர் கூடிமகிழும் நிகழ்ச்சிகள் இருக்கும். இது ஒரு விருதை ஒட்டி நிகழ்கிறது. இரண்டுநாட்கள் முழுக்க இலக்கியம்.

 

 

முந்தைய கட்டுரைஎழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1