அஞ்சலி பெரியபாண்டியன்

periya

இந்தத் தளத்தில் அஞ்சலிக்குறிப்புகள் வருவதிலுள்ள ஒரு முறைமையைச் சிலர் கவனித்திருக்கலாம். ஊரே இரங்கிக்குமுறும் பல இறப்புகளுக்கு நான் எதிர்வினையாற்றுவதில்லை.  நான் தனிப்பட்ட முறையில் நன்கறிந்து பழகியவர்களுக்குக்கூட எழுதாமலிருந்ததுண்டு.

 

அஞ்சலிக்குறிப்புகள் இரண்டு அடிப்படைகளில் எழுதுகிறேன். ஒன்று, எனக்கு அணுக்கமானவர்கள், என் வாழ்க்கையில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியவர்கள். இரண்டு, அவர்களின் பங்களிப்புக்காக தமிழகம் நினைவுகூரவேண்டுமென நான் நினைப்பவர்கள், பொதுவாகப் பிரபலமாகாதவர்கள்.

 

மிகப்பிரபலமானவர்கள் இறக்கும்போது, அல்லது அத்தனை செய்தி ஊடகங்களும் அலறிக்கொண்டிருக்கும்போது நானும் ஒரு குறிப்பைப் போட்டுவைப்பதில் பொருளில்லை என்று எண்ணுவேன்.

 

இந்த அஞ்சலிக்குறிப்பு மேலே சொன்ன இரண்டு அடிப்படைகளிலும் அல்ல. காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் போன்றவர்களின் தியாகம் நம் பொதுமனதுக்கு பெரிதாகப் படாமலிருக்கும் அளவுக்கு இங்கே சமூகமனம் போலிமுற்போக்குக் கருத்துக்களால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவரும் அஞ்சலிக்குறிப்பு எழுதமாட்டார்கள்.  அவருடைய இறப்பு இங்கே முதன்மைச்செய்தியாகக்கூட மாறவில்லை.  பிரிவினை பேசி, கசப்புகளை வளர்த்து  அழிவுகளை உருவாக்க அல்லும்பகலும் பாடுபடும் அரசியல்வாதிகள் தியாகிகளாக கருதப்படும் நாட்டில் இது இயல்பே.

 

ஆய்வாளர் பெரியபாண்டியன் அவர் ஏற்றுக்கொண்ட பணியில் உயிர்துறந்தார். மிகக்குறைந்த படைபலத்துடன், முன்பின் தெரியாத ஊரில் குற்றவாளிகளைப் பிடிக்கச்சென்ற அவருடைய துணிச்சலும் இறுதிவரை நின்ற அர்ப்பணிப்பும் முன்னுதாரணமானவை. அவருக்கு போதிய படைபலமோ பிற உதவிகளோ ஏற்பாடுசெய்யாத தமிழகக் காவல்துறை கண்டனத்திற்குரியது என்றாலும்.

 

அவர் தான் வாழ்ந்த சமூகத்தின் நல்வாழ்வுக்காக, அதன் காவலின்பொருட்டு உயிர்துறந்தார். அத்தகைய அர்ப்பணிப்புகளை அடையாளம் கண்டு வணங்கும், அதை அடுத்த தலைமுறையினருக்கும் முன்னுதாரணமாகக் காட்டும் சமூகங்களே உலகில் வெல்கின்றன, வாழ்கின்றன. ஜனநாயகத்தின் உச்சியில் நின்றிருக்கும் தேசங்களே அதற்கும் நமக்கு வழிகாட்டுகின்றன.

 

கடலோர அலைச்சல் காரணமாக செய்தித்தாள்களையே பார்க்கவில்லை. ஆகவே பிந்தித்தான் இச்செய்தியை அறிந்தேன்.பெரியபாண்டியன் அவர்களுக்கு அஞ்சலி.

 

பெரியபாண்டியன் மறைவு

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா நினைவுகள்
அடுத்த கட்டுரைகாஞ்சி உரைநிகழ்வு